அலசல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 24

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

தெரிஞ்சோ தெரியாமயோ ஒருத்தனுக்குப் பொண்டாட்டியாகிட்டே. இப்போதைக்கு இன்னொருத்தன் வேணாம்.

அதே வானம், அதே நிலம், உடலை ஊடறுத்துச் செல்லும் கசகசப்பான வெயில், வீதியிலிருந்த வீடுகளில்கூட எந்த மாற்றமுமில்லை. ஆனால், அந்த வீதியிலிருந்த மனிதர்களிடம் ஏராளமான மாற்றங்கள். ஒரு வருடத்துக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய வேணி எல்லாவற்றையும் கவனித்தாள். தன்னை உதாசீனப்ப டுத்தும் பார்வைகளையும், முதுகுக்குப் பின் சத்தமின்றித் தெறித்துவிழும் சொற்களையும் கடந்தபோதெல்லாம் அதற்காக வருத்தப்பட்டிருக்கவில்லை. இன்னொருவரின் விருப்பங்களுக்கானது அல்ல வாழ்க்கை என்கிற புரிதலை மணியுடன் இருந்த நாள்களிலும், அவன் இல்லாத நாள்களிலும் அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தாள். ஆனால், அறிவு மட்டும் தன்மீதான அன்பில் எந்த மாற்றமுமில்லாமல் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப் போனாள். அவனைத் தவிர ஒருவருக்கும் அவள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. “உன் எதிர்காலம் நல்லாருக்கணும்னா, அவள ஒரே வீட்டுக்குள்ள வெச்சுக்கற யோசனைய விட்ரு” என மூர்த்தி கொஞ்சம் கடுமையாகவே அவனிடம் சொன்னதால், தங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி வேணிக்குத் தனியாக ஒரு வீடு எடுத்துக் கொடுத்திருந்தான். “உன்னய எங்கூடயே நம்ம வீட்ல வெச்சுக்கணும்னு நெனைக்கிறேங்க்கா. ஆனா முடியல” எனச் சங்கடத்தோடு அவளிடம் அறிவு சொல்ல, ‘‘இதுல என்னடா இருக்கு. என் பிள்ளைக்கு தாய்மாமன் இருக்கான், தாத்தா பாட்டி இருக்காங்கங்கறதே போதும்டா. எந்தக் கொறையுமில்லாம வாழ்ந்துருவேன்” எனச் சிரித்தாள்.

“சரிக்கா... எனக்காக ஒரு உதவி செய்வியா?”

‘‘என்ன சொன்னாலும் செய்றேன் அறிவு...”

“தெரிஞ்சோ தெரியாமயோ ஒருத்தனுக்குப் பொண்டாட்டியாகிட்டே. இப்போதைக்கு இன்னொருத்தன் வேணாம். உன் புருஷன் என்ன ஆனாங்கறதத் தெரிஞ்சுக்கிட்டு ஒரு வழி பண்ணினதுக்கு அப்பறம், நானே நல்ல ஆளாப் பாத்து கட்டிவெக்கிறேன்...” அறிவு தயக்கத்தோடு சொல்ல, வேணி பதில் சொல்லாமல் சிரித்தாள். “ஏண்டா... எல்லாரும் என்னயத் தேவ்டியான்னு சொல்றாய்ங்களா?” அறிவு அவசரமாக மறுத்து “ஏய்... சும்மா லூசு மாதிரி பேசாத, உன் வாழ்க்க இப்பிடியே போயிரக் கூடாதுன்னு நெனைக்கிறேன். அதுக்குத்தான் சொன்னேன்” என்றதும், அவள் சரியென ஒப்புக்கொண்டாள். தன் உடலின் குரல்களுக்குச் செவிசாய்ப்பதை நிறுத்தினால், இச்சையைக் கடந்துவிட முடியுமென்கிற நம்பிக்கை இருந்தது. அந்தப் பசிக்குத் தீனி தேடுவதைவிடவும் தனக்கான அதிகாரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்கிற தவிப்பு அவளுக்குள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

ரெண்டாம் ஆட்டம்! - 24

வேணி தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மணி மதுரைக்குத் திரும்பியிருந்தான். புதிய ஊர்களில் சுற்றித் திரிந்ததில் அவனுடல் பாதியாக இளைத்துப்போயிருந்தது. தன் மகனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை மட்டுமே அவனை மீண்டும் ஊரை நோக்கித் தள்ளியது. யாருக்கும் பயந்து ஓடி, இந்த உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்கிற புரிதல் வந்த நாளில், கிருஷ்ணவேணி பழைய மனுஷியாக இருக்கப்போவதில்லை என்கிற யதார்த்தத்தை அவன் உணர்ந்திருக்கவில்லை. அண்டை வீட்டுக்காரர்கள் ஒன்றிரண்டு பேர் கவலையோடு வந்து, அவனிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனார்கள். “ஏப்பா... எப்பேர்பட்ட ஆளு நீயி, இப்பிடி பாதியா எளச்சிட்ட. அந்தப் புளளை ஒத்தையா எம்புட்டுக் கஷ்டப்பட்டுச்சுன்னு தெரியுமா?” என ஒருவர் சொன்னபோது, பதிலே சொல்லாமல் பொங்கியெழுந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். அவளோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்கிற ஆசையில், தேடித்தேடி வாங்கிய பல பொருள்களைப் பார்க்கையில், அவளின் மீதான நினைவுகள் பெருகியோடின. “உன் நெனப்பாவேதாம்ப்பா இருந்துச்சு. மொதல்ல போயி அந்தப் புள்ளையப் பாரு...” என ஒருவர் சொன்னதற்கு, வெறுமனே தலையாட்டிக்கொண்டான். ஆனால், அவளைத் தேடிச் செல்லும் துணிச்சல் அவனுக்கில்லை. யோசித்துப் பார்த்தபோது, முத்தையா மட்டுமே அவளை நெருங்குவதற்கான வழியாகத் தெரிந்தான்.

வேணியோடு உண்டான உறவின் காரணமாக, மருதுவுக்கு மணியை எதிர்கொள்வதில் கடுமையான தயக்கமிருந்தது. அதனாலேயே மணி ஊருக்குத் திரும்பி இரண்டு நாள்கள் கடந்த பின்னும் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தான். மூன்றாவது நாள் விடிந்தும் விடியாமல் வீட்டு வாசலில் மணி வந்து நிற்க, தயக்கமெல்லாம் விலகி ‘அண்ணே’ என்கிற சந்தோஷக் கூச்சலோடு ஓடிச் சென்று அவனைக் கட்டிக்

கொண்டான். “ஏண்டா மருது... நான் பழைய ஆளா இல்லன்னு நெனச்சு என்னையப் பாக்க வரலியா?” என மணி கேட்க, மருதுவின் முகத்திலிருந்த சந்தோஷமெல்லாம் ஒரு நொடியில் காணாமல் போனது. “இல்லண்ணே... நான்தான் பழைய ஆளா இல்ல. உன் மூஞ்சியப் பாக்கற தைரியம் இல்லாமத்தாண்ணே ரெண்டு நாளா ஓடிக்கிட்டு இருந்தேன்” எனக் குரல் தழுதழுத்தான். மணி ஆறுதலாக அவன் தோள்களை அணைத்துக்கொண்டு “எல்லாம் கேள்விப்பட்டண்டா. தப்ப என்மேல வெச்சுக்கிட்டு, நான் ஏண்டா உம்மேல கோவப்படணும்... தனியா இருந்தவளுக்குத் துணையா இருந்திருக்க. புருஷன் பக்கத்துல இல்லங்கறதுக்காகப் பொண்டாட்டிக்கு ஆசையே இருக்கக் கூடாதுன்னு ஆயிருமா? விடு... இதெல்லாம் மனுஷ இயல்புதான. எப்பயும்போல இர்றா.. நீயும் ஒதுக்கி என்னய அநாதையா ஆக்கிராதடா...” என அழுதான். “என்னண்ணே பேசற? என்னிக்கா இருந்தாலும் உன்கூட உனக்காக நிப்பண்ணே” என மருது அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். “சரி, சட்டைய மாத்திட்டு வா, ஒரு சோலி இருக்கு” என மணி சொல்ல, மருது அவசரமாக ஓடிச் சென்று சட்டையையும் கைலியையும் மாற்றிக்கொண்டு வந்தான். இருவருமாகக் கிளம்பி முத்தையாவைப் பார்க்க பாண்டி கோயில் சென்றனர்.

ரெண்டாம் ஆட்டம்! - 24

முத்தையாவுக்கு மணியைப் பார்த்தபோது ஆற்ற மாட்டாமல் அழுகை எழுந்தது. “என்னண்ணே இப்பிடியாகிட்ட? எதுக்குண்ணே இந்த வனவாசம்?”

“முத்து அதையெல்லாம் இப்பப் பேசி ஒண்ணும் ஆகப்போறதில்ல. எனக்கு என் புள்ள மூஞ்சியப் பாக்கணும். என் பொண்டாட்டியப் பாக்கணும். நீதாண்டா உதவி பண்ணனும்” தயக்கத்தோடு மணி, முத்தையாவின் கைகளைப் பற்றிக்கொள்ள “எனக்குப் புரியுதுண்ணே. ஆனா உன்னயச் சுத்தி எத்தன பகை இருக்குன்னு உனக்குத் தெரியுமா? கழுகு மாதிரி காத்துட்டு இருக்கானுங்க. எந்த நிமிஷம் வேணும்னாலும் எதுவும் நடக்கலாம். நீ வந்த அன்னிக்கே சோமு குடும்பத்தானுங்க உனக்கு கர வெச்சிட்டானுங்கன்னு நெனைக்கிறேன். கமுதில இருந்து அவய்ங்க சொந்தக்காரய்ங்கள்லாம் வந்திருக்காய்ங்க” என முத்தையா பதற்றத்தோடு சொன்னான். “அதையெல்லாம் நான் பாத்துக்கறண்டா. நீ நான் கேட்டத செய்றியா?” என மணி பிடிவாதமாகக் கேட்க, “உன் மனசு எனக்குத் தெரியாதாண்ணே. நீ வந்தன்னு கேள்விப்பட்டதுமே அத்தாச்சிகிட்ட விஷயத்தச் சொன்னேன். எவென் வந்தா எனக்கென்னடா மயிரு... பொச்சப் பொத்திக்கிட்டுப் போன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிருச்சு” எனத் தயக்கத்தோடு சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டு, மணி அப்படியே உறைந்துபோனான். எதற்காக ஊரைவிட்டு ஓடினோமோ அதற்கு இப்போது அர்த்தமில்லாமல் போய்விட்டது. அவள் கால்களில் சரணடைந்து மன்னிக்கச் சொல்லிக் கேட்கலாம். அதற்கு எத்தனை தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், வேறு வழியில்லை. அவள் வேண்டும்; குழந்தை வேண்டும். இந்த வாழ்க்கைக்கான ஒரே அர்த்தம் அவர்கள் மட்டும்தான் எனும்போது, எல்லாவற்றையும் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது உறைத்தது. உடலால் நொறுங்கிப்போயிருந்த மணி, மனதாலும் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்கத் தொடங்கினான்.

எல்லாத் துயரையும் கஞ்சாவின் துணையோடு கடந்துவிடும் முனைப்போடு, இடைவிடாமல் புகைத்தவன் அரை மயக்கத்திலேயே கிடந்தான். போதை தெளிந்தபோது விடிந்திருந்தது. நினைவு முழுக்க வேணியும் குழந்தையும் மட்டுமே நிறைந்திருக்க, சைக்கிளை எடுத்துக்கொண்டு வேணியின் வீட்டுக்குக் கிளம்பினான். அந்த வீதியில் நுழைந்தபோது, சிலர் வாசல் தெளித்துக் கொண்டிருந்தனர். பால்காரர், ஒரு வீட்டில் பால் ஊற்றிக்கொண்டிருந்தார். எல்லோருமே மணியைப் பதற்றத்தோடு பார்த்தனர். வேணியின் வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண், அவசரமாக எழுந்துபோய்க் கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றாள். மணி எந்தப் பதற்றமும் இல்லாமல் கதவைத் தட்டினான். “வேணி...” எனும் அவன் குரலில் பழைய கம்பீரமில்லை, ஆனால் காதலிருந்தது. “கதவத் தொற வேணி” எனும் அவன் குரலுக்கு பதில் வரவில்லை. தெருவிலிருந்த சிலர் வாசலில் கூடி நிற்க, அறிவழகனும் அவசரமாக அங்கு வந்தான். கதவைத் தட்டிக்கொண்டிருந்த மணியின் கைகளைப் பிடித்து இழுத்து, “மணி... உனக்கு நேரம் சரியில்லன்னு நெனைக்கிறேன். மொதல்ல இங்கயிருந்து போயிரு...” எனத் துரத்தினான். “செத்த பொறுய்யா, என் பொண்டாட்டி புள்ளைய ஒரு தடவ பாத்துட்டுப் போயிடறேன்” என மணி அழுத்தமாகச் சொல்ல “அம்புட்டு அக்கற மயிரு இருக்கவன் எதுக்கு விட்டுட்டு ஓடிப்போன?” என அறிவு சீறினான். “புத்தியில்லாம ஓடிட்டன்யா. இப்ப திருந்தி வந்திருக்கேன்” அறிவை விலக்கிவிட்டு மணி மூர்க்கமாகக் கதவைத் தட்ட, பொறுமையின்றி ஆட்கள் ஓடிவந்து அவனைப் பிடித்து இழுத்தனர். “வேணி... கதவத் தொறடி... என் புள்ள மூஞ்சியப் பாக்க விடுடி...” மணியின் அரற்றல், பெரும் குரலில் வெடித்த அழுகையாக எதிரொலிக்க, ஆட்கள் வலுக்கட்டாயமாக அவனைத் தெருவில் இழுத்துப்போட்டனர். பழைய வலுவெல்லாம் காணாமல் போயிருந்தது. உயிர்போகும் வெறியோடு வேணியின் பெயரைச் சொல்லி அழுதுகொண்டிருந்த மணியின் குரலுக்கு, அவள் கடைசி வரையிலும் பதில் சொல்லியிருக்கவில்லை.

தன்னைப் பொருட்படுத்த ஒருவருமில்லை என்கிற ஏமாற்றத்தோடு, சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்தவனுக்குப் பின்னால் சூரிய வெளிச்சம் உக்கிரமாக எழுந்துகொண்டிருந்தது. அந்த வீதியைத் தாண்டி, முனியாண்டி கோயிலிருக்கும் சாலையை அடைந்தபோது, மணிக்காகவே காத்திருந்த சோமுவின் தம்பியும் அவன் ஆட்களும் ஆவேசமாக வெட்டத் தொடங்கினார்கள். மணி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒருமுறை திரும்பி, சோமுவின் தம்பியைப் பார்த்தான். பார்த்துக் கொண்டிருந்தபோதே அவன் முகத்தில் ஒரு அரிவாள் பாய்ந்தது. உடலைப் பல நூறு துண்டுகளாக வெட்டிவிடும் வெறியோடு பாய்ந்த அரிவாள்களுக்கு, அவன் எப்போதோ செத்து விட்டான் என்கிற உண்மை புரிந்திருக்கவில்லை.

(ஆட்டம் தொடரும்)