Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 26

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரின் நெருங்கிய உறவினரான அவரின் திடீர் வளர்ச்சியை மொத்தத் தமிழ்நாடும் ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது.

2010

வாழ்க்கை அனுமானிக்க முடியாத புதிர்களால் நிரம்பியது. ஒரு தனிமனிதனின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அவன் சார்ந்த சமூகத்தைப் பொறுத்தே அமைகின்றன. கோட்டைச்சாமி எவரும் அசைக்க முடியாத ஆளாக உருமாறியிருந்தான். அவனைப் போன்ற தாட்டியக்காரர்கள் மதுரையின் வீதிகளைக் கட்டுப்படுத்துவதைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்த வேளையில், மதுரையைச் சுற்றியுள்ள அத்தனை மாவட்டங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை அவனுக்கு வந்துவிட்டிருந்தது. அவனது வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ரவி அண்ணன். மதுரைக்குள்ளிருந்த சிற்றரசர்களையெல்லாம் கட்டுப்படுத்தக்கூடிய ராஜாவாக ரவி இருந்தார்.

ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவரின் நெருங்கிய உறவினரான அவரின் திடீர் வளர்ச்சியை மொத்தத் தமிழ்நாடும் ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது. சில வருடங்களுக்கு முன்பு இந்த ஊருக்குப் புதிதாகக் குடிவந்தபோது, அண்ணாநகரில் சாதாரண ரியல் எஸ்டேட் அதிபராகத்தான் எல்லோருக்கும் தெரிந்தார். “அவ்ளோ பெரிய குடும்பத்துல பொறந்துட்டு, ஆள் அப்பிராணியா இருக்காரேப்பா...” என அவரைத் தெரிந்தவர்கள் பேசிக்கொள்வதுண்டு. எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் அவரின் மென்மையான போக்கால், நிறைய மனிதர்களைச் சம்பாதித்தார். நில விவகாரத்தை ஒட்டின பேச்சுவார்த்தைகள், கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள் அவரிடம் வரத் தொடங்கின. யாருக்கும் பாதகமில்லாமல் பிரச்னைகளை முடித்துக் கொடுத்ததால், அவரின் மீது அதீதமான வெளிச்சம் விழத் தொடங்கியது. அந்த வெளிச்சம் அவரின் கட்சிப் பிரமுகர்களுக்கே எரிச்சலையும் பொறாமையையும் உருவாக்க, மெல்ல ஒரு நிழல் யுத்தம் தொடங்கியது.

ரெண்டாம் ஆட்டம்! - 26

இயல்பில் பயந்த சுபாவம்கொண்ட ரவி, முதலில் தனக்கு இந்த ஊரும் அதிகார வெளிச்சமும் சரிப்படாது என நினைத்து, விலகி வேறு ஊருக்குச் சென்றுவிட விரும்பினார். “இப்பிடி சாகற காலம் வரைக்கும் ஊர் ஊராத்தான் சுத்திக்கிட்டு இருப்பமா? யார் யாரோ கட்சியில பெரிய இடத்துக்குப் போயி பேரும் புகழுமா இருக்காய்ங்க. தலைவருக்கு நெருங்கின சொந்தம் நீ. ஊர் ஊரா ஓடிட்டு இருக்க. எதுத்து நிக்காத வரைக்கும் ஒருத்தரும் உன்னய மதிக்க மாட்டாங்க” என ரவியின் மனைவி முத்துச்செல்வி சடவாகச் சொன்னபோதுதான் அவருக்கும் உறைத்தது. எத்தனை காலம் ஓடிக்கொண்டிருப்பது? ஆனால், அவரை எதிர்க்கிறவர்கள் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். வீழ்த்துவது கனவிலும் நடக்காத காரியம். “இவய்ங்கள எதுத்து நம்மளால ஜெயிக்க முடியாது முத்து” என நம்பிக்கையில்லாமல் சொன்னவரை கவனித்த முத்துச்செல்வி “உனக்காக நீ கத்தியத் தூக்கணும்னு அவசியமில்ல. கத்தி எடுக்கத் தெரிஞ்சவன ஆதரிச்சுப் போகத் தெரிஞ்சா போதும். உனக்கு விசுவாசமா இருக்கறதுக்கு நிறைய பயக இருக்காய்ங்க. நம்ம கோட்டச்சாமிகிட்ட இருப்பானே செல்வம். அந்த மாதிரி ரெண்டு பேர் போதும். மதுரைய உன் காலம் முழுசுக்கும் நீ கட்டி ஆளலாம்” என்றாள். ரவிக்குள் ஊறியிருந்த அரசியல் ரத்தம், முத்துச்செல்வி சொன்னதன் ஆழமான உண்மையைப் புரியவைத்தது. தொழிலுக்காக அடித்துக் கொள்கிறவர்களை எளிதில் கட்டுப்படுத்திவிட முடியும்.

முத்துச்செல்வி, கோட்டைச் சாமியையும் செல்வத்தையும் முழுமையாக நம்பி வேலையைக் கொடுக்கச் சொன்னதற்குக் காரணமான சம்பவத்தை மதுரைக்காரர்கள் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. முத்துச்செல்வி கந்துவட்டி தொழில் செய்துகொண்டிருந்தாள். முதலில் அண்ணாநகரில் மட்டும் ஆட்களுக்கு வட்டிக்குக் கொடுத்து வாங்கியவள், மெல்ல மெல்ல மதுரையின் பெரும்பாலான பகுதிகளுக்கும் கடைவிரித்தாள். நூத்துக்குப் பதினஞ்சு ரூபாய் வட்டி என்கிற வீதத்தில் கடன் கொடுக்கும் இவர்களின் இலக்கு, நடுத்தர வர்க்கத்துக்குக் கீழிருப்பவர்கள் மட்டும்தான். அவர்களை எளிதில் மிரட்டி, பணத்தை வசூலித்துவிடலாம் என்பதோடு, ‘இம்புட்டு வட்டியா?’ எனக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். ஐயாயிரம், பத்தாயிரத்திலிருந்து அதிகபட்சம் ஐந்து லட்ச ரூபாய் வரை ஒரு ஆளுக்கு கடன் கொடுப்பது உண்டு. தொகையின் அளவு வேண்டுமானால் சிறிதாகத் தோன்றலாம், ஆனால் வீதிக்கு ஐம்பது பேர் வீதம் அவர்களிடம் கடன் வாங்கியவர்களைக் கணக்கெடுத்தால், மதுரையின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அவர்களுக்குக் கடன்பட்டவர்கள். தவணையை வசூலிக்க மட்டும் முத்துச்செல்வியிடம் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்தார்கள். கடன் வாங்குகிறவர்கள் பணத்தை ஒழுங்காகத் திருப்பிக் கட்டுவது மட்டுமல்ல, தொடர்ந்து அவர்களிடம் கடன் வாங்கியபடியே இருக்க வேண்டும். முத்துச்செல்வி இந்தத் தொடர் செயல்பாட்டை மிக வெற்றிகரமாக நடத்திவந்தாள்.

எல்லா திறமைசாலிகளும் ஏதாவதொரு இடத்தில் சறுக்கிவிடுவதுபோல அவளுக்கும் ஒருமுறை சறுக்கியது. இரண்டு வருடங்களுக்கு முன், கீரைத்துறையில் வட்டிக்கு வாங்கிய ஆள் ஒருவன் குடித்தே செத்துப்போனான். இரண்டு பிள்ளைகளும் மனைவியும் அவன் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கடும் சிரமப்பட்டார்கள். முதல் சில முறை தவணையை வசூலிக்க வந்தவன், சலிப்பாகவும் எரிச்சலாகவும் பேசினான். ஆனால் அந்தப் பெண்ணிடமிருந்து பணம் திரும்பிவர வாய்ப்பில்லை என்பது புரியவந்த ஒருநாளில், காசு கேட்டு வந்தவனுக்கு ஆத்திரத்தில் நாக்கு பிசகிவிட்டது. “காசு வாங்கறப்ப இருக்கற அக்கற திருப்பிக் குடுக்கறதுலயும் இருக்கணும். உனக்கெல்லாம் கொஞ்சமாச்சும் மான ரோசம் இருக்காம்மா?”

“அண்ணே அப்பிடில்லாம் பேசாதண்ணே, இத்தன வாட்டி வாங்கினப்போ ஒழுங்காத்தான குடுத்தோம். அவரு செத்துப்போனதால சமாளிக்க முடியல, கொஞ்ச நாள் பொறுத்துக்கங்கண்ணே” எனக் கண்ணீர் விட்டாள்.

“இன்னும் எம்புட்டு நாள் பொறுத்துக்கறது? வாங்கின காசக் குடுக்கத் துப்பில்லாட்டி டவுன்ஹால் ரோட்ல போயி தொழில் பண்ண வேண்டிதான...” என அவளை அசிங்கமாகப் பேச, அந்தப் பெண் கதறியழத் தொடங்கிவிட்டாள். அண்டை வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து, அவளைச் சமாதானப்படுத்தியதோடு காசு கேட்டு நின்றவனைத் திட்டி அனுப்பினார்கள். ஒருசொல் கொல்லும், ஒருசொல் வெல்லும் என்பது மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நடக்கக்கூடியது. அன்றைக்கு ஒருசொல் அப்பெண்ணின் சாவுக்குக் காரணமானது. வாழ்வின் ஒரு துளியைக்கூட மகிழ்ச்சியாக வாழக் கொடுத்துவைக்காத அந்தப் பெண்ணுக்காக, கீரைத்துறை மக்கள் கண்ணீர் சிந்தினார்கள். ஆனால், கண்ணீர் மட்டுமே அவர்களை ஆறுதல்படுத்திவிடாது என்பது புரிய, இளைஞர்கள் சிலர் ஒன்றாகச் சேர்ந்து முத்துச்செல்வியைத் தூக்கிவிட முடிவுசெய்தனர்.

அவனியாபுரம் தாண்டி, ரவியின் குடும்பத்தினருக்குப் பெரிய ரைஸ்மில் ஒன்று உண்டு. தினமும் மதியம் கணக்கு வழக்குகளைப் பார்க்க முத்துச்செல்வி அங்கு வந்துபோவதைத் தெரிந்துவைத்திருந்த கீரைத்துறைக்காரர்கள், ரைஸ்மில்லுக்குச் சற்றுத் தூரத்தில்வைத்தே தூக்கிவிட்டார்கள். முத்துச்செல்வி கடத்தப்பட்ட செய்தி காட்டுத்தீபோல ஊரெங்கும் பரவிக்கொண்டிருக்க, ரவி எப்படி அவளை மீட்பதெனத் தெரியாமல் பதறிக்கொண்டிருந்தார். கீரைத்துறை மக்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் மீறி உள்ளே போய் செல்வியை மீட்டு வருவது என்பது சாதாரணமான காரியமில்லை. மதுரையில் காலம் காலமாக இருக்கும் பெரிய ஆட்களைவைத்து அந்தப் பகுதி மக்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். இறந்த பெண்ணின் குழந்தைகளைப் பராமரிக்க உதவி செய்வதாகவும், இழப்பீடு தருவதாகவும் வாக்களித்தார். அந்த மக்கள் காசு பணத்துக்கு மசிவதாக இல்லை. போன உயிருக்கு இன்னோர் உயிரைப் பழியெடுத்தால் மட்டுமே வெறியடங்கும் என உறுதியோடிருந்தனர். தனக்காக இனி ஒருவரும் கைகொடுக்கப்போவதில்லை என நம்பிக்கையை இழந்துவிட்ட நேரத்தில்தான் கோட்டைச்சாமி அவரைத் தேடி வந்திருந்தான். யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நொறுங்கிப்போயிருந்தவரை, தனியாக அழைத்துச்சென்ற கோட்டை, “அண்ணே, நீங்க கவலப்படாம இருங்க. அண்ணி இன்னிக்கி பொழுசாயக்குள்ள வீட்ல இருப்பாங்க. நான் பொறுப்பு. என் பயக பொறுப்பு” என்றபோது, அவருக்கு கோட்டைச்சாமியின்மீது நம்பிக்கை வந்திருக்கவில்லை.

கீரைத்துறை மக்கள் இறந்த பெண்ணுக்கான இறுதிச் சடங்கைக் கவனிப்பதில் மும்முரமாக இருந்தாலும், கடத்தப்பட்ட முத்துச்செல்விக்கான பாதுகாப்பும் பலமாகவே இருந்தது. காளியம்மன் கோயிலை ஒட்டிய வீதியில், வலதுபுறம் கடைசி வீட்டில் முத்துச்செல்வி அடைத்து வைக்கப்பட்டிருந்தாள். வீதி முழுக்க ஆட்கள், அவர்களைக் கடந்து சென்று மீட்டுவர வேண்டும். செல்வமும் அவன் நண்பர்களும் கேத வீட்டுக்கு வந்த ஆட்களோடு கலந்து, கீரைத்துறைக்குள் ஊடுருவினர். இறுதி ஊர்வலத்தில் இரண்டு பேர், காளியம்மன் கோயிலில் ஒருவன், கேத வீட்டில் ஒருவன், அந்தம்மா அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வீதியைக் கண்காணிக்க ஒருவன் என எல்லோருமே தங்களுக்கான நேரத்துக்காகக் காத்திருந்தார்கள். ரயில்வே கேட்டைத் தாண்டிவிட்டால் கீரைத்துறை எல்லை முடிந்துவிடும். அதனால் அந்த எல்லையிலேயே மாருதி வேனை தயாராக வைத்திருந்தான். செல்வம் கூப்பிடும் நேரத்துக்கு வேன் காளியம்மன் கோயில் பொட்டலுக்கு வர வேண்டும் என்பது திட்டம்.

ரெண்டாம் ஆட்டம்! - 26

மக்கள் கூட்டத்தின் கவனத்தை திசைதிருப்பி, ஆளை மீட்டுவிட முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டிருந்தது. அந்த ஏரியாவின் பெரும்பகுதி ஆட்களும் கேத வீட்டிலிருந்ததால், வீடுகளெல்லாம் காலியாகவே இருந்தன. ஒப்பாரி சத்தமும் மேளச்சத்தமும் அருகிலிருந்தவர்களின் பேச்சைக்கூட கவனிக்க முடியாத அளவுக்கு இரைச்சலாக இருந்தது. பகல் நேரத்தின் வெக்கையும் இழப்பைத் தாங்க முடியாத மக்களின் ஆத்திரமும் எல்லோருக்குள்ளும் படபடப்பை உருவாக்கியிருந்தது. பெற்றவர்களை இழந்து நிற்கும் பிள்ளைகளைப் பார்த்த இளந்தாரிப் பயல்கள், “ஒக்காலி அவய்ங்க குடும்பத்தையே கருவறுத்திரணும்டா…” எனக் குடிவெறியில் கத்தினர். இறுதி ஊர்வலம், இறந்த பெண்ணின் வீட்டிலிருந்து ஒவ்வொரு வீதியாக மெதுவாகக் கடந்து சென்றது. பெண்களின் அழுகுரல்கள் விண்ணைப் பிளந்தன. நீர்மாலை எடுக்க வேண்டியவர்களெல்லாம் எடுத்து முடிக்க, மயானத்தை நோக்கி மொத்தக் கூட்டமும் நகரத் தொடங்கியது. பிணம்வைக்கப்பட்டிருந்த தேர் முழுக்க சாமந்திப் பூக்களும் ரோஜாப் பூக்களும் மாலை மாலையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. பூக்களின் வாசனை ஊரையே நிரப்பியிருந்தது. மேளக்காரர்களின் கொட்டுச் சத்தம் காதைக் கிழித்துக்கொண்டிருக்க வழியெங்கும் வெடிவைத்தபடியே சென்றார்கள்.

ஒரு கோட்டை அழிக்க, அதைவிடப் பெரிய கோடுதான் சரி என செல்வத்துக்கு உரைக்க, இறுதி ஊர்வலத்திலிருந்து விலகியவன் காளியம்மன் கோயிலை ஒட்டிய வீதிக்கு வந்தான். ஆளற்ற வீதியில் நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன. வெறுமனே சாத்தப்பட்டிருந்த ஒரு வீட்டின் கதவைத் திறந்து நுழைந்தவன், அந்த வீட்டின் சமையல் கியாஸைத் திறந்துவிட்டான். நெருப்பைப் பற்றவைத்துவிட்டு ஓடிவர, சில நொடிகளுக்குப் பிறகு சிலிண்டர் வெடித்து வீடு பற்றி எரியத் தொடங்கியது. பக்கத்து வீதியில் முத்துச்செல்விக்குப் பாதுகாப்பாக இருந்த இளைஞர்கள் அங்கு பதறியடித்துச் செல்ல, செல்வமும் அவன் ஆட்களும் அந்தப் பெண்ணை மீட்டுவர ஓடினர். செல்போனில் வேன்காரனைக் கிளம்பி வரச்சொன்ன செல்வம், அந்த வீட்டில் காவலுக்கு இருந்த இரண்டு பேரையும் சூரிக்கத்தியால் குத்தி வீழ்த்தினான். வீட்டுக்குள் புகுந்து முத்துச்செல்வியை மீட்டனர். அவர்கள் அந்தப் பெண்ணோடு பொட்டலுக்கு வரவும், வேன் வந்து சேரவும் சரியாக இருந்தது. எரிந்த வீட்டை அணைக்க ஓடியவர்களுக்கு நடந்த சூழ்ச்சி புரிவதற்கு முன்னால், செல்வம் பத்திரமாக முத்துச்செல்வியை ரவியின் வீட்டுக்குக் கூட்டிவந்துவிட்டான். ரவியும் அவர் ஆட்களும் மிரண்டுபோனார்கள். “இத்தன பெரியாட்கள்கிட்ட பேசியும் காரியம் நடக்கலை, நாலு சின்னப்பயக போயி தெறமையா தூக்கிட்டு வந்துட்டாய்ங்களேய்யா...” என மிரட்சியோடு பேசிக்கொண்டிருந்தனர். செல்வத்தைத் தனியாக அழைத்துச் சென்ற ரவி, “தம்பி உன்னய மாதிரி ஒருத்தன நான் பாத்ததில்ல. உனக்கு என்ன வேணும்னாலும் கேளு செய்றேன்” என்று கேட்க, சிரித்தபடியே அவன் “இப்ப எதும் வேணாம்ணே... வேணுங்கறப்ப கேக்கறேன். அப்ப செய்யிங்க” என்றான். “நீ எப்ப, என்ன கேட்டாலும் செய்வேன்” எனத் தட்டிக்கொடுத்து அனுப்பினார். அந்த நாளிலிருந்தே கோட்டைச்சாமி ரவிக்கு நெருக்கமானவனாக மாறிப்போனான்.

தன்னைச் சூழ்ந்திருக்கும் எதிரிகளின் பலத்தை வீழ்த்த முத்துச்செல்வி சொன்னதுபோல் கோட்டையின் ஆட்களால் மட்டுமே முடியுமென ரவிக்குத் தெளிவாகப் புரிந்ததால், அவனை வைத்தே காரியத்தை முடிக்க நினைத்தார். பழக்கத்துக்காக கோட்டைச்சாமி இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்ய மாட்டான் என்கிற யதார்த்தம் உரைத்தபோது, அவனுக்குள்ளிருக்கும் அரசியல் ஆசையைப் பகடையாக உருட்டலாமென முடிவு செய்தார்.

(ஆட்டம் தொடரும்)