அரசியல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 39

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

வருஷநாட்டிலிருந்து அதிகாலையில் வந்துசேர்ந்த காய்கறி ஏற்றப்பட்ட லாரியிலிருந்து செல்வமும் சோணையும் கஞ்சா மூட்டைகளை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்

பெண், தனக்கான அதிகாரத்தைக் கட்டமைத்துக்கொள்ள விரும்புகையில் சூதையே பிரதானமாகக் கையிலெடுக்கிறாள். ஆண்களின் உலகில் சூதின் துணையில்லாமல் பெண்களால் எதையும் சாதித்துவிட முடியாது. ஜெகதியிடமிருந்த சூது, அடிபட்ட புலியிடமிருக்கும் வஞ்சத்தைவிடவும் காத்திரமானது. தனது உடலைக் கட்டுப்படுத்தி ஆள நினைத்தவனை, அதே உடலின் துணைகொண்டு வீழ்த்துவது எனத் தீர்மானித்தாள். கோட்டைச்சாமி போன்ற ஒருவனது சிந்தனைக்குள் ஆழ்ந்து செல்ல, தன் மீதிருக்கும் இச்சையை மட்டும் பயன்படுத்தினால் போதாது என்பதை வெகு சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டவள், அவனது பிற ஆசைகளையும் தெரிந்துகொண்டு அந்த ஆசைகளைப் பேராசைகளாக்கத் தூண்டினாள். தன்னைப் பற்றி நாலு பேர் நல்லவிதமாகப் பேசுவதையும், பொய்யாகவேணும் குனிந்து நின்று வணக்கம் வைப்பதையும் ரசிக்கக்கூடிய சராசரி ரௌடி இல்லை அவன். எல்லோரையும் கட்டுப்படுத்தக்கூடிய நிழல் ராஜ்ஜியம் ஒன்றைத்தான் கோட்டைச்சாமி விரும்பினான். அந்த நிழல் ராஜ்ஜியத்துக்குள்ளிருந்து எல்லாவற்றையும் ஆட்டுவிக்க அரசியல் அதிகாரமும் பணபலமும் தேவையாகயிருந்தன. இந்த இரண்டையும் வெகு விரைவாகச் சென்று சேரக்கூடிய எல்லா வழிகளும் ஜெகதிக்குத் தெரிந்திருந்தன. கோட்டைச்சாமியின் அனுமதி இல்லாமலேயே அவனது தொழில் விஷயங்களிலும், பஞ்சாயத்துகளிலும் ஜெகதி தலையிட்டு கருத்து சொல்லத் தொடங்கியதை கோட்டையும் ரசித்தான். அவன் பார்த்த அவன் வீட்டுப் பெண்கள் தாட்டியமானவர்கள் என்றாலும், ஆண்களின் குரல்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். இவள் எந்தக் கட்டுப்பாடுமில்லாமல் அத்துமீறுவதே அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுடனிருப்பவர்கள் இதற்காக முகம் சுளித்தாலும் அவன், ஜெகதி அப்படி நடந்துகொள்ளவே தூண்டினான்.

ரெண்டாம் ஆட்டம் - 39

கோட்டைச்சாமி வாரத்தில் மூன்று நாள்கள் ஜெகதி வீட்டிலும், நான்கு நாள்கள் தனது வீட்டிலுமாகத் தங்கத் தொடங்கியபோது, ஊர்க்காரர்கள் ஜெகதியை அவனது இன்னொரு மனைவி என்றே நினைக்கத் தொடங்கினார்கள். சரக்குகளை எடுத்துவந்து பாதுகாக்கவும், பிரித்து வியாபாரத்துக்கு அனுப்பவும் ஜெகதியின் வீடு அவனுக்கு வசதியாக இருந்ததால், அவளது வீட்டின் பின்பகுதியை அதற்காக நிரந்தரமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். சரக்கை எடுத்துவருவது, அவற்றை ஏரியாவாகப் பிரித்து வியாபாரத்துக்கு அனுப்புவது எல்லாமே செல்வமும் அவனது ஆட்களும்தான். இதனாலேயே ஜெகதியும் செல்வமும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் சூழல் உருவானது. அல்லது அவள் அப்படியான சூழல்களை உருவாக்கிக்கொண்டாள். வயது கூடும்போது பெண்களிடம் பேசுவதற்கான கூச்சமும் கூடிவிடுமா... அல்லது அவளிடம் பேசுவதற்குத்தான் இப்படிக் கூச்சப்படுகிறோமா... என செல்வத்துக்குக் குழப்பமாயிருந்தது. மனதின் அடியாழத்தில் என்னவெல்லாம் நினைக்கிறோமோ அதையெல்லாம் செய்து பார்த்துவிட இயலாது. நெருங்கி வருகையில் அவளிடமிருந்து வெளிப்படும் காட்டமான வியர்வை நெடியில் செல்வத்துக்கு நரம்புகள் முறுக்கேறி உடல் சிலிர்க்கும். பெண் மிருகம் ஆண் மிருகத்தை சல்லாபத்துக்கு அழைக்கும் சமிக்ஞையைப் போன்ற காட்டமானது அந்த வியர்வையின் நெடி. தாபங்களின் எல்லைகளைக் கடந்து அவளுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ளத் துடிப்பான். கோட்டைச்சாமியின் மீதிருக்கும் அச்சம் நினைவுக்கு வரும் அடுத்த நொடியில் எல்லாம் அடங்கிப்போகும். அடக்கிவைக்கப்படும் எரிமலைக்கு ஆற்றல் அதிகம் எனும் ரகசியம் தெரிந்தவள்போலவே ஜெகதியும் அந்தக் கண்ணாமூச்சி விளையாட்டைத் திறமையாக விளையாடிக்கொண்டிருந்தாள்.

வருஷநாட்டிலிருந்து அதிகாலையில் வந்துசேர்ந்த காய்கறி ஏற்றப்பட்ட லாரியிலிருந்து செல்வமும் சோணையும் கஞ்சா மூட்டைகளை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்வாசலில் எரிந்துகொண்டிருந்த மஞ்சள் நிற விளக்கின் வெளிச்சத்தின் காரணமாகச் சுவரில் அவர்களின் அசையும் நிழல்கள் பூதாகரமாகத் தெரிந்தன. கோட்டைச்சாமி அரைத் தூக்கத்தில் எழுந்து வந்தான்.

“வெரசா எடுத்துவெச்சுட்டு வண்டிய மார்க்கெட்டுக்கு அனுப்புங்கடா...”

“முடிஞ்சிருச்சுண்ணே... இன்னும் ஒரு மூட்டதான்.”

பேச்சுக் கொடுத்தபடியே செல்வம் கடைசி மூட்டையத் தூக்குவதற்காக விரைந்தான். முகத்தைக் கழுவிய கோட்டைச்சாமி, கொடியில் கிடந்த பனியனை எடுத்து அணிந்துகொண்டான். திறந்திருந்த கதவைத் தாண்டி வந்த ஜெகதி, உடையைச் சரிசெய்தபடியே “ஏங்க... டீ வெக்கவா?’’ எனக் கேட்டாள்.

“விடிஞ்சிருச்சா அதுக்குள்ள? சரி... பயகளுக்கும் சேத்து டீ வெச்சிரு...”

திரும்பிச் செல்லும்போதே ஜெகதி சில நொடிகள் செல்வத்தைப் பார்க்க, அதற்காகக் காத்திருந்தவன்போல அவனும் அவளைப் பார்த்தான். இருவரின் பார்வைகளையும் கவனித்த சோணை சத்தமில்லாமல் “ஏய் பங்காளி... உன் பார்வ சீரில்லாம இருக்கு. நல்லதுக்கில்ல” என முனகினான். செல்வம் சடாரென பார்வையை விலக்கிக்கொள்ள, அவள் உள்ளறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் தேநீரோடு திரும்பிவந்தபோது, கோட்டைச்சாமியும் செல்வமும் பேசிக்கொண்டிருந்தார்கள். சோணை அந்த இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். அவர்களுக்குத் தேநீரைத் தந்துவிட்டு, தனக்குமொரு டம்ளரை எடுத்துக்கொண்டவள், கோட்டைச்சாமிக்கு அருகிலேயே உட்கார்ந்து கொண்டாள். சூரிய வெளிச்சம் மெல்ல வீட்டுக்குள் விழத் தொடங்கியது. “அந்த திருநகர் பார்ட்டிக்கி இனிமே சரக்குக் குடுக்காதடா செல்வம். ஆளு பெரிய திருகல் பார்ட்டியா இருப்பான்போல...” கோட்டைச்சாமி சொல்ல, “சரிண்ணே” என்றான். ஜெகதி தனது டம்ளரைக் கீழே வைத்தாள்.

ரெண்டாம் ஆட்டம் - 39

“எத்தன நாளைக்கித்தான் இந்த நாலு ஊருக்குள்ளயே தொழில் பண்ணிட்டு இருப்பிய? நம்ம சரக்குக்கு நல்ல டிமாண்ட் இருக்கு. கொஞ்சம் ரிஸ்க் எடுத்தம்னா பெருசா சம்பாதிக்கலாம்.”

“எதச் சொல்றதா இருந்தாலும் வெளங்கற மாதிரிச் சொல்லு...”

“இங்கருந்து லங்காவுக்குச் சரக்க எடுத்துட்டுப் போனம்னா, நல்ல லாபம். அங்க சரக்கு வாங்கறதுக்கு நம்பகமான பார்ட்டிய எனக்குத் தெரியும். நாம செய்ய வேண்டியதெல்லாம், போட்ல சரக்க எடுத்துட்டுப் போயி அவங்க கடல் எல்லைல அவங்க போட்ல சேக்க வேண்டியதுதான்.”

“எதாச்சும் நடக்கற கதையப் பேசு...”

“ஏன் நடக்காது? ராமேஸ்வரத்துல நம்மளுக்கு வேண்டியவங்க போட் எத்தனையோ இருக்கு. டிரிப்புக்கு இவ்ளோன்னு கமிஷன் குடுத்தா போதும், தங்கமா செஞ்சு குடுப்பாங்க. இது ஒண்ணும் புதுசு இல்லியே? பேட்டரி லைட், துணிமணி, சோப்பு, பீடிக்கட்டு, ஏன் இங்கருந்து பைக் இன்ஜின்லாம் போயிருக்கே...”

“ஏய்... அது வேற, இது வேறடி...”

“எல்லாம் ஒண்ணுதான். ஆனா இதுல லாபம் சாஸ்தி. அதனால ரிஸ்க்கும் சாஸ்தி. ஆனா துணிஞ்சு செஞ்சா சரியா வரும்.”

கோட்டைச்சாமியின் மனதையறிந்து மிகச்சரியாக அவள் தூண்டிலை வீசியிருந்தாள். அவனுக்கு லாபத்தைவிடவும் இந்தக் காரியத்தைச் செய்வது இப்போது சாகசமாக மாறியிருந்தது. நிதானமாக யோசித்தவனை நெருங்கிய செல்வம், “எண்ணே எனக்கும் அவங்க சொல்றது நல்ல யோசனையா படுதுண்ணே” என முகம் மலரச் சொன்னான். கோட்டைச்சாமி யோசிக்காமல் “சரிடா, அப்ப நீயே என்னன்னு பாரு. இப்ப வந்திருக்க சரக்குலயே ஒரு 500 கிலோ எடுத்துட்டுப் போங்க. மொதவாட்டி எப்பிடிப் போகுதுன்னு பாப்போம். ஒத்து வந்தா அடுத்தடுத்து செய்வோம்” என்று சொல்லிவிட்டு உள்ளே எழுந்து சென்றான். இத்தனை எளிதில் சம்மதிப்பான் என ஜெகதி எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவகையில் தனக்கிருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டுச் சென்றிருப்பதாக நினைத்துக்கொண்டாள்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு விடிகாலையில், ராமேஸ்வரத்துக்கும் கீழக்கரைக்கும் நடுவிலிருந்த கடல் பகுதியில் தன்னந்தனியாக ஒரு படகு இலங்கையின் கடல் எல்லையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. வழக்கமாகக் கிழக்குக் கடற்கரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் நேரமென்பதால், யாரும் அந்தப் புதிய படகின் வேகத்தைப் பொருட்படுத்தவில்லை. அடர்த்தியான வானில் நிலா அரைவட்டமாக ஜொலித்துக்கொண்டிருக்க, புள்ளி புள்ளியாக நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக்கொண்டிருந்தன. கடல் அலைகளைக் கிழித்து சீறிப்பாய்ந்த அந்தப் படகின் ஒரு முனையில் பதற்றத்தோடும், புதுவிதமான கிளர்ச்சியோடும் செல்வம் நின்றிருந்தான். அவனது காலுக்குக் கீழ் இருபது இருபது கிலோக்களாக பிரிக்கப்பட்ட கஞ்சா மூட்டைகள் பாதுகாப்பாகக் கிடந்தன. கடலின் எதிர்ப்பக்கத்திலிருந்து அவர்கள் எதிர்பார்த்த சமிக்ஞை கிடைத்துவிட, டார்ச் வெளிச்சம் வந்த அந்தப் புள்ளியை நோக்கி வேகமாக விரைந்தனர். அலையின் சீற்றத்தில் உடலெங்கும் கடல்நீர் தெறித்து படகிலிருந்தவர்களின் உடைகள் ஈரமாகியிருந்தன. எதிர்ப்படகு நெருங்கி வர, செல்வமும் படகிலிருந்தவர்களும் மின்னல் வேகத்தில் மூட்டைகளை அடுத்த படகுக்கு மாற்றினார்கள். சரக்குகளை ஏற்றிக்கொண்டு அந்தப் படகு திரும்பி விரைய, இந்தப் படகும் கரையை நோக்கி விரைந்தது. செல்வத்துக்கு இந்தக் கடல் அனுபவம் தந்த சாகச உணர்வு அலாதியானது. ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வந்து சேர்வதற்குள்ளாகவே எடுத்துப்போன சரக்குகளுக்கான பணம் கிடைத்துவிட்டிருந்தது. மதுரைக்குள் கிடைக்கும் லாபத்தைவிட ஐந்து மடங்கு லாபம். “ஏத்தா... நீ லேசுப்பட்ட ஆள் இல்லதான் போலியே?” கோட்டைச்சாமி மிரட்சியோடு ஜெகதியிடம் கேட்க, “எங்கப்பா எங்களுக்குச் சொத்துதான் சேத்துவெச்சுட்டுப் போகல. ஆனா வாழ்றதுக்கு நிறைய கத்துக் குடுத்துட்டுப் போயிருக்காரு” என்று சிரித்தாள்.

(ஆட்டம் தொடரும்)