Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 18

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

ஏன் அத்தாச்சி இப்டி வீட்லயே கெடக்க... நல்லது கெட்டதுக்குப் போயி வந்தாதான உனக்கும் மரியாதை இருக்கும்

‘எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்பது பேராசை கொண்டவர்களுக்குத் தான் சரியாகப் பொருந்தும். ஆசைதான் லட்சியங்களை நோக்கி ஒருவனை முன்னகர்த்துகிறது. இருளின் தீய அடர்த்தியில், தான் அழிந்துபோய்விடு வோமென அச்சப்பட்ட காளிக்கு, சுப்புத்தாயின் மூலம் புதிய வெளிச்சம் கிடைக்கத் தொடங்கியது. தன்னிடமிருந்த எல்லாமும் தனக்குத் திரும்புக் கிடைக்க வேண்டுமென்கிற அவனுடைய ஆசை, இப்போது நம்பிக்கையாக மாறத் தொடங்கியிருந்தது. மூர்த்தி வாக்களித்ததுபோலவே, சுப்புத்தாயி தேர்தலில் நிற்பதற்கான ஆதரவைத் தந்ததோடு, கட்சியிலும் அவளைச் சேர்த்துவிட்டிருந்தார். மக்களிடமிருந்து பயத்தைச் சம்பாதிப்பது எளிது, மரியாதையையும் அதிகாரத்தையும் சம்பாதிப்பது கடினம் என்பதை காளி இன்னொரு முறை அனுபவபூர்வமாக உணர்ந்தான். அரசியல், தந்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களின் முரட்டு விளையாட்டு. குருட்டுத்தனமான துணிச்சலும், அசாத்தியமான முட்டாள்தனங்களும் நிரம்பி யிருந்தால் மட்டுமே விளைவுகளை யோசிக்காமல் ஒருவன் அரசியலை நோக்கிச் செல்ல முடியும். அதிகாரத்துக்கான கதவுகள் எல்லோருக்கும் எளிதில் திறந்துவிடுவதில்லை. அபூர்வமாகச் சிலருக்குத் திறக்கும். அப்படித் திறக்கையில், அதுவரையிலுமான முட்டாள்தனங்களை எல்லாம் தூரமாக எறிந்துவிட்டு, கற்றுக்கொண்ட தந்திரங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. காளியிடம் குருட்டுத்தனமான துணிச்சலிருந்தாலும், சுப்புத்தாயி தன்னிடமிருந்த தந்திரத்தை நம்பியே தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 18

தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே மதுரை முழுக்க பரபரப்பு தொற்றிக்கொண்டது. எமர்ஜென்ஸிக்குப் பிறகான தேர்தல் என்பதால், மொத்த தேசமும் இந்திரா காந்தியின் கட்சிக்கு எதிரான கோபத்திலிருந்தது. சராசரி மனிதனின் குருதியைக் கருணையின்றி உறிஞ்சிய அந்த நாள்களை எவரும் மறக்கவும் போவதில்லை, மன்னிக்கவும் போவதில்லை. தமிழ்நாட்டில் எமர்ஜென்ஸியை எதிர்த்ததற்காக மூர்த்தியின் கட்சி தனது ஆட்சியையே இழந்திருந்த தால், மக்களுக்கு அவர்கள்மீது அபரிமிதமான நம்பிக்கையும் மதிப்புமிருந்தன. போராட்டத்தின் விளைவுகளையும், எதிர்ப்பின் பலன்களையும் அந்தக் கட்சியினர் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உணர்த்தியிருந் தார்கள். தென் தமிழகத்தின் தேர்தல் பணிகளுக்கான பொறுப்பு, முழுக்க மூர்த்தியிடம் கொடுக்கப் பட்டிருந்ததால், எல்லையற்ற அதிகாரம் அவரைச் சூழத் தொடங்கியது. “நம்மகூட இருக்கற அத்தன பயகலுக்கும் ஒரு வழி பண்ணி விட்றணும்டா...” என மூர்த்தி அடிக்கடி தனது மகனிடம் சொல்வார். “எல்லாம் பாத்துக்கலாம்ப்பா...” என அவன் சிரிப்பான். தந்தையின் வெளிச்சத்தில் ஒதுங்குபவர்களில் சில கழுகுகளும் இருக்கிறார்கள் என்பதை அவன் கண்கூடாகக் கண்டிருந்தான். வாய்ப்பு கிடைத்தால் எந்த நேரத்திலும் அவரைக் கொத்திக் கிழித்துத் தின்னும் கழுகுகள். இதனாலேயே ஓர் எல்லைக்கு மேல் எவரும் அவரை நெருங்கிவிட முடியாத ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கினான். நல்லவர்களுக் குள்ளிருக்கும் தீயவர்கள் ஆபத்தானவர்கள், அவர்களின் பேராசை நன்மை தீமையறியாமல் உடனிருப்பவர்களை அழித்துவிடும். தன் அப்பாவோடு இருக்கும் எல்லோருக்கும் அவராக மாறிவிடும் ஆசை இருந்தாலும், தான் மட்டுமே அதற்குத் தகுதியானவன் என நம்பினான்.

கிருஷ்ணவேணி ஒவ்வொரு நாளும் மணியின் வருகைக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். மூர்த்திக்கு மகளைத் தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டுமென்கிற தீராத ஆசையிருந்தது. ஒன்றிரண்டு முறை ஆள் அனுப்பி வேணியை வீட்டுக்குக் கூட்டிவரச் சொல்லிப் பார்த்தார். அவள் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். “இந்தக் கழுதைக்கி அப்படியென்ன வீராப்பு... அவந்தான் ஓடிப்போய்ட்டான்ல... இவ தனியாக் கெடந்து ஏன் தவதாயப்படணும். வெட்டி வீராப்பால சீரழிஞ்சு செங்க சொமக்கப் போறா...” என ஆற்ற மாட்டாமல் மனைவியிடம் புலம்புவார். “அவ விதி அதான்னா நாம என்ன செய்ய முடியும்? பேசாம விடுங்க...” என அந்தம்மா சமாதானப்படுத்தும். மூர்த்தியின் மகன், மாதத்தில் ஒருநாள் வேணிக்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொடுத்து விட்டு கையில் காசையும் தந்துவிட்டுச் செல்வான். மருதுவும் முத்தையாவும் மணியிடம் காட்டிய விசுவாசத்தை வேணியிடமும் காட்டினார்கள். எப்படியும் மணி சீக்கிரமே திரும்பிவிடுவான் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. கண்மாய்க்கரை சாலையிலிருந்த கடைகளின் வருமானம், குடும்பத்தைச் சமாளிக்கப் போதுமான தாக இருந்தாலும், அதிகாரமும் ஆட்களும் இல்லாமல் யாரோபோல் வாழ்வதை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

மருது வாடகைப் பணத்தை வசூலித்து வந்து வேணியிடம் கொடுத்தான். “ஏன் அத்தாச்சி இப்டி வீட்லயே கெடக்க... நல்லது கெட்டதுக்குப் போயி வந்தாதான உனக்கும் மரியாதை இருக்கும்” என வருத்தப்பட்டான். “புருஷனோட நாலு எடத்துக்குப் போனாத்தாண்டா மரியாத. தனியா போனம்னா நாலு பேர் கேவலமாப் பேச மாட்டாய்ங்க... போன மனுசன் என்ன ஆனாருன்னு தெரியல. அவரு திரும்பியும் எங்கிட்ட வந்தாதாண்டா எனக்கு மரியாத” என்றபடியே கண்களில் திரண்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். மருது தன்னை மீறிப் பொங்கிய கண்ணீரைச் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான். குழந்தையோடு வீட்டில் முடங்கிக்கிடந்தவளால், சுப்புத்தாயிக்கு அப்பா கொடுத்திருக்கும் இடத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரின் மீது ஆத்திரமும் வெறுப்பும் மிகுந்தன. “பெத்த மக நான் வம்பாடு பட்டுட்டிருக்கேன். இவரு ஊர்ல இருக்க சிரிக்கிகளுக்கா செஞ்சுட்டு இருக்காரு... என்ன மனுஷனோ ச்சை...” என மருதுவிடம் புலம்பினாள். “ஏன் அத்தாச்சி... அவருதான் உன்னய வீட்டுக்கு வரச் சொல்றாருல்லா. அங்கியே போ வேண்டிதான. அவருக்குக் கோவம் அண்ணன் மேலதான், உம்மேல இல்ல. உனக்காக இல்லாட்டியும் பிள்ளைக்காக போ அத்தாச்சி...” எனத் தன்மையாகச் சொன்னான். “ஏய் மருது... என்ன கிறுக்குக் கூவ மாதிரி பேசிட்டு இருக்க. என் புருஷனுக்குப் பகைன்னா எனக்குந்தாண்டா பகை. ஆள் மாத்தி ஆள் அனுப்பி வீட்டுக்கு வரச் சொல்ற மனுஷனுக்கு அவரே வந்து கூப்டணும்னு தோணலல்ல? எல்லாம் வேஷம்டா, ஊருக்காகப் போடுற வேஷம்...” என வெறுப்போடு வேணி சொல்ல, மருது பதில் சொல்லாமல் எழுந்துபோய்விட்டான்.

மதுரையில் எத்தனை திருவிழாக்கள் நடந்தாலும், தேர்தலைப்போல் பிரமாண்டமான திருவிழா வேறில்லை. கட்சித் தலைவர் உட்பட எல்லோருமே மூர்த்தியை மேயராக நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஊர்க்காரர்களுமே அவர்தான் அடுத்த மேயரென நம்பிக்கொண்டிருக்கையில், சரியாகத் தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக, மூர்த்தி தன் கட்சி சார்பாக மதுரை மாநகர மேயர் பதவிக்குத் தன் மகன் அறிவழகன் போட்டியிடுவதாக அறிவித்தார். அப்பாவின் இந்தத் திடீர் முடிவை அறிவே எதிர்பார்த்திருக்க வில்லை. “என்னாப்பா இது... திடுதிப்புன்னு இப்பிடி செஞ்சுட்ட?” எனக் குழப்பத்தோடு கேட்டான். “காரணமாத்தாண்டா அறிவு. நான் நல்லா இருக்கற காலத்துலயே உனக்கான வழியக் காட்டிவிட்றணும்... ஊர்ல இருக்கவனுக்கெல்லாம் இம்புட்டு செய்றனே ஏன், என் காலத்துக்கு அப்றம் அவய்ங்க உனக்கும் விசுவாசமா இருக்கணும்னுதான். அரசியல்ல எல்லாச் செலவுமே முதலீடுதான். போகப் போக உனக்கே புரியும்” என்று சிரித்தார்.

ரெண்டாம் ஆட்டம்! - 18

அறிவிப்பு வெளியிட்ட நாளிலேயே தேர்தலுக்கான பரபரப்பு தொற்றிக்கொண்டது. எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்களுக்கு மட்டுமே வைக்கப்பட்ட பிரமாண்டமான போர்டுகள் அடுத்த நாளே அறிவழகனுக்கு வைக்கப்பட்டன. ஒவ்வொரு வார்டுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் வேலைகள் சூடுபிடிக்கத் தொடங்கின. மூர்த்தி, தானே நேரடியாகச் சென்று ஒவ்வொரு வார்டிலும் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்தித்து, தேர்தல் செலவுகளுக்கான பணத்தைத் தந்துவிட்டு வந்தார். காளியின் மனைவியைப் போலவே சோமுவின் மனைவியும் தனது வார்டில் போட்டி யிட விரும்பியதால் மூர்த்தி மறுக்காமல் ஒப்புக் கொண்டார். “அறிவு ஜெயிக்கிறதுக்கு எவ்ளோ வேல பாக்கறீகளோ அதே மாதிரி இந்தப் பிள்ளைக ஜெயிக்கவும் வேல பாக்கணும்” எனத் தன் ஆட்களுக்கு ஆணையிட்டிருந்தார். அதனாலேயே அவர்கள் இரண்டு பேரின் வார்டுகளும் நட்சத்திரப் பகுதியைப்போல் தனி அந்தஸ்தோடு விளங்கின.

சுப்புத்தாயி, நாமினேஷன் தாக்கல் செய்வதற்கு முன்னால் கருமாத்தூரிலிருந்த குலசாமி கோயிலுக்குச் சென்றுவர நினைத்திருந்தாள். மரியாதை நிமித்தமாக மூர்த்தியிடம் தகவல் சொல்ல காளியை அழைத்துக்கொண்டு கட்சி அலுவலகம் சென்றாள். அவளுக்கும் காளிக்கும் தேர்தல் முடியும்வரை அணிந்துகொள்ள வேண்டிய புத்தாடைகளை மூர்த்தி தந்தார். சந்தோஷமாக வாங்கிக்கொண்ட சுப்புத்தாயி “அண்ணே ஒரு எட்டு மூணுசாமி கோயில் வரைக்கும் போயிட்டு வந்துர்றண்ணே” எனச் சொல்ல, “சரித்தா போயிட்டு வந்துருங்க” எனச் சிரித்தார். அவர்கள் இருவரும் நன்றி சொல்லிவிட்டு கிளம்ப, “எத்தா... செத்த நில்லு...” என அவர்களை நிறுத்தினார். “பஸ்ஸுல போனா மரியாதையா இருக்காது... நம்ம பிளசர எடுத்துட்டுப் போங்க” என்று சொல்ல, சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் ஆச்சர்யம். அவரோடு இருந்த ஆள் தயங்க, “எலேய்... என்னத்த வெறிக்க வெறிக்கப் பாக்கற... என் மகளுக்குண்டா செய்ய மாட்டனா? நம்ம டிரைவரையும் கூடயே அனுப்பிரு...” என்று அவசரப்படுத்தினார். சுப்புத் தாயிக்கும் காளிக்கும் கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. “கார்லாம் வேண்டாம்ணே...’’ என்ற சுப்புத்தாயைப் பார்த்து சிரித்தவர், “எத்தா... எங்களுக்கு நல்லது கெட்டதுண்டா இனிமே உங்க குடும்பமும் சோமு குடும்பமும்தான் பாக்கப் போறீங்க. உங்களுக்குச் செய்யாம யாருக்குச் செய்யச் சொல்ற? கிறுக்குக் கழுத... போயி நல்ல படியா சாமியக் கும்பிட்டு வா...’’ என்று அனுப்பி வைத்தார்.

வாசலில் நின்ற காரை டிரைவர் அவசரமாக ஸ்டார்ட் செய்தான். டிரைவருக்கு அருகில் முன் சீட்டில் ஏறச் சென்ற காளியின் கையைப் பிடித்து நிறுத்திய சுப்பு “பின்னால ஏறு” என்றாள். அவன் புரியாமல் பார்த்தான். “இந்தா... ரோட்ல நாலு பேரப் பாத்து வணக்கம்வெக்கணும். பின்னாடி உக்காந்தா முடியுமா? நாந்தான கவுன்சிலரு...” என எரிந்து விழுந்தாள். காளி மறுபேச்சில்லாமல் பின்னிருக்கையில் சென்று அமர்ந்தான். கார் இரைச்சலோடு கிளம்பிச் சாலையில் சென்றபோது, சுப்புத்தாயிக்கு தெருவில் எல்லோருக்கும் வணக்கம்வைக்க வேண்டும் எனத் தோன்றியது!

(ஆட்டம் தொடரும்)