Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 34

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

எனக்காக ஏங்க்கா உன் வாழ்க்கைய இப்பிடி நாசமாக்கிக்கிட்ட? மிஞ்சிப்போனா நாலு வருசம் தண்டன கெடச்சிருக்கும். ஆனா இப்பப் பாரு

ரெண்டாம் ஆட்டம்! - 34

எனக்காக ஏங்க்கா உன் வாழ்க்கைய இப்பிடி நாசமாக்கிக்கிட்ட? மிஞ்சிப்போனா நாலு வருசம் தண்டன கெடச்சிருக்கும். ஆனா இப்பப் பாரு

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

வெறுப்பெனும் உணர்வு ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமானது. ஆண்களுக்கு பெண்களின்மீது உருவாகும் வெறுப்பைப்போல் நேரடியானதில்லை, பெண்களுக்கு ஆண்களின் மீது உருவாகும் வெறுப்பு. அரிதாகத்தான் பெண், ஒருவரின் மீதான வெறுப்பை மறந்து கடந்துபோகிறவளாக இருக்கிறாள். ஜெகதிக்கு கோட்டைச்சாமியின் மீதிருந்த வெறுப்பு சில நாள்களிலேயே பகையாகக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பதுங்கி வேட்டையாடும் மிருகம், தன்னையோ தனது நிழலையோ இரைக்கு அச்சமூட்டும் வகையில் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. நிழலைப்போல் தொடர்ந்து, தக்க சமயத்தில் இரையின் மீது பாய்வது அந்த மிருகங்களின் இயல்பு. தனக்கான தருணமென்பது அருகிலில்லை என்பது ஜெகதிக்குத் தெரிந்திருந்தாலும், கோட்டைச்சாமியின் மரணம் தன்னால் மட்டுமே நிகழ வேண்டும், நிகழுமென உறுதியாக இருந்தாள். எதிரிலிருக்கிறவர்களை மிக எளிதாக கணித்துவிடக்கூடிய வல்லமை கோட்டைச்சாமிக்கு உண்டு. கண்களில் தெரியும் சின்ன மாற்றம் போதும், ஒருவன் தன் மனதுக்குள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டுவிடுவான். அதனாலேயே ஜெகதி அவனை நேருக்கு நேராகச் சந்திப்பதைத் தவிர்த்தாள். ஜெகதியின் தம்பி சுரேஷ் விடுதலையானதிலிருந்து மதுரைக்கும் பாண்டியூருக்குமாகப் பயணித்துக்கொண்டிருந்தான். அவளை எப்படியாவது இதிலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்கிற தவிப்பு. அவளது இந்தநிலைக்கு தானே முழுக்காரணம் என்கிற குற்றவுணர்வில் ஒவ்வொரு நாளும் புழுங்குவான்.

ரெண்டாம் ஆட்டம்! - 34

“எனக்காக ஏங்க்கா உன் வாழ்க்கைய இப்பிடி நாசமாக்கிக்கிட்ட? மிஞ்சிப்போனா நாலு வருசம் தண்டன கெடச்சிருக்கும். ஆனா இப்பப் பாரு... வாழ்க்க முழுக்க இவங்கிட்ட நீ மாட்டிக்கிட்ட மாதிரி ஆகிடுச்சு.”

“சுரேசு, முடிஞ்சதப் பத்திப் பேசி இனிமே ஒண்ணும் ஆகப்போறதில்ல. நடக்கப்போறதப் பாப்போம். நீ மதுரைல இருக்கறது இனிமே நல்லதுக்கில்ல. ஊருக்கே போயிரு.”

“நான் போயிட்டா நீ தனியா எப்பிடிக்கா சமாளிப்ப?”

அவன் அக்கறையில் கேட்டிருந்தாலும், அந்தச் சொற்களால் அவள் காயப்பட்டுத்தான் போனாள். விழியினோரம் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டபோது, தனது இயலாமையை நினைத்து மனம் வலித்தது.

“பொட்டச்சிதானன்னு அவய்ங்கள மாதிரியே நீயும் லேசா நெனக்கிறியாடா?”

“ச்ச… ச்ச... என்னக்கா இப்பிடில்லாம் பேசற? நீ ஒத்தப் பொம்பளையா நின்னுதான நம்ம குடும்பத்தையே தாங்கின, தாங்கிட்டு இருக்க. பொழைக்க வழியில்லாம இருந்த எத்தனையோ குடும்பம் இன்னிக்கி உன்னால நல்ல கஞ்சி குடிக்கிதுக. உம்மேல மதிப்பும் மரியாதையும், அதவிட அன்பும் இருக்கதாலதாங்க்கா கேக்கறேன்.”

“யார் குடியவும் கெடுக்கணும்னு இதுவரைக்கும் நான் நெனச்சதில்லடா. ஆனா இவென் என் குடியக் கெடுத்துட்டான். அந்தத் தாயோலி பக்கத்துல வர்ற ஒவ்வொரு தடவையும் அவென் குடல உருவி மாலையாப் போட்டுக்கணும்னு வெறியேறுது. ஆனா அது அவ்வளவு லேசில்ல. வெறி, கோவம், பக எல்லாத்தையும் உள்ள பத்திரமாவெச்சிருக்கேன். ஒரு நாள் வரும். அன்னிக்கி அவன கருவறுத்துட்டுத்தாண்டா விடுவேன்.”

வேறு யாரையும்விட சுரேஷுக்கு அவளை நன்றாகத் தெரியுமென்பதால், தன்னைத் தானே அவளால் காத்துக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையோடு பாண்டியூருக்குக் கிளம்பிப்போனான்.

கோட்டைச்சாமி ஜெகதியின் நிழலை நாய்க்குட்டிபோல் சுற்றிக் கிடந்ததற்கு அவள் உடல் ஒரு காரணமென்றால், அவள் சமையல் இன்னொரு காரணம். இரண்டு தக்காளிகளையும் கொஞ்சம் புளியையும் தாளித்து வெறுமனே அவள் ரசம் வைத்தால்கூட ஜீவா நகர் முழுக்க மணக்கும். அப்படியொரு விநோத கைப்பக்குவம் அவளுக்கு. பசியும் காமமும் தீராதபடி அவனுக்குள் சுழன்றுகொண்டிருந்தன. ஜெகதி அவன் பார்வையைத் தவிர்ப்பதற்காகவே தன் சமையலில் இன்னும் சுவையைக் கூட்டினாள். ஆட்டிறைச்சியின் அத்தனை வகைகளையும் அவளைப்போல் சமைக்கிற ஒருவரை மதுரைக்குள் பார்ப்பது கடினம். அதிலும் அவள் சமைக்கும் மட்டன் சுக்காவுக்கு கோட்டை நாக்கை சப்புக்கொட்டிக் காத்திருப்பான். கோட்டைச் சாமியைப் பொறுத்தவரை நல்ல சமையலுக்கான முதல் தகுதி அதன் நறுமணம். பெண்களின் வியர்வை ஒருவனுக்கு எத்தனை கிளர்ச்சி தரக்கூடியதோ அதைவிடவும் நல்ல சமையலின் மணம் கிளர்ச்சி தரக்கூடியது. ஒருநாள் மதிய உணவை அவள் சமைத்துக்கொண்டிருக்கும் நறுமணம் வீடு முழுக்க நிரம்பியிருக்க, கோட்டைச்சாமிக்கு உடல் சிலிர்த்து முறுக்கேறியது. அதீத காமத்தின்போது நரம்புகளில் உருவாகும் எழுச்சிகளை உணர்ந்தவன், சமையலறையில் நிற்கும் அவளைப் பின்பக்கமாகச் சென்று அணைத்தான். அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே வேலை செய்துகொண்டிருந்தவள், “பட்ட பகல்ல உங்களுக்கு எப்பிடித்தான் மூட் வருதோ?” என்றாள்.

கோட்டைச்சாமி சிரித்தபடியே அவள் கழுத்தில் முத்தமிட்டு உடலெங்கும் கைகளை அலையவிட்டான். கொதிக்கும் அடிவயிற்றில் அவனது முரட்டு விரல்கள் அலைந்து மேலேறி, மாருக்கும் வயிற்றுக்குமிடையில் புரண்டுகொண்டிருக்க, மெல்ல அவன் கைகளை விலக்கியவள், “போங்க மொதல்ல” என முறைத்தாள். கோட்டைச்சாமி அவளை முன்னிலும் முரட்டுத்தனமாக அணைத்து உடலெங்கும் முத்தமிட முயல, பிடிவாதமாக அவனைத் தள்ளிவிட்டாள்.

“என்ன வேணும் இப்ப?”

“நல்லா பசிக்குதேன்னு சாப்பிடத்தான் வந்தேன். உன் சாப்பாடு, பசிய மட்டும் தூண்டல, எல்லாத்தையும் தூண்டுது.”

“ஆமா, மட்டன் குழம்புல ரெண்டு வயாக்ராவும் போட்ருக்கேன். நல்லா தூண்டும். போங்க இங்க இருந்து...” கோவமாகச் சொல்லிவிட்டு சமையலை கவனித்தாள். கோட்டைச்சாமி சிரித்தபடியே முன்னறையில் வந்து அமர்ந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 34

சமைத்து முடித்தவள், அவனுக்கு உணவு மேஜையில் உணவைப் பரிமாறியபோது, இத்தனை சீக்கிரம் இந்தச் சூழலோடு அவள் எப்படி தன்னைப் பொறுத்திக்கொண்டாள் என ஒருநொடி கோட்டைச்சாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது. தட்டில் வைத்த உணவை அள்ளி சாப்பிடத் தொடங்கியவனுக்கு ருசி நாவில் இறங்கியதும் மொத்த உலகமும் மறந்துபோனது.

“ஏத்தா... நானும் இம்புட்டு வருஷமா எத்தனையோ பேர் சமைச்சு சாப்பிட்டிருக்கேன். இம்புட்டு ருசிய அனுபவிச்சதில்ல. உன் சாப்பாடு மட்டும் பித்துப் புடிக்கவெக்கிது என்னய!”

“உங்களுக்கு என் சாப்பாட்டுல பித்து இல்ல. என்மேல பித்து. அதான் உப்பு ஒரப்பு எதையும் கொற சொல்லாம சாப்டுறீங்க…”

“சாமி சத்தியமா இம்புட்டு ருசியா நான் சாப்ட்டதே இல்ல. வேற எதுல வேணும்னாலும் நான் பொய் சொல்லுவேன், ஆனா சாப்பாட்டு விஷயத்துல பொய் சொல்லவே மாட்டேன்.”

“நான் நம்ப மாட்டேன்.”

சோற்றை மட்டன் சுக்காவோடு அள்ளிச் சாப்பிட்டுக்கொண்டிருந்த கோட்டைச்சாமி, பாதியிலேயே நிறுத்திவிட்டு, “சரி நாளைக்கி மதியத்துக்கு நம்ம பயகல கூட்டிட்டு வர்றேன். அவய்ங்களும் சாப்ட்டு சொன்னா நம்பறியா?” என்றான்.

ஜெகதியும் அதற்காகத்தான் காத்திருந்தவள் போல “சரி, கூட்டிட்டு வாங்க. அவங்க சொல்லட்டும் நம்பறேன்” எனக் குறும்பாகச் சிரித்தாள். எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்வதற்கு அவனோடு இருப்பவர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என யோசித்திருந்தாள். அதற்கான வாய்ப்பை கோட்டைச்சாமியே உருவாக்கிக் கொடுத்து விட்டதில் அவளுக்குப் பெரிய நிம்மதி.

செல்வம், கருப்பு, சோணை, முனுசு இவர்களோடு அடுத்த நாள் மதிய உணவுக்கு கோட்டைச்சாமி வந்தபோது, ஜெகதியின் வீடு உணவின் நறுமணத்தால் நிரம்பியிருந்தது. கோட்டைச்சாமியைப்போலவே அவன் தம்பி கருப்புவும் நல்ல சாப்பாட்டுப் பிரியன். பரபரப்போடு உணவு மேசைப் பக்கமாகச் சென்று, மூடிவைக்கப்பட்டிருந்த எல்லா உணவுகளையும் திறந்து பார்த்தான்.

“எண்ணே, இந்தக் கறி வாசனைக்கி வெறி ஏறுது. ஆளுக்கொரு கோட்டரச் சாத்தினம்னா இன்னும் நல்லாருக்கும்.”

“கேணப்பலே... குடிக்கிறத எப்ப வேணாலும் குடிக்கலாம்டா. மொதல்ல நீ அவ சமையல சாப்ட்டுப் பாரு.” எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டு, ஜெகதி பரிமாறத் தொடங்கினாள். ஒரு கண் பரிமாறுவதிலிருந்தாலும், இன்னொரு கண் அவர்களை எடைபோட்டுக் கொண்டிருந்தது. அந்தரங்கமான எல்லாக் காரியங்களுக்கும் கோட்டை இவர்களை மட்டுமே நம்புவான் என்பதை அவர்களிடம் அவன் காட்டிய நெருக்கத்திலிருந்து புரிந்துகொண்டாள். மற்றவர்களெல்லாம் இதற்கு முன்பு சோற்றையே பார்க்காதவர்கள்போலச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, செல்வம் மட்டும் நிதானமாக அவளையும் கவனித்தபடி சாப்பிட்டான். அவள் அவனுக்குப் பரிமாற வந்த நொடியில், இருவரின் கண்களும் நேருக்கு நேராகச் சந்தித்துக்கொள்ள அவன் பார்வையிலிருந்த உணர்ச்சிகளை ஜெகதி புரிந்துகொண்டாள். தன் மீதான இச்சையைவிடவும், கோட்டைச்சாமியின் மீதான வெறுப்பு அந்தக் கண்களில் அதிகமிருந்தது. இவன்தான் இனி தனக்கான ஆள் என்பதை அப்போதே தீர்மானித்துவிட்டவள் இன்னும் ஆழமாக அவனது கண்களை ஊடுருவிப் பார்த்தாள். செல்வம் சடாரெனப் பார்வையை விலக்கிக்கொள்ள, ஜெகதி சிரித்தபடியே உணவைப் பரிமாறினாள்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism