Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 27

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

பகல் மெல்லச் சரிந்துகொண்டிருக்கையில், மருத்துவமனையின் பின்வாசல் வழியாக வந்த இந்தத் தள்ளுவண்டியை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்

ரெண்டாம் ஆட்டம்! - 27

பகல் மெல்லச் சரிந்துகொண்டிருக்கையில், மருத்துவமனையின் பின்வாசல் வழியாக வந்த இந்தத் தள்ளுவண்டியை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

அரசு மருத்துவமனையில், உடற்கூராய்வு செய்யப்பட்ட மணியின் உடலை வாங்குவதற்கு ஒருவருமில்லை. பண வசூலுக்காக சிவகங்கை சென்றிருந்த முத்தையா திரும்பி வந்தபோது, மணி கொல்லப்பட்ட செய்தியைத் தெரிந்துகொண்டான். உலகின்மீதும் வாழ்வின்மீதும் இருந்த நம்பிக்கையெல்லாம் நொறுங்கிப்போக, நெஞ்சின் குமுறலை அடக்க முயன்று தோற்றவனாக, பெருங்குரலில் அழுதபடி ரிக்‌ஷாவில் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான். அவன் ஆள்விட்டுச் சொல்லி அனுப்பிய பிறகுதான் மருதுவுக்கும் தெரிந்திருந்தது. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியை அடைந்தபோது, மணியின் உடலை அநாதைப் பிணமென முடிவுசெய்து அடக்கம் செய்துவிட ஆஸ்பத்திரி ஆட்கள் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். “ஒக்காலி யார்றா அநாதப் பொணம்... அந்தாள யார்னு நெனச்சிட்டு இருக்கீங்க? எங்கண்ணன எப்பிடி எடுத்துட்டுப் போகணும்னு எங்களுக்குத் தெரியும். எவனும் தொடாதீங்க...” என மருது அலற, மருத்துவமனை ஆட்கள் மிரண்டுபோய் ஒதுங்கினார்கள். உருவம் சிதைந்து, வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட மணியின் உடலைப் பார்த்து முத்தையா பெருங்குரலெடுத்து அழுதான். மருத்துவமனையின் சுவர்களெல்லாம் அந்த அழுகுரலில் நொறுங்கிப்போய்விடுவோமோ என்கிற அச்சத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருக்க, முத்தையாவின் அழுகுரல் அதிகரித்தபடியே இருந்தது. தங்களோடு ஒருவருமில்லை என்கிற யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட மருது, உள்ளத்தில் தகித்துக்கொண்டிருந்த ஆத்திரத்தையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு ஆக வேண்டிய காரியத்தை யோசித்தான். “டேய் முத்து... இனி அழுது ஒண்ணும் ஆகப்போறதில்ல. நம்ம அண்ணனுக்கு என்ன செய்யணுமோ அத நாம செய்வோம். ஒரு மயிராண்டியும் நம்மளுக்குத் தேவையில்ல. நீ இருந்து பாத்துக்க. நான் போயி வண்டி ஏதாச்சும் பாத்துட்டு வர்றேன்...” முத்தையாவின் தோள்களைத் தட்டி அமைதிப்படுத்திவிட்டு கிளம்பிச் சென்றான்.

ரெண்டாம் ஆட்டம்! - 27

வெயில் ஆங்காரத்தோடு சுட்டெரித்துக் கொண்டிருந்த பகலில், கோரிப்பாளையத்தைச் சுற்றி ஒருவரும் மருதுவுக்கு உதவியாக வரவில்லை. மணியின் கொலையை மொத்த ஊரும் கடந்து செல்லவே நினைத்தது. அவனது பெயரும் உருவமும் ஒரே நாளில் வெறும் செய்தியாக மாறி எல்லோரின் நினவிலிருந்தும் மறையத் தொடங்கின. “என்ன மாதிரி வாழ்ந்த மனுஷன்” என்று சொன்ன வாய்களெல்லாம் “இப்பிடி சாவு ஒருத்தனுக்கும் வரக் கூடாதுய்யா” என்று தங்களுக்குள்ளேயே சொல்லி அனுதாபப்பட்டுக் கொண்டன. பலம், வீரமெல்லாம் உயிரோடிருக்கும் வரையில்தான். மனிதன் இறந்த பிறகு ஒன்றுமில்லை. சாவோடு பெருமிதங்களும் அழிந்துபோகின்றன.

தனது கண்ணீரைத் துடைத்துவிட விரல்கள் இல்லை என்கிற ஏமாற்றத்தில் ஒருபுறம் மருதுவின் இதயம் நொறுங்கிக்கொண்டிருந்தாலும், மணியின் சாவுக்குப் பழிவாங்க வேண்டும் என்கிற வெறி, ரத்தத்தைக் கொதிக்கச் செய்தபடியே இருந்தது. மணியின் அளவுக்கு தான் தாட்டியக்காரனில்லை என்றாலும், சோமுவின் குடும்பத்தை அழிக்க உள்ளுக்குள்ளிருக்கும் இந்த வெறி போதும். நீர் அருந்தாமல், தொண்டையும் நாவும் வறண்டு போயின. வியர்த்துக் கசகசத்த சட்டையில் உப்பு படிந்திருக்க, ஒரு தள்ளுவண்டியையாவது தயார் செய்துவிடும் தவிப்போடு மருது ஒவ்வொரு வீதியாக அலைந்தான். அண்ணாநகரில் ஒரு மரக்கடைக்காரர் விறகெடுக்க வைத்திருந்த தள்ளுவண்டிதான் இறுதியாக அவனுக்குக் கிடைத்தது. மணியின் மீதிருந்த பழைய பழக்கத்துக்காகக் கொடுக்கச் சம்மதித்தார். “இந்த உதவிய என்னிக்குமே மறக்க மாட்டண்ணே...” தழுதழுத்த குரலோடு சொல்லிவிட்டு மருது மருத்துவமனை நோக்கி வண்டியைத் தள்ளினான்.

பகல் மெல்லச் சரிந்துகொண்டிருக்கையில், மருத்துவமனையின் பின்வாசல் வழியாக வந்த இந்தத் தள்ளுவண்டியை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். பிணவறை வரை வண்டியைத் தள்ளிச் செல்ல முடியாது என்பதால், தூரத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்றான். பிணவறைக்கு வெளியே அழுது ஓய்ந்த முத்தையா, தலை கலைந்து பாதி மயக்கத்தில் கிடந்தான். சுவரெங்கும் உலர்ந்த சுண்ணாம்பு வெள்ளை, முத்தையாவின் சட்டையிலும் கைலியிலும் ஒட்டியிருந்தது. “முத்து... டேய் முத்து…” மருது அவன் தோள்களில் தட்டி எழுப்பியபோது “என்னாண்ணே இம்புட்டு நேரம்?” முத்தையா சோர்வாகக் கேட்டான். “ஒரு தாயோலியும் உதவிக்கு வரலடா... அதான். சரி வா போவோம்...” முத்தையா எழுந்து மருதுவோடு சென்றான். பிணவறை ஊழியர்கள் மணியின் உடலை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொடுக்க, இவர்கள் இருவரும் அதை வெளியில் தள்ளிக்கொண்டு வந்தனர். ஆஸ்பத்திரியில் நின்றிருந்தவர்களெல்லாம் இவர்களைப் பரிதாபமாகப் பார்க்க, ஒருத்தர் முகத்தையும் பார்க்கப் பிடிக்காமல் வேகமாகத் தள்ளிவந்தனர். விறகெடுக்கப் பயன்படுத்தும் தள்ளுவண்டியைப் பார்த்ததும் முத்தையாவுக்குக் கெதக்கென்று இருந்தது. “என்னண்ணே இது?”

“வேற ஒண்ணுமே கெடைக்கலடா. அவய்ங்களுக்கு பயந்துக்கிட்டு ஒருத்தனும் வண்டிகூட தர மாட்டேன்னுட்டாய்ங்க...” என மருது குமுறி அழ, முத்தையாவும் அவனோடு அழுதான். அழுகையினூடே மணியின் உடலை ஸ்ட்ரெச்சரிலிருந்து தள்ளுவண்டிக்கு மாற்றினார்கள். ஸ்ட்ரெச்சரை அப்படியே விட்டுவிட்டு இருவருமாகச் சேர்ந்து தள்ளுவண்டியைத் தள்ளத் தொடங்கினார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 27

பிறந்ததிலிருந்து வாழ்ந்துவரும் ஊரின் வீதிகளெல்லாம் மறந்துபோயின; மயானத்துக்குச் செல்லும் வழி மறந்துபோனது. மணியோடு பழகியவர்கள், அவனுடைய சொந்தக்காரர்கள் ஒருவருக்குக்கூடவா அவன்மீது பற்றில்லாமல் போனது... மற்றவர்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், வேணியுமா? முத்தையாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. “அந்தத் தேவ்டியா பின்னால போயி அவளக் கெட்டாம இருந்திருந்தா நல்லா வாழ்ந்திருப்பாருண்ணே... எல்லாம் அவளால வந்ததுதான். தேவ்டியா முண்ட... நல்லா வாழ வேண்டிய மனுஷன நாசமாக்கிட்டா...” எனச் சத்தமாகக் கத்த, அவனுக்கு பதிலெதுவும் சொல்லாமல் வண்டியைத் தள்ளிக்கொண்டிருந்த மருது, ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினான். “என்னாச்சுண்ணே?” என முத்தையா திரும்பிப் பார்க்க, விறுவிறுவென நடந்த மருது, வீதியோரத்திலிருந்த பூக்கடையிலிருந்து மாலைகளை மொத்தமாக அள்ளினான். கடைக்காரன் பதறி, “ஏய்... என்னாப்பா உம்பாட்டுக்கு எல்லாத்தையும் அள்ளிக்கிருக்க?” எனக் கேட்க, கைலிக்குள் கைவிட்ட மருது, டவுசர் பைக்குள்ளிருந்து மொத்தமாகப் பணத்தை அள்ளிப்போட்டான். கடைக்காரன் எதுவும் பேசாமல் பார்க்க, மருது அள்ளிச் சென்ற மாலைகளை மணியின் உடலைச் சுற்றிப் போட்டான். முத்தையாவும் ஓடிப்போய் கடையிலிருந்த மாலைகள் பூக்கள் அவ்வளவையும் எடுத்துவந்து மணியின் உடலைச் சுற்றியும் தள்ளுவண்டியிலும் பரப்பினான். சில நிமிடங்களிலேயே துருப்பிடித்த அந்தப் பழைய தள்ளுவண்டி சின்னதொரு தேராக உருமாறியது. “எங்களால இதாண்ணே செய்ய முடிஞ்சது...” மருது கடைசியாக மணியின் கால் பக்கமாய் நின்று கதற, முத்தையா அவனது தோள்களை ஆறுதலாகப் பற்றிக்கொண்டான்.

இருவரும் மயானத்தை அடைந்தபோது இருட்டியிருந்தது. வேறொரு சடலத்தை எரித்துக் கொண்டிருந்தவர்கள், அந்த மயானத்துக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாமல் வந்து நிற்கும் வண்டியையும், அதைத் தள்ளி வந்தவர்களையும் பார்த்து எதுவும் சொல்லாமலேயே புரிந்து கொண்டனர். வண்டியை நிறுத்திவிட்டு, மருது மட்டும் அவர்களை நெருங்கிச் சென்றான். கையிலிருந்த மிச்சப் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தவன் “மொறையா என்ன காரியம்லாம் செய்யணுமோ செஞ்சிருங்கப்பா...” என்றான். பணத்தை வாங்கிக்கொண்ட பெரியவர், தனக்கு அருகிலிருந்த இளைஞரைப் பார்க்க, “அண்ணே செத்தவடம் தூரமாப் போயி உக்காருங்க. நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டுக் கூப்புடறேன்” எனச் சொல்லி அனுப்பிவைத்தான். முத்தையாவும் மருதுவும் மயானத்தின் இன்னொரு பக்கமிருந்த திண்டில் அமர, அவர்கள் மணியை எரியூட்டுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு, இவர்களைச் சத்தம்போட்டுக் கூப்பிட, இருவரும் எழுந்து சென்றனர். “யார்ணே தண்ணிக்கொடம் எடுக்கப்போறீங்க?”

“நானே எடுக்கறன்யா” மருது சட்டையைக் கழற்றி முத்தையாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். மணியின் உடலை எரியூட்டுவதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்கினர். தம்பி முறையில் மருது கொள்ளிக்குடம் எடுத்ததோடு மொட்டையும் போட்டுக்கொண்டான். சடங்குகள் எல்லாம் முடிந்து மணியின் உடலுக்கு நெருப்பு மூட்டியபோது, அந்தச் சாவுக்குக் காரணமான ஒருவனையும் விடக் கூடாது என்கிற வெறி அவனுக்குள் கனன்று எரியத் தொடங்கியது.

எங்கு செல்வதெனத் தெரியாத குழப்பத்தோடு முத்தையா, மருதுவோடு சென்றான். மணியின் கொலையை மறந்துவிட்டு மறுபடியும் மூர்த்திக்காகச் சென்று வேலை பார்க்க மனம் ஒப்பவில்லை. வெறுமை மட்டுமே மனதை ஆக்கிரமித்துக் கிடக்க, மருது கொடுத்த சாராயத்தைக் குடித்துவிட்டு, வீட்டு வாசலிலேயே சாய்ந்துகிடந்தான். நள்ளிரவு நெருங்கின வேளையில், திபுதிபுவென அந்தச் சின்னஞ்சிறிய வீதிக்குள் புகுந்த போலீஸ்காரர்கள் மருதுவின் வீட்டு வாசலில் சுருண்டு கிடந்த முத்தையாவை அடித்து எழுப்பினார்கள். களைப்பிலும் போதையிலும் நடப்பது புரியாமல் கண்ணைக் கசக்கிய முத்தையா, “யார்யா நீங்க... என்னய்யா வேணும்?” எனக் கேட்டான். “நாங்க யாரா... ஏண்டா வெண்ண... மணியக் கொல பண்ணிட்டு ஒண்ணுந்தெரியாதவன் மாதிரி இங்க வந்து படுத்திருக்கியா?” என அலேக்காகத் தூக்கினார்கள். “என்னய்யா அநியாயமா இருக்கு. மணி என் அண்ணன்யா. சம்பவம் நடந்தப்ப நான் சிவகங்கைல இருந்தன்யா…” என்ற அவனது அலறலைப் பொருட்படுத்தாமல், போலீஸ்காரர்கள் அவனை இழுத்துச் சென்றார்கள். “நா எங்கண்ணனக் கொல்லலடா விடுங்கடா...” எனும் முத்தையாவின் அலறலில் வீதியே விழித்துக்கொள்ள, போலீஸ் காரர்களிடமிருந்து அவனை மீட்க முடியாத இயலாமையோடு மருதுவும் ஆத்திரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

(ஆட்டம் தொடரும்)