சமூகம்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 4

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

வெறுங்கையோடு திரும்பவும் ஊருக்கே சென்று பிழைத்துக்கொள்ளலாமென நினைக்கும் ஆளில்லை காளி. மதுரைதான் இப்போது அவனுக்கு எல்லாம்.

பயம் அதிகாரத்தை உருவாக்குவதில் பிரதான முதலீடு. தனது அதிகாரம் இருக்குமிடத்தில் இன்னொருவன் வளர்வதை எவனொருவனும் அனுமதிப்பதில்லை. காளி ஒரு தொந்தரவாக மாறத் தொடங்கியபோது, அவனை அழித்து, சோமு தன்னை எதிர்க்க நினைக்கும் எல்லோரையும் மிரட்டுவதற்கான முதலீடாக அதை மாற்ற நினைத்தான். காளியைப் பொறுத்தவரை மார்க்கெட்டில் அன்று நடந்தது ஒரு விபத்து. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மனிதன் செய்யும் தற்காப்பென்னும் அளவிலேயே அதைக் கடந்து வந்திருந்தான். ஆனால், சோமுவின் ஆட்கள் அவனை விடுவதாயில்லை. சென்ட்ரல் மார்க்கெட்டில் காளிக்கு வேலை கொடுக்க மறுத்தனர். சுமை தூக்குவோர் தங்கள் குழுவிலிருந்து அவனை ஒதுக்கினார்கள். பழக்கமான வியாபாரிகள்கூட அவனுடன் முகம் கொடுத்துப் பேசத் தயங்கினார்கள். கட்டப்பெருமாளுக்கு மார்க்கெட்டில் நடப்பதெல்லாம் தெரியவந்தபோது வேறுவிதமாக யோசிக்கத் தொடங்கினார். நன்மைக்கும் தீமைக்குமான கோடு அருகருகிலேயே தான் செல்கிறது. தீமை மனிதர்களைச் சூழும்போது அங்கு நன்மைக்கான இடமும் தானாகவே உருவாகிவிடும். மார்க்கெட் வியாபாரிகளைச் சூழ்ந்த சோமுவின் நச்சு ரேகைகளை அழிக்க, காளிதான் சரியான ஆயுதம். பயமா, மரியாதையா என்று தெரியாத குழப்பமான ஓர் எண்ணம் காளியின் மீது எல்லோருக்கும் இருந்ததை பெருமாள் நன்கறிவார். யாவாரிகளிடம் பேசி சோமுவுக்கு வழக்கமாகக் கொடுக்கும் பவுசை இனி காளிக்குக் கொடுப்பதெனத் தீர்மானித்தனர்.

“பெருமாளண்ணே, இதெல்லாம் சரிப்படாது. நாலு பயல பின்னால வெச்சுக்கிட்டு பவுசு வாங்கித் திங்கிற ஆளா நானு? அன்னாடம் ஒழைச்சமா தின்னமான்னு இருக்கேன். அதான் நிம்மதி” என்று காளி பிடிவாதமாய் இருந்தான். “ஏய்... என்னய்யா ஒன் பேச்சா பேசிக்கிருக்க. ஆளும் பேருமா வந்து இம்புட்டுச் சொல்றம்னா, காரணம் இல்லாமயா? அவய்ங்க ஒன்னய இங்க பொழைக்க விடமாட்டாய்ங்க. ஒன்னய அழிக்கிற வரைக்கும் சோமு ஓய மாட்டான். எதுத்து நின்னாதான் அவய்ங்களுக்கு பயம் வரும்” என நம்பிக்கையாகப் பேசினார். “நாங்க இத்தன பேர் கூட இருக்கோம். உனக்கென்னப்பா பயம்?” என ஒரு யாவாரி சொல்ல, “எதுக்கும் யோசிச்சு சொல்றண்ணே” என்றபடி எல்லோரையும் அனுப்பிவைத்தான் காளி.

ரெண்டாம் ஆட்டம்! - 4

வெறுங்கையோடு திரும்பவும் ஊருக்கே சென்று பிழைத்துக்கொள்ளலாமென நினைக்கும் ஆளில்லை காளி. மதுரைதான் இப்போது அவனுக்கு எல்லாம். இந்த ஊரில் இருக்க வேண்டுமானால், சோமுவை எதிர்த்தாக வேண்டுமென்கிற யதார்த்தம் அவனுக்குப் புரிந்தது. அவனுக்குப் பழக்கமான செல்லூர் மணி, கரிமேடு முத்து, கம்மாபட்டியான், லோடுமேன் மருது எனச் சிலர் அவனுக்குப் பின்னால் நின்றார்கள். கபடி விளையாடின நாள்களில் பழக்கமான மணியும் முத்துவும் இவனைப்போலவே சாதாரண கூலித் தொழிலாளிகள்தான். மணி, ரிக்‌ஷா ஓட்டிக் கொண்டிருந்தான். தீவிரமான எம்.ஜி.ஆர் பக்தன். காளியோடு சேர்ந்திருந்த எல்லோருமே தீவிரமான எம்.ஜி.ஆர் பக்தர்களாகத்தான் இருந்தார்கள். தீயவர்களை எதிர்த்து நிற்கும் நாயகன் எனும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தை அவர்கள் ரத்தமும் சதையுமாகக் காளியிடம் பார்த்திருந்ததால், அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மனதளவில் தயாரானார்கள். ஒரு லோடுமேனாக, முன்னாள் கபடி வீரனாக, மதுரைக்குள் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்த காளி, எல்லோருக்கும் தெரிந்த முகமாக மாறத் தொடங்கினான். செல்லூரில் அவன் குடியேறின சில நாள்களிலேயே சென்ட்ரல் மார்க்கெட்டில் சரிபாதிக் கடைகள் அவன் கட்டுப்பாட்டில் வந்து விட்டிருந்தன. திடீரென காளியைச் சுற்றி விழும் வெளிச்சமும், அவனைச் சூழும் கூட்டமும் சுப்புத்தாயைச் சங்கடப்படுத்தியது. ஆனால், என்ன செய்தாலும் அவனால் மீண்டும் பழைய காளியாக மாற முடியாதென்பதை மட்டும் புரிந்துகொண்டுவிட்டாள்.

நெல்பேட்டையிலிருந்த அரிசி மண்டி களுக்காகவும், வெத்தலைப்பேட்டையில் வாழை மற்றும் வெற்றிலை யாவாரத்திலும் காளி – சோமு குழுக்களுக்குள் தொடர்ந்து மோதல்கள் வரத் தொடங்கின. ஒவ்வொரு நாளும் மார்க்கெட்டில் பொருள்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்வதென்பதைத் தீர்மானிப்பதில் காளியின் கை ஓங்கியது. அவன் எல்லோருக்கும் நியாயமாக நடந்துகொள்வதாக யாவாரிகளும் நம்பினர். இன்னொருபுறம், அவனது நிழலில் ஒதுங்குவதற்கென ஒவ்வொரு நாளும் நிறைய இளைஞர்கள் வந்து சேர்ந்தனர். வருகிறவர்களை ஏதாவதொரு வேலைக்குச் சேர்த்துவிட அவன் முயன்றாலும், அவர்கள் அவனுக்கு கைவாகனமாகவோ பொது வேலைகளுக்கான ஆளாகவோ இருக்கத்தான் விரும்பினார்கள். ஒரு சிலரைக் கடைகளில் வேலைக்குச் சேர்த்துவிட்டாலும், அவர்கள் காளியின் ஆட்களாகவே அந்தக் கடைகளில் வேலை செய்தார்கள். மார்க்கெட்டில் தங்களது கை இறங்கத் தொடங்கியதைப் புரிந்துகொண்ட சோமுவின் ஆட்கள், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வெளியே நான்கு வீதிகளிலும் நிறைந்திருந்த சிறு சிறு கடைகளில் பவுசு வாங்கத் தொடங்கினார்கள். யாரும் பேசி முடிவெடுக்காமலேயே வடக்குப் பகுதி காளியின் கட்டுப்பாட்டிலும், தெற்குப் பகுதி சோமுவுக்கானதுமாக மாறியிருந்தது.

மதுரையில் மெல்ல ஒரு நிழலுகம் உருவாகத் தொடங்கியபோது, அதற்காகச் சிலர் காவு வாங்கப்பட்டனர். மார்க்கெட்டில் பவுசு வாங்குவதோடு இல்லாமல் சோமுவுக்கு வேறு தொழில்களும் இருந்தன. மதுவிலக்கு கடுமையாக அமலிலிருந்த அந்தக் காலகட்டத்தில், மதுரை நகருக்குள் எத்தனால் சாராய வியாபாரத்தைத் திறமையாக நடத்திக்கொண்டிருந்தான். வசதியானவர்கள் மதுவிலக்கு நேரத்திலும் பர்மிட் வைத்து நல்ல மதுவை வாங்கிக் குடித்துக்கொண்டிருந்த நேரத்தில், இந்த எத்தனால் சாராய யாவாரம் முழுக்க முழுக்க கூலித் தொழிலாளிகளைச் சுற்றியே நடந்து கொண்டிருந்தது. பெயரளவில் சோமு அதை நடத்தினாலும், அதற்கான முழுமையான ஆதரவைத் தந்தது மூர்த்தி. மருதுவும் மணியும் காளியிடம் சாராய யாவாரத்தை நடத்தச் சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் அவன் சம்மதிக்கவில்லை. “இவெய்ங்க கெட்டது செய்றாய்ங்கன்னு நாம எதுத்து நின்னோம். ஆனா, அரசாங்கம் செய்யக் கூடாதுனு சொல்லி இருக்கத நாமளே செஞ்சம்னா அப்பறம் அவய்ங்களுக்கும் நம்மளுக்கும் என்ன வித்தியாசம்?” என காளி உறுதியாக மறுத்தான். ஆனால், அவர்களின் பணத்தேவைகளைப் புரிந்துகொண்டு, முக்கியமான ரிக்‌ஷா ஸ்டாண்ட்டுகளையெல்லாம் தனது ஆட்களின் கட்டுப்பாட்டுக்கு மாற்றிக்கொடுத்தான் காளி. தன் மீதான பயத்தை மரியாதையாக மாற்றி, செல்வாக்கை உருவாக்க நினைப்பவர்களின் மத்தியில், காளி மற்றவர்கள் இயல்பாக வெளிப்படுத்திய மரியாதையைச் செல்வாக்காக அறுவடை செய்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 4

மூர்த்தி அண்ணனின் ஆதரவோடு சோமு காளியை ஒழித்துக்கட்ட நினைக்க, காளியின் வளர்ச்சியை கவனித்திருந்த மூர்த்தி, வேறுவிதமாக யோசித்தார். அவனை ஒழிப்பதைவிட வளர்த்துவிடுவதே தனக்கு ஆதாயமெனத் தோன்றியது. காளியையும் அவனது ஆட்களையும் தன் பக்கமாக இழுத்துக்கொள்ள அவருக்கு வலுவான ஒரு பிடி தேவைப்பட்டது. ஒரு நல்ல நாளில், பாண்டி கோயிலில் தன் வீட்டு விசேஷத்துக்கு வரச்சொல்லி காளிக்கு வெத்தலை பாக்கு வைத்து அழைத்தார். அவனால் இதை நம்ப முடியவில்லை. ‘எவ்ளோ பெரிய மனுஷன் நம்மளத் தேடி வர்றாப்ளயே’ எனக் குழம்பிப்போனான். “ஏய்... அவரே வந்து ஒன்னயக் கூப்டுறாருன்னா உன்னய ஒரு ஆளா மதுரக்குள்ள பாக்கறாய்ங்கன்னு அர்த்தம். நாமளும் மால மரியாதன்னு அவருக்குத் தரமா செஞ்சிரணும்” என்று உடனிருந்தவர்கள் சொன்னார்கள். விசேஷ தினத்தன்று காளி தன் ஆட்களோடு உற்சாகமாக வந்திருக்க, சோமுவுக்கு அவர்களைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. “இவன என்ன மயித்துக்கு வரச்சொல்லியிருக்காரு?” எனத் தன் தம்பியிடம் பொரிந்து தள்ளினான். விசேஷம் முடிந்து பந்தி நடந்து கொண்டிருக்கையில், மூர்த்தி இரண்டு பக்கத்து ஆட்களையும் வரச் சொன்னார். ஞாயிற்றுக்கிழமையின் வெயில் மெல்ல உக்கிரமடைந்தது. கறிக்குழம்பின் வாடை காற்றில் நிரம்பியிருக்க, பெரிய வேப்பமரத்தின் நிழலில் எல்லோரும் குழுமினர். மூர்த்தி இரண்டு கோஷ்டிக்கும் பொதுவாகப் பேசத் தொடங்கினார். “ரெண்டு பேருமே நல்லா வளந்துட்டு வர்றவய்ங்க. ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிக்கிறதால யாருக்கும் லாவம் இல்ல. இனிமே மார்க்கெட்டோட சேத்து வைகையாத்துக்கு வடக்க இருக்கறத எல்லாம் காளி பாத்துக்கட்டும். மீனாச்சியம்மன் கோயிலுக்கு தெக்க இருக்கறதையெல்லாம் சோமு பாத்துக்கட்டும்” என்று சொல்ல, சோமு அவசரமாய் “மார்க்கெட்ட எப்பிடிண்ணே விட்டுக் குடுக்கறது?” என்று எகிற, மூர்த்தி அவனை முறைத்தார். “மார்க்கெட் இனிமே காளிக்குத்தான். மார்க்கெட்டு, மில் யூனியன், ரிக்‌ஷா ஸ்டாண்டு இதையெல்லாம் விடுங்கடா, உங்களுக்கு இதவிட பெரிய வேல வரப்போகுது...” என அவர் மர்மமாகச் சொல்ல, காளியோடு வந்திருந்த மணி, “என்னண்ணே எல்லாரையும் ஆளுக்கொரு ஊருக்கு கலெக்டரா ஆக்கப்போறீங்களா? எனச் சிரித்தான். “இல்லய்யா, இது அதுக்கும் மேல” என்றார். காளி சுதாரிப்பாக, “அண்ணே எங்களுக்கு இப்ப இருக்குறதே போதும்ணே... வர்றது எதுவானாலும் நீங்க அவுகளுக்கே குடுத்திருங்க” என்றான். மூர்த்தி குறுக்கிட்டு, “அவசரப்படாத காளி, மொத விஷயம் என்னன்னு கேளு. தமிழ்நாட்டுல மதுவெலக்க முடிக்கப்போறாய்ங்க. கூடிய சீக்கிரமே சாராயக் கடையத் தொறக்க அரசாங்கம் அனுமதிக்கப் போகுது...” என்றார். காளி “அதெல்லாம் நம்மளுக்கு சரிப்படாதுண்ணே” என ஒதுங்கினான். “ஏய் திருட்டுத்தனமா வித்தாதான்யா தப்பு. கவர்மென்ட்டே விக்கச் சொல்லிட்டா உனக்கென்ன வந்துச்சு... அதுமில்லாம கண்ட சாராயத்தக் குடிச்சு சாகறதுக்கு இது நல்லதுதான... நீ உனக்காக எதையும் செய்யாட்டியும்கூட இருக்க ஆளுகள யோசிச்சுப் பாரு...”என்று வலுவாகத் தூண்டிலைப்போட காளியும் சம்மதித்தான். கடைகளைக் கட்டுப்படுத்துவது மட்டும்தான் காளி மற்றும் சோமு ஆட்களின் வேலை. ஆனால், முதலும் லாபமும் மூர்த்தி அண்ணனுக்குத்தான் என்பதை யாரும் யாருக்கும் சொல்லாமலேயே தெரிந்திருந்தது.

(ஆட்டம் தொடரும்)