அலசல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 21

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

ஒவ்வொரு காலகட்டத்திலும், அரசியலில் நிகழும் மாற்றங்கள் சராசரி மனிதர்களுக் கிடையிலான நட்பையும் உறவுகளையும் மாற்றியமைத்துவிடுகின்றன

ஒவ்வொரு மனிதனினுக்குள்ளும் அவனது ஊர் ஓர் அங்கமாக மாறிவிடுகிறது. கிராமமோ நகரமோ ஊர்களுக்குப் பிரத்யேகமானதோர் ஆன்மா உண்டு. அவ்வான்மாதான் அவ்வூர்வாசிகளின் ஆளுமையைத் தீர்மானிக்கிறது. மதுரையையும் அதன் மக்களையும் புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல. இந்த நகரத்தில் பிறக்கும் ஒவ்வொருவனும், தன் முதுகில் பல்லாயிரமாண்டுகளின் வரலாற்றைத் தனக்கே தெரியாமல் சுமந்துகொண்டிருக்கிறான். சொல்லப்போனால் அது சுமையல்ல, மகுடம். ஒதுங்க நிழலில்லாதபோதும், தன்னை ராஜாவாக நினைக்கும் மனம் வாய்க்கப்பெற்றவன் மதுரைக்காரன். தெருவில் சுற்றுகிறவனே தன்னை ராஜாவாக நினைத்துக்கொள்ளும் ஊரில், ராஜாவுக்கான எல்லா அதிகாரங்களோடும் இருப்பவன் எப்படி நடந்து கொள்வானோ அப்படித்தான் மூர்த்தி நடந்துகொண்டார். “இந்த எலெக்‌ஷன் மதுரையோட தலையெழுத்த தீர்மானிக்கணும். லேபர் யூனியன்ல ஒரு போஸ்ட்டிங் வாங்கறதுக்காக, எத்தன பேருக்கு முதுகு சொறிஞ்சு கைகாலப் புடிச்சு விட்ருப்பேன்னு எனக்குத்தான் தெரியும். அரசியலுக்கு வந்ததெல்லாம் சாதன இல்லடா அறிவு, இனி காலாகாலத்துக்கும் மதுரைண்டாலே மூர்த்திங்கற பேர் யாவகத்துக்கு வரணும்” தனக்குப் பின்னால் தன் மகன் எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாதென்கிற விவரங்களையெல்லாம் மூர்த்தி அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இல்லாத பெரும் அக்கறையை மாநகரத் தேர்தலுக்குக் காட்டியதில் முக்கியக் காரணமிருந்தது. என்னதான் மதுரையில் அவருக்கு மாபெரும் செல்வாக்கு இருந்தபோதும், தமிழ்நாட்டில் அவரின் கட்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பலமிழக்கத் தொடங்கியிருந்தது. நடிகர் தொடங்கிய புதிய கட்சிக்கு மக்களிடம் மாபெரும் ஆதரவு பெருகிக் கொண்டிருந்தது. இதனாலேயே மதுரையில் தனக்கான அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வது மூர்த்திக்கு முக்கியமாகப்பட்டது.

ரெண்டாம் ஆட்டம்! - 21

ஒவ்வொரு காலகட்டத்திலும், அரசியலில் நிகழும் மாற்றங்கள் சராசரி மனிதர்களுக் கிடையிலான நட்பையும் உறவுகளையும் மாற்றியமைத்துவிடுகின்றன. தமிழக வரலாற்றில் தேசியக் கட்சியின் பலத்தை முற்றிலுமாகத் தகர்த்து, திராவிடக் கட்சி கோலோச்சிய அதேநேரத்தில், அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் உருவாக்கிய புதிய கட்சி ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு வீதியிலும் புதிய குழுக்களை உருவாக்கியிருந்தது. சொல்லப் போனால், இந்தப் பிளவுகளுக்கும் மோதல்களுக்குமான விதை மதுரையிலிருந்து தொடங்கியதுதான் ஆச்சர்யம். 1973-ம் வருடம், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நடிகரின் கட்சி சார்பாக தங்கமுத்து போட்டி யிட்டார். அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்யவந்த கட்சியின் தலைவர், திண்டுக்கல்லில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மதுரை திரும்பும் வழியில்தான் மக்கள் மத்தியில் தனக்கிருந்த அமோகமான வரவேற்பைத் தெரிந்துகொண்டிருந்தார். திண்டுக்கல் எல்லை யிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலிருந்த மதுரைக்கு வந்து சேர்வதற்கு அவருக்கு எட்டு மணி நேரத்துக்கும் மேலானது. வழியெங்கும் மக்கள் வெள்ளம். அவரே கற்பனை செய்து பார்த்திடாத ஆரவாரக் கூச்சல். ஒரு திரையரங்கத்தில் கூடும் மக்கள் கூட்டத்துக்கும், இப்படிச் சாலையின் இருபுறங்களிலும் கூடும் கூட்டத்துக்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. திரையரங்கக் கூட்டம் ஒரு நடிகனைப் பெரும் நட்சத்திரமாக்குகிறது. சாலையில் திரளும் இந்தப் பெருங்கூட்டம் அவனைத் தலைவனாக்குகிறது. அவர் தன்னைப் பெரும் தலைவனாக உணர்ந்து கொண்ட நாளது. எல்லாவற்றிலும் முக்கியமாக, மதுரைதான் தனக்கான பலமென்பதையும் அன்று தெரிந்துகொண்டார்.

ரெண்டாம் ஆட்டம்! - 21

அந்தத் தேர்தலில், திண்டுக்கல் தொகுதியில் தங்கமுத்து பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால், தென் தமிழ்நாட்டில் தன்னை மிக வலுவாக இறுத்திக்கொள்வதற்கான வேலைகளை நடிகர் செய்யத் தொடங்கினார். காலம் நமது வெற்றிகளுக்கான சமிக்ஞைகளைத் தரும்போது, அவற்றை வாய்ப்புகளாக மாற்றிக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். அவர் மதுரை தந்த சமிக்ஞையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். மதுரையில் திராவிடக் கட்சியின் ஒரே பலம் மூர்த்திதான் என்பது தெரிந்திருந்ததால், அவருக்கு எதிரான ஆட்களையும் அவரின் மீது கசப்புகளோடு இருந்தவர்களையும் தன் பக்கமாக இழுத்தார். சென்ட்ரல் மார்க்கெட்டில் பவுசு வாங்கிக்கொண்டிருந்தவர்கள், மூர்த்தியிடம் எடுபிடிகளாக இருந்தவர்களுக்கெல்லாம் இந்தப் புதிய கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டதை எல்லோருமே ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அரசியல் காரணங்களுக்காக ஏற்பட்ட இந்தப் பிரிவு, துரதிர்ஷ்டவசமாகச் சாதியப் பாகுபாடுகளை உருவாக்கத் தொடங்கியது. அவ்வளவு காலமும் மூர்த்தியிடம் வேலை பார்த்தவர்களில் எல்லா சமூகத்தினரும் கலந்திருந்தனர். ஆனால், அதிகாரம் மட்டும் மூர்த்தியின் உறவினர்களிடம் மட்டுமே இருந்ததைப் புதிய கட்சிக்கு வந்த பிறகுதான் எல்லோரும் புரிந்துகொண்டார்கள்.

நகரெங்கும் தேர்தல் விளம்பரங்கள் சுவர்களில் நிறையத் தொடங்கியிருந்தன. மதுரையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மூர்த்தியின் ஆதிக்கம் நிரம்பியிருக்க, மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அவருக்கு எதிரானவர்களின் ஆதிக்கம் நிரம்பியது. மூர்த்திக்கு எதிரான அணியை மாயக்கிருஷ்ணன் முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்தார். அவர் நீண்டகாலம் மூர்த்தியிடம் வேலை செய்தவர் என்பதால், எந்தெந்த வேலைக்கு மூர்த்தி யாரைப் பயன்படுத்திக் கொள்வார் என்பதைத் தெரிந்து, அவர்களுக்கெல்லாம் நிறைய பணம் கொடுத்து, தன் பக்கமாக இழுத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் சுவர் விளம்பரங்கள் வரைவதற்குக்கூட ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் மூர்த்தி, விருதுநகரிலிருந்து ஆட்களை வரவழைக்க வேண்டியதாகிப்போனது. “யப்பா மாப்பாளையம் தாண்டி எங்கியும் நம்ம கட்சி வெளம்பரமே இல்லை, எல்லா சொவத்துலயும் அவய்ங்க கட்சிக்காரய்ங்க மூஞ்சியாத்தான் இருக்கு. இப்பிடியிருந்தா எப்பிடி நாம செயிக்கிறது?” என அறிவு சடவாய்க் கேட்க, மூர்த்தி சிரித்தபடி “அவய்ங்க தலகீழ நின்னு தண்ணி குடிச்சாலும்... மதுரைல நம்மள மிஞ்சி ஒண்ணும் ஆயிராது அறிவு. நீ தெம்பா இரு” என அவனுக்கு ஆறுதல் சொன்னார்.

காளி தன்னோடு பிரசாரத்துக்கு வருவதை சுப்புத்தாயி கொஞ்சமும் விரும்பவில்லை. இழந்த அதிகாரத்தை அடைவதற்கான தீராத வெறி அவன் கண்களில் கனன்று எரிவதைத் தெரிந்துகொண்டவள், “நீயும் எதுக்கு எங்கூடயே வந்துக்கிட்டு இருக்க, கட்சி ஆபீஸுக்குப் போயி மூர்த்தி அண்ணன் எதாச்சும் சொன்னா செய்யி. இம்புட்டுக்கான வார்டுக்கு நாம இத்தன பேரு தேவையா?” என சாடை மாடையாக அவனை விலக்கினாள். முதன்முறை இப்படிச் சொன்னபோதே, அவள் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டாலும், காளி எந்த எதிர்வினையையும் காட்டிக் கொள்ளவில்லை. அவள் அதே வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொன்னபோது “நான் கூட வர்றதுல உனக்கு என்ன பிரச்சன... மூக்கு மேல ஒட்டுன பீயாட்டம் நான் பக்கத்துல வந்தாலே அருவருப்பா பாக்கற... நான் கூட வந்தா உனக்கு ஓட்டுப்போட மாட்டம்ண்டு யாரும் சொன்னாய்ங்களா?” என எரிச்சலோடு கேட்டான். “ஆமா நீ பெரிய நல்லபுடி நாணயம் பாரு. உன் மூஞ்சிக்காக எல்லாரும் வந்து ஓட்டக் குத்தறதுக்கு. உன் தேவைக்கு யாராச்சும் வேணும்னா கால்ல விழுவ, இல்லன்னா நம்பவெச்சு கழுத்தறுப்பன்னு ஊர்க்காரய்ங்களுக்கு நல்லாத் தெரியும். உன்னியக் கூட கூட்டிக்கிட்டுப் போறதும் ஒண்ணுதான், சனியன சடைல கட்டிக்கிட்டுப் போறதும் ஒண்ணுதான். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, வீட்ல பொச்சப் பொத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான. சும்மா நொய் நொய்ங்கற…” என அவனிடம் சுப்பு மூஞ்சியைக் காட்ட, அவளோடு பேசுவதை நிறுத்திக்கொண்டான். தினமும் காலையில் எல்லோருக்கும் முன்பாக கட்சி ஆபீஸுக்குச் செல்வதும், இரவு எல்லோரும் கிளம்பிய பிறகு வீட்டுக்குத் திரும்புவதையும் வழக்கமாக்கிக் கொண்டவன், மூர்த்தி சொன்ன அத்தனை வேலைகளையும் செய்தான். பிரசாரம் முடிய இரண்டு நாள்கள் மிச்சமிருந்தபோது, வார்டில் பதினாறு சுவர்களில் எழுதப்பட்ட தேர்தல் விளம்பரங்களில் ஓர் இடத்தில்கூட தனது பெயர் இல்லாததை கவனித்தவன், சுப்புவுக்கு இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததற்காக வருத்தப்பட்டான்.

(ஆட்டம் தொடரும்)