Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 25

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஒருவன் வளரும்போது அவனைக் குறித்த கதைகளும் புனைவுகளும்தான் சராசரியானவர் களைக்கூட அசாதாரணமானவர்களாக மாற்றிவிடுகின்றன.

ரெண்டாம் ஆட்டம்! - 25

ஒருவன் வளரும்போது அவனைக் குறித்த கதைகளும் புனைவுகளும்தான் சராசரியானவர் களைக்கூட அசாதாரணமானவர்களாக மாற்றிவிடுகின்றன.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஒரு கிராமம் நகரமாக வளரும்போது தொழில் வளர்ச்சி மட்டுமல்ல, குற்றங்களும் அதிகரிக்கின்றன. நகரம் பெருநகரமாகும்போது அந்தக் குற்றங்கள் நிறுவனமயப்படுத்தப்பட்ட தொழில்களாக மாறுகின்றன. திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் மட்டுமே நிரம்பியிருந்த மதுரையில் குற்றங்கள் அதிகமானபோது, ஊரின் முகமும் மாறத் தொடங்கியது. இந்த மாற்றங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டவர்களில் கோட்டைச்சாமியும் ஒருவன். மற்றவர்களுக்குத் தன் மேல் வரும் பயம்தான் தனக்கான முதலீடு என்பதை ஒவ்வொரு நாளும் அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டிருந்தான். தன் குடும்பத்தினர் மதுரையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் செய்துவந்த கஞ்சா வியாபாரத்தை மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களுக்கும் விரிவாக்கினான். அவன் தட்டிய கதவுகளெல்லாம் அவனுக்காகத் திறந்தன. வருசநாட்டிலிருந்து வாரத்துக்கு ஒரு முறை காய்கறி வேனில் வந்த கஞ்சா மூட்டைகள், இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வரத் தொடங்கின. போதையின் வளையத்தில் கோட்டைச்சாமி தனக்கான செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள, இன்னொருபுறம் அவனைப் பற்றிய சாகசக் கதைகள் ஏராளமாக உலாவரத் தொடங்கின.

ரெண்டாம் ஆட்டம்! - 25

ஒருவன் வளரும்போது அவனைக் குறித்த கதைகளும் புனைவுகளும்தான் சராசரியானவர் களைக்கூட அசாதாரணமானவர்களாக மாற்றிவிடுகின்றன. தங்களால் கோட்டைச்சாமியை எதுவும் செய்ய முடியாதென்கிற கசப்போடும் வெறுப்போடும் ஆண்டிச்சாமியின் குடும்பம் மதுரையிலிருந்து திருநகருக்கு இடம்பெயர்ந்தது. மரக்கடை உட்பட மற்ற தொழில்களையும் வேறு ஆட்களுக்கு கைமாற்றினார்கள். ஊர் மாறினபோதும் முழுமையாக அச்சம் விலகியிருக்கவில்லை. எந்த நேரத்திலும் கோட்டைச்சாமியின் ஆட்களால் தங்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தது. பகையை வளர்க்காமல் கோட்டைச்சாமியோடு ராசியாய்ப் போய்விடலாமென முடிவெடுக்கப்பட்டபோது, அம்சவல்லி மட்டும் உடன்படாமல் வெறியோடு சுற்றிவந்தாள். கொஞ்சகாலம் போனால் அவளும் சரியாகிவிடுவாளென எல்லோரும் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்ள, ஆண்டிச்சாமியின் மச்சினன் பேச்சுவார்த்தைக்காக மாரி அக்காவைத் தேடிச் சென்றான். இது இப்படித்தான் முடியுமென்பதை மாரியக்கா எப்போதோ புரிந்துவைத்திருந்ததால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இவர்கள் வரக்கூடுமென எதிர்பார்த்துத்தான் காத்திருந்தது.

‘‘ஏப்பா... அன்னிக்கே நான் சொன்னேன், எல்லாத்தையும் இத்தோட முடிச்சிக்கங்கன்னு. நீங்கதேன் மாட்டம்னுட்டிங்க.’’

‘‘தப்புதாங்க்கா. எதுத்து நிக்க எங்களுக்குச் சத்தியில்ல. நீங்கதான் இத முடிச்சுவுடணும். எங்கள விடச் சொல்லுங்க. இப்பிடியே நாங்க ஒதுங்கிப் போயிடறோம்.’’

மாரியக்கா நீண்ட யோசனைக்குப் பிறகு, சமாதானம் பேச ஒப்புக்கொண்டது. அவன் அந்தக்காவின் காலில் விழுந்து வணங்கி தட்சணையாக 1,001 ரூபாயை வைத்துவிட்டு எழுந்தான். மாரியக்கா சிரித்தபடி, ‘‘உசுருமேல பயம் வரும்போதுதான் மத்தவங்க மேல மரியாதையும் வருதுல்ல...’’ என்று கேட்க, அவன் தலையைக் குனிந்து கொண்டான். ‘‘ஒண்ணும் யோசிக்காதப்பா. நான் இருக்கேன். தெம்பா போ...’’ என்று சொல்லி அனுப்பிவைத்தது.

கோட்டைச்சாமி கொஞ்சம் மண்டைக் கோளாறான ஆள்தான். ஆனால், மாரியக்கா மாதிரி சிலரின் மீது அவனுக்குத் தனித்த மரியாதையுண்டு. லாப நட்டம் பார்க்காமல் பொதுக்காரியத்துக்கு நிற்பதற்கு ஒரு துணிச்சலும், நல்ல மனமும் வேண்டும். அது அக்காவுக்கு இருப்பதால் ரொம்பவே மதிப்பான். தாய் தகப்பன் சொல்லுக்குக்கூட சமயங்களில் செவிசாய்க்காதவன், அந்தக்கா பார்க்க வேண்டுமெனக் கேட்டபோது உடனடியாகக் கிளம்பிச் சென்றான். வராத விருந்தாளி வந்திருக்கிறானென வீட்டிலிருந்த எல்லோரும் விழுந்து விழுந்து கவனித்தனர். பதற்றத்தில் கழுத்தெல்லாம் வியர்த்தபடியே இருக்க, சேலை முந்தானையால் அவ்வப்போது துடைத்துக்கொண்டே மாரியக்கா அவனிடம் பேசியது. ‘‘ஏப்பா நீ என்ன முன்ன மாதிரியா இப்ப? நான் வந்து உன்னயப் பாக்கறதுதானய்யா மரியாத’’ என்றதும், கோட்டை சிரித்தபடி ‘‘நான் நேத்துப் பயக்கா. என்னய நீ தேடி வந்தா நாலு பேரு என்னயக் காறித் துப்ப மாட்டாய்ங்களா? சொல்லுக்கா என்ன விஷயமா பாக்கணும்னு கேட்ட?’’ என்றபடி அந்தக்காவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

‘‘சரிப்பா சுத்தி வளைக்காம பேசறேன். ஆண்டிச்சாமி குடுமபத்தோட பகைய முடிச்சிக்குவோம். அவய்ங்க இனிமே நீ இருக்க தெசைக்கே வரமாட்டம்ண்டு அலர்றாய்ங்க. உசுரக் காப்பாத்திக்கிறோம், எங்கள விட்ருங்கண்டு வந்து கால்ல விழுந்தான். நானும் உங்கிட்ட பேசறேன்னு வாக்குக் குடுத்துட்டேன்’’ நம்பிக்கையில்லாமல் தடுமாற்றத்தோடு ஒவ்வொரு வார்த்தையாக அக்கா சொல்லி முடிக்க, கோட்டைச்சாமி பொறுமையாகக் கேட்டுக்கொண்டான். மனிதர்களின் மனதிலிருந்து பகை அத்தனை எளிதில் அழிந்துபோவதில்லை. எவ்வளவு தூரம் விலகுகிறோமோ, அவ்வளவு தூரம் வளரும். ஆனால், அக்காவுக்காகச் செய்ய வேண்டுமென்பதால் கோட்டைச்சாமியால் மறுக்க முடியவில்லை.

‘‘சரிக்கா, உனக்காக ஒத்துக்கறேன். அவய்ங்ககூட ராசியா போயிரலாம். மொறையா என்ன செய்யணுமோ சொல்லு செஞ்சிரலாம்’’ அவன் சொன்னதைக் கேட்டதும்தான் மாரியக்காவுக்கு நிம்மதியாக இருந்தது. ‘‘நல்லதுய்யா. ஒண்ணு நீ உன் கூட்டாளிகளோட அவய்ங்க வீட்டுக்கு விருந்துக்குப் போயிட்டு வா, இல்லயின்னா அவய்ங்கள உன் வீட்டுக்கு விருந்துக்கு வரச் சொல்றேன். உனக்கு எது சரிப்படும்?’’ எனக் கேட்டது. கோட்டைச்சாமி சிறிது யோசனைக்குப் பின் ‘‘அதெல்லாம் வேணாங்க்கா. ரெண்டு குடும்பத்துக்கும் பொதுவா விருந்த உன் வீட்லயே வெச்சுக்குவோம். ஏற்பாடெல்லாம் நான் பயககிட்ட சொல்லிப் பாத்துக்கறேன். நீ முன்ன நின்னு எல்லாத்தையும் முடிச்சுக் குடு போதும்.’’ அந்தக்காவுக்கு யோசனையாக இருந்தது. ‘‘இம்புட்டுக்கானு எடத்துக்குள்ள என்னண்டுய்யா அம்புட்டு பேருக்கு விருந்து வெய்க்கிறது? கசகசண்டு இருக்குமே...’’ எனத் தயங்கிய அக்காவைப் பார்த்து கோட்டைச்சாமி,

‘‘வீட்டுக்கு முன்னாடி ஒரு சாமியானா பந்தலப் போட்டு பத்து சேரையும் டேபிளையும் போட்டா சரியாப் போச்சு’’ எனச் சிரித்தபடியே சொன்னான்.

ரெண்டாம் ஆட்டம்! - 25

‘‘அப்பச் சரிய்யா. வார ஞாயத்துக்கிழம மத்தியானம் விருந்துக்கு வந்துருங்க’’ என்று சொல்ல, கோட்டையும் சந்தோஷமாக விடைகொடுத்துவிட்டுக் கிளம்பினான். அவன் அத்தனை எளிதில் சமாதானத்துக்கு ஒப்புக்கொண்டதை, செல்வத்தால்கூட நம்ப முடியவில்லை. மனதுக்குள்ளிருந்த கேள்விகளை கோட்டைச்சாமியிடம் கேட்கும் துணிவில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தவனிடம், ‘எலேய் செல்வம்... அந்தக்கா நம்மகிட்ட எதும் கேக்காது. நாமதான் செய்யணும். ஏற்பாட்டையெல்லாம் நீயே பாத்து செய்யி’’ என்று கோட்டை சொல்ல, ‘‘சரிண்ணே’’ எனத் தலையாட்டினான்.

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே செல்வமும் சோணையும் மாரியக்காவின் வீட்டில் தேவையான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர். வீட்டிலிருந்து தெருமுனை வரை ஷாமியானா போடப்பட்டு ஸ்பீக்கர்கள் அலறிக்கொண்டிருந்தன. சமையலுக்கு விருதுநகரிலிருந்து ஆட்கள் வந்திருந்தார்கள். கொதிக்கும் ஆட்டிறைச்சியின் மணம் தெருவையே நிறைத்திருக்க, மாரியக்கா ஓடியாடி எல்லோரிடமும் வேலை வாங்கிக்கொண்டிருந்தது. வேறு யாராலும் செய்ய முடியாத பெரிய காரியமொன்றைச் சாதித்திருக்கிறோம் என்கிற நிறைவு அக்காவின் முகத்தில். பன்னிரண்டு மணிவாக்கில் ஆண்டிச்சாமியின் குடுமபத்தினர் வர, அடுத்த அரை மணி நேரத்தில் கோட்டைச்சாமி தன் மனைவி மற்றும் தம்பியுடனும் அங்கு வந்தான். மரியாதை நிமித்தமாக இரண்டு குடும்பத்தினரும் வணக்கம் சொல்லிக்கொண்டனர். மாரியக்கா வீட்டில் சாமிக்கு பூசை வைத்துவிட்டு ஆரத்தித் தட்டை எடுத்துவர, எல்லோரும் கும்பிட்டுக் கொண்டார்கள். ‘‘சாமி மேல சத்தியம். இத்தோட சண்ட சச்சரவு எதும் இல்லாம அவரவர் வேலையப் பாப்பம்’’ என இரண்டு பக்கத்து ஆட்களும் சொல்ல, மாரியக்கா எல்லோரின் நெற்றியிலும் விபூதி வைத்துவிட்டு நகர்ந்தது. அம்சவல்லியைத் தவிர ஆண்டிச்சாமியின் குடும்பத்திலிருந்த மற்ற எல்லோருமே கொஞ்சம் இயல்பாகியிருக்க, செல்வம் நடப்பதையெல்லாம் பொறுமையாகக் கவனித்துக்கொண்டிருந்தான். அம்சவல்லியின் கண்களில் கனன்றுகொண்டிருந்த வெறி இந்த ஜென்மத்தில் அடங்கப்போவதில்லை என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

தடபுடலான விருந்து முடிந்து கிளம்புகையில் அம்சவல்லியின் தம்பியை கோட்டைச்சாமி அழைத்தான். பயத்தைக் காட்டிக்கொள்ளாமல் ‘‘சொல்லுங்கண்ணே’’ என அந்த இளைஞன் நெருங்கிச் செல்ல, அவனைத் தனியாக அழைத்துச் சென்ற கோட்டை நிதானமாக ‘‘நாங்க வேணும்ண்டு எதும் செய்யலப்பா... அன்னிக்கி நடந்தது ஒரு விபத்து. உங்கப்பா எங்களையெல்லாம் அடிச்சிட்டாரேங்கற கோவத்துல அப்பிடி செஞ்சிட்டோம்.’ அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க, ‘புடிக்காட்டின்னாலும் அப்பன விட்டுக்குடுக்க முடியாது, உன் நெலையில இருந்து பாத்தா நான் செஞ்சது தப்புதேன். அதுக்காக மன்னிச்சுக்க’ என்று அவன் கைகளைப் பிடித்துக் கேட்க, அழுகையை அடக்கிக்கொண்ட அந்த இளைஞன் ‘‘பரவால்லண்ணே’’ என்று சொல்லிவிட்டு கைகளை விடுவித்துக்கொண்டு வேகமாகச் சென்றான்.

செல்வத்துக்கு கோட்டைச்சாமியின் போக்கைக் கவனிக்க ஆச்சர்யமாக இருந்தது. ‘‘உன்னயப் புரிஞ்சுக்கவே முடியலண்ணே. அவென் ஒரு பொடிப்பய... அவன்கிட்டபோயி மன்னிப்புக் கேட்டுக்கிருக்க.’ கோட்டைச்சாமி சிரித்தான். ‘‘செல்வம், நான் அவனப் பாத்துப் பயப்படல. ஆனா, என்மேல இருக்க கோவத்துல அவனும் என்னய மாதிரி ஆகிடக் கூடாதேன்னு நினைக்கிறேன்’’ என்று சொன்னபோது, அதுவரை கோட்டைச்சாமியிடம் காணாத ஒரு புதிய மனிதனை செல்வம் கண்டுகொண்டான்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism