அரசியல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 35

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

கிருஷ்ணவேணியின் கொலையில் மொத்த மதுரையும் அதிர்ந்துபோயிருந்தது.

“Blood will have blood”– Macbeth

கிருஷ்ணவேணியின் கொலையில் மொத்த மதுரையும் அதிர்ந்துபோயிருந்தது. வெட்டப்பட்ட வேணியின் தலையை அடையாளம் தெரியாதபடிக்குச் சிதைத்த மருது, அதை வைகை ஆற்றுக்குள் எறிந்தபோது, வெறும் சதைத் துணுக்குகளாகவே தெறித்துவிழுந்தன. வெறுப்பிலும் பகையிலும் ஊறிப்போன ஒருவனால்கூட செய்ய முடியாததை மருது செய்திருந்தான். மற்றவர்களைக் கொலை செய்துவிட்டுத் தப்பித்ததைப்போல இந்தமுறை அவன் தப்பிக்கவில்லை. உடலெங்கும் படிந்திருந்த ரத்தக்கறை உலர்வதற்கு முன்பாகவே காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டான்.

அனுப்பானடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் அவன் நுழைந்தபோதே பதற்றம் தொற்றிக்கொண்டது. உடலில் ரத்தமும், கண்களின் குரோதமும் நிரம்பிய மருதுவைப் பார்த்ததும், பாராவுக்கு நின்றிருந்த கான்ஸ்டபிள் அவசரமாக உள்ளே ஓடிப்போய் ஹெட் கான்ஸ்டபிளை அழைத்துவந்தார். “ஏய்... இவென் அந்த மருதுய்யா. மணி மர்டருக்காகப் பழிவாங்கிட்டு இருக்கானே... மதுரைல இருக்க எல்லா ஸ்டேஷன்லயும் இவனத்தான் தேடிக்கிட்டு இருக்காய்ங்க. இப்ப யார் தாலிய அறுத்துட்டு வந்து நிக்கிறான்னு தெரியலையே..?” கான்ஸ்டபிளுக்கு உதறலெடுத்தது. இரண்டு பேருக்கும் அவனை நெருங்கிச் செல்ல அச்சமாயிருந்ததால் விலகியே நின்றனர். மருது நிதானமாக நடந்துவந்து கையிலிருந்த சூரிக்கத்தியை அவர்களிடம் கொடுத்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 35

“மூர்த்தி மக, அந்த தேவ்டியா முண்ட வேணிய அறுத்துப் போட்டுட்டு வர்றேன்” மென்மையான குரலில் சொன்னவன், “ரொம்ப பசியா இருக்கு ஏட்டய்யா... ஒரு டீ வாங்கித் தர்றீங்களா?” அப்பாவியாகக் கேட்டான். இரண்டு போலீஸ்காரர்களுக்கும் வெலவெலத்துப் போனது. மருது, அவர்களைக் கடந்து ஸ்டேஷனுக்குள் சென்று ஓர் ஓரமாக சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அசதியில் கண்ணை மூடிக்கொண்டான். சோலை அழகுபுரம் முழுக்க சாவுக்களை ஏறிப்போயிருந்தது. கல்யாணத்துக்கு வந்த சனம், வீடு திரும்புவதற்கு முன்பாகவே இப்படியொரு படுபாதகச் செயல் நடந்ததில் சொந்தக்காரர்கள் எல்லோருமே இடிந்துபோயிருந்தார்கள். “பொட்டப்புள்ளய இப்பிடி நடுரோட்லவெச்சு கழுத்தறுத்துப் போட்ருக்கானேய்யா… இவனல்லாம் சும்மா விடலாமா?” வேணியின் அம்மா அரற்றலும் கதறலுமாக அழுதுகொண்டிருந்தாள். வைகை ஆற்றுக்குள் சதைத் துண்டுகளாகச் சிதறிக்கிடந்த வேணியின் தலையை எடுத்துவர விரும்பாத மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், அவளது உடலை மட்டும் போஸ்ட்மார்ட்டத்துக்கு எடுத்துச் சென்றார்கள். ஆஸ்பத்திரியில் திரண்டிருந்த மூர்த்தியின் கட்சி ஆட்களால் எந்த நேரத்திலும் ஒரு கலவரம் மூளலாம் எனும்படியான பதற்றம் நிலவிக்கொண்டிருந்தது.

மூர்த்தி, யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசியிருக்கவில்லை. மகளின் சிரிப்பு இன்னும் அவரது கண் முன்னால் நிறைந்திருக்கிறது. யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் திரிந்தாலும் எல்லோரிலும் அன்புகொண்ட அவள், இனி இல்லை என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாரிடமாவது பேசினால் அழுதுவிடுவோமோ என்கிற அச்சத்திலேயே தலைகுனிந்த நிலையிலேயே அமர்ந்திருந்தார். வேணியின் கணவன் மாரிலடித்துக்கொண்டு அழும் சத்தம் மட்டும் மருத்துவமனை முழுக்க எதிரொலித்துக்கொண்டிருந்தது. ‘மதுரைக்கிப் போக வேணாம்னு படிச்சுப் படிச்சுச் சொன்னன்லடி… என் பேச்சக் கேட்ருந்தா இப்டி ஆகியிருக்குமா? ஐயோ… வேணி… இனி நான் என்னடி ஆவேன்? என் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுட்டு போயிட்டியேடி...” ஆறுதல் சொல்ல நெருங்கி வந்தவர்களையெல்லாம் விலக்கித் தள்ளிவிட்டான்.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து வேணியின் உடல் வந்தபோது, அவளை சோலை அழகுபுரத்துக்கு எடுத்துச் செல்வதா அல்லது மேலூருக்கு எடுத்துச் செல்வதா எனச் சின்னதொரு சலசலப்பு எழ, “என் மகென் சிங்கப்பூர்லருந்து வர்ற வரைக்கும் என் வீட்லதான்வெக்கணும்” என மூர்த்தி பிடிவாதமாகச் சொன்னார். அருகிலிருந்த உறவுக்காரர் ஒருவர், “மாமா என்ன பேசறீக... அவென் வர்றதுக்கு ரெண்டு நாளாகும். அதுவரைக்கும் எப்பிடிவெச்சுட்டு இருக்கறது? எம்புட்டுச் சீக்கிரம் முடியுமோ அம்புட்டுச் சீக்கிரம் ஆக வேண்டிய காரியத்தப் பாப்போம் மாமா...” எனப் பட்டும்படாமல் சொன்னார். சுற்றியிருந்த எல்லோருக்குமே அதுதான் சரி எனப்பட்டது.

அனுப்பானடி காவல் நிலையத்தில் சரண்டரான மருதுவை ஸ்டேஷனில் வைத்திருப்பது பாதுகாப்பில்லை என அச்சப்பட்ட இன்ஸ்பெக்டர், உடனடியாக கமிஷனரிடம் பேசி அவனை கமிஷனர் ஆபீஸுக்குத் தகுந்த பாதுகாப்போடு அனுப்பிவைத்தார். ஞாயிற்றுக்கிழமை, நீதிமன்றம் விடுமுறை என்பதால் போலீஸ்காரர்கள் கமிஷனர் அலுவலகத்திலிருந்து நேரடியாக நீதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். மருதுவின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட நீதிபதி, “நீங்க கையோட இவன திருச்சி சென்ட்ரல் ஜெயிலுக்குக் கொண்டுபோயிருங்க” என உத்தரவிட்டார். கிருஷ்ணவேணியின் உடல் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்ற அதேநேரத்தில், மருது திருச்சி மத்தியச் சிறைச்சாலை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருந்தான்.

வேணியின் கொலை, மூர்த்தியின் குடும்பத்தை மட்டுமல்லாமல் சோலை அழகுபுரத்தில் அவளைத் தெரிந்த எல்லோருக்கும் மருதுவின் மீதான பகையை உருவாக்கிவிட்டிருந்தது. “வெரல் தண்டிப்பய, வம்மவெச்சு சாதிச்சிட்டானேய்யா” என ஒவ்வொருவரும் மனம் குமுறிப்போயிருந்தனர். வீட்டிலிருந்து கிளம்பிய அவளின் இறுதி ஊர்வலம், மயானக்கரையை நெருங்கும் முன்பாகவே வன்முறையாக மாறத் தொடங்கிவிட்டது. நெஞ்சுக்குள் புதைந்துகிடந்த ஆத்திரத்தை என்ன செய்வதெனத் தெரியாத மக்கள், சாலையில் திறந்திருந்த கடைகளையெல்லாம் அடித்து உடைக்கத் தொடங்கினார்கள். ‘வாழக்குருத்து மாதிரி இருந்த புள்ளய கொன்னுவுட்டாய்ங்க. தாயோலி... நீங்க கொஞ்சம்கூட ஈரமில்லாம கடையத் தொறந்துவெச்சிருக்கீங்க. மூடுங்கடா...” எனச் சொல்லியே கடைகள் உடைக்கப்பட்டன. காவல்துறையினர் பாதுகாப்புக்குக் கூட்டத்தோடு வந்தபோதும் நடந்த வன்முறைகளை ஒருவரும் தடுத்து நிறுத்தவில்லை. “ஏய்... ஒரு நாளைக்கி கடையச் சாத்துங்கப்பா” எனக் கடைக்காரர்களிடம் கடுமையாகச் சொன்னார்கள். ஒவ்வொரு தெருமுக்கிலும் வேணியைச் சுமந்த தேர், நின்று கடக்க நீண்ட நேரமானது. ஒப்பாரிப் பாடலும், பின்னால் வந்த பெண்களின் அழுகுரலும் வீடுகளில் இருந்தவர்களுக்குள் அச்சத்தையும் வருத்தத்தையும் ஒருசேரக் கிளப்பிவிட்டன. பிணம் தூக்கிவந்த வீதிகளை உதிர்ந்துகிடந்த மலர்களின் காட்டமான வாடை ஆக்கிரமித்திருக்க, வீட்டு வாசல்களில் எல்லோரும் தண்ணீர் ஊற்றிவிட்டிருந்தனர். ஊர்வலம் இறுதியாக மயானத்துக்கு வந்தபோது நன்கு இருட்டிவிட்டிருந்தது. அழத் தெம்பில்லாமல் நின்றுகொண்டிருந்த வேணியின் கணவனை மொட்டை அடிக்க இரண்டு பேர் அழைத்துச் சென்றனர். மயானக்கூரையை ஒட்டி நின்றிருந்த மூர்த்தியிடம் ஒருவன் நெருங்கிவந்து, ‘அந்தப் பயல திருச்சி ஜெயிலுக்குக் கூட்டிப் போறாய்ங்க…’ எனச் சொல்ல, உள்ளே எழுந்த ரெளத்திரத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் “போகட்டும்யா... விசாரணைக்கி இங்கதான வரணும், வரட்டும்...” எனக் கறுவினார் மூர்த்தி.

ரெண்டாம் ஆட்டம்! - 35

இரண்டு நாள்களுக்குப் பிறகு, அறிவு சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்தபோது அந்த வீட்டில் நிரந்தரமாகச் சாவுக்களை படிந்துபோயிருந்தது. ‘‘எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்னு சொல்லி இப்ப என் அக்காவ சாகக் குடுத்திட்டீங்களேய்யா… இதுக்கு அப்றமும் நீங்கல்லாம் இந்த உசுரவெச்சுக்கிட்டு வாழணுமா... வெக்கமா இல்ல... என்னய்யா அப்பென் நீயி?” - அறிவு, மூர்த்தியை நோக்கிக் கேட்ட வார்த்தைகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து கிடந்தார். அக்காவின் மீது அவனுக்கு இருந்த அபரிமிதமான அன்பை ஊரறியும். அவன் துக்கத்துக்கு ஆறுதல் சொல்லத் திராணியின்றி அவன் தன்னைத் தானே தேற்றிக்கொள்ளட்டும் என விட்டுவிட்டனர். தெருவில் இறங்கி நடக்கும்போதெல்லாம் ஊர்க்காரர்களின் கண்கள் தன்னை ஏளனமாகப் பார்ப்பதுபோலிருந்ததால், மூர்த்தி வீடடைந்து கிடந்தார். துஷ்டி விசாரிக்க வந்த எல்லோரையும் மூர்த்தியின் மனைவி மட்டுமே சந்தித்துப் பேசி அனுப்பிக்கொண்டிருக்க, தந்தை ஓர் அறையிலும், மகன் ஓர் அறையிலுமாக வெளியேறாமல் முடங்கிக்கிடந்தனர்.

இருபது நாள்கள் கடந்திருக்கும்... வேணியின் கொலையை ஊர் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கத் தொடங்கியிருந்தது. மருது, நீதிமன்ற விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துவரப்பட்டிருந்தான். முதல் வழக்காக எடுத்து விசாரித்துவிட்டு, கையோடு அவனை திருச்சிக்கு அனுப்ப நீதிபதி முடிவுசெய்திருந்தார். மருது நீதிமன்றத்துக்கு வரும் செய்தி, வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறையினர் மிகுந்த கவனமாயிருந்தனர். அவனை விசாரிக்கப்போகும் நீதிமன்ற அறையைச் சுற்றி மட்டும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9:30 மணி சுமாருக்கு நீதிமன்றத்துக்குள் நுழைந்த போலீஸ், வேனிலிருந்து மருதுவை அழைத்து வந்தனர். மருது நிதானமாயிருந்தான். நடையில் தளர்ச்சியோ, அச்சமோ இருந்திருக்கவில்லை. “ஏய் என்னடா தவக்கற... வெரசா நடறா?” என போலீஸ்காரர்கள் சொன்னபோது, “சார்... எதுக்கு பயந்து சாகறீங்க?” எனச் சிரித்தான். வளாகத்துக்குள் பிரதான வழியைக் கடந்து முதல் மாடியை நோக்கிச் சென்றபோது, இன்னொரு பக்கத்திலிருந்து திமுதிமுவென ஓடிவந்த ஆட்கள், காவல்துறையினரைத் தள்ளிவிட்டு மருதுவை வெட்டத் தொடங்கினார்கள். போலீஸ்காரர்கள் முடிந்தவரை அவனைக் காப்பாற்றிவிடப் போராட, கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டிருந்ததால் மருதுவும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டான். கழுத்திலும் முதுகிலுமாக வெட்டுகள் விழுந்தன. சில நொடிகளிலேயே அந்தத் தளம் முழுக்க ரத்தக்காடாய்ப்போக, மருது சரிந்து விழுந்தான். கீழ்த்தளத்திலும் வாசலிலும் நின்றிருந்த போலீஸ்காரர்கள் விரைந்து ஓடிவந்ததால், வெட்ட வந்தவர்கள் தப்பிப்பதற்கான வழியைப் பார்த்தார்கள். இன்னும் மயக்கமடையாத மருது, சத்தமாக அவர்களை நோக்கிக் கத்தினான் “டேய் ஒக்காலி... நீங்க யாரு எவருன்னு தெரியாது, என்னய இங்கயே இப்பயே கொன்ருங்க. இல்லயின்னா ஒவ்வொருத்தனா தேடிவந்து கழுத்தறுப்பேன்” தப்பித்து ஓடியவர்களில் ஒருவன் நின்று திரும்பிப் பார்க்க, அவனோடிருந்தவன் ‘`மொதல்ல இவென் பொழைக்கட்டும். அப்பறம் தேடி வர்றதப் பாப்போம்’’ எனப் பிடித்து இழுத்துச் சென்றான்.

(ஆட்டம் தொடரும்)