Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 36

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

மற்றவர்கள் அவனிடம் பார்த்த அகந்தையை, அதிகார போதையை, தான் தேர்ந்தெடுக்கும் மனிதர்களிடம் முடிந்தவரை வெளிப்படுத்தி விடாமல் தவிர்த்தான்.

அதிகாரத்தின் நிழல் தரும் அபரிமிதமான ஆடம்பரத்துக்கும் சுகத்துக்கும் காளி தன்னை எப்போதோ ஒப்புக்கொடுத்திருந்தான். அதனாலேயே அவற்றையெல்லாம் தக்கவைத்துக்கொள்ள எத்தனை பெரிய யுத்தத்துக்கும் தயாராக இருந்தான். ஒருபுறம் மதுரையைத் தன் காலுக்குக் கீழ்வைத்து ஆள வேண்டும் என்கிற தீராத வேட்கை இருந்தபோதும், இன்னொருபுறம் தனக்கான நண்பர்களையெல்லாம் இழந்துவிட்டோமோ என்கிற ஏக்கமும் அவனை அலைக்கழித்தபடிதான் இருந்தது. வியர்வையின் அருமையையும், ரத்தத்தின் மதிப்பையும் உணர்ந்தவன் என்பதால், தன்னைப்போலவே தெருவிலிருந்து வானம் நோக்கிப் பறக்க விரும்பும் மனிதர்களைத் தேடித் தேடி தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

மற்றவர்கள் அவனிடம் பார்த்த அகந்தையை, அதிகார போதையை, தான் தேர்ந்தெடுக்கும் மனிதர்களிடம் முடிந்தவரை வெளிப்படுத்தி விடாமல் தவிர்த்தான். தன்னைச் சுற்றி ஆரோக்கியமான வனத்தை உருவாக்க வேண்டுமென்றால் செழிப்பான மண் மட்டும் போதாது; உறுதியுள்ள மரங்களுக்கான விதைகளும் அவசியம் என்பதுதான் அவன் எண்ணம். அப்படித் தேடிச் சேர்த்த முதல் விதை முத்தையா, இரண்டாவது விதை மருது. இன்னும் பத்துப் பதினைந்து கொலைகள் செய்திருந்தாலும் போலீஸில் அகப்பட்டுக்கொள்ளாமல் மருதுவைக் காப்பாற்றும் திராணி காளிக்கு உண்டு. அவசரப்பட்டு அவன் சரணடைந்தபோதுதான் ‘அவன் இவ்வளவு நாளும் தனக்குக் கட்டுப்பட்டெல்லாம் இருக்கவில்லை’ என்கிற யதார்த்தம் காளிக்குப் புரிந்தது. மனதை அரித்துக்கொண்டிருந்த எல்லாவற்றையும் முத்தையாவிடம் கொட்டித் தீர்த்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 36

“அவனுக்கு அப்பிடி என்னடா அவசரம்? நம்மளை எல்லாம் குண்டியத் தொடைக்கிற குச்சியாட்டம் நெனச்சு தூக்கி எறிஞ்சுட்டுப் போயி போலீஸுகிட்ட சரண்டராகிட்டான்...”

“எண்ணே, அவன என்னயவிட உனக்குத்தான் நல்லாத் தெரியும். மண்டக்கோளாறு பிடிச்சவண்ணே... எப்ப என்ன செய்வான்னு யாருக்கும் தெரியாது. ஏதோ ஒரு முடிவோடதான் வேணியக் கொண்டதும் போயி சரண்டராகியிருக்கான்.”

முத்தையா சொன்னதும் உண்மைதான். மருது மற்றவர்களைப்போல் இல்லை. மணிக்கும் மருதுவுக்கும் இருக்கும் பொதுவான அம்சம், இருவரும் மண்டைக்கோளாறு பிடித்தவர்கள். யாரையாவது நேசித்தால், மனதின் அடியாழத்திலிருந்து நேசிப்பதும், வெறுக்க நேர்ந்தால் முழுமுற்றாக வெறுப்பதுமாக இருப்பார்கள். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் மனிதர்களில்லை அவர்கள்.

எல்லோரும் ஒன்றாக இருந்த காலகட்டம் அது. சாராயக்கடைகள் தொடங்கப்பட்டு காசு பணம் செழிக்கத் தொடங்கியபோது, ஊருக்குள் ஆங்காங்கே வட்டிக்குக் கொடுத்து வாங்கும் ஆட்கள் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கிவிட்டார்கள். வட்டிக்குக் கொடுத்து வந்த காசில், திருட்டுத்தனமாகத் தெருமுக்கில் சாராயம் விற்கத் தொடங்கினார்கள். நான்கு வீதிகள் சந்திக்கும் இடங்களிலெல்லாம் லுங்கி பனியனோடு திருட்டுச் சாராயம் விற்கும் ஒருவன் முளைக்கத் தொடங்கியபோது, காளியின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மணியை வைத்து விசாரித்தபோது, கோரிப்பாளையும் தொடங்கி செல்லூர் தபால்தந்தி நகர் ஏரியாக்களிலெல்லாம் இந்த வியாபாரத்தைத் திருட்டுத்தனமாகச் செய்துகொண்டிருந்தவனின் பெயர் ராமலிங்கம் என்பது தெரியவந்தது.

“யார்றா இவெய்ங்கல்லாம்... நம்ம ஏரியால நம்ம கடைக்கிப் பக்கத்துலயே திருட்டுச் சரக்கு விக்கிற அளவுக்கு இவய்ங்களுக்கு எங்கருந்து துணிச்சல் வந்துச்சு?” என காளியே தன் ஆட்களிடம் ஆச்சர்யமாகக் கேட்டான்.

“எல்லாம் வட்டிக்குவிட்ட காசு கைல இருக்குற கொழுப்பு. கூப்ட்டுவெச்சு ரெண்டு கைலயும் சொட்டைய எறக்கிவிட்டம்னா பொச்ச மூடிக்கிட்டு இருப்பாய்ங்க.” மணி சொன்னதற்காக ஆள்விட்டு ராமலிங்கத்தை வரச்சொல்லி அனுப்பினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 36

“நான் என்ன வெண்ணைக்கி வரணும்... அவனுக்குத் தேவையிண்டா என்னய வந்து பாக்கச் சொல்லு...” என ராமலிங்கம் பதிலுக்குக் கொஞ்சம் தெனாவெட்டாகவே சொல்லி அனுப்பிவிட்டான். முன்பே கொதித்துக் கிடந்த காளியின் ஆட்களுக்கு ராமலிங்கத்தின் பதிலைக் கேட்டதும் ஆத்திரம் உச்சத்திலேறியது.

“என்னண்ணே இம்புட்டு மண்டையா பேசறான்... என்ன செய்வோம்?”

“போகுங்காலம் வந்திருச்சு தாயோலிக்கி. சொன்னா கேக்க மாட்டான்ல… நீ நம்ம பயகளக் கூட்டிக்கிட்டுப் போயி அவன் கொட்டைய அறுத்துவிடு. அப்பத்தான் எல்லாத்தையும் அமுக்கிட்டு இருப்பான்.”

காளியின் உத்தரவு கிடைத்ததும் மணி யார் யாரையெல்லாம் தன்னோடு கூட்டிக்கொண்டு செல்வதென யோசித்தான். மருது அப்போது மீசை அரும்பத் தொடங்கியிருந்த இளைஞன். எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் விநோதப் வழக்கம் அவனுக்கு உண்டு. யார் எந்த வேலைக்குப் போனாலும் ‘எண்ணே, நானும் வாரண்ணே’ என என்ன ஏதென்று தெரியாம லேயே ஆளுக்கு முதலாய் வருவான். ஆர்வக்கோளாறென மணியின் கூட்டாளிகள் கடந்து போய்விடுவார்கள். இந்தமுறை செய்யப்போவது கொஞ்சம் விநோதமான காரியம் என்பதால் மணிக்கு ஒரு யோசனை வந்தது. “எலேய் மருது... இன்னிக்கி வேல உனக்குத்தான். நாங்க சும்மா சப்போர்ட்டுக்குத்தான் உங்கூட வரப்போறோம்.” என்றதும், மருதுவுக்குத் தாங்க முடியாத ஆனந்தம். “நெசமாவாண்ணே... என்ன வேலண்ணே செய்யணும்?”

“ஒருத்தன் கொட்டைய அறுக்கணும்...”

மணி சொன்னதும் சுற்றியிருந்தவர்கள் சத்தமாகச் சிரித்தனர். மருதுவுக்கு அவமானமாக இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல் ஆளுக்கு முதலாய்க் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்பினான்.

“பொறுடா, வெறுங்கையோட கிளம்பற, பொருள் வேணாமா?”

மணி உறுதியானதொரு சூரிக்கத்தியை எடுக்க, மருது அவசரமாக இடுப்பிலிருந்து தனது கத்தியை எடுத்து நீட்டினான்.

“அடப்பாவி, இத எப்படா தயார் பண்ண?”

“அதெல்லாம் இங்க வர்றப்பவே தயாராத்தாண்ணே வந்தேன்.”

மருது பெருமிதமாகச் சிரிக்க, “பெரியாள் தாண்டா நீயி... வா போவோம்.”

கூட்டமாகக் கிளம்பியவர்கள் ராமலிங்கத்தின் வீடிருக்கும் தெருவின் முனையிலேயே சைக்கிள்களை நிறுத்திவிட்டு, இரண்டிரண்டு பேராக நடந்தார்கள். ஆள் தப்பித்தும்விடக் கூடாது, வேறு ஆட்கள் உள்ளே வந்து காரியத்தைக் கெடுத்துவிடவும் கூடாது என்பதால் ராமலிங்கத்தின் வீட்டை மீனுக்கு வலை போடுவதுபோல் அவர்கள் சூழ்ந்தனர். ஓர் எல்லையில் மணியும் இன்னொருவனும், இன்னொரு எல்லையில் இரண்டு பேர், வாசலை நோக்கி மருதுவும் அவனுக்குத் துணையாக ஒருவனும். மருதுவுக்கு முன்பாகச் சென்றவன் மெல்ல நடந்துபோய் ராமலிங்கத்தின் வீட்டுக்கதவைத் தட்டினான். அந்தக்கால மரக்கதவு, சத்தம் சரியாக வராததால் கதவிலிருந்த இரும்புக் கொண்டியால் கதவில் ஓங்கி அடித்தான். ‘உள்ளே ஆள் சத்தம் எதுவும் கேட்கவில்லை’ என்று சொல்ல நினைத்துத் திரும்பும்போது, அவனது தொடையைக் குத்திக் கிழித்தது மருதுவின் கத்தி. “ஆத்தி... எலேய் தாயோலி... ஏண்டா என்னயக் குத்தின?” என அவன் கத்த, மணியும் மற்றவர்களும் குழப்பத்தோடு வேகமாக ஓடிவந்தனர். அதே நேரத்தில் கதவும் திறக்கப்பட்டது. கதவைத் திறந்து வாசலுக்கு வந்த ராமலிங்கம் சூழலைப் புரிந்துகொண்டு தப்பிக்கப் பார்க்க, மருது எட்டிப் பிடித்து வெளியே இழுத்துப் போட்டான். லுங்கி உருவிக்கொள்ள, ஒரு கையால் அதனைப் பிடிக்க முயன்று முடியாமல் ராமலிங்கம் தூரமாய் விழ, மணியும் மற்றவர்களும் மருதுவைப் புரியாமல் பார்த்தனர். மருது நிதானமாக உட்கார்ந்து டிரவுசரோடு ராமலிங்கத்தின் விதைப்பைகளை அறுக்கத் தொடங்கினான். அதற்குள் தெருவிலிருந்த ஆட்களெல்லாம் கூடிவிட, ராமலிங்கம் வலியிலும் அவமானத்திலும் சத்தமாக அலறினான். துணியோடு கையில் வந்த சதைக்கோளத்தை மணியின் பக்கமாய் நீட்டிய மருது, “ஏண்ணே இத எடுத்துட்டுப் போறதா... இல்ல, இப்பிடியே தூக்கி எறிஞ்சிறவா?” என மருது கேட்க, “எலேய், அத என்னச் சுட்டுத் திங்கவா முடியும்? கருமத்த தூக்கிப் போட்றா...” என மணி கத்தினான். மணியும் மற்றவர்களும் தங்களோடு வந்த குத்துப்பட்டவனைத் தூக்கிக்கொண்டு ஓட, மருது நிதானமாக நடந்துபோய்த் தனது சைக்கிளை எடுத்தான். ராமலிங்கத்தின் ஆட்கள் வந்து சேர்வதற்குள் அவர்கள் தப்பித்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தனர். குத்துப்பட்டவனுக்கு பெரியாஸ்பத்திரியில் கட்டுப்போட்டு அனுப்பியதும், மருதுவைக் கூப்பிட்டு மணி காதிலேயே அறைந்தான்.

“கூட வந்தவன என்ன மயித்துக்குக் குத்தின?”

“என்னண்ணே வெவரமில்லாத ஆளா இருக்க? அந்தக் கத்திய வாங்குனதுலருந்து யாரையுமே குத்தினதில்ல. அந்தண்ணன் கதவு தட்டும்போதுதான் நானும் சுதாரிச்சேன். ஆத்தி இந்தக் கத்தி குத்துமா குத்தாதான்னு தெரியலையே... எதுக்கும் குத்திப் பாப்போம்னு சும்மா லேசா குத்தினேன். அது சரக்குன்னு உள்ள எறங்கிருச்சு.”

மருது பதற்றமே இல்லாமல் சொல்லி முடிக்க, குழப்பத்தோடு கேட்டுக்கொண்டிருந்த எல்லோரும் சத்தமாகச் சிரித்துவிட்டனர். “அது சரிடா, அவன ஏன் தெருவுல இழுத்துப்போட்டு அறுத்த, ஏரியாக்காரய்ங்க கூடியிருந்தாய்ங்கன்னா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிருக்காதா?”

“நடுத்தெருவுல ஒருத்தன் உயிர்த்தடத்த அறுக்கறதப் பாத்து எவனுக்காச்சும் தடுக்க தைரியம் வருமாண்ணே? சும்மா வீட்டுக்குள்ள வெச்சு செஞ்சிருந்தா ஊர்க்காரய்ங்களுக்கு நம்ம மேல பயம் வராது... இப்ப அப்டியா... இனி எவனும் சாராயக் கேனத் தூக்கிட்டு வரமாட்டான்ல?” மருது அப்பாவியாகச் சிரித்ததைப் பார்த்த மணிக்கு அப்போதே பிடித்துப்போனது. அன்றிலிருந்துதான் அவனைத் தனக்கு நெருக்கமானவனாக வைத்துக்கொள்ளத் தொடங்கினான்.

மூர்த்தியின் குடும்பமும், சோமுவின் குடும்பமும் மருதுவின் சாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். காளி எப்படியும் அவனை எமனின் பிடியிலிருந்து மீட்டு விடுவதென்கிற உறுதியோடு போராடிக் கொண்டிருந்தான். வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் விநோதமானதொரு விளையாட்டை, கடவுள் அவர்களைவைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அந்த விளையாட்டைச் சடாரென முடித்துக்கொள்ள விருப்பமில்லாதவர் போல் ஒருவரும் எதிர்பார்க்காதபடி மருதுவைப் பிழைக்கவைத்தார். உடலெங்கும் வெட்டுக்காயங்கள், இன்னும் விலகியிருக்காத குருதிக் கவுச்சி. ஆனால் அவன் இதயம் பாறாங்கல்லைப் போன்றது. ‘இது என் சாவுக்கான தருணமல்ல’ என்பதை மிக உறுதியாகச் சொல்லும் விதமாக அந்த இதயம் முன்னைவிடவும் ஆரோக்கியமாகத் துடிக்க, பகையின் இன்னொரு வேரைப் பற்றிக்கொண்டு மருது பிழைத்துக் கொண்டான்.

(ஆட்டம் தொடரும்)