Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 42

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

சினிமா தியேட்டர்களில் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, மணியோடும் கூட்டாளிகளோடும் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோ லட்சியங்களோ இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த நாள்கள் கடந்துபோய், பல காலமெல்லாம் ஆகியிருக்கவில்லை

ரெண்டாம் ஆட்டம்! - 42

சினிமா தியேட்டர்களில் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, மணியோடும் கூட்டாளிகளோடும் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோ லட்சியங்களோ இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த நாள்கள் கடந்துபோய், பல காலமெல்லாம் ஆகியிருக்கவில்லை

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

எத்தனை பெரிய ஆத்திரக்காரனையும் வன்முறையாளனையும் மண்டியிடச் செய்யும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. முதன்முறையாகத் தனக்கு மனித உணர்ச்சிகளின் அபூர்வமான தருணங்களெல்லாம் பிடிபடுவதுபோல் மருது உணரத் தொடங்கினான். வேணியோடிருந்த உறவை என்னவென்று சொல்லத் தெரியாது, ஆனால் இது அப்படியில்லை. சாயலில் அவளைப்போலிருந்தாலும் குணத்தில் வள்ளி வேறு யாரோடும் ஒப்பிட முடியாதவள். மருதுவுக்குள் ஆசை எட்டிப் பார்த்த அடுத்த நிமிடமே, காளி அவளை அவனுக்கானவளாக மாற்றிவிட்டான். திருவிழா முடிந்த அடுத்த நாள் காலையில், ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் முடிந்து எல்லோரும் உற்சாகமாகத் திரும்பினார்கள்.

“ஏண்ணே... இனிமே இந்தக் காவி வேட்டியும் ருத்ராட்ச மாலையும் உனக்குத் தேவப்படாதுல்ல…”

காரில் வரும்போது முத்தையா வெனையமில்லாமல் கேட்க, எல்லோரும் சத்தமாகச் சிரித்துவிட்டார்கள். மருதுவும் சிரித்தபடியே ருத்ராட்ச மாலையைக் கழற்றி முத்தையாவிடம் கொடுத்தான்.

“இந்தாடா நீ வெச்சுக்க…”

“அட நீ வேற, இதையெல்லாம் நான் போட்டா ஊரே சிரிப்பாய்ங்க...” என்றபடியே வாங்க மறுத்துவிட்டான்.

ரெண்டாம் ஆட்டம்! - 42

தன்னைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதையெல்லாம் மருது நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். சினிமா தியேட்டர்களில் ரெண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு, மணியோடும் கூட்டாளிகளோடும் வாழ்க்கையைப் பற்றிய கனவுகளோ லட்சியங்களோ இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த நாள்கள் கடந்துபோய், பல காலமெல்லாம் ஆகியிருக்கவில்லை. அதற்குள் எத்தனை இழப்புகள், எத்தனை ரத்தம், எத்தனை மீட்சி… ஒவ்வொரு நாளும் தானொரு புதிய மனிதனாக மாறிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. காளி, தனது வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியே மருதுவுக்குப் புது வீடொன்றை எடுத்துக் கொடுத்தான். வள்ளியும் மருதுவும் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்க்கும்போது சுப்புத்தாயுடன் கழித்த வாழ்வின் மகிழ்ச்சியான நாள்கள் நினைவுக்கு வரும். கசப்பேறிய பின், எந்த மருந்துகளாலும் உறவைச் சரிசெய்ய முடியாது. காளிக்குத் தன் மனைவியின் மீதான கசப்பு உடலெங்கும் கலந்துபோயிருந்தது. எல்லாவற்றையும் மறந்து அவளை நெருங்க நினைக்கிறபோதெல்லாம், அந்தக் கசப்பு இரக்கமேயில்லாமல் அவனை விலக்கிவிடும். இனி ஒருபோதும் தனக்கில்லை என்றான மகிழ்ச்சியையெல்லாம் மருது அனுபவிக்கட்டும் என விலகி நின்று ரசித்தான். முத்தையாவுக்குக் கூடிய விரைவில் ஒரு வழிசெய்துவிட வேண்டும் என யோசனை வந்தது.

“எலேய் முத்து... நீயும் வெரசா கல்யாணத்தப் பண்ணிருடா...”

“எண்ணே... எனக்கு எவன்ண்ணே பொண்ணு குடுப்பான்?”

“ஏண்டா உனக்கென்ன கொற?”

“நானே ஒரு அன்னக்காவடி. நான் கலியாணம் பண்ணி எத வெச்சுண்ணே குடும்பம் நடத்துவேன்…”

“அட கிறுக்குப் பயலே… நான் இருக்கண்டா... நீ பொண்ணப் பாரு…”

காளி உற்சாகமாகச் சொன்னாலும், முத்தையாவுக்கு உடனடியாகக் கல்யாணம் கட்டும் எண்ணமில்லை. காளிக்கு எல்லாமுமாகத் தான் மட்டுமே இருக்கப்போகிறோம் என்கிற அவனது நம்பிக்கைகளையெல்லாம் மருது எப்போதோ உடைத்துவிட்டிருந்ததோடு காளிக்குப் பிறகு மதுரையில் மருதுதான் என்கிற பிம்பத்தை உருவாக்கிவிட்டிருந்தான். தகுதியும் தாட்டியமும் அவனுக்கு இருக்கிறதுதான் என்றாலும், அந்த இடத்தை அத்தனை எளிதில் விட்டுக்கொடுப்பதற்கு முத்தையாவுக்கு மனமில்லை.

மலைச்சாமி ஜாமீனில் வெளியானதும், காளியிடம் வந்து சேர்ந்துகொண்டான். மருதுவுக்குப் புதிதாக சாராயக்கடைகளையும், அடகுக்கடையும் வைத்துக்கொடுத்த காளி, உதவிக்கு மலைச்சாமியை வைத்துக்கொள்ளச் சொல்லி அனுப்பினான். பத்தோடு பதினொன்றாகச் சம்பவம் செய்கிறவர்களுக்கும், பெரிய தலைகளைச் செய்துவிட்டு வருகிறவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மலைச்சாமி வெட்டியது மதுரையின் முன்னாள் மேயரென்பதால், பெரியாட்கள் மட்டத்தில் அவனுக்குத் தனி மரியாதை இருந்தது. குள்ளமாக அகன்ற உடல்கொண்ட மலைச்சாமி, ஜாமீனில் வந்த பிறகு இயல்புக்கு அதிகமான தெனாவெட்டோடு நடக்கத் தொடங்கினான். புதிதாக அவனைப் பார்க்கும் ஒருவனுக்கு ‘சுத்த கோமாளியா இருப்பான்போல’ என்ற எண்ணம்தான் வரும். விவரம் தெரிந்தவர்கள் அவன் பக்கமே பார்க்க மாட்டார்கள். யாராவது தன்னைக் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் கூப்பிட்டு வைத்து செவிட்டிலேயே அறையும் விநோதப் பழக்கம் அவனுக்கு உண்டு.

மகளின் கொடூரச் சாவும், மகனுக்கு நேர்ந்த துயரமுமாக மூர்த்தி முற்றிலுமாக நொறுங்கிப்போய்விட்டார். அறிவு மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த நாளே அவனை மெட்ராஸுக்கு அனுப்பிவைத்துவிட்டார். “இங்கனக்குள்ளயே இருக்கவரைக்கும் இந்தப் பக ஓயாதுடா அறிவு… போயிரு… கண்காணாத இடத்துல இனியாச்சும் நிம்மதியா இரு…” மனதிலிருந்த வலிகளையெல்லாம் மகனிடம் காட்டிவிடக் கூடாது என்கிற வைராக்கியத்தோடு அழுகையை மறைத்துக்கொண்டார். அவன் தூரமாயிருந்தாலுமேகூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறானா என அவர் அச்சங்கொள்ளாத நாளில்லை. இந்த பயத்துடனேயே நீண்டகாலம் வாழ முடியாது என முடிவெடுத்தவர், ஒருநாள் அதிகாலையில் காளியின் வீட்டுக்குச் சென்றார். விடிந்தும் விடியாமல் அவரைப் பார்த்ததும் வீட்டிலிருந்தவர்கள் பதறினார். உறக்கம் களைந்து எழுந்து வந்த காளி, அவர் முகத்திலிருந்த உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக “போயி எல்லாம் வேலையப் பாருங்க. நான் பேசிக்கிறேன்” என்று அனுப்பிவிட்டு, அவரோடு வீட்டின் முன்வாசலில் அமர்ந்தான். காளியின் மனைவி இருவருக்கும் தேநீர் கொடுத்தாள். தேநீரை வாங்கியவர் அருந்தாமல் தயங்கியபடியே தரையைப் பார்த்துக்கொண்டிருக்க “எதுவா இருந்தாலும் பேசிக்கலாம், டீயக் குடிங்கண்ணே...” மூர்த்தி அவனைப் பார்த்துவிட்டு மெதுவாகத் தேநீரை உறிஞ்சிக் குடித்தார். காளி பொறுமையாகத் தேநீரைக் குடித்துவிட்டு, அவர் பேசக் காத்திருந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 42

“நாங்க தோத்துட்டம்யா… இதுக்குமேல மல்லுக்கட்ட முடியாது. எங்கள விட்ரு...”

கையிலிருந்த தேநீர் தம்ளரைக் கீழே வைத்துவிட்டு கையெடுத்து அவனைக் கும்பிட்டார். காளி நிதானமாக அவரைப் பார்த்து “என்னண்ணே இது... கும்பிட்டுக்கிட்டு, விடுங்க...” எனக் கும்பிட்ட கையை எடுத்துவிட்டான். “இல்லய்யா... என்னண்டாலும் இன்னிக்கி நீ பெரியாளு… எங்கள ஜெயிச்சிட்ட. இனி நீ சும்மா இருந்தாலும் உங்கூட இருக்கவய்ங்க சும்மா இருக்க மாட்டாய்ங்க. எங்கிட்ட பதவி இல்ல, பணம் இல்ல... எல்லாம் போயிருச்சு. இருக்கறத வெச்சு என் மகன கரையேத்திக்கறேன். எங்களுக்கு எதும் ஆகாதுன்னு ஒரு வார்த்த நீ சொல்லு... போதும்.”

“அட... எம்பிள்ளைக மேல சத்தியமா உங்க வீட்ல யாருக்கும் எதுவும் ஆகாது. தயவுசெஞ்சு நீங்க அழுகறத நிறுத்துங்க…”

காளி சிரமத்தோடு அவரைச் சமாதானப்படுத்தினான். பதவி, புகழ் எல்லாம் காணாமல் போய், சாதாரண மனிதனாக இவரை இப்படிப் பார்ப்போம் என ஒருநாளும் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. மூர்த்தியால் அவனுக்கு நேர்ந்த தீமைகளைவிடவும் நன்மைகள் அதிகம். அந்த நன்றிக்கடன் அவன் மனசாட்சியை உறுத்தியது. ஒருமுறைக்கு இரண்டுமுறை சத்தியம் செய்து அவரை ஆறுதல்படுத்தி அனுப்பினான்.

மூர்த்தியோடு சமாதானமான கதை ஊரெல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், பகையும் நெருப்பும் முழுமையாக அழிக்கும் வரை அணைவதில்லை என்பதை முத்தையா அறிந்திருந்தான். அறிவு அடிபட்ட நரி, சாகும் வரையிலும் மனதிலிருக்கும் பகையை அவனால் கடந்து செல்ல முடியாது என்பதை அவனோடு பழகியதிலிருந்து முத்தையாவால் புரிந்துகொள்ள முடியும். தனக்கான இடத்தை மீட்க வேண்டுமானால், தடையாக இருக்கும் மருதுவும் மலைச்சாமியும் ஒழிய வேண்டும். அதனாலேயே அவர்கள் இருவரோடும் மிக நெருங்கிப் பழகத் தொடங்கினான். ஒருவனை வீழ்த்த எளிதான வழி, அவனுக்கு நெருங்கிய நண்பனாகிவிடுவதுதான் என்பது முத்தையாவின் கணக்கு. அது பலிக்கவும் செய்தது. மலைச்சாமியின் பலவீனத்தை வெகு சீக்கிரமே கண்டுகொண்டவன், அவனுக்குத் தனியாகக் கட்டம்கட்டத் தொடங்கியதோடு, மெட்ராஸில் தன் போக்கில் வாழ்ந்துகொண்டிருந்த அறிவின் மனதில் கிடந்த பகையைக் கிளறிவிடத் தயாரானான். கையை இழந்த காயத்தைவிடவும் அக்காவை இழந்த காயம்தான் அறிவுக்குள் ஆழமாக இறங்கியிருந்தது. அந்தக் காயத்தைக் கிளறும்விதமாக, மருதுவின் திருமணப் புகைப்படத்தைத் திருட்டுத்தனமாகப் பிரதியெடுத்து அதோடு ஒரு கடிதத்தையும் வைத்து மெட்ராஸிலிருந்த அறிவின் வீட்டுக்கு அனுப்பிவைத்தான் முத்தையா. அவன் முயற்சி வீண்போகவில்லை.

“சொந்த அக்காவ தல வேற முண்டம் வேறயா வெட்டிப் போட்டுட்டு இதே ஊர்ல அவன் கல்யாணம் முடிச்சிட்டான். நீ அவனுக்குப் பயந்துக்கிட்டு அசலூருக்கு ஓடிட்ட...’ பெயரிடப்படாத அந்தக் கடிதம் அறிவுக்குள் முடங்கிக்கிடந்த பகையின் எரிமலை வெடிக்கக் காரணமானது. அப்பா, மருதுவை எதிர்க்கச் சம்மதிக்க மாட்டார் என்பதால் அவருக்குத் தெரியாமலேயே அதைச் செய்ய முடிவெடுத்தான்.

(ஆட்டம் தொடரும்)