Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 28

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

காளியோடு தொடர்பிலிருந்தவர்களை யெல்லாம் போலீஸ்காரர்கள் தேடித்தேடி விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் அவனைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

ரெண்டாம் ஆட்டம்! - 28

காளியோடு தொடர்பிலிருந்தவர்களை யெல்லாம் போலீஸ்காரர்கள் தேடித்தேடி விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் அவனைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

அதிகாரம் இல்லாத தன்னை இந்தச் சமூகம் மிக வேகமாக மறந்துவிட்டதை காளி புரிந்துகொண்டான். சுப்புத்தாயி கவுன்சிலரான பிறகு அவள் பார்த்துவந்த சில்லறை வேலைகளை காளியைப் பார்த்துக்கொள்ளச் சொன்னாள். சில வருடங்களுக்கு முன்னர் வாழ்க்கையைத் தொடங்கிய இடத்துக்கே திரும்ப வந்துவிட்டதுபோலத் தோன்றியது. கரிமேடு மார்க்கெட்டில் பவுசு வாங்குவதற்காக சைக்கிளில் செல்லும்போது, தனக்குப் பின்னால் எழும் சிரிப்புச் சத்தங்கள் இரவுகளில் அவனைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்யத் தொடங்க, “நீ பேசாம எதிர்க்கட்சில சேந்துடுண்ணே...” என்று முத்தையா சொன்னதைக் குறித்துத் தீவிரமாக யோசித்தான். அவன் கேட்ட ஒரே வார்த்தைக்காக மூர்த்தி, சுப்புத்தாயிக்கு நிறைய உதவியிருக்கிறார். அதையெல்லாம் மறந்துவிட்டு எதிர்க்கட்சிக்குச் செல்வதா என முதலில் தயக்கம் எழுந்தது. ஆனால், நிதானமாக யோசித்தபோது அவர் அப்படிச் செய்து, சுப்புவின் அதிகாரத்தைப் பலப்படுத்தியதன் மூலம் தன்னைக் கட்டுப்படுத்தியிருக்கிறார் என்கிற சூழ்ச்சி புரிந்தது. தட்டிக்கொடுப்பதுபோல் ஒருவனை வீழ்த்தும் கலையில் மூர்த்தி வல்லவர். இந்தப் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் சகித்துக்கொள்வதற்கு பதிலாக மூர்த்தியின் எதிர்ப்பைச் சம்பாதித்துக்கொள்வது மேலெனத் தோன்ற, யாரிடமும் சொல்லாமல் ஒருநாள் காணாமல்போனான்.

ரெண்டாம் ஆட்டம்! - 28

சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன காளியை சுப்புத்தாயும் அவளோடு இருந்தவர்களும் ஊர் முழுக்கத் தேடிப்பார்த்தார்கள். யாருக்கும் அவன் எங்கு சென்றிருப்பான் எனத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மார்க்கெட்டில் பவுசு வாங்குவதைத் தவிர பெரிய வேலைகள் எதுவும் அவனுக்கில்லை என்றான பின், தினமும் குடிக்கத் தொடங்கியிருந்தான். அந்தக் குடி அவனைத் தனிமைப்படுத்தியிருந்தது. வீட்டைவிட்டு அதிகம் வெளியேறாமல் கிடந்த அவனுக்கு யார் நண்பர்கள், வேண்டப்பட்டவர்கள் என எந்த விவரத்தையும் சுப்பு அறிந்திருக்கவில்லை. காளி, சுப்புவின் கணவனாகத்தான் எல்லோராலும் நினைவு வைக்கப்படுகிறான் என்பதை இந்தத் தேடலில் அவள் கண்டுகொண்டபோது, அவன் தன்னை வெறுத்துவிட்டானோ என சுப்பு கவலைப்பட்டாள். கடைசி முயற்சியாக மூர்த்தியிடம் உதவி கேட்டுச் சென்றாள். “ஏம்மா, காளி என்ன சின்னப்பயலா... காணம்ண்டு கவலப்பட்டுக்கிருக்க. எங்கியாச்சும் போயிருப்பாப்ள. ரெண்டு நாள் பொறுத்துப் பாப்போம்.”

“இல்லண்ணே, கொஞ்ச நாளாவே மண்ட கோளாறான மாதிரிதான் சுத்திட்டு இருந்தாரு. எல்லாரும் அவர ஏமாத்திட்டோம்னு நெனப்பு. எங்கிட்டக்கூட மூஞ்சி குடுத்துப் பேசறதில்ல. அதான் கோவிச்சுக்கிட்டுப் போயி எதும் தப்பான முடிவு எடுத்திருப்பாரோன்னு பயமா இருக்கு.”

“ச்சே... ச்சே... அப்பிடில்லாம் இருக்காதும்மா. காளிய எனக்கு நல்லாத் தெரியும். பிரச்னைன்னா ஓடி ஒளியற ஆள் இல்ல அவென். இருந்தாலும் போலீஸ்ல சொல்லி உடனே நான் தேடச் சொல்றேன். நீ பயப்படாமப் போ…”

மூர்த்தி நம்பிக்கையாகச் சொல்லியனுப்பினாலும் சுப்புத்தாயிக்கு மனம் ஆறுதலடையவில்லை. தன் வாழ்க்கையில் தற்காலிகமாக காளி இல்லை என்ற சின்ன வெறுமையே அவளை பலவீனப்படுத்தியது. அவன் திரும்பி வர வேண்டும் என்பதற்காக மனதுக்குள் சாமியை வேண்டிக்கொண்டாள்.

காளியோடு தொடர்பிலிருந்தவர்களை யெல்லாம் போலீஸ்காரர்கள் தேடித்தேடி விசாரித்துக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கும் அவனைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. “இப்பிடித்தான் மணி சொல்லாம கொள்ளாம ஊரவிட்டுப் போனான். திரும்பி வந்தப்போ அவனுக்குச் சாவுதான் மிச்சமா இருந்துச்சு. காளியுமா இப்பிடிச் செய்யணும்..?” எனச் சிலர் கவலையாகப் பேசிக்கொண்டதைக் கேட்டதும், சுப்புத்தாயிக்கு இருந்த அச்சம் அதிகமானது. வீட்டிலிருந்து வெளியேறப் பிடிக்காமல் இரண்டு நாள்களாக அடைந்துகிடந்தவளை, கட்சி அலுவலகத்திலிருந்து மூர்த்தி அழைப்பதாகச் சொல்லி ஒருவன் வந்து கூப்பிட்டான். சுப்புத்தாயி உடையை மாற்றிக்கொண்டு வேக வேகமாகக் கிளம்பினாள். கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தபோது, எல்லோரின் முகத்திலும் குழப்பமான அமைதி தெரிந்தது. பதற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல் மூர்த்தியின் முன்னால் சென்று நின்றவளை உட்காரச் சொன்னார். கைகளில் இருந்த நடுக்கத்தை மறைத்துக்கொண்டாள். கழுத்தில் வியர்வை அதிகமானதால், சேலை முந்தானையால் துடைத்துக்கொண்டே இருந்தவளை, எதுவும் பேசாமல் மூர்த்தி வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தார். “என்னாச்சுண்ணே... எதுவும் தகவல் கெடச்சதா?”

“ம்ம்ம்...”

‘‘எங்க இருக்காரு... என்ன ஆனாரு?’’

“நல்லாத்தாம்மா இருக்கான். ஆனா, நம்ம எல்லாரையும் நம்பவெச்சு கழுத்தறுத்துட்டான்.”

“என்னண்ணே சொல்றீங்க?”

மூர்த்தி செய்தித்தாளை எடுத்து அவள் முன்னால் மேஜையில்போட, அதில் இரண்டாம் பக்கத்தில் நடிகரின் புதியக் கட்சிக்கு, மதுரை மாவட்டச் செயலாளராக காளி நியமிக்கப் பட்டிருக்கும் செய்தி வந்திருந்தது. சடாரென சுப்புவின் கண்களில் ஒரு வெறுப்பு எழுந்தாலும், அவன் உயிரோடு இருக்கிறான் என்கிற நிஜம் ஆறுதல்படுத்தியது. விருப்பமே இல்லாமல் செய்தித்தாளை மூர்த்தியை நோக்கி நகர்த்தினாள்.

‘‘அவனுக்குப் பதவிதான் வேணும்னா நம்ம கட்சில பெரிய பொறுப்பக் குடுத்து அழகு பாத்திருப்பேன். எங்கிட்ட அவனுக்கில்லாத உரிமையா... ஏம்மா இப்பிடி செஞ்சான்?”

ரெண்டாம் ஆட்டம்! - 28

சுப்பு சிரித்தாள்.

“பிரச்னை நீங்களோ நம்ம கட்சியோ இல்லண்ணே. நான் கவுன்சிலரா ஆனதும், அவர யாரும் மதிக்கலங்கற ஆத்திரம். அதனால என்னையும் புடிக்காமப் போயிருச்சு. என்னய ஜெயிக்கணுங்கறதுக்காக இப்பிடி செஞ்சிருக்காரு.”

மூர்த்திக்குக் குழப்பமாகவும் எரிச்சலாகவும் இருந்ததால், மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

மணியைக் கொலை செய்தவர்களோடு முத்தையாவும் சிறையிலிருந்தான். முதன் முறையாகச் சிறைக்கு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் எல்லா நெருக்கடிகளையும் அவன் எதிர்கொண்டு துடித்தபோது, ஆறுதல் சொல்லக்கூட ஒருவருமில்லை. அந்தக் கொலைகாரக் கூட்டத்தில், சோமுவின் தம்பிக்கு பதிலாக முத்தையாவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. “சிவனேன்னுதானய்யா இருந்தேன். என்னய ஏன்யா இதுல கோர்த்துவிட்டீங்க?” என முத்தையா அழாத நாளில்லை. “எலேய் ஊள, என்னத்துக்கு அழுதுக்கிருக்க? இந்தக் கேஸ்லாம் நிக்காது. சாட்சி சொல்லவும் ஒரு பய வர மாட்டான். உம்பாட்டுக்கு ரெண்டு மாசம் உள்ள இரு. நல்லா தின்னு உடம்பத் தேத்து” என அவனோடு இருந்தவர்கள் சிரித்தார்கள். வேட்டைக்குப் பழகாத மிருகம், எல்லா மிருகங் களிடமும் கடிபடுவதுபோல, முத்தையா சிறைச்சாலையில் ஒரு கேலிப்பொருளாக மாறிப் போனான். வாய்தாவுக்காக நீதிமன்றத்துக்குச் சென்ற நாளில் சோமுவின் தம்பி வந்திருப்பதை கவனித்தான்.

‘‘நான் உனக்கு என்ன கெடுதல்ணே செஞ்சேன்? இப்பிடி செஞ்சுவுட்ட…”

“முத்து... பிள்ளப்பூச்சிய அடிக்கிறதாடா எனக்கு வேல.. உன்னிய இந்தக் கேஸ்ல கோர்த்துவுடச் சொன்னது அறிவும் மூர்த்தியும்தான்.”

“என்னண்ணே சொல்ற?”

“அரசியல்டா... மணி சாவுக்காக அழுத ரெண்டு பேர்ல நீயும் ஒருத்தன். எப்பிடியும் அவன் சாவுக்குப் பழிவாங்கணும்னு வெறி ஏறும். எங்களப் பத்தி எல்லா வெவரமும் தெரிஞ்சவன் நீ ஒருத்தன்தான். நேரடியா எதும் செய்யாட்டியும் ஆள் வெச்சுண்டாலும் செஞ்சிர மாட்ட? அதான் கேஸ்ல கோர்த்துவிட்டது...”

தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிற இயலாமையும், தனக்காக ஒருவருமில்லை என்கிற ஏமாற்றமும் அவனை பலவீனப்படுத்தியது. சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயன்றான், முடியவில்லை. அவமானமும் அச்சமும் சூழ்ந்திருந்த வேளையில் முதன்முறையாக சில்வர் செல்லையாவின் அறிமுகம் கிடைத்தது. செல்லையா சில்லறைத் திருடன். முத்தையாவின் சம வயதுதான் என்றாலும், சூட்டிகையான ஆள். திருட்டு வழக்கில் சிறைக்கு வந்த அவன்தான் முத்தையாவுக்கு ஒரே பாதுகாப்பு அரணாக நின்றான்.

காளி ஊருக்குத் திரும்பிவந்தபோது, மதுரையில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு அசாதாரணமானது. இந்த நாளுக்காகத்தான் அவன் காத்திருந்தான். சென்ட்ரல் மார்க்கெட்டில் சோமுவின் குடும்பத்தை எதிர்த்து நின்ற காளியைவிடவும் இப்போது இருப்பவன் வீர்யமானவன். அவமானங்களையும் உதாசீனங்களையும் பார்த்துவிட்டதால், கருணை அவன் இதயத்திலிருந்து காணாமல் போயிருந்தது. தனக்காக, தன்னோடு இருக்க வேண்டிய ஆட்கள் யாரென்பதையும் முடிவுசெய்துவிட்டிருந்தான்.

மூர்த்தியின் சூழ்ச்சியால், சிறைக்குள்ளிருக்கும் முத்தையாவுக்குக் கையோடு ஜாமீன் வாங்கிவிட்ட காளி, வீட்டுக்குக்கூடச் செல்லாமல் நேரடியாகச் சென்றது சிறைச்சாலைக்குத்தான். மாவட்டச் செயலாளர் பதவியேற்றதும், சிறைச்சாலைக்கு வரும் காளியை எல்லோரும் குழப்பமாகப் பார்க்க, ஜெயிலரிடம் முத்தையாவுக்கான ஜாமீன் கொடுக்கப்பட்டு, முத்தையா விடுவிக்கப்பட்டான். தான் நம்பியிருந்தவர்கள் துரோகம் செய்து கைவிட்ட பிறகு, காளி தனக்காக நின்றதில் முத்தையா நெகிழ்ந்துபோனான். “இந்த உதவிய சாகற மட்டும் மறக்க மாட்டண்ணே” என இறுக்கமாக அவனைக் கட்டிக்கொண்டான்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism