அரசியல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 41

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

‘‘உங்க வீட்ல யாருக்கும் என்னயக் கண்டாலே ஆகாது. என்னய எதுக்கு வீட்டு விசேஷத்துக்கெல்லாம் கூப்டறீங்க?”

ஒன்றிலிருந்து மனம் எவ்வளவு விலக நினைக்கிறதோ அவ்வளவு நெருங்கிச் செல்லும். கோட்டைச்சாமி, ஜெகதி என இருபெரும் நீர்ச்சுழலுக்குள் சிக்கிக்கொண்டவனாக செல்வம் அல்லலுற்றான். தப்பிச்செல்ல எத்தனையோ வழிகளிருந்தும், அந்தச் சுழலிலிருந்து அவன் தன்னை மீட்டெடுக்கவில்லை. தனது அந்தரங்கமான ஆசைகள் அவ்வளவும் ஜெகதிக்குத் தெரிந்துவிட்டதால் அவளை எதிர்கொள்ளும்போது மட்டும் ஒருவித குறுகுறுப்பு அவனுக்குள் எழுந்தடங்கும். ‘இவ்வளவையும் தெரிந்துகொண்டு அவள் ஏன் தன்னிடம் எதையும் கேட்பதில்லை? அருகிலிருக்க நேரும் தருணங்களில் எப்போதும்போலவே இருக்கிறாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் அவஸ்தைகொண்டான். எல்லாவற்றையும்விட அவன் கிறங்கிப்போனது அவளது வியர்வை வாசனையில்தான். காட்டு மலர்களிடமிருக்கும் அடர்த்தியான நெடி அது. மிகச் சில நொடிகள் மட்டும்தான் நெருங்கிச் சென்றிருப்பாள், ஆனால், அந்த வாசனை நாள் முழுக்க அவனுக்குள்ளேயே சுழன்றபடியிருக்கும். அவளுடலை அவளது வியர்வையின் வாசனையே அவனுக்கு ஒவ்வொரு நாளும் நெருக்கமாக்கிக்கொண்டிருந்தது. அவனது அந்த பலவீனத்தைத் தெரிந்து கொண்டவள்போல் ஜெகதியும் முன்புபோல் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டாள். தனது வியர்வைதான் அந்த மீனைப் பிடிக்க வீசப்படும் தூண்டில் என்பதைப் புரிந்துகொண்டு தனது அருகாமையை அவனுக்கு அவ்வப்போது உணர்த்தியபடி இருந்தாள்.

‘‘உங்க வீட்ல யாருக்கும் என்னயக் கண்டாலே ஆகாது. என்னய எதுக்கு வீட்டு விசேஷத்துக்கெல்லாம் கூப்டறீங்க?”

“ஏய் நீயா ஏதாச்சும் நெனச்சுக்காத… எல்லாருக்கும் உம்மேல ஒரு மரியாத இருக்கு. உன் பாட்டுக்கு வா… விசேஷத்துல நில்லு. விருந்து முடிஞ்சதும் கெளம்பிரு...”

ரெண்டாம் ஆட்டம் - 41

“உங்களுக்கென்ன, நீங்க சொல்லிட்டு உங்க வேலையப் பாக்கப் போயிருவீங்க. அங்க ஒவ்வொருத்தரும் பாக்கற பார்வைக்கும், கேக்கற கேள்விக்கும் நான்தானே பதில் சொல்லணும்...”

“கேணத்தனமா பேசாத. உன்னய அப்பிடி விட்ருவனா? செல்வம் இருக்கான், என் தம்பி கருப்பு இருக்கான். அவய்ங்க உன்னய நல்லாப் பாத்துக்குவாய்ங்க… நீ வா...”

“உங்களுக்கு என்ன சொன்னாலும் மண்டைல ஏறாது. என்னால எந்த முடிவும் இப்பச் சொல்ல முடியாது. செவனேன்னு இருக்க விடுங்க.”

“இந்தாரு ஜெகதி, இந்த மாதிரி நேரத்துல எல்லாரோடயும் ஒண்ணுமண்ணா பழகினாத்தான அவய்ங்களும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு இருப்பாய்ங்க. நீ ஒதுங்கியே இருந்தா எனக்கு நீ வெப்பாட்டின்னுதான எல்லாருக்கும் தோணும்.”

“ஆமா... எல்லாரோடயும் பேசிப் பழகிட்டா மட்டும் நான் வெப்பாட்டி இல்லன்னு ஆயிருமா?”

கோட்டைச்சாமி அவசரப்பட்டுவிட்டோமோ என யோசித்துக்கொண்டிருக்கும்போதே ஜெகதி வேகமாகச் சென்று தன் அறையின் கதவுகளைச் சாத்திக்கொண்டாள். அதற்குமேல் அவளைச் சமாதானப்படுத்துவதற்கான பொறுமையும் அவகாசமும் அவனுக்கில்லை. அருகிலிருந்த செல்வத்தை அழைத்தவன் “எலேய்... இவள எப்பிடியாச்சும் சமாதானப்படுத்தி காலைல பாண்டிகோயில் கூட்டிட்டு வந்துர்றா…’ என்றபடியே சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினான். ‘என்னண்ணே கடைசில என்னய மாட்டிவிட்டுட்டுப் போற... நான் எப்பிடிண்ணே சமாதானப்படுத்துவேன்?” செல்வம் பதற்றமாக, “ஏதாச்சும் சொல்லி சமாளிடா… இவள விட்டுட்டு விசேஷம் நடத்தினா, மனசு கேக்காது. அதான் வரச் சொல்றேன். அவ புரிஞ்சுக்க மாட்றா...”

“சரிண்ணே. நான் ஒருவாட்டி சொல்லிப் பாக்கறேன்...” செல்வம் தயக்கத்தோடு சொன்னபடியே கோட்டையோடு வாசல் வரை நடந்தான். கோட்டை தனது காரில் ஏறிக் கிளம்ப, வீட்டுக்குக் கிளம்புவதா அங்கேயே இருப்பதா என்கிற குழப்பத்தோடு செல்வம் நின்றான்.

“ஏங்க... அண்ணன் நீங்க வந்தா நல்லா இருக்கும்னு ஆசப்படறாரு. நாளைக்கு செத்தவடம் போயி தலையக் காட்டிட்டு வந்துரலாமே...” ஜெகதியின் அறைக்கு வெளியில் நின்று தயக்கத்தோடு சொன்னான். அவளிடமிருந்து பதிலெதுவும் இல்லை. “நீங்க காலைல வெள்ளனவே கிளம்பி இருங்க. நான் வந்து கூட்டிட்டுப் போறேன்” அங்கிருந்து தப்பித்தால் போதும் என்கிற அவசரத்தில் சொல்லி முடிக்க, சோர்வோடு கதவுகளைத் திறந்த ஜெகதி “பாண்டிகோயிலுக்கு எனக்கு வழி தெரியும். நீ பொத்திக்கிட்டு கெளம்புடா” என முறைத்தாள். செல்வத்துக்கு அச்சத்தில் உள்ளங்கை வியர்க்கத் தொடங்கிவிட, அவசரமாக வெளியேறி தன் பைக்கில் கிளம்பிவிட்டான்.

ஆடிக்காற்றில் கோயிலைச் சுற்றியிருந்த மரங்களெல்லாம் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்க, பாண்டி கோயிலிலிருந்து மாட்டுத்தாவணிக்குச் செல்லும் சாலையிலிருந்த மண்டபம் ஒன்றில் கோட்டைச்சாமி வீட்டு விசேஷம் நடந்துகொண்டிருந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் பிரமாண்டமான பேனர்கள் அணிவகுத்து நிற்க, வெவ்வேறு நடிகர்களின் உடல்களில் கோட்டைச்சாமியின் முகமும், அவன் தம்பிகளின் முகமும் ஒட்டப்பட்டிருந்தன. மைக் செட்டில் பாடல்கள் ஓயாமல் அலறிக் கொண்டிருக்க, காது குத்துவதற்காக நெருங்கின சொந்தக்காரர்கள் மட்டும் கோயிலுக்குச் சென்றிருந்தனர். செல்வம் தன் கூட்டாளிகளோடு சாப்பாடு பரிமாறும் இடத்தில் ஓடியாடி வேலை செய்துகொண்டிருக்க, சோணை அவசரமாக வந்து “ஏய்... அத்தாச்சி வந்து அங்க ஒத்தைல நிக்கிதுய்யா...” என முணுமுணுத்தான். “ஏய்... அத்தாச்சிதான் காது குத்த கோயிலுக்குப் போயிருச்சேடா...” செல்வம் புரியாமல் கேட்க, “யோவ் கேணக்கூ… ரெண்டாவது அத்தாச்சி வந்திருக்கு…” சோணை சத்தமாகச் சொன்ன பிறகுதான் செல்வத்துக்கு உரைத்தது. “நீ இங்க இருந்து பாத்துக்க, நான் வந்துர்றேன்...” செல்வம் அவசரமாகக் கிளம்பி மண்டபத்தின் முன்வாசலுக்குச் சென்றான். ஜெகதி அதிக ஒப்பனைகளோ ஆடம்பரங்களோ இல்லாமல், சாதாரணமாக ஒரு காட்டன் சேலையில் வந்திருந்தாள். ஆனால் அப்போதும்கூட எவரையும் சுண்டியிழுக்கும் உடல் நேர்த்தியும் கவர்ச்சியும் அவளிடம் வெளிப்படுவதாகவே இவனுக்குத் தோன்றியது. செல்வம் சிரித்தபடியே ‘‘வாங்க அத்தாச்சி, எங்க வர மாட்டீங்களோனு நெனச்சுட்டுருந்தேன்’’ என்றபடி அவளை அழைத்துச் சென்று மண்டபத்தினுள் உட்காரவைத்தான். சுற்றியிருந்த எல்லோரையும் மிரட்சியோடு பார்த்த ஜெகதி, “செல்வம்... செத்தவடம் இரு, நீயும் போயிட்டா நான் யாருகிட்ட பேசறது?’’ என அவனை நிறுத்தினாள். அவளருகில் உட்கார்வதைத் தவிர்த்துவிட்டு, செல்வம் அப்படியே நின்றான். மண்டபத்திலிருந்த அத்தனை பேரின் கண்களும் அவளை மேய்வதை செல்வமும் தெரிந்துகொண்டான். ஆண்களின் கண்களில் மிதமிஞ்சிய காமமும், பெண்களின் கண்களில் தாங்கொண்ணா பொறாமையும் ஒருசேர கொப்பளித்தன. ஜெகதி எவரையும் கண் பார்க்கும் துணிச்சலின்றி அமைதியாக வாசலைப் பார்த்து அமர்ந்திருந்தாள்.

ரெண்டாம் ஆட்டம் - 41

‘‘எங்கியாச்சும் போயி எதையாச்சும் இழுத்துட்டு வந்துர்றாய்ங்க. இதுகளும் வெக்கப் பொச்சு இல்லாம வந்துருதுக. அடுத்தவ குடும்பத்தக் கெடுக்க...’’

‘‘நீ வேறக்கா, ஊருக்குள்ள பாதிப் பொம்பளைக இத ஒரு பொழப்பாவேதான் செய்றாளுக. தின்னு கொழுத்துப்போனா பத்து ஆம்பளையப் பாத்தாதான தெனவு அடங்கும்...’’

‘‘அடியே நான் ஆத்தக் கண்டனா, அழகரக் கண்டனா? அந்தா உக்காந்திருக்கா பாரு அவளக் கேட்டா தெரியும். எத்தன ஆம்பளகிட்ட போனா அடங்குவன்னு...’’

தன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக் கிறார்கள் என்பது தெரிந்தாலும், ஜெகதி அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பாமல் பொறுமை காத்தாள். ‘‘இத்தன ஆம்பள இருக்காய்ங்களே ஒருத்தனாச்சும் நீ யார்டி கண்டாரோலி... இங்க வந்திருக்கன்னு கேட்டு அவ மண்ட மசுத்தப் பிடிச்சு அடிக்கிறானா? எல்லாம் காஞ்ச தாயோலிக… எப்பிடிப் பாக்கறாய்ங்க பாரு...’’ ஒரு கிழவி சுற்றியிருந்த ஆண்களைப் பார்த்துக் காறித் துப்ப, செல்வம் பொறுக்க மாட்டாமல் ‘‘யத்தா யாரு எவருன்னு தெரியாம உம்பாட்டுக்கு எதையாச்சும் பேசாத…’’ என முறைத்தான். ‘‘ஆமா இவ பெரிய நிலக்கோட்ட ஜமீன் வம்சம். போடா ஏலேய் புடுங்கிதின்னிப் பயலே... அவனுக்குக் கூட்டிக்குடுத்து கஞ்சி குடிக்கிற நாயிதான நீயி… பொத்திக்கிட்டு நில்லு’’ கிழவி காட்டமாகக் கத்த, உடனிருந்த பெண்களும் கிழவியோடு சேர்ந்து கத்தினார்கள். சூழ்ந்திருந்த ஆண்கள் சூழல் தீவிரமாவதை உணர்ந்து மெல்ல நகர்ந்து செல்ல, ஜெகதி அதற்குமேல் பொறுக்க முடியாதவளாய் எழுந்து வாசலை நோக்கி நடந்தாள். சரியாக அதேநேரம் கோட்டைச்சாமி தன் குழந்தைக்குக் காது குத்திவிட்டு குடும்பத்தோடு உற்சாகமாக உள்ளே வந்தான். அழுத கண்களைத் துடைத்தபடியே வாங்கி வந்த சங்கிலியைக் குழந்தையின் கழுத்தில் போடப் போனவளிடமிருந்து பிடுங்கிய கோட்டையின் மனைவி சங்கரி, ‘‘கண்ட தேவடியாளும் சங்கிலி போட்டு விடுறதுக்காகவா நான் புள்ளய பெத்துவிட்ருக்கேன்’’ என அதைத் தூக்கி எறிந்தாள். ஜெகதி திரும்பி, கோட்டைச்சாமியை முறைத்துவிட்டு கூட்டத்தை விலக்கி மண்டபத்திலிருந்து வெளியேற, செல்வம் கீழே கிடந்த சங்கிலியை எடுத்துக்கொண்டு அவசரமாக ஜெகதியின் பின்னால் ஓடினான்.

இதயம் நொறுங்கிய நிலையில் ஒரு பெண்ணை எதிர்கொள்வதைப்போல் ஆணுக்கு நேரும் துரதிர்ஷ்டம் வேறில்லை. சாத்தப்பட்ட தன் அறைக்குள் அழுது தீர்த்தவளை ஆறுதல்படுத்த செல்வம் நீண்டநேரமாக முயன்று தோற்றுப்போனான். ‘‘ரெண்டு நிமிசம் கதவத் தொறங்க அத்தாச்சி’’ கெஞ்சிக் கெஞ்சி அவனுக்குத் தொண்டைகட்டிப் போயிருந்தது. நீண்ட நேரத்துக்குப் பிறகு கதவைத் திறந்தவள், ‘‘பசிக்குதுடா...’’ எனப் பரிதாபமாக அவனைப் பார்த்தாள். அவசரமாக சமையலறைக்குள் சென்று மிச்சம் மீதியிருந்த உணவையெல்லாம் தட்டில் போட்டு எடுத்துவந்து அவளிடம் கொடுக்க, அவள் கைகள் நடுங்க அள்ளிச் சாப்பிட்டாள். அவளை அப்படிப் பார்க்கப் பிடிக்காமல், களைந்து கிடந்த கூந்தலை அள்ளி முடிந்துவிட்டவன், தோளில் நிற்க சிரமங்கொண்ட சேலையை சரிப்படுத்திவிட்டான். அழுது வடிந்ததால் கன்னங்களில் ஒட்டியிருந்த கண் மை கறுப்பை ஆட்காட்டி விரலால் துடைத்துவிட்டபோது இன்னும் சில துளி கண்ணீர் வெளியேறியது. அவனின் கண்களை ஊடுருவிப் பார்த்தவளை இந்தமுறை எந்த அச்சமுமில்லாமல் இறுக அணைத்துக்கொண்டான்.

(ஆட்டம் தொடரும்)