அரசியல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 22

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

சோமுவின் தம்பிக்கு முத்தையாவைக் கண்டாலே வேப்பங்காயாகக் கசந்தது. அவன் எதிரில் வந்தாலே எரித்துவிடுவதுபோல் பார்ப்பான்.

மணி எங்கு போயிருப்பான்... எப்போதும் எதற்கும் அஞ்சாத அவனை ஊரைவிட்டுத் துரத்தியது எது... எப்போது திரும்ப வருவான்? முத்தையாவுக்கு விடை தெரிந்துகொள்ள வேண்டிய கேள்விகள் ஏராளமாக இருந்தன. ஆனால், அந்த பதில்களுக்காகக் காத்திருக்கும் பொறுமையில்லை. மணி, தேடித் தேடிச் சேர்த்திருந்த பகையின் ரத்தம் குடிக்கும் நாவுகள், தன்னை நோக்கித்தான் இனி நீளும் என்பதைத் தெரிந்துகொண்டவன், எல்லோரிடமும் மண்டியிட்டான். எதிர்க்கத் துணிவில்லாதவனுக்குப் பணிவு மட்டுமே பாதுகாப்பு. காளியிடமும், சோமுவின் குடும்பத்திடமும் வலியச் சென்று கைகட்டி நின்றான். அவர்கள் அவனைப் பொருட்படுத்தாமல் விலகிச் சென்றபோது, மூர்த்தியின் வீட்டுக்கும், கட்சி அலுவலகத்துக்குமாக அலைந்தான். மணியின் வீட்டுக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டு, முடிந்தவரை தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிகளைத் தேடினான். யாரும் அழைக்காமலேயே மூர்த்தியின் கட்சி அலுவல கத்துக்குச் சென்று அவரின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான். முதல் சில நாள்கள் அவனைப் பொருட்படுத்தாத மூர்த்தி, சின்னச் சின்ன வேலைகளைக் கொடுக்கத் தொடங்கினார். தன் மகனுக்கு நிழலைப்போல உடனிருக்க ஒருவனைத் தேடிக்கொண்டிருந்தவருக்கு முத்தையாவே சரியான ஆளெனத் தோன்றியது. ஆழம் பார்க்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டாமென நினைத்தவர், அவன் போக்கிலேயே அவனை இருக்கவிட்டார். தன் தலை தப்பிவிட்ட நிம்மதியில் முத்தையா ஒவ்வொரு நாளும் தன் விசுவாசத்தை அவரிடம் நிரூபிக்கப் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 22

சோமுவின் தம்பிக்கு முத்தையாவைக் கண்டாலே வேப்பங்காயாகக் கசந்தது. அவன் எதிரில் வந்தாலே எரித்துவிடுவதுபோல் பார்ப்பான். ஆனால், மூர்த்தி அண்ணனுக்காக எதுவும் செய்யாமல் அமைதி காத்தான். “உன்னப்போல என்னப்போல இருக்கவய்ங்களுக்கு முத்தையா மாதிரி ஒருத்தன் என்னிக்கும் தேவய்யா. அவன் எம்புட்டு விசுவாசமா இருப்பான்னு ஊருக்கே தெரியும். ஒருநாளும் உனக்கு எதிரா கத்தியத் தூக்கவும் மாட்டான், காட்டிக் குடுக்கவும் மாட்டான். பட்டும் படாம அவன அணச்சுப்போவோம்” என மூர்த்தி அவன் ஆத்திரத்தை மட்டுப்படுத்தினார். “என்னவோண்ணே ஆகாதவென் போகாதவனை யெல்லாம் அரவணச்சுப்போயி நம்மளுக்கு என்ன ஆகப்போகுதுன்னு தெரியல” எனச் சடைத்தவனைப் பார்த்த மூர்த்தி, “நாம சொன்னதும், கத்தி கம்ப எடுத்துட்டுப்போயி நாலுபேரக் குத்திப் போட்டுட்டு வர்றதுக்கு எத்தனையோ பேரு வருவாய்ங்க. அப்பிடி வர்றவய்ங்க எம்புட்டுக் காலம் நம்மகூட விசுவாசமா இருப்பாய்ங்கன்னு தெரியாது. இவன மாதிரி ஆளுக சாகற மட்டும் நாயாட்டம் காலச் சுத்திட்டுக் கெடப்பாய்ங்க” என அர்த்தத்தோடு சொல்லிவிட்டுச் சென்றார். தேர்தலின் எந்தப் பரபரப்பையும் பொருட்படுத்தாமல் கிருஷ்ணவேணி சோர்ந்துபோயிருந்தாள். மணி திரும்பி வரக்கூடுமெனக் காத்திருந்தவளுக்கு, அந்தக் காத்திருப்பு அவன் மீதான வெறுப்பாக மாறத் தொடங்கியிருந்தது. அந்த வீதியிலிருந்தவர்களும் மணியை மறக்கத் தொடங்கியிருக்க, வந்துகொண்டிருந்த வருமானமும் குறைந்துபோனது. கடைக்காரர்கள் பவுசு கொடுக்க மறுத்தபோது, அவர்களை மிரட்டி பவுசு வாங்க தாட்டியமான ஆட்கள் எவரும் அவளோடில்லை. மருது மட்டுமே நிழலைப்போல் அவளைச் சுற்றிக்கொண்டிருந்தான். குழந்தையை உடனிருந்து கவனித்துக்கொள்ள ஒருவருமில்லாமல் தனியாகச் சிரமப்பட்டவளிடம், “இப்பிடி ஒத்தையாக் கெடந்து செரமப்படணும்னு உனக்கென்ன தலையெழுத்தா அத்தாச்சி. பேசாம உங்கப்பா வீட்டுக்கே போயிரேன்” என மருது சொன்னபோது, பதில் சொல்ல முடியாமல் இறுகிப்போனாள். ஆற்றாமையெல்லாம் அழுகையாக வெடிக்க, உடைந்து அழுதாள்; யாராலும் தேற்ற முடியாத அழுகை அது. தனிமையும் துயரும் ஆக்கிரமித்த மனதுக்குள், வாழ்க்கை குறித்தான கனவுகளெல்லாம் நொறுங்கிப்போன வேதனையிருந்தது. இந்நிலையில் அவளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டாமென மருது அவளோடு தங்கினான். மனதில் கிடந்து அரித்துக்கொண்டிருந்த எல்லாவற்றையும் அழுகையாகக் கரைத்தவள் “ஊரவிட்டுப் போற மயிராண்டி என்னய ஏண்டா தனியா விட்டுட்டுப் போனான்... அவனுக்காகத்தான எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன். கடைசில குண்டியத் தொடைக்கிற குச்சி மாதிரி நெனச்சிட்டான்ல என்னய...” துயரம் வார்த்தைகளாகப் பீறிட்டு வந்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி, மருது வெறுமனே அவள் தோள்களைத் தட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தான். தனது வீதியின் சுவர்களெங்கும் தேர்தல் விளம்பரங்களில், மூர்த்தியும் அறிவழகனும் உற்சாகமாகச் சிரித்தபடி இருக்க, இந்த நான்கு சுவர்களுக்குள் தான் உக்கிப்போய் உட்கார்ந்திருக்கும் வயிற்றெரிச்சலை அவள் கொட்டித் தீர்த்தபோது ‘என்னிக்கா இருந்தாலும் பெத்த பாசம் போகாது அத்தாச்சி. நீதான் போக மாட்டங்கற…’ என்றவனிடமிருந்து விலகி, கண்ணீரோடு அவனது கண்களை உற்றுப்பார்த்தவள் “எந்த மூஞ்சிய வெச்சுக்கிட்டுடா நான் திரும்ப அந்த வீட்டுக்குள்ள போவேன்?” என வெடித்து அழுதவள், அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவளிடமிருந்து தன்னை விலக்கிக்கொள்ளாமல், மருது அவளை முன்னிலும் இறுக்கமாக அணைத்துக்கொண்டான். அந்தச் சூடும் நெருக்கமும் தேவையாயிருக்க, வேணி அவனை மூர்க்கமாக முத்தமிட்டாள். எல்லாத் துயர்களையும் அடித்துச் செல்லும் வல்லமை இச்சைக்கு மட்டுமேயுண்டு. உள்ளறையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையை மறந்து, இருவரும் கலவிகொள்ளத் தொடங்கினார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 22

காளிக்கு மனிதர்களின் மீதிருந்த நம்பிக்கையெல்லாம் ஒட்டு மொத்தமாகக் காணாமல்போனது. தேர்தல் முடிந்த நாளின் இரவில், சைக்கிளை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் சென்றான். இருட்டத் தொடங்கியிருந்த சாலையில், வாகனங்களின் போக்குவரத்து குறைந்துபோயிருக்க, தேர்தல் முடிந்த களைப்பில் ஊரின் இயக்கம் அடங்கிப்போயிருந்தது. வைகையாத்துப் பாலத்தை ஒட்டி கஞ்சா விற்றுக்கொண்டிருந்த ஒருவன், காளியைப் பார்த்து வணக்கம் வைக்க, பதிலுக்கு வணக்கம் வைத்தான். என்றைக்குமில்லாமல் மண்டைக்குள் போதையின் தேவை கிளர்ந்தெழ, “தம்பி ரெண்டு பொட்டணம் குர்றா...’ என்று கேட்டான். கஞ்சா விற்றுக் கொண்டிருந்த இளைஞன் “என்னண்ணே புதுசா இந்தப் பழக்கம்? வேண்டாம்ணே...” எனத் தயங்கினான். “எல்லாம் எனக்குத் தெரியும், குட்றா வெண்ண...” காளி ஆத்திரத்தோடு கத்த, அந்த இளைஞன் இரண்டு பொட்டலங்களைக் கொடுத்தான். கசங்கிய ரூவாய்த் தாள்களை அவனிடம் கொடுத்துவிட்டு சைக்கிளை மிதித்த காளி, சற்று தூரத்தில் முத்தையா தனியாக உட்கார்ந்து கஞ்சா இழுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அவனை நோக்கி வேகமாக சைக்கிளை மிதிக்க, சைக்கிள் வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த முத்தையா, மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றான். “என்னண்ணே இந்தப் பக்கம்?” அவன் பொதுவாகக் கேட்க, “எங்கூட வாடா” என்ற காளி சைக்கிளில் ஏறிக்கொள்ளச் சொன்னான். மறுபேச்சில்லாமல் கேரியரில் ஏறிக்கொண்ட முத்தையாவுக்கு அச்சத்தில் ஈரக்கொலை நடுங்கியது.

காளியும் மேற்கொண்டு எதுவும் பேசாமல், இருளடர்ந்த சாலையில் நிதானமாக சைக்கிளைச் செலுத்தினான். கோச்சடை முத்தையா கோயிலை ஒட்டிய தோப்பின் பக்கமாக வந்ததும், சைக்கிளை நிறுத்திவிட்டு இருவரும் தோப்புக்குள் சென்றனர். “இன்னியாரத்துல எதுக்குண்ணே இம்புட்டுத் தொல வந்திருக்கோம்?” முத்தையா தயங்கியபடி கேட்க, காளி சிதறிய இதயத்தின் துயரை மறைக்க முடியாமல் “எங்க போறதுன்னு தெரியலடா… ஊர்ல ஒருபய என்னய மதிக்கறதில்ல. என் பொண்டாட்டி நாய் மாதிரி நடத்தறா... எதுக்குடா உசுரவெச்சுக்கிட்டு வாழ்றம்னு இருக்கு” எனத் தேம்பியழுதான். “என்னண்ணே இதுக்குப்போயி அழுதுக்கிருக்க. நீ யாரு, எப்பேர்ப்பட்ட ஆளு…” என முத்தையா ஆறுதலாகப் பேசினான். தோப்புக்கும் சாலைக்குமான இடைவெளியில் அமர்ந்து, இருவரும் பீடியில் கஞ்சாவைத் திணித்து மெதுவாக இழுக்கத் தொடங்கினார்கள். முதன்முறையாகக் கஞ்சாவின் புகை உடம்புக்குள் புகுந்ததால், அதன் வீர்யத்தை எதிர்கொள்ள முடியாமல் காளி இறுமினான். ஆனால், போதை அவனுக்குத் தேவையாயிருந்தது. நீண்டகாலப் பிரிவுக்குப் பின் காதலியை அணைத்துக்கொள்வதுபோல, மூர்க்கமாக கஞ்சாவை இழுக்கத் தொடங்கின சில நிமிடங்களிலேயே அந்தப் புகையை அவனுடல் ஏற்றுக்கொண்டது. கண்கள் சிவந்து சொருகிப்போன காளிக்கு, உலகம் மறந்தபோது துயரும் கரைந்திருந்தது. “எனக்கும் உன் நெலமைல்லாம் நல்லா புரியுதுண்ணே. உன்னயச் சுத்தி இருந்தவய்ங்கள்லாம் எப்பிடி இருக்காய்ங்க... நீ எப்பிடி இருக்க... எல்லாத்தையும் பாத்துட்டுத்தான இருக்கேன். எனக்குத்தான் யாரையும் எதுத்து நிக்க தைரியம் இல்ல. நீ அப்பிடியா?” முத்தையா சொன்னதற்கெல்லாம் காளி தலையாட்டிக்கொண்டிருந்தான். “நீ பழைய மாதிரி ஆகணும்னா ஒரு வழி இருக்குண்ணே. பேசாம மூர்த்தி அண்ணனவிட்டு எதிர்க்கட்சில போயி சேந்துடு. மாயகிருஷ்ணன்லாம் ஒரு ஆளுன்னு அவனுக்கு போஸ்ட்டிங் குடுத்திருக்காய்ங்க. நீ மட்டும் அந்தப் பக்கம் போனனு வெய்யி, உன்னய மிஞ்ச ஒருத்தனுமில்ல” கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் இடியைப்போல் காளியின் தலைக்குள் இறங்க, அவ்வளவு போதையிலும் காளியின் மனம் அவன் சொன்னதைச் சாத்தியப்படுத்த யோசித்தது.

தேர்தல் முடிவு வந்தபோது, மதுரையைத் தவிர மற்ற ஊர்களிலெல்லாம் புதிய கட்சி பெரும் வெற்றிபெற்றிருந்தது. மதுரை தன் சொல்லுக்குக் கட்டுப்படும் எனும் மிதப்போடு மூர்த்தி, அந்த வெற்றியைக் கொண்டாடினார். சுப்புத்தாயி வார்டு கவுன்சிலராக வென்றதை காளியால் முழுமனதோடு கொண்டாட முடியவில்லை. தனக்கான அதிகாரமோ, மரியாதையோ இனி எவரிடமும் இருக்கப்போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் பட்டவர்த்தனமாகியிருந்ததால் சுப்பு, மூர்த்தி அண்ணன் எல்லோருமே காளிக்குக் கசந்துபோனார்கள். மதுரையைத் தவிர மற்ற ஊர்களில் புதிய கட்சியின் வெற்றியை கவனித்த காளிக்கு, முத்தையா அன்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது. மூர்த்தி அண்ணனை நம்பி பிரயோஜனமில்லை என்கிற முடிவுக்கு வந்தவன், எதிர்க்கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கினான். அந்தத் தேர்தலின் முடிவுகள் அவனைப்போல் ஆயிரமாயிரம் ஆட்களைப் புதிய கட்சியின் பக்கமாகப் படையெடுக்க வைத்தன. எமர்ஜென்ஸி காலத்தில் திராவிடக் கட்சி நடத்திய மாபெரும் போராட்டங்கள், அவர்களின் பின்னால் திரண்ட மக்கள் வெள்ளம், இவற்றை யெல்லாம் மீறி புதிய கட்சியின் இந்த வெற்றி, ‘சினிமா, மக்களை எத்தனை தூரம் ஆட்டிவைத்திருக்கிறது’ என்பதை முதன்முறையாகத் தமிழக மக்களுக்கு உணர்த்தியது.

(ஆட்டம் தொடரும்)