சமூகம்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 2

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

வேடிக்கை பார்த்தவர்களின் கண்களுக்கு காளியின் அசைவுகள் ஆக்ரோஷமான ஒரு புலியாட்டமாகத் தெரிந்தது.

மதுரை 1970

வ்வொரு நகரத்துக்கும் ஒரு முகமுண்டு. ஊரின் அமைவிடம், வெப்பநிலை இவையெல்லாம் சேர்ந்துதான் அந்த ஊரின் வாழ்வையும் தகவமைக்கின்றன. மதுரை என்பது அந்த நகரைச் சுற்றிய இருநூற்றுக்கும் அதிகமான கிராமங்களுக்குத் தலைக்கிராமம். கிராமங்களில் வேலை வாய்ப்புகள் எதுவுமில்லாத 1970-களின் தொடக்கத்தில் உசிலம்பட்டி, திருமங்கலம் தாலுகாக்களைச் சேர்ந்த நிறைய பேர் மதுரையின் மேற்குப் பகுதிகளான கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான் போன்ற இடங்களில் வந்து குடியேறத் தொடங்கினார்கள். கமுதி, பரமக்குடி போன்ற பகுதிகளிலிருந்து மதுரையின் கிழக்குப் பகுதிகளான ஆனையூர், சக்குடி, சக்கிமங்கலம், அவனியாபுரம் போன்ற பகுதிகளில் குடியேறத் தொடங்கினார்கள். மதுரைக்குப் போனால் ஏதாவதொரு வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்னும் நம்பிக்கை வர அவர்களுக்குக் காரணமாக இருந்தவை சென்ட்ரல் மார்க்கெட்டும், நகரைச் சுற்றி அப்போது இயங்கிய ஹார்வி மில், விசாலாட்சி மில் போன்ற 23 பெரிய ஆலைகளும்தான். இப்படி வெவ்வேறு பகுதிகளில் குடியேறிய மக்களுக்கு, பிழைக்க வந்த இந்த ஊரின்மீது அலாதியான நெருக்கமும் நேசமும் வளர்ந்தன. இந்த ஊரைத் தங்களின் அடையாளமாக நினைக்கத் தொடங்கினார்கள். ‘மதுர குதுர மத்ததெல்லாம் கழுத’ என பெருமையாகச் சொல்ல ஊரின் சரித்திரம் மட்டும் காரணமல்ல, இங்கு எப்படியும் பிழைத்துக்கொள்ள முடியுமென உருவான நம்பிக்கையும்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 2

தமிழகம் முழுக்க நிகழ்ந்த அரசியல் மாற்றம் மதுரையிலும் நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் வேறு பகுதிகளுக்கு இல்லாத முக்கியத்துவம் அன்று மதுரைக்கு இருந்ததற்கான காரணம், தமிழகத்தின் தென்மாவட்டங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய எல்லாமும் மதுரையைச் சார்ந்திருந்தன. பணவசதி படைத்த முதலாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மதுரையை, தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு மூர்த்திக்கு அவரைப்போலவே எதற்கும் துணிந்த ஆட்கள் தேவைப்பட்டனர். சாதாரண மில் தொழிலாளியாக இருந்தவர், யூனியன் தலைவராகி, படிப்படியாக 60-களின் இறுதியில் ஓர் அரசியல் கட்சியின் முக்கியப் புள்ளியாக வளர்ந்திருந்தார். கலகங்கள் செய்யாமல் ஒருவன் தலைவனாகத் தலையெடுக்க முடியாதென்கிற வரலாறுதான் அவரிடமும் தொடர்ந்தது. அவர் வளர்ச்சிக்காக தங்கள் தோள்களைத் தர எத்தனையோ பேர் இருந்தாலும் தனது தூண்களாக அவர் மதித்தது காளியையும் சோமுவையும்தான். வைகையாற்றின் வடக்குப் பகுதியை காளியும், தென்பகுதியை சோமுவும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த இரண்டு பேரையும் இணைத்த புள்ளி ராமமூர்த்தி.

ரெண்டாம் ஆட்டம்! - 2

திருமங்கலத்துக்குப் பக்கத்தில் சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றிலிருந்து பிழைப்புக்காக வந்த காளி, சென்ட்ரல் மார்க்கெட்டில் ஓர் ஆளாக வளர்ந்தது சில வருடங்களுக்கு முன்புதான். பிழைக்க வரும் ஊர்களில் பசிக்காக உழைக்கும் மனிதன், அந்த ஊரில் தன் கால்களை அழுத்தமாகப் பதிக்க விரும்பிவிட்டால் அவன் எதற்கும் துணிந்தவனாகவே இருப்பான். காளியின் வாழ்க்கை ஒரு சுமைகூலியாகத்தான் தொடங்கியது. வெவ்வேறு ஊர்களிலிருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு நள்ளிரவுக்கு மேல் வண்டிகள் சென்ட்ரல் மார்க்கெட் வந்து சேரும். மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், சிவகங்கை, விருதுநகர், தேனி என வெவ்வேறு ஊர்களுக்கும் அங்கிருந்துதான் பொருள்கள் விநியோகத்துக்காகச் செல்லும். யாவாரிகள் நிறைய பேர் இருந்தாலும், ஏலம் நடத்துவது சோமுவும் அவன் குடும்பமும்தான். எந்தப் பொருளாக இருந்தாலும் அவர்கள் சொல்வதுதான் விலை. யாவாரிகளுக்கு அவர்களின் மேல் கசப்புகளிருந்தன. ‘பொருளுக்குத் தக்கன வெலைய சொல்லுவாய்ங்கன்னு பாத்தா... நம்ம பொழப்பயே கெடுக்குற மாதிரிதான் வெல சொல்றாய்ங்க’ எனச் சிலர் தங்களுக்குள் புலம்புவதுண்டு.

மனிதர்களால் கசப்புகளை நீண்டகாலம் தங்களுக்குள்ளேயே பாதுகாத்துவைக்க முடியாது. என்றாவது ஒருநாள் அது வெடித்துக் கிளம்பவே செய்யும். அன்று ஏலம் தொடங்கி கொஞ்ச நேரத்துக்குப் பின்பாக, வாழைத்தார் எடுப்பதில் சின்ன சலசலப்பு உண்டானது. மார்க்கெட்டில் நீண்டகாலமாகத் தொழில் செய்யும் யாவாரிகளில் கட்டப்பெருமாளும் ஒருவர். ஏலத்தை நடத்திக் கொண்டிருந்த சோமுவின் தம்பியிடம் அவர் எவ்வளவு பேசியும் விலை படிவதாயில்லை. “இதென்னய்யா விக்கிறவனுக்கும் இல்லாம வாங்கறவனுக்கும் இல்லாம நடுவுல எல்லாத்தையும் நீங்க நக்கிட்டுப் போயிடுறீங்க” என ஆத்திரத்தோடு அவர் கத்த, உடனிருந்தவர்கள் ‘எண்ணே செத்தப் பொறுங்க...” என அவரை மட்டுப்படுத்தினார்கள். “நான் சொல்ற வெலைக்கி வாங்கறதா இருந்தா வாங்கு, இல்லயின்னா அப்டியே திரும்பிப் போயிரு” என சோமுவின் தம்பி எகத்தாளமாகப் பேச, பெருமாளுடன் இருந்த இன்னொரு வியாபாரி “ஏய் என்னாப்பா நெட்டுக்குத்தலா பேசிக்கிட்டு இருக்க, மருதைய உங்களுக்கு எழுதியா குடுத்திருக்கு. கொஞ்சம் யாவாரிக செரமத்தையும் பாருங்கப்பா...” என்று கத்தினார். சோமுவின் ஆட்களில் ஒருவன் வேகமாய் வந்து அவரின் பொடனியில் ஓங்கி அடித்தான். யாவாரிகளுக்கும் சோமுவின் ஆட்களுக்கும் கைகலப்பாகத் தொடங்கியது. கட்டப்பெருமாளும் காளியும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். ஊரில் பிழைப்பின்றி இருந்தவனை இந்த மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அவர்தான். அதனால், அவரின்மீது எப்போதும் காளிக்குத் தனித்த மரியாதையுண்டு. அடுத்த தெருவில் லாரியிலிருந்து லோடு இறக்கிக் கொண்டிருந்த காளிக்கு மார்க்கெட்டில் கட்டப்பெருமாளுக்குப் பிரச்னை எனத் தெரிந்த நொடியில் அங்கிருந்து வேகமாக ஓடிவந்தான். உழைத்து இறுகின உடம்பு. அகன்ற தோள்கள். அவன் உயரத்துக்குச் சின்ன சதைகூட இல்லாத ஒடுங்கிய வயிற்றோடு பார்க்கையில் புலியின் உடம்பைப்போலிருக்கும். சுருள் சுருளான முடி தலையெங்கும் புரண்டோட வேகமாக ஓடிவந்தவன் கூட்டத்திலிருந்து பெருமாளைப் பாதுகாப்பாக இழுக்க முயன்றான். ஆனால், அதற்கும் முன்பாகவே அவர் உடலில் காயம்பட்டு ஆங்காங்கே வீங்கியிருந்தது தெரிந்தது. அவன், அவரை வெளியே இழுக்க முயல, ஒருவன் பின்னாலிருந்து வாழைத்தாரால் பெருமாளின் முதுகில் அடித்தான். ஒரு கையால் அவரை இழுத்து கூட்டத்துக்கு வெளியில் விட்ட காளி, சடாரெனக் கூட்டத்துக்குள் புகுந்தான். இடுப்பில் எப்போதும் சொருகியிருக்கும் மூட்டை தூக்க உதவும் கொண்டியை உருவியவன், வாழைத்தாரால் அடித்தவனின் நெஞ்சில் அதை இறக்கினான். உடலெங்கும் கொண்டியால் குத்திக் கீற அவன் அலறத் தொடங்கினான். அந்த அலறலில் கூட்டம் மிரண்டு விலகிச் செல்ல, சோமுவின் ஆட்கள் இப்போது காளியைச் சுற்றினர். ஊரிலும் சரி, இங்கும் சரி, யாரோடும் எந்த மல்லுக்கட்டுக்கும் அவன் போனதில்லை. ஒருவனை வீரனாகவும் கோழையாகவும் மாற்றுவது அவன் சூழல்தான். இத்தனை வலிமையான மனிதன் தனக்குள் இருக்கிறான் என்பதைக் கொஞ்ச நேரத்துக்கு முன்புவரை அவனே நம்பியிருக்க மாட்டான். சுற்றியிருந்த நால்வரின் உடல்களையும் அவன் கையிலிருந்த கொண்டி, குத்திக் கிழித்தது. எவ்வளவு முயன்றும் அவர்களால் நெருங்கி அவனைப் பிடிக்க முடியவில்லை. பெரும் பெரும் மூட்டைகளை அநாயாசமாகத் தூக்கிப் பழக்கப்பட்ட அவனது உடல் லாகவமாகச் சுழன்று சண்டையிட்டது. சோமுவின் ஆட்கள் இரண்டடி நெருங்குவதும், குத்துப்பட்டு விலகுவதுமாயிருந்தார்கள். வேடிக்கை பார்த்தவர்களின் கண்களுக்கு காளியின் அசைவுகள் ஆக்ரோஷமான ஒரு புலியாட்டமாகத் தெரிந்தது. அவன் உக்கிரமாக ஆடி முடித்தபோது சோமுவின் ஆட்கள் காயங்களோடு தப்பி ஓடிவிட்டார்கள். உடலெங்கும் திரண்டு வழிந்த வியர்வை ஆற்றைத் துண்டால் துடைத்துக்கொண்டவனின் கைகளை பெருமாள் நன்றியோடு பற்றிக்கொண்டார். பொழுது மெல்ல விடியத் தொடங்கியபோது, அந்த மார்க்கெட் மட்டுமல்லாமல், மதுரையும் காளி என்னும் ஒரு புதிய மனிதனைப் பார்க்கத் தொடங்கியது.

- ஆட்டம் தொடரும்...