Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 29

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஜெகதி

ரெண்டாம் ஆட்டம்! - 29

ஜெகதி

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

வறண்ட நிலத்தில் பூக்கும் மலர்களுக்குத் தனித்துவமான வசீகரமுண்டு. ஜெகதி அப்படியானதொரு மலர். எதிரிலிருப்பவர்களைப் பார்வையாலேயே வீழ்த்திவிடும் விசேஷமான கண்களைக் கடவுள் அவளுக்குப் பரிசளித்திருந்தார். சராசரிப் பெண்களைவிட சற்றே உயரமும் இறுகிய உடலும்கொண்ட அவள், மதுரைக்குக் குடிவந்தது 2012-ம் வாக்கில்தான். ராமநாதபுரத்துக்fகு அருகில் பாண்டியூரைச் சொந்த ஊராகக்கொண்டவள், வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்ஸி ஒன்றை நடத்திவந்தாள். மலேசியா, சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்குப் பெண்களை அனுப்புவதாகச் சொல்லிக்கொண்டாலும், குருவிகள் மூலமாக சிங்கப்பூரிலிருந்து தங்கம் எடுத்து வருவதே அவளுக்குப் பிரதான தொழில். பொதுவாக, குருவிகளைத் திருச்சியிலிருந்து மளிகைச் சாமான்கள் எடுத்துச் செல்லவும், சிங்கப்பூரிலிந்து எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை எடுத்து வரவும்தான் பயன்படுத்துவார்கள். இதில் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொண்ட ஆட்கள்தான் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்கள்.

ஜெகதியின் அப்பா சிங்கப்பூரில் சில வருடங்கள் வேலை செய்தவர். “இந்த வறக்காட்டுல பொழப்பு தழப்பு இல்லாம கெடக்கற பிள்ளைகள சிங்கப்பூர் பக்கமா வேலைக்கு அனுப்பிவைக்கலாம். அங்க நம்மாளுகளுக்கும் வீட்டு வேலைக்கி நம்பிக்கையான பொம்பளைக தேவைப்படுது. ஆளுக்கு இவ்ளோனு நம்மளுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும்” என்ற அவரது வழிகாட்டுதலில்தான் ஜெகதி ஏஜென்ஸியைத் தொடங்கினாள். சீமக்கருவேலம் அடர்ந்த ராமநாதபுரத்தின் வறண்ட மண்ணில், பிழைப்புக்கு வழியின்றி ஏதாவதொரு ஊருக்குச் சென்று, கிடைக்கிற வேலையைச் செய்ய ஆட்கள் பேயாய் அலைந்தார்கள். வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்புவதற்கு என நிறைய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் உண்டு. நம்பிக்கையான ஏஜென்ஸிகளால் மட்டுமே தொடர்ந்து இந்தத் தொழிலைச் செய்ய முடியும். ஜெகதி அந்த நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்திருந்தாள். சரியான ஆட்களிடம் வேலைக்கு அனுப்புவது, வேலைக்குச் செல்லும் பெண்ணின் குடும்பத்தினருடன் நல்லவிதமாக உறவைப் பேணுவது என திறமையாகச் செயல்பட்டாள். இயல்பிலேயே மனிதர்களை அவர்களின் குணங்களோடு ஏற்றுக்கொள்ளும் வழக்கம் கொண்டவள் என்பதால், யாருக்கும் குறைநிறை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பாள். எதிர்பாராதவிதமாக அவளின் அப்பா இறந்துவிட, குடும்பப் பொறுப்புகளைத் தனித்துப் பார்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி உருவானது. தேவைகள்தான் மனிதனை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி முன்னகர்த்திக்கொண்டேயிருக்கின்றன. அவளைப்போல் ராம்நாட்டில் ஏஜென்ஸி நடத்தியவர்கள், சிங்கப்பூருக்குக் குருவிகளையும் அனுப்பிக்கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டவள், குருவிகள் மூலமாக கரன்சிகளை எடுத்துச் செல்லும் வேலையைத் தொடங்கினாள். இதில் நல்ல கமிஷன் உண்டு, ரிஸ்க்கும் குறைவு என்பதால் நிறைய பேர் இந்த வேலைக்குக் கிடைத்தார்கள். சிங்கப்பூருக்குள் நுழையும் ஒருவர் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்பதால், வெவ்வேறு நாட்டுக் கரன்சிகளை எடுத்துக்கொண்டு குருவிகள் பயணிக்கத் தொடங்கினர்.

ரெண்டாம் ஆட்டம்! - 29

பறவை தன் றெக்கைகளை விரித்துப் பறக்கத் தொடங்கிய பின், எல்லா எல்லைகளையும் கடந்து செல்லவே விரும்புகிறது. வேலைக்காகத் தன்னைத் தேடி வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, ஜெகதி ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு இடம்பெயர்ந்தாள். கரன்சி மாற்றுவது, திருச்சி வழியாக மளிகைச் சாமான்கள் எடுத்துச் செல்வது இவையெல்லாவற்றையும் விட தங்கம் எடுத்துவருவதில் நல்ல லாபமிருந்ததை அனுபவம் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. “எக்கா, இன்னும் இருவது வருஷம் கழிச்சுப் பாரு... உலகத்தோட மார்க்கெட் தங்கத்தச் சுத்திதான் இருக்கும். இன்னிக்கி பெட்ரோலுக்கு இருக்க மவுஸெல்லாம் குறைஞ்சு தங்கம் இந்த உலகத்த ரூல் பண்ணப் போகுது. சைனாவும் ஜப்பானும் கணக்கு வழக்கில்லாம தங்கத்தப் பதுக்கிட்டு இருக்கானுங்க. ஏன் தெரியுமா? எதிர்காலத்துல அமெரிக்காக்காரன வீழ்த்தப்போற ஆயுதம் இந்தத் தங்கம்தான். நாம இப்பயே சுதாரிச்சம்னா நல்லா காசு பாக்கலாம்.” தங்கத்துக்குப் பின்னாலிருக்கும் எதிர்காலத்தை ஜெகதியின் தம்பி அவளுக்கு உணர்த்தினான்.

“ஆனா இது லேசான வேலையில்லடா சுரேசு… கஸ்டம்ஸ்ல மாட்டினம்னா இத்தன வருஷம் சம்பாதிச்சதெல்லாம் போயிரும்.”

“கஷ்டம் பாத்தா காரியம் நடக்குமா? நாம மொதல்ல அங்கருந்து குருவிங்க மூலமா செயின், மோதிரமா எடுத்துட்டு வருவோம். லைன் பிடிபடவும் பிஸ்கட் எடுக்கலாம்.”

“அங்க நம்மளுக்கு நம்பிக்கையான ஆளுக வேணுமேடா?”

“அத நான் பாத்துக்கறேன். நம்மளுக்கு கிரெடிட்ல நக குடுக்க அங்க தெரிஞ்ச கடை இருக்கு. நாம அப்பப்ப மொத்தமா பணம் குடுத்தா போதும். உண்டியல் காசு மாத்தற ஏஜென்ட் நம்பிக்கையானவன். அவன் பயக மூலமா நகைய குடுத்துவிடச் சொல்லுவோம். அதும் இல்லாம... எடுத்துட்டு வரப்போறது நம்ம குருவிங்கதான?”

“சரிடா. இதச் செய்றதால குருவிங்களுக்கு என்ன லாபம்?”

“அட லூசு. நகைக்கான பில்ல சிங்கப்பூர் கஸ்டம்ஸ்ல காட்டினா... 7 பெர்சன்டேஜ் ஜி.எஸ்.டி காசு கெடச்சிடும். அது நம்ம குருவிங்களுக்கு ரெண்டு ட்ரிப் போயிட்டு வர்ற காசு. நம்மளவிட அவய்ங்களுக்குத்தான் இதுல லாபம்.”

எல்லா வகையிலும் சந்தேகம் தீர்ந்த பிறகுதான் ஜெகதி, சுரேஷின் யோசனைக்கு ஒப்புக்கொண்டாள். தங்கம், அதுவரையிலான அவர்களின் தொழிலை வேறு இடத்துக்கு நகர்த்தியது. எல்லீஸ் நகரில் சின்னதாகத் தொடங்கப்பட்ட அந்த அலுவலகம், குறுகிய காலத்திலேயே பரபரப்பானது. தினமும் மளிகைச் சாமான்களோடும், கரன்சிகளோடும் குருவிகள் பறக்கத் தொடங்கினார்கள். சிங்கப்பூரில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் தங்கியிருந்துவிட்டு தங்க நகைகளோடு திரும்புவார்கள்.

ஜெகதியும் சுரேஷும் நம்பிக்கையான குருவிகளைத் தங்களோடு வைத்துக்கொண்டார்கள். பயணத்தைச் சரியாகத் திட்டமிட்டார்கள். எந்த நாள், எந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்கிற தெளிவுதான் இதில் முக்கியமானது. விமான நிலையத்தில், கஸ்டம்ஸில் விவகாரமான ஆட்கள் பணியிலிருக்கும்போது, பயணத்தைத் தவிர்க்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்காகவே கஸ்டம்ஸ் ஆபீஸர்களின் பணி நேர அட்டவணை ஒன்றைத் தயாரித்து தன் ஆட்கள் எல்லோரிடமும் கொடுத்திருந்தாள். அந்த காலண்டரைக் குருவிகள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பது உண்டு. இந்த அக்கறையினாலேயே அவளது குருவிகள் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் பொருள்களை எடுத்துவந்தனர்.

தொழில் நன்கு பழக்கமானதால் சுரேஷுக்கும் ஜெகதிக்கும் அதன் மேலிருந்த பயம் போனது. பிஸ்கட்டுகளை எடுத்து வரலாம் என முடிவெடுத்தார்கள். பயம் விலகுகையில் ஆபத்து சூழுமென்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. சிங்கப்பூரிலிருந்து தங்கக்கட்டிகள் எடுத்து வருவது என்பது சிரமமான காரியம். நான்கு மணி நேரம் தங்கக்கட்டிகளைக் குதத்தில்வைத்து எடுத்து வர முயன்றால் மரணத்தில்கூட முடியலாம். இப்படி குதத்தில்வைத்து தங்கக் கட்டிகள் எடுத்து வருவதை `ராக்கெட்’ என்று சொல்வார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 29

ஜெகதி இந்த ராக்கெட்டுக்காகக் கொழும்பில் ஆட்களைப் பிடித்தாள். கொழும்பு விமான நிலையத்தில் ஏஜென்ட் தங்கக்கட்டிகளைச் சேர்த்துவிடுவான். அங்கிருந்து நாற்பத்தைந்து நிமிடம் விமானப் பயணம். விமான நிலையத்தில் இறங்கும்போதே வண்டி தயாராகக் காத்திருக்கும். அருகிலிருக்கும் விடுதிக்குச் சென்று உடனடியாகத் தங்கத்தை வெளியில் எடுத்துவிடலாம். கொஞ்சம் பிசகினாலும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்தச் செயலைச் செய்ய ஒருவரும் துணிந்து முன்வரவில்லை. இவ்வளவு தங்கத்தைக் கடத்துவது கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டால், அதனால் ஏற்படும் விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும் என்பதால், குருவிகள் தயங்கினார்கள்.

“யாரையும் நம்பி பிரயோஜனமில்லக்கா, நானே எடுத்துட்டு வர்றேன்...” சுரேஷ் துணிச்சலாக அந்த முடிவை எடுத்தான். இதுவொரு சூதாட்டம். ஆனால் ஆபத்துகள் நிறைந்த சூதாட்டம். இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பாகவே கொழும்பு சென்று தங்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டவன், முந்தைய நாள் இரவு இனிமா கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்தான். அதன் பிறகு, பயணம் முடியும் வரையிலும் கொஞ்சமாகத் திரவ உணவு மட்டுமே. ஒன்றரைக் கிலோ தங்கக்கட்டிகளை குதத்தில் அடைத்துக்கொள்வது எத்தனை சிரமமான காரியம் என்பதை முதன்முறையாகச் செய்து பார்த்தபோதுதான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.

புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் திருச்சி விமான நிலையத்தில் அவ்வளவாக நெருக்கடி இருக்காது என்பதால், அன்றைய தினம் சிங்கப்பூரிலிருந்து கொழும்பு வழியாகத் திருச்சி வரும் குருவிகளோடு கொழும்பில் சுரேஷ் இணைந்து கொண்டான். பயணத்துக்காக விமானத்தில் ஏறி உட்கார்ந்தபோது, அவனுக்குக் குதத்துக்குள் வலி அதிகமாகி குருதி கசிவது போலிருந்தது. உடனிருந்த குருவிக்கு அவன் நிலைமை புரிந்தது. “தம்பி... எதுவா இருந்தாலும் பொறுத்துக்கங்க. அவசரப்பட்டு கக்கூஸுக்கு மட்டும் போயிராதிங்க” எனப் பதற்றத்தோடு எச்சரித்துக் கொண்டே இருந்தார். வலி தெரியாமலிருக்க சுரேஷ் கண்களை மூடிச் சாய்ந்து கொண்டான். வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி தலைக்குள் எதிரொலிக்கத் தொடங்கியபோது அவனால் தாங்க முடியவில்லை. சத்தம் வராதபடி அனத்தத் தொடங்கினான். பணிப்பெண் வந்து கொடுத்த உணவையும் தண்ணீரையும் வேண்டாம் என்று சொன்னதால் சந்தேகத்தோடு பார்த்துச் சென்றாள். விமானம் திருச்சியில் தரையிறங்கி எல்லோரும் இறங்கியபோதே அவனுக்கு வலியில் மயக்கம் கூடிவிட்டது. குருவிகள் எப்படியாவது அவனை வெளியே கூட்டிச் சென்றுவிட வேண்டும் எனப் பதற்றத்தோடு வேகமாக நடந்தார்கள். குடிவரவுச் சோதனை முடிந்து வெளியேறும்போது சுரேஷ் மயங்கி விழ, அருகில் நின்றால் தமக்கும் ஆபத்து என்பதைப் புரிந்து குருவிகள் அவசரமாகக் கடந்து சென்றார்கள்.

(ஆட்டம் தொடரும்)