Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 20

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

குடிமகன்களை வஞ்சிக்காமல் இந்திய அணியினர் போட்டியில் ஜெயித்துவிட, உற்சாகத்தில் கடைசி சில நிமிட வியாபாரம் பரபரப்பாக முடிந்து,

பாரில் கிரிக்கெட் வெறியர்களின் கூச்சல் அதிகரித்துக் கொண்டேயிருக்க, கடையில் வேலை செய்யும் ஒருவன் “எண்ணே பத்து மணிக்குக் கடைய அடைக்கணும்... சீக்கிரம் கெளம்புங்கண்ணே” எனச் சத்தமாகக் கத்தினான். அவன் குரல் வெளியே கேட்காதபடி கூட்டத்தினரின் இரைச்சலில் கரைந்துபோயிருந்தது. பதினைந்து பந்துகளில் இருபத்தி மூன்று ரன்களை இந்திய அணியினர் அடித்து ஜெயிப்பார்களா, மாட்டார்களா எனக் குடிமகன்கள் பரபரப்போடு பார்த்துக்கொண்டிருக்க, டி.வி-க்கு அருகிலிருந்த டேபிளிலிருந்து ஒருவன், “க்காலி இன்னிக்கி இந்தியா ஜெயிக்குது... ஆயிரம் ரூவா பெட்ரா…” எனக் கத்த, அவனது கூட்டாளி அவசரமாக அவன் வாயைப் பொத்தினான். “எலேய் இந்த வெங்கம்பயகல நம்பி பெட் கட்டாத... கடைசி பால் வரைக்கிம் ஜெயிக்கிற மாதிரியே போயிட்டு கடைசில தோத்துருவாய்ங்க…” என்றதும், முதலில் பெட் கட்டியவன் உஷாராகி “எப்பா ஏய் நான் பெட் கட்டல...” என எல்லோரையும் பார்த்துக் கையசைத்தான். அவன் சலம்பலில் சிலர் கடுப்பாகினர். சிலர் முறைத்துப் பார்த்து, ‘மூடிட்டு உக்காரு’ எனச் செய்கையில் சொல்ல, “எலேய் செத்தவடம் சும்மா இர்றா…” என ஒரு பெரியவர் எரிச்சலோடு கத்தினார். கூட்டம் மறுபடியும் கிரிக்கெட் பார்க்கும் ஆவலில் மூழ்கியபோது, கடைக்காரப் பையன் இன்னொரு முறை சத்தமாக ‘யேய் சீக்கிரம் கெளம்புங்கய்யா... கடைய அடைக்கணும்ல… போலிஸ்காரய்ங்க வந்தா எங்க மேல கேசப் போடுவாய்ங்க...” எனக் கத்தினான். ஒருவன் ஆத்திரத்தோடு எழுந்து “எலேய் இன்னும் ரெண்டு ஓவர்தான் பொறுமையா இரு… எதாச்சும் சொன்ன டி.வி-ய உடச்சு விட்ருவாய்ங்க…” என்றதும், அந்தப் பையன் புலம்பியபடியே வெளியே சென்றுவிட்டான்.

ரெண்டாம் ஆட்டம்! - 20

கோட்டைச்சாமிக்கு லைன் போட்டு வந்திருந்தவர்கள், இந்த கிரிக்கெட் மேட்ச் தொல்லையை எதிர்பார்த்திருக்கவில்லை. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் பதற்றம் அதிகரித்தது. எதிரி சுதாரிப்பதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும். சூழல் சரியில்லையென திரும்பிப் போக யோசித்தாலும், இது போன்ற காரியங்களைப் பாதியில் விட்டுச் செல்லக் கூடாதென அனுபவம் பிடித்து நிறுத்தியிருந்தது. அவ்வப்போது ஒருவர் மாற்றி ஒருவர் கழிவறைக்குச் சென்றுவரும் சாக்கில், ‘கோட்டைச்சாமி கடையைவிட்டுக் கிளம்பவில்லை’ என்பதை உறுதி செய்துகொண்டார்கள். ஒருவன், எதற்கும் பாதுகாப்பாக இருக்கட்டுமென கோட்டைச்சாமியின் காரின் பின் சக்கரங்களில் மட்டும் காற்றை இறக்கிவிட்டு வந்தான். அவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களையும் அவர்களுக்குத் தெரியாமலேயே செல்வத்தின் ஆட்களும் கண்காணித்துக்கொண்டிருந்தார்கள். கடைக்குள்ளும், கடைக்கு வெளியிலுமாகப் பதினைந்து பேர்களுக்கும் மேல் எந்த நிமிடத்தில் வேண்டுமானாலும் தொடங்கக்கூடிய ஒரு யுத்தத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். கடையில்வைத்து பெரிய சம்பவமாகிவிட்டால், லைசென்ஸ் பிரச்னை வந்துவிடுமென கோட்டைச்சாமி சொல்லியிருந்ததால், செல்வம் தன் ஆட்களிடம் பெரிய ஆயுதங்கள் எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாமென எச்சரித்திருந்தான்.

குடிமகன்களை வஞ்சிக்காமல் இந்திய அணியினர் போட்டியில் ஜெயித்துவிட, உற்சாகத்தில் கடைசி சில நிமிட வியாபாரம் பரபரப்பாக முடிந்து, அந்தக் கொண்டாட்டத்துடனேயே ஆட்கள் பாரைவிட்டு வெளியேறினார்கள். கடையின் முக்கால்வாசி மின்விளக்குகள் அணைக்கப்பட்டு, கல்லாவிலிருந்த ஆட்கள் கணக்கை முடித்துக்கொண்டு கிளம்ப, பையன்கள் இரண்டு பேர் மட்டும் அவசர அவசரமாகப் பாரைச் சுத்தம்செய்து கொண்டிருந்தார்கள். செல்வம், ஒரு பாதி ஆட்களோடு பாருக்கு எதிரிலிருந்த பழைய கட்டடத்தின் மறைவில் நின்றிருந்தான். இன்னொரு பாதி ஆட்கள் பாரை ஒட்டிய சந்தில் பதுங்கியிருந்தார்கள். யார் எப்போது வெளியில் வர வேண்டுமென்கிற எல்லா விவரங்களையும் செல்வம் தெளிவாக முன்பே சொல்லிக் கொடுத்திருந்தான். இரண்டு பேர் துணையோடு கோட்டைச்சாமி பாரிலிருந்து வெளியே வந்தான். லைன் போட்டு வந்திருந்த ஆறு பேரும் வெவ்வேறு திசைகளிலிருந்து கோட்டைச்சாமியை நெருங்க, அவன் காரில் ஏறாமல் செல்வம் நின்றிருந்த பழைய கட்டடம் நோக்கி நடந்தான். நிலைமை கைமீறிப் போகும் முன்னால் கோட்டைச்சாமியை வெட்டிவிட வேண்டுமென்கிற பதற்றத்தோடு ஒருவன் அவசரமாக ஓடிவர, இருளிலிருந்து ஒரு சோடா பாட்டில் பறந்து வந்து அவன் மண்டையை உடைத்தது. அடுத்தடுத்து பாட்டில்களும் அரை செங்கற்களும் பறந்துவர, ஆண்டிச்சாமி ஆட்கள் குழம்பிப்போனார்கள். கோட்டைச்சாமி சரியாகத் தெருவிளக்கின் கீழ் வந்து நிற்க, இருளில் பதுங்கியிருந்த அவனது ஆட்கள் மொத்தமாக வெளியே வந்தனர். வகையாக மாட்டிக் கொண்டோம் என்பது தெரிந்ததும், வந்த ஆறு பேரும் அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கான வழியைத் தேட, ஓடிவந்த செல்வம் ஒருவனின் பொடனியில் அடித்து வீழ்த்தினான். எதிர்த் தாக்குதல் செய்யும் திராணியின்றி, கைகட்டி நின்றவர்களைப் பார்த்த கோட்டைச்சாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. “ஏண்டா இத்தன பேர் சேந்து லைன் எடுத்திருக்கீங்க? ஒருத்தனுக்குக்கூடவா இது வொர்க்கவுட் ஆகும், ஆகாதுன்னு தெரியல?”

ரெண்டாம் ஆட்டம்! - 20

“இன்னிக்கி கிரிக்கெட் இருக்கும்னு யாரு கண்டா?” ஒருவன் தலையைத் தூக்காமல் சொல்ல, “கிரிக்கெட் இல்லாட்டியும் உங்களால ஒரு மயிரையும் புடுங்கியிருக்க முடியாது” என கோட்டைச்சாமி சிரித்தான். அவனோடு இருந்தவர்களும் சிரிக்க, ஆறு பேரில் ஒருவன் “இந்தாருண்ணே, நாங்க கூலிக்காரய்ங்கதான். இப்பிடியே பிரச்சன இல்லாம போயிர்றோம். அனுப்பினது யாருன்னு உனக்குத் தெரியும்... நீயாச்சு அவய்ங்களாச்சு...” பதற்றத்தோடு சொல்ல, கோட்டைச்சாமி அவனைக் கூர்ந்து பார்த்து முன்னால் வரச் சொன்னான். தாடி மீசை இல்லாத அந்த இளைஞனின் முகத்தைத் தடவியபடியே “பாக்க செல்வராகன் படத்துல வர்ற செகேண்ட் ஹீரோ மாதிரி பளபளன்னு இருக்க... உனக்கெதுக்குடா இந்தப் பொழப்புல்லாம்…” ஓங்கி அறைந்தான். அடிபட்டவன் தலையைத் தூக்கிப் பார்த்து முறைக்க, கோட்டைச்சாமி திரும்பவும் அறைந்தான். அந்த அறை அவனோடு வந்திருந்தவர்களுக்கும் கலக்கத்தைக் கொடுத்தது. “இவயங்கள என்னண்ணே செய்றது?” என செல்வம் இடைமறித்துக் கேட்க, “எம்புட்றா காசு வாங்குனீங்க?” கோட்டைச்சாமி அவர்களைப் பார்த்துக் கேட்டான். ஒருவரும் பதில் சொல்லவில்லை. “ரைட்ரா… ரைட்ரா… உண்டனாத்தான் வாங்கியிருக்காய்ங்கபோல, அதான் வாயத் தொறக்க மாட்றாய்ங்க. வந்தவய்ங்கள வெறுங்கையோட அனுப்பக் கூடாது. செல்வம் இவய்ங்க ஆறு பேருக்கும் இடது கை கட்ட வெரல மட்டும் வெட்டி எடுத்துட்டு தொரத்திவிடு...” சொல்லிவிட்டு கோட்டைச்சாமி தனது காரை நோக்கி வேகமாக நடந்தான். காருக்கு அருகில் சென்றதும், டயரில் காற்றை இறக்கிவிட்டவனின் முகம் நினைவுக்கு வர, திரும்பி நின்று அவனைத் தேடினான். “டேய் சொட்ட, உன்னயத்தாண்டா செவப்பு சட்ட…” ஆறு பேரில் ஒருவன் “என்னயவாண்ணே?” எனத் தயங்கியபடியே முன்னால் வந்தான். “உன்னயத்தான் இங்க வா…” என கோட்டைச்சாமி அழைக்க, சிவப்புச் சட்டைக்காரன் பயந்தபடி கோட்டைச்சாமியின் அருகில் சென்றான். கோட்டைச்சாமி அவன் மண்டையில் ஓங்கி நங்கென கொட்ட, வலியில் ஆவென கத்தினான். “எம்புட்டு மப்பு இருந்தா டயர்ல காத்த இறக்கி வுடுவ…” என்றபடியே இன்னொரு கொட்டு வைக்க, “அண்ணே அண்ணே... தெரியாம செஞ்சுட்டண்ணே… ஸாரிண்ணே...” என அவசரமாகக் கோட்டையின் காலில் விழுந்தான். ‘ஆளையும் மண்டையும் பாரு’ என முனகியபடியே கோட்டை விலகி நடக்க, சோனை தனது டூ வீலரில் கோட்டைச்சாமியை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

“அண்ணே அண்ணே... எங்கள எதுவும் செய்யாம விட்ருண்ணே… நாங்க உன் வழிக்கு வர மாட்டம்ணே...” என அவர்களின் கதறல் அந்த இருளில் பூதாகரமாக எதிரொலிக்க, “ஏய் கத்தாம செவனேன்னு இருங்கடா… கத்தாம இருந்தா வெரலோட விட்ருவேன். இல்ல கைய எடுத்திருவேன்” என செல்வம் மிரட்ட, என்ன செய்வதெனத் தெரியாமல் நடுங்கியபடி நின்றனர். ஆறு பேரையும் செல்வத்தின் ஆட்கள் அடித்து, பழைய கட்டடத்தின் இருட்டுக்குள் நகர்த்த, அடுத்த சில நிமிடங்களில் ஆறு கட்டை விரல்கள் குருதி வழிய ஒரு பாலிதீன் பையில் பாதுகாக்கப்பட்டன.

பொழுது மெல்ல விடியத் தொடங்கியபோது, ஆண்டிச்சாமியின் வீட்டு விளக்குகள் எரியத் தொடங்கின. கதவைத் திறந்து வாசல் தெளிக்கவந்த ஆண்டிச்சாமியின் மகள் அம்சவல்லி, அந்த விடிகாலையில் யாரோ வாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டு பயத்தில் அலறிவிட்டாள். அவள் சத்தம் கேட்டு உறக்கத்திலிருந்தவர்கள் பதறியபடி எழுந்து ஓடி வர, வாசலில் எல்லா விளக்குகளும் அவசரமாக உயிர்பெற்றன. செல்வம் ரத்தம் படிந்த சட்டையோடு சலனமேயில்லாமல் நின்றுகொண்டிருந்தான். உறக்கக் கலக்கத்திலிருந்த ஆண்டிச்சாமியின் மச்சினனுக்கு செல்வத்தை அந்தக் கோலத்தில் பார்த்ததுமே என்ன நடந்திருக்கக் கூடுமென்பதை யூகித்துக்கொள்ள முடிந்தது. செல்வம் நிதானமாகப் படியேறிப்போய், அந்தாளிடம் பாலிதீன் பையை நீட்டினான். உறைந்த குருதியோடு பைக்குள் கிடந்த கட்டைவிரல்களைப் பார்த்த எல்லோரும் ஈரக்கொலை நடுங்க, பேயறைந்ததுபோல் செல்வத்தைப் பார்த்தனர். “பாவம் பாத்து கட்ட வெரலோட விட்ருக்காப்டி… அடுத்தவாட்டி இந்த மாதிரி எவனையாச்சும் அனுப்புனா, இந்தப் பையில வெரலுக்கு பதிலா தலதான் வரும்” மிரட்டும் குரலில் சொல்லிவிட்டு பையை அந்தாளின் கையில் கொடுத்துவிட்டு இறங்கி நடந்தான். தெருமுக்கில் அவனுக்காகக் காத்திருந்த நண்பனோடு பைக்கிலேறி அவன் கிளம்பியபோது, செல்வத்தின் தலைக்கு மேலாக மெல்ல அடுத்த நாளுக்கான சூரிய வெளிச்சம் பரவத் தொடங்கியது.

(ஆட்டம் தொடரும்)