மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 23

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

கட்சி அலுவலகத்துக்கு வருவதை வழக்கமான வேலையாக்கிக்கொண்ட முத்தையா, மெதுவாகக் கரைவேட்டி கட்டவும் பழகிக்கொண்டான்.

நாம் யோசிப்பதற்கெல்லாம் உடல் கட்டுப்படுவதில்லை. மனதுக்கு ஒரு போக்கென்றால், உடம்புக்கு ஒரு போக்கு. அதற்குத் தன்னைத் தானே வதைத்துக்கொள்ளவும் தெரியும், தீராப் பசியின்போது ஓய்வின்றி சுவைக்கவும் தெரியும். வீடும் தன்னைச் சுற்றியவர்களும் மட்டுமே உலகம் என வளர்ந்த கிருஷ்ணவேணியின் வாழ்வில், மணி வந்தபோதுதான் தன் உடலுக்கு இத்தனை பசியுண்டா என்கிற வேட்கையோடு அவனிடம் கூடினாள். அந்தப் பசிதான் அவன் மீதான காதலாக மாறி, அவனையே சுற்றிவரச் செய்தது. திடீரென ஒருநாள் இப்படிக் காணாமல் போவான் என்பதை நினைத்துப் பார்த்திடாத வேணியை, முதலில் அச்சம் மட்டுமே ஆக்கிரமித்திருந்தது. மருதுவின் அரவணைப்பும் துணையும் அந்த அச்சவுணர்வை விலக்கியபோது, உறங்கிக்கிடந்த உடலின் பசி மீண்டும் விழித்துக்கொண்டது. உடலெங்கும் கண்கள் முளைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது வேணிக்கு. இது இச்சையின் கண்கள், அத்தனை எளிதில் ஓய்வையோ உறக்கத்தையோ விரும்பாத கண்கள். மருது இப்போதெல்லாம் திணறிப்போகிறான். அவள்தான் எத்தனை வலு? அணைக்கும்போது அவளது கைகள் உருக்கைப்போலத் தன் கழுத்தை நெரிப்பதை உணர்வான். முத்தமிடுகையில் உதடுகளில் குருதி கசியும்வரை சுவைக்காமல் விடுகிறாளில்லை. ஆனாலும், அந்த மூர்க்கமும் ஆவேசமும் மருதுவைப் பித்துகொள்ளச் செய்தன. அவளைத் தேடிப்போகச் சொல்லின. அவள் நிழலில் இளைப்பாறும் ஒவ்வொரு முறையும் புதிதாகப் பிறப்பதுபோலிருக்கும் அவனுக்கு.

ரெண்டாம் ஆட்டம்! - 23

மேயராகிவிட்ட நாளில், அறிவழகனுக்கு அக்கா அருகில் இல்லாமலிருப்பது கடும் துயரத்தைத் தந்தது. “ஏம்மா... நம்மள அண்டி எத்தனையோ பேர் நல்ல வெதமா பொழைக்கிறாய்ங்க. டாப்ல வந்துர்றாய்ங்க, எங்கூடப் பொறந்த அக்கா அது... இப்பிடிக் கெடக்கு. அப்பாவப் போயி ஒருக்கா கூப்புடச் சொல்லும்மா” என வேதனை தாங்காமல் புழுங்கினான். அவனது அம்மா சிரித்தபடி, “அறிவு... உங்கப்பா மட்டும் என்ன லேசுப்பட்ட ஆள்னா நெனைக்கிற? அவரு போயிக் கூப்ட்டா அவ வந்துருவான்னு தெரியும். அதனாலதான் இப்ப வரைக்கிம் உன்னயப் போயிப் பாக்கச் சொல்றாரே ஒழிய, அவர் போறதில்ல. காலம் பூராம் கக்கத்துல வீராப்பக் கட்டிக்கிட்டு அழிஞ்சு என்னத்த சாதிக்கப் போகுதுங்கன்னு தெரியல. அப்பந்தான் இப்பிடின்னா... மக அதுக்கு மேல இருக்கா. உனக்கு இப்பதான் நல்லகாலம் ஆரம்பிச்சிருக்கு, எதப் பத்தியும் யோசிக்காம உன் வழியப் பாத்துப் போ...” என்று சொல்லிவிட்டது. அறிவழகன் எந்தச் சமாதானத்தையும் ஏற்றுக்கொள்வதாயில்லை. சரியோ தவறோ கிருஷ்ணவேணியை ஆதரிப்பதென முடிவுசெய்தபோதுதான் முத்தையாவின் நினைவு வந்தது. மணிக்கும் முத்தையாவுக்கும் இருக்கும் நெருக்கத்தை ஊரறியும். அவன் ஒரு வார்த்தை சொன்னால், நிச்சயம் வேணி மறுத்துப்பேச மாட்டாள் என அறிவுக்குத் தோன்றியது.

கட்சி அலுவலகத்துக்கு வருவதை வழக்கமான வேலையாக்கிக்கொண்ட முத்தையா, மெதுவாகக் கரைவேட்டி கட்டவும் பழகிக்கொண்டான். கஞ்சிபோட்ட அந்த வேட்டியைக் கட்டிக் கொள்ளும்போது, அவனுக்கே கூச்சமாகத்தான் இருந்தது. இத்தனைக்கும் கட்சி ஆபீஸில் அவனை யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. மூர்த்தி சொன்னாரே என்பதற்காக அறிவழகனோடு இருக்க அனுமதித்திருந்தார்கள். ‘எந்த காரியம்ண்டாலும் முத்தையாவ முழுசா நம்பிக் குடுக்கலாம்’ என அப்பா சொல்லியிருந்ததால், அறிவும் முத்தையாவோடு இதம் பதமாகத்தான் நடந்துகொண்டான். தன்னிடம் இதற்கு முன்பு யாரும் இத்தனை இணக்கமாக இருந்ததில்லை என்பதால், முத்தையாவுக்கும் அறிவழகனின்மீது அலாதியானதொரு மரியாதை உண்டு. அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் கண்ணசைவில் செய்யக்கூடிய அளவுக்கு மிக விரைவாகவே தயாராகிவிட்டான். காலை உணவு என்ன வாங்க வேண்டும், எங்கு வாங்க வேண்டும் என்பதிலிருந்து, ஒரு நாளில் அறிவு செய்யும் அத்தனை வேலைகளும் முத்தையாவுக்கு அத்துப்படி. கட்சி அலுவலகத்தில் எல்லோரும் `முத்தையா...’ என்று பெயர் சொல்லிக் கூப்பிட்டாலும், அறிவு மட்டும் மரியாதையாக ‘முத்தையாண்ணே...’ என அழைப்பான். எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும். ‘அவனே ஒரு வெங்கம்பய, அவனப்போயி அண்ணங்கறாப்ள...’ என தங்களுக்குள் சலித்துக் கொள்வார்கள். ஒருவர் அறிவழகனிடம் இதை நேரடியாகவே சொன்னபோது, ‘‘நாம மத்தவங்களுக்கு என்ன மரியாதை குடுக்கறமோ அதே மரியாதையத்தான் அவங்க நம்மளுக்குத் திருப்பிக் குடுப்பாங்க’’ எனக் கடுமையாகச் சொன்னான். அறிவழகனை முத்தையா, ‘‘வாங்க அப்புச்சி, சொல்லுங்க அப்புச்சி’’ என மரியாதையாகத்தான் அழைப்பான். அந்த மரியாதை மூர்த்திக்கும் அறிவழகனுக்கும் மட்டும்தான்.

வியாழக்கிழமைகளில் மட்டும் மதுவருந்துவது அறிவழகனின் வழக்கம். ஊர் அடங்கிய பின் முத்தையாவைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, தெப்பக்குளம் பக்கமாகச் சென்றுவிடுவான். எட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் ஆட்கள் போக்குவரத்து குறைந்து, இருளின் அமைதி மட்டுமே எங்கும் சூழ்ந்திருக்கும். வருடத்தின் பெரும்பாலான மாதங்களும் நீரின்றிக் கிடக்கும் தெப்பக்குளத்துக்கு உள்ளிருக்கும் மண்டபம்தான் அவனுக்கு விருப்பமான இடம். மது புட்டிகளோடும் தொடுகறிகளோடும் அங்கு சென்று அமர்ந்து கொள்வான். மண்டபத்தில் தூணில் சாய்ந்து அறிவு உட்கார்ந்தால், முத்தையா சற்றுத் தள்ளி முதல் படியில் உட்காருவான். அறிவு எவ்வளவு வற்புறுத்தினாலும், இவன் குடிப்பதில்லை. ‘‘சீமச் சரக்குண்ணே... சும்மா சாப்ட்டுப் பாரு…’’ என அறிவு கேட்டாலும், ‘‘அட வேணாம் அப்புச்சி. எம்புட்டு குடிச்சாலும் எறும்பு கடிச்ச மாதிரி இருக்கும். நம்மளுக்குத் தோட்டாதான் சரிப்படும். வீட்டுக்குப் போயி ரெண்டு தோட்டாவப் போட்டா... காலைல வரைக்கிம் கிண்ணுன்னு இருக்கும்’’ எனச் சிரிப்பான். ‘‘நல்ல ஆள்ணே நீயி…’’ எனச் சிரித்தபடியே அறிவு மதுவைக் குடிப்பான்.

ரெண்டாம் ஆட்டம்! - 23

‘‘அண்ணே, இன்னிக்கி நைட்டு கொஞ்சம் லேட்டாகும்’’ என அறிவு சொன்னபோது, முத்தையாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘‘அப்புச்சி இன்னிக்கி செவ்வாக்கிழமதான?’’ எனச் சந்தேகத்துடனும் ஆச்சர்யத்துடனும் கேட்க, ‘‘ம்ம்ம் இருக்கட்டும்ணே... கொஞ்சம் மனசு சரியில்ல. நானும் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்’’ என்றான். முத்தையா மறுபேச்சில்லாமல் தேவையானவற்றை வாங்கி வரச் சென்றான்.

அந்த வருடத்தின் மிக வெப்பமான நாளாயிருக்க வேண்டும், அத்தனை வெக்கை. சூரியன் மறைந்த பிறகும்கூட அதன் சூடு எல்லோரின் உடலுக்குள்ளும் ஊடுருவிக்கொண்டிருந்தது. சாலையில் வாகனங்களின் இரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியபோது, அறிவும் முத்தையாவும் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தனர்.

தெப்பக்குளத்துப் படிகளில் ஆங்காங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டும் புகைத்துக் கொண்டுமிருந்தவர்கள், அறிவழகனைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக எழுந்து வணக்கம் வைத்தனர். எல்லோருக்கும் பதில் வணக்கம் வைத்த அறிவு, நிதானமாக மண்டபத்தை நோக்கி நடந்தான். அவர்களுக்கு முன்பு அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் அவசரமாகக் கிளம்பிச் செல்ல, முத்தையா பையைப் பிரித்து எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்தான். மதுரை நகருக்கான மொத்தக் காற்றையும் குத்தகைக்கு எடுத்ததைப் போல தெப்பக்குளத்தைச் சுற்றி மட்டும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. சட்டையின் முதலிரண்டு பொத்தான்களைக் கழற்றிவிட்டு, தூணில் சாய்ந்து அறிவு உட்கார்ந்துகொண்டான். முத்தையா வழக்கம்போல் அவனுக்கு டம்ளரில் மதுவை ஊற்றிக் கொடுத்துவிட்டு நகர்ந்து முதல் படியில் அமர, அறிவு அவசரமாக எடுத்து மதுவைக் குடித்தான். கடும் மன உளைச்சலில் இருக்கிறான் என்பதை முகம் அப்பட்டமாகக் காட்டியபோதும், அவனாகச் சொல்கிறவரை பொறுத்திருப்போம் என முத்தையா அடுத்தடுத்த சுற்று மதுவை மட்டும் அவன் டம்ளரில் நிரப்பினான். மூன்று சுற்றுகளைக் குடித்த பிறகு, அவனுடல் வியர்த்துக் கசகசத்தது, சட்டையை அவிழ்த்துவிட்டு பனியனோடு அமர்ந்திருந்தவன், முகத்தைத் துடைத்துக்கொண்டு முத்தையாவைப் பார்த்தான், ‘‘எண்ணே... எனக்கு ஒரு உதவி செய்வியா?’’

‘‘என்ன அப்புச்சி... உதவி கிதவின்னு பெரிய வார்த்தையெல்லாம்... என்ன செய்யணும்ணு சொல்லுங்க.’’

‘‘பதவி இருக்கு, பணம் இருக்கு, ஆனா சந்தோசம் இல்ல. எங்கக்கான்னா எனக்கு உசுரு. அது கஷ்டப்படறப்போ, நான் இப்பிடி நல்லா அனுபவிச்சுட்டு இருக்கனேன்னு நினைக்கிறப்போ ராத்திரில்லாம் தூங்க முடியல. நாங்க கூப்ட்டுதான் அது கேக்கல. ஆனா நீ ஒரு வார்த்த சொன்னா கேக்கும். எனக்காகப் போய் பேசறியாண்ணே?’’

முத்தையா என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தோடு பார்த்தான். நீண்ட தயக்கத்துக்குப் பிறகு, ‘‘அப்புச்சி... அதுவுமே முன்ன மாதிரி இல்ல, மருதுகூட சேந்துக்கிருச்சுன்னு அரசல் புரசலா பேச்சு. அதனாலயே நானும் போய்ப் பாக்கறத நிறுத்திட்டேன்’’ எனச் சொல்ல, பொங்கிவந்த அழுகையை அடக்கிக்கொண்ட அறிவு, ‘‘இன்னும் எத்தன பேர சேத்துக்கிட்டாலும் எனக்கு அக்காதானண்ணே... எனக்காக நீ போய் பேசுண்ணே’’ என முத்தையாவின் கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள, மறுப்புச் சொல்ல முடியாமல் முத்தையாவும் சம்மதித்தான்.

(ஆட்டம் தொடரும்)