Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 3

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

‘‘இந்த ஒரு தலைக்கு இன்னும் நூறு தல விழுந்தாலும் பரவாயில்ல, பழி தீத்தாதான் என் வெறியடங்கும்!’’

ரெண்டாம் ஆட்டம்! - 3

‘‘இந்த ஒரு தலைக்கு இன்னும் நூறு தல விழுந்தாலும் பரவாயில்ல, பழி தீத்தாதான் என் வெறியடங்கும்!’’

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

‘பெரிய விவகாரங்கள் எதுவானாலும் பேசி மட்டுமே தீர்ப்பது’ என்கிற ஒப்பந்தம் முடிவான கடந்த ஐந்து வருடங்களில், மதுரைக் குள்ளிருக்கும் பெரிய தலைக் கட்டுகள் யாரும் இ ன்னொரு வரின் பிரச்னைகளுக்குள் நுழைவதில்லை. கோட்டைச்சாமி யைத் தவிர்த்து மற்றவர்கள் தங்கள் நிழல் அதிகாரத்தின் முகத்தை மாற்றிக்கொண்டார்கள். முன்பைவிடவும் இம்மாநகரில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறபோதும் அவை எந்தக் கட்டுப்பாட்டுக்குள்ளும் வராத சில்லறைகளால் செய்யப்படுபவை. அதிகாரத்துக்கான கொலைகள் ஓய்ந்திருந்த சூழலில், காவு வாங்கப்பட்ட கோட்டைச்சாமியின் தலை இன்னும் எத்தனையோ பேரின் குருதி குடிக்கக் காத்துக்கொண்டிருக்கிறது.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கோட்டைச்சாமியின் உடல், அரசு மருத்துவமனையி லிருந்து வெளியேறிய கணத்திலேயே கருப்பு “நேரா மயானத்துக்குப் போயிருவோம்” என்றான். அவனோடு வந்தவர்கள் அதிர்ந்து ‘ஏய் என்னாப்பா பேசிட்டு இருக்க, எப்பேர்ப்பட்ட மனுஷன். வீட்லவெச்சு ஆளும் பேருமா மரியாத செஞ்சதுக்கு அப்றம் எடுத்துட்டுப் போக வேணாமா?” என்றனர். “ஒக்காலி, தலையில்லாத முண்டமா எங்கண்ணன் கெடக்கறது பெருமையாடா…” என்று கருப்பு கத்தினான். கருப்புவின் கண்கள் உறக்கமின்மையால் சிவப்பேறிப்போயிருந்தன. காரின் முன் சீட்டில் அடங்காத கனத்த உடலில் அண்ணனின் கொலைக்குப் பழிதீர்க்கும் வெறி ஊறியிருந்தது. அவனது ஆத்திரத்தை எதிர்கொள்ள திராணியில்லாதவர்களுக்கு நடுவில், ஒருவன் தயக்கத்தோடு “எதுக்கும் அத்தாச்சிகிட்ட ஒரு வார்த்த சொல்லிடலாம்ணே” என்றான். கருப்பு பதிலெதுவும் சொல்லவில்லை.

கோட்டைச்சாமியின் வீட்டில் மதுரையின் சரிபாதி சனம் திரண்டிருந்தனர். பூர்வீகமான கமுதியிலிருந்தும் சொந்தக்காரர்கள் வந்தவண்ண மிருந்தனர். தெருவை ஆக்கிரமித்துப் போடப்பட்ட நீண்ட கொட்டகைக்குக் கீழே, ஒப்பாரி பாட வந்தவர்களின் குரல் ஓய்வின்றி இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. கைவாகனம் முத்தையா நிறை போதையில் சத்தமாக அழுதுகொண்டிருந்தார். “கோட்ட... உன்னைய சாச்சுட்டாய்ங்களே கோட்ட... எவென் என்ன கேட்டு வந்தாலும் இல்லையின்னு சொல்லாம கொடுத்த உன்னையக் கொன்னுவுட்டாய்ங்களே… டேய் தாயோலிகளா, வம்மவெச்சு என் சிங்கத்த கொன்னுட்டீகளேடா…” அவரது அரற்றல், ஒப்பாரிச் சத்தங்களையெல்லாம் மீறி தெருவில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 3

கோட்டைச்சாமி, செல்வத்திடம் முகம் கொடுக்காமல் விலக்கிவிட்டபோதும் முத்தையாவை விலக்கவில்லை. கோட்டைச்சாமி மட்டுமல்ல, மதுரையின் பழைய தலைக்கட்டுகள் ஒருபோதும் முத்தையாவை விலக்க மாட்டார்கள். காளியின் காலத்திலிருந்து நிறைய பேருக்குக் கைவாகனமாக இருந்தவர். ஆனால், யாருடைய பகைக்கும் ஆளானதில்லை. மற்றவர்களின் குற்றங்களுக்காகச் சிலுவை சுமந்த மனிதர் என்பதால், அவரிடம் எல்லோருக்கும் பிடிப்புண்டு. உலகை வெறுத்து அழுதுகொண்டிருக்கும் முத்தையாவைத் தேற்ற ஒருவருக்கும் துணிச்சலில்லாததால் கவலையோடு பார்த்தனர்.

மதுரை மாநகரின் சுவர்களை ஆக்கிரமித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால், பசை வாடையும் சாராய வாடையும் காற்றில் அடர்த்தியாகக் கலந்திருந்தன. துக்கம் கேட்க வந்திருக்கும் ஆட்களுக்கு ஒருவன் பால் கலக்காத தேநீர் கொடுத்துக்கொண்டிருந்தான். எந்தநேரத்திலும் ஒரு கலகம் தொடங்கலாமென்னும் பதற்றத்தில் அந்தப் பகுதி முழுக்க போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கேத வீட்டுக்கு வந்திருந்த ஆட்களில் சரிபாதி எண்ணிக்கையில் காவலர்கள் திரண்டிருந்தபோதும், பொதுமக்கள் அச்சத்துடனேயே இருந்தனர். ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த பெண்களுக்கு அருகில் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்த கோட்டைச்சாமியின் மனைவியிடம் ஒருவன் வந்து, கருப்பு சொன்ன செய்தியைச் சொல்ல, அவளுக்கும் தன் மச்சினன் முடிவே சரியென்று பட்டது. தன் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு வேகமாகத் தெருமுனையிலிருந்த வண்டிக்குச் செல்ல, செய்தியைக் கேள்விப்பட்டு வந்திருந்த சனமும் மயானத்தை நோக்கிப் புறப்பட்டது.

வீட்டு வாசலில் நிரம்பியிருந்த கொட்டுக்காரர்களும் ஆட்டக்காரர்களும் சனத்தோடு விரைந்தனர். ஒரு திடீர் பதற்றம் சூழ்வதை உணர்ந்த காவல்துறையினர், என்னவோ ஏதோவென நினைத்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தச் செல்ல, வேனில் ஏறிய ஒருவன் “ஏய் போலீஸே... கொண்டவென் யாருன்னு தேடாம இங்க என்னய்யா நொட்டிட்டு இருக்கீங்க?” என்று கத்தினான். இதற்கு மேலும் அவர்களை நெருங்கினால் தேவையில்லாத சிக்கலென காவலர்கள் விலகிவிட்டார்கள்.

கருப்பு, கோட்டைச்சாமியின் பிரேதத்தோடு மயானத்துக்கு வருவதற்கும், குடும்பத்தினர் சனத்தோடு வருவதற்கும் சரியாக இருந்தது. வெயில் மறைந்து மெல்ல இருள் சூழ, பூமிச் சூட்டின் அசாத்திய வெக்கையில் எல்லோருக்கும் உடல் வியர்த்து உடை நனைய, எப்போது வேண்டுமானாலும் கொட்டித்தீர்க்கத் துடித்துக் கொண்டிருந்த மழையின் முன்னோட்டமாக வானில் மின்னல் கீற்றுகள்... பல்லாயிரம் நாவுகளின் கொலை வெறி கோட்டைச்சாமியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் தீண்டிச் செல்ல, பகை கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. வைகையாற்று வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தில், யாரோ ஒரு கிழவி உரத்து அழத் தொடங்க, சடாரென பெருமழை பெய்ததுபோல் ஒப்பாரிக் குரல்கள் மயானத்தைச் சூழ்ந்தன. நூறாயிரம் பறைகளின் ஓசைகளும் ஈடாகாத இந்த ஒப்பாரி ஓலம் பதிலுக்கு பதில் பலி கேட்கத் துடிப்பதன் அடையாளமாக ஆங்காரத்தோடு வெளிப்பட்டது.

தலைவிரி கோலமாக நின்றிருந்த கோட்டைச்சாமியின் மனைவி சங்கரியின் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. வலுவேறிய மரமென உறுதி குலையாமல் நின்றிருந்தாள். கருப்பு எவ்வளவு வற்புறுத்தியும் தலையில்லாத தன் புருஷனின் உடலைப் பார்க்க முடியாதென மறுத்ததோடு தன் பிள்ளைகளையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இறுதிச்சடங்குகள் நடந்துகொண்டிருக்கையில், கொள்ளிவைக்க கோட்டைச்சாமியின் மகனை கருப்பு அழைத்தான். சங்கரி அனுப்ப மறுத்து, “என் புள்ளைக ரெண்டுத்துக்கும் அவுக அப்பாவோட நெனப்பு என்னிக்கும் முழு மனுஷனப் பாத்ததா இருக்கணும். கருப்பு... அவர் உடம்பு எரிஞ்சு அடங்கறதுக்கு முன்னால, அவர் சாவுக்குக் காரணமான அத்தன பய உசுரையும் எடுக்கணும். அத மனசுல வெச்சுக்கிட்டுப் போயி கொள்ளி வைய்யி. இந்த ஒரு தலைக்கு இன்னும் நூறு தல விழுந்தாலும் பரவாயில்ல, பழி தீத்தாதான் என் வெறியடங்கும்’ எனச் சொன்னபடி தன் தலைமயிரை அள்ளிமுடிந்தாள். அவ்வளவு நேரமும் உறைந்துகிடந்தவளின் நெஞ்சுக்குள்ளிருந்த வீராப்பையும் ஆத்திரத்தையும் கண்டு கருப்பே ஒரு நொடி மிரண்டுபோனான். “அத்தாச்சி, இந்தப் பிள்ளைக மேல சத்தியம், பழியெடுக்காம ஓய மாட்டேன்” என்றபடி பொங்கிய கண்ணீரோடு அங்கிருந்து வேகமாகத் திரும்பி நடந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 3

வந்திருந்த ஆட்களின் அழுகுரல்களும் ஒப்பாரிகளும் மெல்ல அதிகரிக்க, கோட்டைச்சாமியின் உடல் நெருப்புச் சுவாலைகளுக்குள் எரியத் தொடங்கியது. காத்திருந்த மழை சடாரெனப் பெய்யத் தொடங்க, ஆட்கள் மழையோடே திரும்பி நடந்தார்கள். கருப்புவும் அவன் ஆட்களும் மயானத்திலேயே நின்றிருக்க, முக்கியமான ஆட்கள் மட்டும் தனித்தனியாக கருப்புவிடம் பேசிவிட்டுச் சென்றனர். என்னதான் அதிகாரப் போட்டியில் பல வருடப் பகைகள் இருந்தாலும், நல்லது கெட்டதுகளில் பெரிய தலைக்கட்டுகள் யாரும், யாரையும் விட்டுக்கொடுத்ததில்லை. பெரும்பாலானவர்கள் கிளம்பிய பின், கரிமேடு ராசு மாமா மட்டும் எதையோ சொல்லத் துடிப்பவராக நின்றுகொண்டிருந்தார். அவர் மனத் தயக்கத்தைப் புரிந்துகொண்டு, கருப்பு தன்னோடு நின்றிருந்த எல்லோரையும் விலகிப்போகச் சொன்னான். ராசு தயக்கம் விலகியவராக “மாப்ள, இது இன்னிக்கி நேத்து யோசிச்சு செஞ்ச வேலையாத் தெரியல. யாரோ நம்மள நல்லாத் தெரிஞ்சவன்தான் செஞ்சிருக்கான். கோட்டையோட உடம்பு இருந்தது எந்த இடத்துல?” எனக் கேட்க, கருப்பு யோசனையுடன் “தெக்குவாசல் பழைய மேம்பாலத்துக்குப் பக்கத்துல மாமா...” என்றான். “அது என்ன இடம்னு யாவகம் இருக்கா? கோட்ட செஞ்ச மொத சம்பவம் அதே இடத்துலதான். பத்து வருஷத்துக்கு முன்ன ஆண்டிச்சாமிய எப்டி உங்கண்ணன் செஞ்சானோ அதே மாதிரி செஞ்சிருக்காய்ங்க. செஞ்சது ஆண்டிச்சாமி வகையறாவான்னு தெரியாது. ஆனா, ஆண்டிச்சாமி கொலைய நல்லாத் தெரிஞ்ச எவனோதான் செஞ்சிருக்கணும். எல்லாமே அச்சு மாறாம அதே மாதிரி நடந்திருக்கு” என்று ராசு மாமா சொன்னபோதுதான் கருப்புவுக்கும் உறைத்தது. இந்தக் கொலை புதிய பகைக்கான தொடக்கமல்ல, நீண்டகாலமாக எரிந்துகொண்டிருப்பதன் தொடர்ச்சி. சடாரென நிறைய பேரின்மீது அவனுக்குச் சந்தேகம் குவிந்தது. கோட்டைச்சாமி சக்கரவர்த்தியாகத் தன் சாம்ராஜ்யத்தை விரித்துக்கொள்ளத் தொடங்கியிருந்த இந்தச் சில வருடங்களில், நேரடியாகவும் மறைமுகமாகவும் அவனைப் பகைத்துக்கொண்டவர்கள் ஏராளம். இந்தக் கத்திக்குப் பின்னாலிருக்கும் கைகள் எவருடையதென உறுதிபடாமல் இருக்கலாம், ஆனால் அது கோட்டைச்சாமியின் தலையோடு ஓயப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism