Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 38

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

மீசையும் தாடியுமாகக் கழுத்தில் ருத்திராட்ச மாலைகளோடு இருந்த மருதுவை, காளி நடத்தும் விதத்திலேயே அவன் முக்கியமானவன் என்பதைப் புரிந்துகொண்டு ஊர்க்காரர்கள்...

ரெண்டாம் ஆட்டம்! - 38

மீசையும் தாடியுமாகக் கழுத்தில் ருத்திராட்ச மாலைகளோடு இருந்த மருதுவை, காளி நடத்தும் விதத்திலேயே அவன் முக்கியமானவன் என்பதைப் புரிந்துகொண்டு ஊர்க்காரர்கள்...

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

மாசித் திருவிழாவுக்காக, காளி சொந்த ஊருக்குச் சென்றிருந்தான். ஊர் அவனை அண்ணாந்து பார்க்கத் தொடங்கிவிட்டது. பள்ளிக்கூடம், முனியாண்டி கோயில், சாவடி எல்லாவற்றுக்கும் நிதியுதவி அளிக்கிறவன் என்கிற வகையில், அந்தத் திருவிழாவே அவனுக்காக நடப்பதைப்போல் ஊர்க்காரர்கள் அவனைத் தலையில் தூக்கிவைத்து ஆடினார்கள். சுப்புவுடன் இருக்கும் மனத்தாங்கலை யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், திருவிழா நாள்களில் அந்நியோன்யமாக இருப்பதாகக் காட்டிக்கொண்டான். முன்பெல்லாம் ஊருக்குள் நல்லது கெட்டதுக்கு அவன் வந்துபோகும்போது எந்தச் சத்தமும் இருக்காது. இப்போது அவனும் மனைவி மக்களும் பயணிக்க ஒரு கார், அவனுடைய ஆட்களுக்கு இரண்டு கார்கள் என எல்லாமே ஆடம்பரம்தான். “ஆத்தி எத்தன பிளசருதான்யா வெச்சிருக்க காளி?” என ஊர்த் தலைவர் ஆச்சர்யமாக அவனிடம் கேட்க, “கட்சி வேலைக்கித் தேவைப்படுதுங்களேய்யா. அதனாலதான்” என அடக்கமாகச் சொன்னான். முந்நூறு தலைக்கட்டுகள் வாழும் அந்தக் கிராமம்தான் அந்தப் பகுதியிலேயே பெரிய ஊர். ஊருக்குத் தேவையான சின்னச் சின்ன உதவிகளைச் செய்ததன் மூலம் அவன் சொன்ன சொல்லுக்குக் கட்டுப்பட்டு எல்லோரும் கட்சி வேலைகளுக்கு வந்துநின்றார்கள். மிகக் குறைவாக விதைத்து, பெரிய அளவில் பலன்களை அறுவடை செய்யக்கூடிய திறமை அவனுக்குள் இருந்ததை ஊரில் ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை.

மீசையும் தாடியுமாகக் கழுத்தில் ருத்திராட்ச மாலைகளோடு இருந்த மருதுவை, காளி நடத்தும் விதத்திலேயே அவன் முக்கியமானவன் என்பதைப் புரிந்துகொண்டு ஊர்க்காரர்கள் காளிக்குச் சமமான மரியாதையை அவனுக்கும் கொடுத்தனர். ஊர் எல்லையில் கோயில், கோயிலிலிருந்து சற்று தூரத்தில் மந்தை, மந்தையைச் சுற்றி முதல் வீதியின் வீடுகள், அடுத்தாற்போல் பள்ளிக்கூடம். மீண்டும் பள்ளிக்கூடத்தைச் சுற்றி அடுத்தடுத்த வீதிகள். பள்ளிக்கூடம் ஒருவகையில் ஊரின் மையமாக இருந்தது. தன்னோடு வந்தவர்களையெல்லாம் தங்கவைக்க வீடுகள் தோதுப்படாது என்பதால், காளி பள்ளிக்கூடத்தில்தான் தங்கவைத்திருந்தான். மாணவர்களுக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக, இரண்டு நாள்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்காலிகமான படுக்கைகளிலிருந்து அவர்களுக்குத் தேவையான எல்லாமுமே தயார் செய்யப்பட்டிருந்தன. திரண்டு நிற்கும் ஊர்க்காரர்களின் முகங்களில் தெரிந்த ஆர்வமும், தங்களிடம் வெளிப்படுத்திய அன்பும் மருதுவுக்குப் புதுவிதமான மகிழ்வையும் கூச்சத்தையும் ஒருசேரக் கொடுத்தன. நாகரிகமாக நடந்துகொள்ளவும், பேசவும் முயன்றான். எல்லோரிடமும் சிரித்தபடி பேசுவது, தனக்கு வணக்கம் வைப்பவர் எவராயிருந்தாலும் வணக்கம் வைப்பது என வேறு மனிதனாக நடந்துகொள்ளத் தொடங்கியதை கவனித்த முத்தையா, “யாத்தே... உங்க நாடகம்லாம் பெரிய நாடகமா இருக்கேய்யா மருது… பேசாம எனக்கு ரெண்டு சாமியார் வேட்டியும் மாலையும் வாங்கிக் குடுத்துரு. நானும் வேஷங்கட்றேன்” என ஆர்வமாகக் கேட்டான். மருதுவும் காளியும் சிரித்தனர். முத்தையா இன்னும் வெவரமில்லாத ஆளாக இருக்கிறானே என்கிற நினைப்பு அவர்களுக்கு. ‘தாயோலி... நம்மளுக்கு இந்த யோசனை முன்னயே இல்லாமப் போச்சே’ என்கிற கவலை முத்தையாவுக்கு. சிரமத்தோடு மருதுவின் மீதிருந்த பொறாமையைக் காட்டிக்கொள்ளாமல் சிரித்து நின்றவனை “எலேய்... வேஷம்லாம் சும்மா அமைஞ்சுடாதுறா முத்து… அந்த வேஷத்துக்கு நீ நிறைய இழந்திருக்கணும்” என காளி தட்டிக்கொடுத்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 38

திருவிழாவுக்கு வந்த முதல் நாள் இரவு, அவசரமாக மதுரையிலிருந்து காளியின் ஆள் ஒருவன் கிராமத்துக்கு வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் காளிக்கு எரிச்சலானது. “கட்சி ஆபீஸ்ல இருக்கற வேலையெல்லாம் விட்டுப்புட்டு வர்ற அளவுக்கு அப்பிடி என்னடா அவசரம்?”

“அண்ணே, நாம ஒண்ணு நெனைக்க வேற ஒண்ணு நடந்திருச்சுண்ணே...”

“என்னடா சொல்ற?”

“அறிவுக்கு லைன் போட்டு ஆள் அனுப்பினம்ல…”

“ஆமா… சொதப்பிட்டாய்ங்களா?”

“அதில்லண்ணே… நம்மாளுக செய்றதுக்கு முன்னாடி அந்தக் குட்டையன் மலைச்சாமி உள்ள எறங்கி அறிவு கைய வெட்டிப்புட்டாண்ணே.”

“ஒக்காலி... அவென் எதுக்குடா குறுக்க வந்தான். அவென் செய்ற வரைக்கும் போனவய்ங்க என்ன புடுங்கிட்டு இருந்தாய்ங்க?”

“இல்லண்ணே, கரெக்டான லைனு, சரியான டைம்தான். ஆனா…”

“என்னடா ஆனா?”

“உங்கிட்ட சேரணுங்கறது மலைச்சாமிக்கு ரொம்ப நாள் ஆச, சும்மா வரக் கூடாதுன்னு தான் இதைச் செஞ்சிருக்கான். கட்சி ஆபீஸுக்கு வெட்டி எடுத்த கையோட வந்தவன் கையக் குடுத்துட்டு, ‘நீங்க தாட்டியமா பத்து பேர அனுப்பினாலும் என் ஒருத்தனுக்கு ஈடாக மாட்டாய்ங்க. காளி அண்ணன சீக்கிரமா ஜாமீன் எடுக்கச் சொல்லு’ன்னுட்டு போயிட்டாண்ணே...”

மலைச்சாமியின் நோக்கத்தை முன்பே தெரிந்திருந்தபோதும் அவன் கெட்டிக்காரத் தனத்தில் காளிக்குச் சந்தேகமிருந்தது. இப்போது அந்தச் சந்தேகம் முற்றாக விலக, சத்தமாகச் சிரித்தான். மருதுவும் முத்தையாவும் என்ன ஏதேன்று பார்க்க அவசரமாக வந்தார்கள். காளி, வந்திருந்த ஆளிடம் “சரிடா... வக்கீல்கிட்ட சொல்லி அவனுக்கு ஜாமீன் எடுக்கப் பாருங்க” என அனுப்பிவைத்தான். “யாருக்குண்ணே ஜாமீனு?” முத்தையா ஆர்வமாகக் கேட்க, “எல்லாம் உன் பய மலச்சாமிதாண்டா. நம்ம ஆளுகளுக்கு முந்தி அறிவு கைய எடுத்துட்டு வந்துட்டான். ஆள் கெட்டிக்காரந்தாண்டா” காளி உற்சாகமாகச் சிரித்தபடியே எழுந்து செல்ல, “ஒக்காலி... போட்டிக்கி இன்னொரு தாயோலியும் வந்துட்டானா?’ என முத்தையா தனக்குள்ளேயே முனகிக்கொண்டான்.

கோயில் திருவிழாக்களின் தவிர்க்கவியலா அங்கமான `வள்ளி திருமணம்’ நாடகம், இரண்டாவது நாள் மேடையில் நிகழ்த்தப்பட்டது. எத்தனை முறை பார்த்தாலும் நாடகங்கள் மக்களுக்கு அலுப்பதில்லை. ஒரே கதைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் நிகழ்த்துபவர்கள் அதில் புதுவிதமான மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டிவிடுகிறார்கள். வள்ளியும் நாரதரும் தர்க்கம் போடும் இடமும், வள்ளியும் முருகனும் தர்க்கம் போடும் இடமும்தான் `வள்ளி திருமணம்’ நாடகத்தின் பிரதான அம்சம். இதில் எத்தனை பாடல்கள் பாடுகிறார்கள்... எப்படிப் பாடுகிறார்கள்.... புராண விஷயங்களை எப்படி விவாதிக்கிறார்கள் என்பதைப் பார்க்கவே பார்வையாளர்கள் திரள்கிறார்கள். அன்றைய தினம் நாடகத்தில், நாரதரின் பாட்டும் வள்ளியின் பாட்டும் ஊரை அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் மருது பார்வையாளர் வரிசையிலிருந்து சற்று விலகி, தன் குடும்பத்தோடு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த வள்ளியைப் பார்த்தான். ஒரு ஜாடையில் வேணியைப் போலவே இருந்ததாலோ என்னவோ பார்த்த நொடியில் அவனுக்குப் பிடித்துப்போனது. வேணியின் நினைப்பு வந்தபோதே, அவள் உடலின் நறுமணம் ஒருபுறமும், வெட்டப்பட்டத் தலையிலிருந்து வடிந்த குருதியின் சூடுமாக உடல் சிலிர்த்தது. அழ வேண்டும்போலிருந்ததால், அவசரமாக எழுந்து அங்கிருந்து சென்றவனை காளியைத் தவிர ஒருவரும் கவனிக்கவில்லை.

ரெண்டாம் ஆட்டம்! - 38

நாடக மேடையிலிருந்து சற்று தூரத்தில், விளக்குகளின் வெளிச்சமில்லாத இடத்தில் நின்று அழுதுகொண்டிருந்தவனின் தோள்களை காளி ஆதரவாகப் பற்றினான். “ஏய் மருது என்னடா இது? பொசுக்குன்னு எந்திரிச்ச, இங்க வந்து அழுதுக்கிருக்க?”

“ஒண்ணுமில்லண்ணே...”

“ஒன் மனசுக்குள்ள என்ன ஓடும்னு தெரியும்டா. எதுவா இருந்தாலும் சொல்லு.”

மருது தயங்கினான். வேணியின் மீது தனக்கிருந்தது கோபமா, பகையா, வெறுப்பா, காதலா அல்லது எல்லாமுமே கலந்த சொல்ல முடியாத உணர்வா? இந்த நொடிவரை அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவளைக் கொலை செய்த நொடியில், அவள் இல்லாத இந்த உலகில் தன்னால் எப்படி வாழ முடியும் என்றுதான் முதலில் அவனுக்குத் தோன்றியது. வெளிப்படுத்த முடியாத காதலைச் சுமந்து வாழ்வதைவிட, அழியலாம் என்று நினைத்துத் தான் போலீஸில் சரணடைந்தான். இப்போது இந்த விநோதத்தை என்னவென்று கடந்து செல்ல? கண்களைத் துடைத்துக்கொண்டான்.

“எண்ணே... கூட்டத்துல ஒரு புள்ளையப் பாத்தண்ணே...”

காளி சிரித்தபடி “அடக் கிறுக்கா... இதுக்கா அழுகற... உனக்குப் புடிச்சிருக்குன்னா சொல்லு, இப்பவே அந்தப் புள்ளை வீட்ல பேசிருவோம்.”

``அதுக்கில்லண்ணே, அந்தப் புள்ளை வேணியாட்டம் இருக்கா...” மருதுவுக்குச் சொற்கள் இடறி நின்றன. காளி, தலைகுனிந்து நின்ற மருதுவைச் சலனமின்றிப் பார்த்தபடி “மருது… உனக்குன்னு ஒரு உசுரு வரும்போது, வாழ்க்கைல எல்லாமே மாறும். பழச எல்லாம் மறந்திரு… இந்தப் புள்ளைய புடிச்சிருக்குன்னா சொல்லு. இப்பவே பேசுவோம்.”

மருது இந்த முறை தயங்கவில்லை. “ஆமாண்ணே... அவளப் புடிச்சிருக்கு.”

“சரி எங்கூட வா...” காளி வேஷ்டியை மடித்துக்கொண்டு முன்னால் நடக்க, மருது தயக்கத்தோடு பின்னால் சென்றான். மேடைக்கு முன் பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த வள்ளியை மருது காட்ட, காளி ஆட்களை விலக்கிவிட்டு வள்ளியின் குடும்பத்தினரை நெருங்கிச் சென்றான். தங்களை நோக்கி வருகிறான் என்று தெரிந்து வள்ளியின் அப்பா, அம்மா எழுந்து நிற்க, வள்ளியும் எழுந்து நின்றாள். காளி சுற்றிவளைக்கவில்லை. “உங்க பொண்ண மருதுக்குக் கட்டிக் குடுக்கறீங்களா? அவென் என் தம்பி மாதிரி, நல்லா பாத்துக்குவான்” என்றதும், என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வள்ளியின் குடும்பத்தினர் விழித்தனர். வள்ளி ஒரு நொடி பார்வையை விலக்கி, தூரமாக நின்ற மருதுவைப் பார்த்துவிட்டு யோசிக்காமல் “எனக்குச் சம்மதம்ணே...” என்றதும், அவள் அப்பாவும் அம்மாவும் அவளை முறைத்தனர். “இது போதும்த்தா... உங்களுக்கு நாடகம் முடியவும் விடிகாலைல நம்ம முனியாண்டி கோயில்லயே கல்யாணம்” என்றபடி காளி வேகமாக மேடைக்கு நடந்தான். நாடகத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு முன்னால் வந்தவன், “ஊர்க்காரவுகல்லாம் காலைல நாடகம் முடிஞ்சதும் போயிராதிக. என் தம்பி மருதுவுக்கும் வள்ளிக்கும் காலைல முனியாண்டி கோயில்ல கல்யாணம். இருந்து ஆசீர்வாதம் பண்ணிட்டுத்தான் போகணும்” என்றதும், ஊர்க்காரர்கள் உற்சாகமாகக் கத்தினார்கள்.

(ஆட்டம் தொடரும்)