மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 40

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

வருஷநாட்டிலிருந்து இறக்கிய சரக்குகள் போதாதென ஆனபோது, ஆந்திராவிலிருந்து சரக்குகளை எடுக்கலாம் என்கிற யோசனையை செல்வம் முன்வைத்தான்.

கோட்டைச்சாமியின் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத நிறைவும் மகிழ்ச்சியும் ஜெகதியால் பெருகி வழிந்தது. தன் உடலுக்கு இத்தனை வீர்யமும் பசியும் இருக்கும் என்பதை அவளோடு கூடும்போதுதான் கோட்டைச்சாமி புரிந்துகொள்ளத் தொடங்கினான். சின்னதொரு தீண்டலில்கூட அவளுடல் தந்த சிலிர்ப்பும் கொதிப்பும் அலாதியானவை. கூடிக் களித்து இன்புறுவது போதாதென அவன் சாம்ராஜ்யத்தை வளப்படுத்துவதற்கான எல்லா வழிகளையும் அவள் திறந்துகாட்டியதால், அவள் மீதிருந்த மிரட்சி அவனுக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடியேதான் இருந்தது. சமயங்களில் அவளை மிரட்டி, தன்வசப்படுத்தியதற்காக அவன் வருந்துவதுண்டு. ஆனால், இதெல்லாம் இயற்கையின் விதி. அவள் தன்னிடம் வர வேண்டும், தனக்காக இவ்வளவையும் செய்ய வேண்டும் என்பது எப்போதோ விதிக்கப்பட்டவை என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்வான்.

ரெண்டாம் ஆட்டம் - 40

வருஷநாட்டிலிருந்து இறக்கிய சரக்குகள் போதாதென ஆனபோது, ஆந்திராவிலிருந்து சரக்குகளை எடுக்கலாம் என்கிற யோசனையை செல்வம் முன்வைத்தான். “டேய் எப்டிறா அம்புட்டுத் தூரத்துலருந்து சேஃப்டியா சரக்க எடுத்துட்டு வாரது?” கோட்டைச்சாமி தயங்க, “எண்ணே... அது என் பொறுப்பு. நீ ஏன் கவலப்படற? இருக்கற மத்த வேலைய நீ பாத்துக்க, பயகளவெச்சு இத நான் செய்றேன்…” செல்வம் தைரியமாகச் சொன்னான். உபரித் தொழிலாகச் சிறிய அளவில் செய்துகொண்டிருந்த கஞ்சா வியாபாரம் இத்தனை விஸ்தாரமாகும் என்பதை கோட்டைச்சாமியோ அவன் பங்காளிகளோ எதிர்பார்த்திருக்கவில்லை. மதுரையின் முக்கியமான காய்கறி மார்க்கெட்டுகளையெல்லாம் கோட்டையின் தம்பி கருப்பு ஏலம் எடுக்கத் தொடங்கினான். அவனுக்குத் துணையாக அவனது பங்காளிகளும் தொழிலில் இருந்தனர். கோட்டைச்சாமி எனும் மரத்தின் கீழ் இத்தனை கிளைகள் தனித்து வளர்ந்தாலும், எல்லோரையும்விட செல்வம் மட்டுமே அவருக்கு நெருக்கமாயிருக்கிறான் என்பதில் மற்றவர்களுக்கு வருத்தமும் எரிச்சலும் இருந்தன. கோட்டையிடம் நேரடியாக எதையும் சொல்ல முடியாது என்பதால் கருப்புவிடம்தான் அனத்துவார்கள். பெரும்பாலும் மதுவருந்தும்போது மூன்றாவது சுற்றுக்குப் பிறகு யாராவது ஒருவன் “ஏய் என்னாய்யா கூடப்பொறந்த தம்பி நீயி… உனக்குக்கூட அம்புட்டு உரிம இல்ல. எல்லாத்துக்கும் செல்வந்தானா? தும்மினதுக்கெல்லாம் அவனத்தான் கூப்டறாப்ள… அப்ப நம்ம இத்தன பங்காளிக எதுக்கு?” இப்படி ஆரம்பித்தால், “எங்கண்ணே ஒண்ணு செய்றான்னா அதுக்கு நூறு காரணம் இருக்கும். அவனத் தவிர ஒருத்தனுக்கும் அது தெரியாது. செல்வம் நம்ம எல்லாரையும்விட தெறமக்காரன். அத ஒத்துக்கறிங்களா?”

“சரி... அதுக்கு?”

“முட்டாத் தாயோலி, அவனத் தனியா விட்டம்ண்டா ரெண்டு வருசத்துலயே பெரிய ஆளா வளந்து நிப்பான். நாம அவங்கூட கடைசி வரைக்கும் கரச்சல் பண்ணிட்டு இருக்கணும். அவென் அப்பிடிப் போகக் கூடாதுன்னா எங்கண்ணேன் செய்றதுதான் சரி...” அவன் சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தாலும், ஒருவருக்கும் அதில் சமாதானம் ஆகாது. கருப்புவுக்குமேகூட கோட்டையோடு செல்வம் நெருக்கமாக இருப்பதில் எரிச்சல் இருந்தாலும் அண்ணனுக்காகப் பொறுமை காத்தான். கோட்டையும் கருப்பும் மட்டுமே இருக்கும்படியான பொழுதுகளில், கோட்டை சொல்லும் ரகசியங்களைத் தன்னைத் தவிர ஒருவருக்கும் சொல்லியிருக்க மாட்டான் என்கிற யதார்த்தம் மட்டுமே அண்ணன் தம்பி இருவரையும் ஆழமாகப் பிணைத்திருந்தது.

சரக்குகளை வாங்குவதற்கான பணம் கொடுப்பது, வியாபாரம் முடிந்து வரும் தொகையை சரியாகப் பராமரிப்பது என எல்லா வேலைகளையும் கோட்டைச்சாமி ஜெகதியிடம் ஒப்படைத்துவிட்டிருந்ததால், செல்வமும் ஜெகதியும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டிய தேவை உருவானது. ஒருநாள் ஒரு பொழுது செல்வம் ஓய்வென வீட்டில் இருந்ததில்லை. தொழிலில் அவன் காட்டிய தீவிரமும், கோட்டையிடம் அவன் காட்டிய விசுவாசமும் ஜெகதிக்குப் பிடித்துப்போயிருந்தது. எந்த அவசரங்களும் இல்லாமல் அவனுக்கான வலையை வீசிக் காத்திருந்தாள். வெயில் நிரம்பிய பகல் நேர வீதியில், வெள்ளை வேட்டி சட்டையோடு ஒரு முதியவர் ஒவ்வொரு வீடாகச் சென்று “ஆத்தா ஜோசியம் பாக்கணுமா?” எனக் கேட்டுக்கொண்டிருந்தார். முதியவரின் குரல் ஒவ்வொரு வீடாகக் கடந்து ஜெகதியின் வீட்டு வாசலில் எதிரொலித்தபோது, தனிமையில் சலித்துப்போயிருந்த ஜெகதி, `சரி கேட்டுத்தான் பாப்போமே’ என்கிற ஆர்வத்தில் கதவு திறந்து அவரை உள்ளே அழைத்தாள். சில்வர் செல்லையா என்ற அந்த முதியவர், வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு கண்களாலேயே வீட்டை மதிப்பிட்டவராக வந்தார். திண்ணையோ முன்னறையோ இல்லாத வீடு. நுழைந்ததும் பெரிய கூடம். காற்றோட்டமும் வெளிச்சமும் நிரம்பிய அவ்வறையில் ஒரு தூணுக்கு அருகில் வாகாக அமர்ந்துகொண்டார். “ஆத்தா கொஞ்சம் தண்ணி குடுக்கறியளா?” களைப்போடு கேட்டவரிடம் “செத்த பொறுங்க… இந்தா வர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அவள் தண்ணீர் சொம்போடு வருவதற்குள் செல்லையாவுக்கு அந்த வீட்டிலிருந்த அறைகளெல்லாம் பரிச்சயமாகியிருந்தன. “இந்தாங்கய்யா தண்ணி...” அவள் கையை நீட்ட, சொம்பை வாங்கும் சாக்கில் கையிலிருந்த ஊசியால் அவள் கையில் குத்த ஆயத்தமானார். “என்ன மாமா இந்தப் பக்கம்?” என்ற சத்தம் கேட்டு சடாரெனச் சுதாரித்தவர், ஒரு கையால் சொம்பை வாங்கியபடி திரும்பிப் பார்க்க, சிரித்தபடியே செல்வம் உள்ளே வந்தான். செல்லையா பதற்றம் குறைந்து, “அட மாப்ள, நம்மளுக்குத் தெரிஞ்சவங்க வீடா?” எனச் சிரித்தார். “ஆமா மாமா... கொஞ்சம் அசந்தா போதுமே, உன் வேட்டைய ஆரம்பிச்சிருவ?”

“அட இல்ல மாப்ள. யாரோ வெளியூர்க்காரப் புள்ளைபோலன்னு வந்துட்டேன்...” எனச் சிரித்தவரையும் செல்வத்தையும் புரியாமல் பார்த்த ஜெகதி, “ரெண்டு பேருக்கும் பழக்கமா?” எனக் கேட்டாள்.

“ஆமா எங்கய்யாவும் மாமாவும் முப்பது வருச தோஸ்துங்க. ரெண்டும் கேடிங்க. வீடு புகுந்து திருடறதுல மாமனுக்கு முப்பது வருச எக்ஸ்பீரியன்ஸ்!” என்றதும், ஜெகதி சத்தமாகச் சிரித்துவிட்டாள். “செத்த அசந்திருந்தா இங்கியும் ஆட்டையப் போட்ருப்பாப்ளையா?”

ரெண்டாம் ஆட்டம் - 40

“ஆமாங்க அத்தாச்சி… தெறமையான களவாணிதான். ஆனா நல்லா ஜோசியம் பாப்பாப்ல...”

“சரி அப்ப உக்காருங்க. என் தலைல என்னதான் எழுதிருக்குன்னு பாத்துச் சொல்லுங்க...” அவரின் கையிலிருந்த சொம்பை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு ஜெகதி உட்கார, அவர்கள் இரண்டு பேரும் அருகிலேயே அமர்ந்தார்கள். “ஆத்தா மகமாயி… நல்ல வாக்கா சொல்லு” கண்ணை மூடி வேண்டிக்கொண்டவர், ஒரு வெள்ளைத்தாளைப் பிரித்து ஜாதகக் கட்டங்களை வரையத் தொடங்கினார். அவள் தனது பெயர் மற்றும் ராசியைச் சொல்ல, கவனமாகக் கேட்டுக்கொண்டு ஜாதகக் கட்டங்களுக்குள் கிரகங்களை எழுதினார். விரல்களால் கிரக நகர்வுகளை எண்ணியபடியே கட்டங்களுக்குள் கிரகங்களை மாற்றி மாற்றி எழுதியவர் மும்முரமாகச் சில எண்களை எழுதிக்கொண்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு, தலையை உயர்த்தி இருவரையும் பார்த்தவர் “நல்லதும் கெட்டதும் சேந்திருக்க அதிர்ஷ்டம்மா உனக்கு. இப்ப நீ வாழ்ற வாழ்க்க நீயே தேடிக்கிட்டது இல்ல. அதனால வெறுப்பும் ஆத்திரமும் இருக்கும். சரியா?’’ அவள் பதில் சொல்ல முடியாமல் உறைந்துபோயிருந்தாள். முகத்திலிருந்த சிரிப்புத் தொலைந்துபோயிருந்தது. “இன்னும் சொல்றேன் கேளு, பாரம் சொமக்கறதாலயே குதிரை கழுதையா ஆகிடாது. உன்னயக் கழுதைன்னு நெனச்சிட்டுருக்க எல்லாருக்கும் நீ குதிரைன்னு தெரிய வர்றப்போ எல்லாரும் உன்னய அண்டித்தான் பொழைக்கணுங்கற விதி வரும். பத்துப் பேருக்குச் சூதுவாதுன்னா என்னன்னு சொல்லிக் குடுக்கற பக்குவம் உனக்கிருக்கு. இது ஒண்ணு போதும், நீ எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரக் கட்டி ஆளுவ…” அவளது கையைப் பிடித்து வாக்குக் கொடுப்பதுபோல் சொல்ல, செல்வம் சத்தமாகச் சிரித்தான்.

‘‘எதுக்கு மாப்ள சிரிக்கிற?’’

‘‘யோவ் சும்மா இரு மாமா. கொஞ்சம் வருசம் முன்ன ஜெயில்லவெச்சு எனக்குந்தான் சொன்ன, நீ மதுரையவே கட்டி ஆளப் போறடான்னு… இன்னிக்கி வரைக்கும் அதுக்கொரு வழியக் காணாம்...”

செல்வம் சலிப்போடு சொல்ல, செல்லையா சிரித்தார். இருவரையும் பொதுவாகப் பார்த்தபடியே ‘‘முட்டாப்பயலே வழி எப்பவும் திறந்துதாண்டா இருக்கு. உனக்குத்தான் கண்ணு தெரியல. சீக்கிரமே கண்ணு முழிப்ப, அப்ப புரியும் நான் சொன்னதெல்லாம்...’’ என்று சொல்லும்போது, செல்வத்தின் கண்களில் தெரிந்த அதிகாரத்துக்கான ஆசையையும் வெறியையும் ஜெகதி கவனித்துவிட்டாள். அவனும் தன்னைப்போலவே வேட்டைக்குக் காத்திருக்கும் கழுகுதான் என்கிற யதார்த்தத்தை அந்த நொடி முழுமையாகப் புரிந்துகொண்டவள் “சரிங்கய்யா, நடக்குதோ நடக்கலையோ நீங்க சொன்ன வார்த்த மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. இருங்க நான் போயி காசு எடுத்துட்டு வரேன்...” எழுந்துகொள்ளப் போனவளை நிறுத்திய செல்லையா “அதெல்லாம் வேணாம்த்தா. நான் சொன்னதெல்லாம் நடந்ததுக்கு அப்றம் மனசு நெறஞ்சு என்ன செய்யணும்னு தோணுதோ செய். இப்ப எதுவும் வேணாம்” என்று சொல்லிவிட்டு தன் உடையைச் சரிசெய்துகொண்டு வாசலை நோக்கி நடந்தார். செல்வமும் ஜெகதியும் மெளனமாக அவரைத் தொடர்ந்தனர். வாசலுக்கருகில் நின்றவர் திரும்பி “இன்னொண்ணும் சொல்றேன். நீங்க ரெண்டு பேரும் சேந்து இருக்கணுங்கறது விதி. அதுவும் நடக்கும். இப்ப உங்க ரெண்டு பேத்துக்கு நடுவுல என்ன ஏதுன்னு எனக்குத் தெரியாது, ஆனா எப்ப சேந்து இருக்கறீங்களோ அப்ப நான் சொன்னதெல்லாம் நடக்குதா இல்லையான்னு பாருங்க...” என்றவர், வாசலைக் கடந்து விறுவிறுவென வெளியேறினார். செல்வத்துக்கு சர்வமும் அடங்கிப்போனது. பதற்றத்தில் உடல் நடுங்க, அங்கு நிற்கத் துணிவில்லாமல் அவனும் அவசரமாகத் தெருவிலிறங்கி நடந்தான். வெயில் மூர்க்கமான மிருகமாக அவன் முதுகில் தொற்றிக்கொண்டதைப் பார்த்தபடியே நின்றிருந்த ஜெகதி, அவன் தெருமுனையைத் தாண்டிய பின்பாகத்தான் வீட்டுக்குள் வந்தாள்.

(ஆட்டம் தொடரும்)