மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 19

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

கோட்டைக்குக் கொடுத்த மரியாதையைத் தனக்கும் தருவதை கவனித்த செல்வம், கூட்டத்தில் தன் சகாக்களைத் தேடினான்.

தன்னை எதிர்கொண்ட ஒவ்வொருவரின் கண்களிலும் முதன்முறையாக பயத்தையும் மரியாதையையும் கோட்டைச்சாமி கண்கூடாகப் பார்த்தான். இத்தனை காலமிருந்த ஏளனங்களும் கேலிகளும் மற்றவர்களின் முகங்களிலிருந்து காணமால்போயிருந்தன. பங்காளிகளும் மாமன் மச்சினன்களும் காட்டும் பவ்யம் பெரும் போதையாக இருக்க, அந்த போதைக்காக இன்னும் எத்தனை கொலைகளை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்துச் சிரித்தான். வீடுவரை அவனோடு காரில் வந்த செல்வத்துக்கு, இதையெல்லாம் பார்க்க ஒப்பாமல் “எண்ணே... எப்பிடியும் நான் உங்கூட வந்தா உங்க அப்பத்தா கரச்சலக் குடுக்கும். போற வழில என்னய எங்க ஏரியாவுல எறக்கி வுட்டுட்டுப் போயிரு...” என்றான். கோட்டைச்சாமி அவன் கைகளைப் பிடித்து “எலேய் எதுக்குப் பறக்குற, வீட்ல போயி கறிக்கஞ்சி குடிச்சிட்டு மெல்லமா போவோம். யாரும் எதும் சொல்ல மாட்டாங்க…” என அமர்த்தினான். வண்டியில் உடனிருந்த மற்றவர்கள் சிரித்தார்கள். “யேய் செலுவம்... நீதானப்பா இனிமே கோட்டைக்குக் கூடமாட இருந்து எல்லாத்தையும் பாத்துக்கணும். இப்பயே போறம்ங்கற…” என கோட்டையின் மச்சினன் சொல்ல, “எண்ணே... மலைக்குப் போனாலும் மாமன் மச்சினன்தேன் வேணும்பாய்ங்க. அவருக்கு மச்சினன் நீதான். நீயே கூடமாட இருந்து பாத்துக்க...” என்று செல்வம் சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 19

கோட்டைச்சாமியின் வீடிருக்கும் தெருவுக்குள் கார் நுழைந்தபோது, தூரத்தில் கொட்டடிக்கும் சத்தம் கேட்கத் தொடங்கியது. பட்டாசு வெடிக்கும் ஒலி காதைப் பிளக்க, காரின் வேகம் குறையத் தொடங்கியது. பெரிய காரியம் ஏதாவது செய்துவிட்டுத் திரும்பும்போது, இப்படி வரவேற்பு கொடுப்பது கோட்டைச்சாமி வீட்டு வழக்கம். அவர்களைப் பொறுத்தவரை நல்ல காரியமா கெட்ட காரியமா என்பதெல்லாம் இல்லை. ஊரே பேசும்படியாக ஒரு செயலைச் செய்கிறவனுக்குக் கொடுக்கும் மரியாதை இது. கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, கோட்டைச்சாமி எட்டிப் பார்க்க, வீட்டு வாசலில் கோட்டையின் சம்சாரம் புது பட்டுச் சேலையில், ஆரத்தித் தட்டோடு உற்சாகமாக நின்றுகொண்டிருந்தாள். வீட்டுப் பெண்கள் எல்லோரின் முகங்களிலும் ஒருவித பூரிப்பு. `அட கொலகாரப் பாவிகளா, துள்ளத் துடிக்க ஒருத்தனக் கொன்னுவுட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வர்றோம். இவய்ங்க ஏதோ புதுப்படம் ரிலீஸுக்கு வெயிட் பண்ற மாதிரி வெயிட் பண்றாய்ங்க’ என செல்வம் நினைத்துக்கொண்டான். காரைவிட்டு எல்லோரும் இறங்க, கோட்டைச்சாமியின் மனைவி அவனுக்கும் செல்வத்துக்கும் ஆரத்தி எடுத்தாள். அவளுக்குப் பின்னால் நின்ற அவரின் அப்பத்தா “எப்பே ரெண்டு பேரும் அப்பிடியே பின்வாசல் பக்கமாப் போயி குளிச்சு துணி மாத்திட்டு உள்ள வாங்க” என்றதும், பங்காளிகள் முன்னால் நடக்க இவர்கள் இருவரும் தொடர்ந்து சென்றனர். “ஏண்ணே... என்னண்ணே படம் பெரிய படமா இருக்கு? நாம ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகிங்க மாதிரி... இவய்ங்க செய்ற செயையெல்லாம் வெளிய தெரிஞ்சா மானக்கேடா போயிரும்ணே...” செல்வம் கோட்டையின் காதுகளில் முனக, கோட்டை ஒருமுறை சுற்றிலும் பார்த்துக்கொண்டான். “செலுவம், எங்க குடும்பத்துக்குப் பெரிய செல்வாக்கு இருக்கு, அரசியல் பழக்கம் இருக்கு, சொத்து இருக்கு.எங்களுக்காக மத்தவய்ங்கதான் சம்பவம் பண்ணப் போவாய்ங்களே ஒழிய, நாங்களே எறங்கி செய்றதெல்லாம் அபூர்வம். நா அத செஞ்சிருக்கறதால இந்த மரியாத. எங்க பெரியப்பன் சோமுவுக்கு அப்பறம், இந்த மரியாத எனக்குத்தாண்டா கெடச்சிருக்கு. எதையும் யோசிக்காம வா. நம்மளுக்கு இனிமே எல்லாம் நல்லதாவே நடக்கும்” செல்வத்தின் தோள்களில் கையைப்போட்டு அழைத்துச் சென்றான்.

மாலை வெயிலின் வெளிச்சம் நிரம்பியிருக்க, இருவரும் அணிந்திருக்கும் உடையோடு குளித்து முடித்து புது உடையை மாற்றிக்கொண்டார்கள். இனி எதைப்பற்றியும் யோசிக்கத் தேவையில்லை என்றான பின், செல்வத்துக்கு மனம் லகுவானது. கோட்டைக்குக் கொடுத்த மரியாதையைத் தனக்கும் தருவதை கவனித்த செல்வம், கூட்டத்தில் தன் சகாக்களைத் தேடினான். அவன் தேடுவதை கவனித்த கோட்டையின் சம்சாரம், “யாரய்யா தேட்ற, உன் கூட்டாளிகளையா? எல்லாம் திண்ணைல உக்காந்திருக்குதுக...” எனச் சிரித்தாள். சாப்பிட்டு முடித்து இருவரும் திண்ணைக்கு வந்தபோது, கோட்டைச்சாமியின் ஐயா இருவரையும் பொதுவாகப் பார்த்துவிட்டுப் பேசத் தொடங்கினார். “தெரிஞ்சோ தெரியாமலோ ரெண்டு பேரும் பெரிய சம்பவமாப் பண்ணிட்டீங்க. கத்தியும் அருவாளும் வெறி புடிச்ச நாய் மாதிரி ஓயவே ஓயாது. பாக்கற எல்லார் மேலயும் பாயணும்னு அதுக்கு வெறி இருக்கும். நீங்கதான் கட்டுப்பாடா இருக்கணும். உன்னயக் காப்பாத்திக்கணும்னு ஒருத்தன செய்றியா, யோசிக்காம எறங்கிச் செய். ஆனா சும்மா கோவத்துக்காக, போட்டிக்காகன்னெல்லாம் செஞ்சிட்டு இருந்தா கூடிய சீக்கிரம் ரெண்டு பேரும் ஓலப்பாயிலதான் போவீங்க. இனிமேதான்யா பாத்து சூதானமா இருக்கணும்” கோட்டையும் செல்வமும் அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டனர். செல்வத்துக்குப் பின்னால் நின்ற அவன் நண்பர்கள், மெதுவாக செல்வத்தின் சட்டையை இழுத்து “ஏய் எம்புட்டு நேரம்யா, வாய்யா ஜூட் ஆவோம்…’’ எனக் கிசுகிசுக்க, செல்வம் சட்டையை விலக்கிவிட்டுத் திரும்பிக்கொண்டான். “அப்புச்சி நானும் ஒரு எட்டு வீட்டுக்குப் போயிட்டு வந்துர்றேன். ஒரு மாசத்துக்கு மேலாச்சு...” என்று செல்வம் கோட்டையின் அப்பாவிடம் சொல்ல. “ஏய் பொறுடாப்பா... என்ன அவசரம்?” என்று சிரித்தார். திரும்பி, கோட்டையிடம் “டேய் தம்பி... ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் ஏலத்த இந்தவாட்டி உன் பேருக்கு எடுத்திருக்கேன். இனிமே நீ இந்தப் பயகலவெச்சு தனியா உனக்கு என்ன தோணுதோ செய்யி. மார்க்கெட்ல பவுசு வாங்கிக்க. திருநகர்ல இருக்க நம்ம ரெண்டு பாரையும் உன் பொறுப்புலயே பாத்துக்க. உனக்காக இல்லயிண்டாலும், இந்தப் பயகலுக்காக செய்யி. அவய்ங்களும் சும்மா சுத்திட்டு இருக்காம பொறுப்பா இருப்பாய்ங்கள்ல…” என்றார். தன்னை எப்படி வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற வித்தையை வீட்டிலிருந்தவர்கள் தெரிந்துகொண்டுவிட்டார்கள் என்பது கோட்டைக்குப் புரிந்தது. “இந்தப் பயகலுக்காகவாச்சும் செய்யி’’ என்று ஐயா சொன்னதில் உள்ள சூதை, அவனோ அவன் நண்பர்களோ அறியாமல் இல்லை. ஆனால் இந்த வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்காது என்பதால் கோட்டை மறுக்காமல் சம்மதித்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 19

பொறுப்புகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கும்போதுதான், மனிதர்களுக்கு வயது கூடுகிறது. ஐயாவின் வழிகாட்டலோடு, கோட்டை தொழில்களைக் கவனித்துக்கொள்ளத் தொடங்கியபோது, அவனுக்குள் பெரிய மனுஷத் தோரணை வேகமாகக் குடிகொண்டது. நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் தன் வீட்டிலிருந்தவர்களைப் பிரதிபலிப்பதற்கு பதிலாக, சினிமா நடிகர்களைப் பிரதிபலிக்கத் தொடங்கினான். செல்வம் உட்பட அவனுடன் இருக்கும் பயலுகள் அத்தனைபேரும் அஜித் ரசிகர்கள் என்பதால், தன்னையும் அஜித்தைப்போல் நினைத்துக்கொள்ளத் தொடங்கினான். மார்க்கெட்டை கோட்டையின் தம்பி கருப்பும், பார்களை செல்வமும் அவன் நண்பர்களும் பார்த்துக்கொள்ளத் தொடங்கினார்கள். ஆள் துணையில்லாமல் எங்கும் போகக் கூடாது என்பதை ஐயா கண்டிப்போடு சொல்லியிருந்ததால், செல்வமும் சோணையும் நிழலைப்போல் எப்போதும் அவனோடு இருக்கத் தொடங்கினார்கள். மதுரை மாநகர வீதிகளில், கோட்டையின் புகைப்படத்தோடு புதிய பேனர்கள் முளைக்கத் தொடங்கின. மற்றவர்கள் தன்னை மதிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டதால், தனக்கு வணக்கம்வைக்கிற எல்லோருக்கும் தவறாமல் வணக்கம்வைக்கும் பழக்கத்தைக் கோட்டைச்சாமி உருவாக்கிக் கொண்டான். நடிப்புக்காகக் கும்பிட்டாலும், அப்படிக் கும்பிடுவதில் ஆதாயமிருப்பதால் கோட்டைக்கு அதில் எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை.

பகல் முழுக்க மதுரை நகருக்குள்ளிருக்கும் காரியங்களைக் கவனித்துவிட்டு, மாலை ஏழு மணிக்கு மேல் பாருக்கு வருவது கோட்டையின் வழக்கம். ஆண்டிச்சாமியின் குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் அவனது நடவடிக்கை களைக் கண்காணித்துவந்தனர். ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை பாரில்தான் இருப்பான் என்பது அவனது அன்றாட நடவடிக்கையான பிறகு ஆண்டிச்சாமியின் மச்சினன் தன் ஆட்களோடு லைன் எடுத்தான். திண்டுக்கல்லிலிருந்து ஆறு பேர் இறங்கியிருந்தார்கள். திறமையான அனுபவமிக்கவர்கள். பார் அடைக்கப்பட்ட பின், பத்தே கால் மணி சுமாருக்கு வெளியே வரும் கோட்டை, காரில் ஏறுவதற்கு ஐந்து நிமிடங்களாகும். காரைச் சென்றடையும் அந்த ஐந்து நிமிடங்கள்தான் அவர்களுக்கான நேரம். மொத்த ஸ்கெட்ச்சையும் தெளிவாக அவர்களுக்கு விளக்கியிருந்தார்கள். ஊர் உலகத்தில் என்ன நடந்தாலும், இந்தக் கடைக்கு வருகிறவர்களின் கூட்டத்துக்குக் குறைச்சலில்லை. இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேட்ச் நடந்துகொண்டிருந்த ஒருநாளில், அவர்கள் ஆறு பேரும் பாருக்குள் தங்களுக்கான நேரத்துக்காகக் காத்திருந்தார்கள். எப்போதும் பாரின் நடவடிக்கையை கவனிக்கும் சோணைக்கு, இந்த ஆறு பேரின் தோரணையும் சந்தேகத்தைக் கிளப்ப, அவர்களை மறைமுகமாகக் கண்காணித்தான். அவர்கள் நிறைய குடிக்கவுமில்லை, சாப்பிடவுமில்லை. எதற்காகவோ காத்திருக்கும் வெறி கண்களில் தெரிய, அவசரமாக ஓடிச் சென்று செல்வத்திடம் தகவலைச் சொன்னான். “சரி பொறுமையா இரு, என்ன செய்றாய்ங்கன்னு பாப்போம்” என செல்வம் அவனை அனுப்பிவைத்தான். யாரோ யாருடைய பந்திலோ சிக்ஸ் அடித்துவிட்டதற்காக பாரிலிருந்த கூட்டம் ‘ஒய்ய்ய்...’ எனச் சப்தமெழுப்பியது.

(ஆட்டம் தொடரும்)