Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 33

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

எலேய் செல்வம், உனக்கு அந்தப் பிள்ளமேல கண்ணு. ஆனா அவ அண்ணேன்னு கூப்ட்டதால நீ எதும் பேசாம கொள்ளாம விட்ருக்க

ரெண்டாம் ஆட்டம்! - 33

எலேய் செல்வம், உனக்கு அந்தப் பிள்ளமேல கண்ணு. ஆனா அவ அண்ணேன்னு கூப்ட்டதால நீ எதும் பேசாம கொள்ளாம விட்ருக்க

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஒருவனைச் சுற்றிப் பகை வளரும்போது, மரணமும் சமீபிக்கத் தொடங்கிவிடுகிறது. யாராலும் வெல்ல முடியாதவனாகத் தன்னை நினைத்த கோட்டைச்சாமி, மரணத்தோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான். அதிகாரத்தின் மீதிருந்த பேராசை நண்பர்களையும், முன்பின் தெரியாதவர்களையும் பகைவர்களாக மாற்றியிருந்தது.

எளிதில் தப்பிச் செல்ல முடியாத வலைக்குள் அகப்பட்டுக்கொண்டதைத் தெரிந்துகொண்ட ஜெகதி, இந்த வலையிலிருந்து தன்னை மீட்க ஒருவரும் வரப்போவதில்லை என்பதைப் புரிந்துகொண்டாள். அவளையும், அவளது அடையாளங்களையும் இந்த வலை கண்மூடித் திறக்கும் முன்பாக அழித்துவிடும் என்கிற யதார்த்தம், கோட்டைச்சாமியின் மீதான பகையையும் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சூழ்ச்சியையும் அவளுக்குள் வளர்த்தது. வெயிலுக்கும் மழைக்கும் காட்டாமல் காத்துவந்த தன்னுடலை மிதமிஞ்சிய குடிவெறியில் கோட்டைச்சாமி ஆக்கிரமித்து உறவுகொண்ட போது, அவளால் நாற்றத்தைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. தோல்களிலும் நாசியிலும் அந்த நாற்றம் பெருகி வழிந்து அவளை இம்சித்தது. ஒரே நாளில் அழுகிப் புழுத்துப் போனதாகத் தன்னுடலை உணர்ந்தவள், தன்னைத் தானே தண்டித்துக்கொண்டாள். கோட்டைச்சாமி தன் மனைவி மக்களையெல்லாம் மறந்து ஜெகதியே கதியெனக் கிடந்தான். உணவு, உடலுறவு, உறக்கம் என அவளுக்குள்ளேயே பிணைந்துகிடந்த கோட்டைச்சாமியை செல்வம் கூட்டாளிகளோடு வந்து அழைத்தபோது ‘ரெண்டு வாரத்துக்கு யாரும் இந்தப் பக்கம் வராதீங்க’ என்று துரத்திவிட்டான். கோட்டைச்சாமியைச் சந்திக்கச் சென்ற அந்தச் சில நிமிட இடைவெளியில் செல்வம் ஜெகதியைப் பார்த்தான். முகம் வாடி, உடல் வதங்கி, கண்களைச் சுற்றிக் கருவளையம் விழுந்து யாரோபோல் மாறிப்போயிருந்தவளைப் பார்க்கச் சகிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ரெண்டாம் ஆட்டம்! - 33

“அண்ணேன்னு உதவி கேட்டு வந்த பிள்ளைய இப்பிடி செதச்சி வெச்சிருக்காப்ளயேடா..?”

ஓய்வில்லாமல் குடித்து, கண்களில் வெறியேறிப்போயிருந்த செல்வம், சோணையிடம் அனத்திக் கொண்டிருந்தான். “எலேய், நீ எதுக்குக் கெடந்து தவதாயப்படற? பணம் காசு வந்துருச்சு, அதிகாரம் வந்துருச்சு. ஆச எப்பிடிடா வராம இருக்கும்? இத்தன வருசம் இல்லாம ஒரு பொம்பளகிட்ட விழுந்திருக்காப்ள… விடு, கொஞ்சம் நா போனா எல்லாம் சரியாப்போகும்.”

“ஒக்காலி ஊர்ல வேற பொம்பளையே இல்லியா? எதுக்குடா அந்தப் பிள்ளையப் புடிச்சு இழுத்தான்...”

சோணை சிரித்தான். குடித்துக்கொண்டிருந்த செல்வம் திரும்பி அவனை முறைக்க “எலேய் செல்வம், உனக்கு அந்தப் பிள்ளமேல கண்ணு. ஆனா அவ அண்ணேன்னு கூப்ட்டதால நீ எதும் பேசாம கொள்ளாம விட்ருக்க. கேப்ல கோட்ட முந்திக்கிட்டாப்ள. அதான உன் பிரச்சன?”

செல்வத்துக்கு சப்தநாடியும் அடங்கிப்போனது. அந்த உண்மை தனது முகத்தில் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதை என்ன முயன்றும் அவனால் தடுத்திருக்க முடியவில்லை. குடிப்பதை நிறுத்திவிட்டு வேகவேகமாக எழுந்து போனவனை சோணை பிடித்து நிறுத்தினான்.

“செல்வம், நம்ம நோக்கம் வேறடா… அந்தப் பிள்ள விதி... மாட்டிக்கிட்டா. தெறம இருந்தா தப்பிச்சு வரட்டும். நீ அவசரப்பட்டு உள்ள புகுந்து ஒலட்டி வுட்றாத.”

சோணையின் வார்த்தைகள் எதுவும் செல்வத்தின் புத்தியை எட்டவில்லை. அவளைக் குறித்த சிந்தனைகளைத் துண்டித்துக்கொள்ள நினைத்து, தோற்றுப்போனான்.

வீடு எப்போதும்போல் இருட்டடைந்து கிடந்தது. விவரம் தெரிந்த வயதிலிருந்து வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்த வீட்டையும், தன் அப்பனையும், அண்ணனையும் செல்வம் வெறுத்தான். வாசலைத் தாண்டி வீட்டுக்குள் செல்ல விரும்பாமல், திண்ணையில் படுத்துக் கிடந்தவனை “எலேய் எருமமாடு, பொழுதுசாயறதுக்கு முன்னயே எங்க போயி தண்ணியப் போட்டுட்டு வந்திருக்க?” அம்மா தட்டி எழுப்பினாள். அவன் அசையவே இல்லை. “கஞ்சி கிஞ்சி குடிச்சியாடா?”

“ந்தா... பேசாம போ. கஞ்சி வேணும்னா கேக்கறேன்.”

“அப்பென் மகன் எல்லாரும் ஒரே மாதிரிதான் இருக்காய்ங்க. கிறுக்குத் தாயோலிங்க” திட்டிவிட்டு அம்மா வீட்டுக்குள் சென்றுவிட்டாள். செல்வம் அசதியில் கண்ணயர்ந்து விட்டான்.

விழித்தபோது அப்பாவும் சேகரும் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. எழுந்து உட்கார முயன்றவனுக்குத் தலை வலித்தது. சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தபோது, கடும் தாகத்தில் தொண்டை வறண் டவனாகத் தண்ணீர் சொம்பைத் தேடி எடுத்தான். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காத தாகம் உடலை வதைத்துக்கொண்டிருக்க, வீட்டுக்குள் எட்டிப் பார்த்தான். அப்பாவும் சேகரும் அரை போதையில் கால்நீட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். “சல்லித் தாயோலிங்க, எவனையாச்சும் ஆட்டையப் போட்டுட்டு வந்துர்றாய்ங்க” என்றபடி எழுந்து வெளியேற நினைத்தான். உடல் களைத்திருந்ததால் அசைய மறுத்தது. சத்தம் கேட்டு வாசலைப் பார்த்த முத்தையா “செல்வம் உங்கிட்ட பேசணும்… இங்க வா” சத்தம் போட்டுக் கூப்பிட்டார். அசைய முடியாமல் சுவரில் சாய்ந்து கிடந்த செல்வம் பதிலெதுவும் சொல்லவில்லை. முத்தையா சேகரைப் பார்க்க, கையிலிருந்த மீன் துண்டைக் கீழே வைத்துவிட்டு சேகர் எழுந்து சென்றான். செல்வத்தைத் தோளோடு அணைத்துக்கொண்டு வீட்டுக்குள் அழைத்துவந்தான். ஈரத் துண்டால் முத்தையா செல்வத்தின் முகத்தைத் துடைத்துவிட்டு, நறுக்கிவைத்த எலுமிச்சைப்பழங்களை அவன் வாயில் பிழிந்துவிட்டார். புளிப்புச் சுவை நரம்புகளில் கலந்து சடாரென நினைவுகள் மீண்டபோது செல்வம் வேகமாக உடலைச் சிலுப்பிக்கொண்டான். “என்னடா செய்றீங்க ரெண்டு பேரும்?” தன்னை அவர்களிடமிருந்து விலக்கிக்கொண்டு நின்றபோது, சுரீரென புலன்கள் விழித்துக்கொண்டன.

ரெண்டாம் ஆட்டம்! - 33

“இந்தா தண்ணியக் குடி.” முத்தையா நீட்டிய சொம்பை வாங்கிய செல்வம், கடைசி மிடறுவரைக் குடித்துவிட்டு உட்கார்ந்தான். ஒரு எவர்சில்வர் கிளாஸில் தனக்கும் கொஞ்சம் மதுவை ஊற்றிக்கொண்டு தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்தான்.

“கோட்டச்சாமிகூட எதும் பிரச்னையா?”

“அப்டில்லாம் ஒண்ணும் இல்லியே?”

“பொய் சொல்லாத. போதைல நீ ஒளறுனத மட்டும் அவென் கேட்ருந்தான்னா அப்பயே சங்கறுத்துருப்பான்.” செல்வம் சடாரென தலையைத் தூக்கி முத்தையாவைப் பார்த்தான்.

“என்ன ஒளறுனேன்?”

“அத விடு, பிரச்ன என்னன்னு சொல்லு?”

“எனக்கு அந்தாள்கூட இருக்கப் பிடிக்கல, தனியா வந்துரப் போறேன்.”

“தனியா வந்து என்ன செய்யப் போற?”

“நான் என்ன உங்க ரெண்டு பேரையும் மாதிரி அல்லக்கையா? எப்பிடிப் பொழைக்கணும்னு தெரியும்?”

“சரிடாப்பா. நீ தாட்டியக்கார மயிருதான, ஒரு நாளைக்கி தனியா தொழில் பண்ணிப் பாத்திருக்கியா?”

செல்வத்துக்குச் சொற்கள் இடறின. இத்தனை நாள்கள் அதைப் பற்றியெல்லாம் யோசித்ததுகூட இல்லை. அதற்கான அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை.

“டேய் செல்வம், மதுரைல மூணு தலமொற சண்டியருங்களப் பாத்துட்டேன். நான்லாம் பெரிய மயிருடான்னு நெஞ்ச நிமித்திட்டு சுத்திட்டு இருந்த பேருவாதிப் பேரு முப்பது வயசுகூட வாழத் துப்பில்லாம ஓலப்பாயிலதான் போனாய்ங்க. மொத மொத மார்க்கெட் பிரச்னைல காளி, சோமுவ எதித்து நின்னான். யார்றா இவென் புதுசான்னு ஊரே பாத்துச்சு. காளி உடனே தலகீழா ஆடல. நின்னு நிதானமா எல்லாரையும் தன்னோட தேவைக்குப் பயன்படுத்திக்கிட்டான். காளியும் சோமுவும் மொதல்ல மூர்த்திக்காக வேல செஞ்சாய்ங்க. அப்பறம் காளி, மூர்த்திய மிஞ்சி வளந்து நின்னான். அதுக்கு அப்றம் அவய்ங்களுக்காக நிறைய பேர் வேல செஞ்சாய்ங்க. வெட்டு, குத்துன்னு அலைஞ்சாய்ங்க. கீழ இருந்தவய்ங்கதான் இப்பிடி வெட்டிக்கிட்டு செத்தாய்ங்களே ஒழிய, காளியோ, மூர்த்தியோ சாகல.”

செல்வத்துக்கு முத்தையா சொன்னது பாதி புரிந்து மீதிப் புரியாமலிருந்தது.

“என்ன சொல்ல வர்ற இப்ப?”

“வீரம் முக்கியந்தாண்டா… அதவிட தந்திரமா இருக்கறதும் முக்கியம். கோட்டைக்கி பலமே நீதான். அது தெரிஞ்சதாலதான் உன்னய எப்பவும் கூடயே வெச்சிருக்கான். அவென் எடத்தப் பிடிக்கணும்னு நெனைக்காத. அவனையும் தாண்டிப் போகணும்னு நென. காளி அதத்தான் செஞ்சான்”

“எனக்குப் புரியல…”

முத்தையா அவன் டம்ளரை எடுத்துக் கொடுத்து, குடிக்கச் சொன்னார். அவன் ஒரு மிடறு மதுவைக் குடித்துவிட்டு அவரைப் பார்க்க, “எல்லாருந்தான் வேட்டி கட்றாய்ங்க. ஆனா சில பேர் வேட்டிக்கு மட்டும் ஏன் மரியாத? வேட்டில இருக்கிற கரை. அந்தக் கரைதான் வேட்டியோட மதிப்பையும் அத கட்றவனோட மதிப்பையும் தீர்மானிக்கிது. நீ உனக்கான கரவேட்டிய இப்பவே முடிவு பண்ணிரு. அரசியல்தான் உன்னோட எதிர்காலமா இருக்கணும். கோட்ட, அவன் தேவைக்கு உன்னயப் பயன்படுத்திக்கிற மாதிரி நீ உன் தேவைக்கு அவனப் பயன்படுத்திக்க.”

செல்வத்துக்கு இப்போது சர்வமும் விளங்கியது. கோட்டையைப் பகைத்துக்கொண்டு விலகுவதால், நஷ்டம் தனக்குத்தான் என்பது உரைக்க, அவசரமாக டம்ளரிலிருந்த மிச்ச மதுவைக் குடித்தான். “நீ சொல்ல வர்றது எனக்குப் புரியுதுப்பா. இனிமே எச்சரிக்கையா இருக்கறேன்” அடுத்த சுற்று மதுவை ஊற்றியவனை நிறுத்திய முத்தையா “மத்தவய்ங்க ஈசியா என்னய ஊளப்பயன்னு சொல்லிரலாம். ஆனா நான் அப்பிடி இருந்தது என் உசுரக் காப்பாத்திக்கிறதுக் கான தந்திரம்னு ஒருத்தனுக்கும் புரியாது. மணி உசுரக் காப்பாத்தறதுக்காக முன்னாடி நின்னு, பதினேழு குத்து வாங்கினவனுக்குத் திருப்பிக் குத்தத் தெரியாம இல்லடா. வீரெங்கற பட்டத்தவிட தியாகிங்கற பட்டம் முக்கியம்னு அப்பவே முடிவு பண்ணேன். அதான் இப்போ வரைக்கும் ஊளப்பய மாதிரியே கெடக்கேன். நமக்கான நாள் வர்றப்போ இந்த மதுரைய நாம ஆளணும்டா செல்வம்…” முதல் முறையாக முத்தையாவின் கண்களில் தகித்த நெருப்புச் சுவாலைகளை செல்வம் கண்டுகொண்டான்.

(ஆட்டம் தொடரும்)