அரசியல்
அலசல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 43

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

எலேய் அந்த ரூட்டு இருக்கால்ல, இவனோட அக்காதான்’ என்று சந்திரனின் காதுபடவே சில வேளைகளில் ஆட்கள் பேசிக்கொள்வதுண்டு

சந்திரனுக்கு ஓர் அக்கா உண்டு. புதிதாகத் தொடங்கப்பட்ட அப்பள கம்பெனியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த அவளுக்கு வீட்டிலிருந்து கம்பெனியின் தூரம் பத்து நிமிட நடைதான். ஆனால், அவள் அந்த தூரத்தை முக்கால் மணி நேரத்தில் கடப்பாள். வில்லா புரத்திலிருந்த நடுத்தர வயது ஆண்கள் ஒவ்வொருவருமே அவள் மீதிருந்த இச்சையைத் தங்கள் உரையாடலில் வெளிப்படுத்துவார்கள். அதில் சிலர் அவளுடலை ருசித்தி ருந்தாலும் பெரும்பாலானவர்கள் அவளை நெருங்காமலேயே வெறும் சொற்களால் புணர்ந்துகொண்டிருந்தனர்.

அவளோடு சல்லாபித்ததாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வதிலேயே ஒரு விநோதக் கிளுகிளுப்பை உணர்ந்தார்கள். “எலேய் அந்த ரூட்டு இருக்கால்ல, இவனோட அக்காதான்’ என்று சந்திரனின் காதுபடவே சில வேளைகளில் ஆட்கள் பேசிக்கொள்வதுண்டு. அவனுக்கு அந்த வார்த்தைகள் பழகிப்போனதால் பொருட்படுத்தாமல் கடந்துவிடுவான். சிறியதும் பெரியதுமாக அந்தப் பகுதியில் ஏராளமான அப்பள கம்பெனிகள் தொடங்கப்பட்டு, பெண்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் ஒரு சந்தையாக வளர்ந்துகொண்டிருந்தன. வீடுகளிலிருந்து பெண்கள் பெருங்கூட்டமாக வேலைகளுக்காக வெளியேறத் தொடங்கியிருந்த அந்த நாள்களில், ஆண்கள் பெண்களின் மீதான பொறாமை உணர்வுகளோடும், வெறுப்புகளோடுமே எதிர்கொண்டார்கள். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் சம்பளக் காசோடு வரும் இளம்பெண்கள், தங்களின் தன்மானத்தைத் தொந்தரவு செய்வதுபோலிருந்ததால் அவர்களின் மீதான வெறுப்பை அவர்களைக் குறித்த பொய்களை உருவாக்குவதில் காட்டினார்கள். சந்திரனின் அக்கா தேவி குறித்து எழுந்த கட்டுக்கதைகளும் இப்படி உருவானவைதான்.

ரெண்டாம் ஆட்டம்! - 43

மலைச்சாமி இதுபோலக் கட்டுக்கதைகளை உருவாக்கும் ஆண்களில் ஒருவனாக இல்லாமல் துணிச்சலாக அவளிடம் சென்று பேசினான். “இந்தா பாரு... ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் உன்னயப் பத்தி ஒவ்வொரு மாதிரி பேசுறான். அதப்பத்தில்லாம் எனக்குக் கவல இல்ல. உனக்கு என்ன புடிச்சிருக்குன்னா சொல்லு, நான் உன்னயக் கட்டிக்கிறேன்” என்று முகத்துக்கு நேராகக் கேட்ட நாளில்தான் அவர்களுக்கு இடையிலான அறிமுகமும் பழக்கமும் உருவானது. தேவியைவிட மலைச்சாமி சற்று குள்ளமானவன். ஆனால் முரட்டு உருவம். உருவத்துக்குச் சற்றும் குறைவில்லாத முரட்டுத்தனம் அவனது பேச்சிலும் வெளிப்பட்டது. அதனாலேயே தேவி அவனை நெருங்க பயந்தாள். ஆனால், மலைச்சாமி மற்றவர்களைப் போலில்லை. அவள் வீதியில் செல்லும்போது தொடர்ந்து பின்னால் செல்வதும், நேரடியாகப் படுக்கைக்கு அழைப்பதுமான சில்லறை வேலைகளையெல்லாம் செய்யாமல், சரியாக அவள் கம்பெனிக்கு முன்பாக வந்து நிற்பான். அவள், அவனைப் பார்த்துச் சிரித்தால் பேசுவான். இல்லாவிட்டால் எதுவும் பேசாமல் கிளம்பிச் சென்றுவிடுவான். இதனாலேயே அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதைப் பார்க்கும் அவளது தோழிகளுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒருத்தி மட்டும் கட்டுப்படுத்த முடியாமல் அவளிடம் கேட்டேவிட்டாள்.

“அடியே உனக்கு வேற ஆளே கெடைக்கலையா? ஏன் இதுக்கு முன்னாடி பழகுனவய்ங்கல்லாம் என்னாச்சு?”

“எல்லாம் சில்றப்பயகக்கா. ஆச ஆசயா பழகற மாதிரி பழகறாய்ங்க. நாமளும் நல்லவிதமாப் பழகினா எதையாச்சும் சொல்லி கூட்டிட்டுப்போயி சோலியப் பாத்துடறாய்ங்க. ஒவ்வொருத்தனுக்கும் என்னயப் பாத்தா எப்பிடி இருக்கும்னு தெரியல...”

“சரிடி, அதுக்காக இந்தக் குள்ளப்பயகூட ஏன் பேசிட்டு இருக்க? அவன் சென்ட்ரல் மார்க்கெட்டுல சண்டியன். ஆளும் மண்ட கோளாறான ஆளு.”

“என்னவா வேணா இருக்கட்டுங்க்கா. எங்கிட்ட நல்லவிதமாத்தான இருக்கான். நல்லா பேசறான்... என்னய நல்லா பாத்துக்கறான். இதுக்கு மேல என்ன வேணும்?”

அவள் யாருக்காகவும் அவனை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்பதுபோல் பேசினாள். கூறுகெட்டவளுக்கு புத்தி சொல்லி பிரயோஜனமில்லை என மற்றவர்களும் விட்டுவிட்டார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 43

தேவிக்கும் மலைச்சாமிக்குமான பழக்கம் நெருக்கமானதிலிருந்து தேவியைத் தொடர்ந்து செல்கிறவர்களும் சீண்டுகிறவர்களும் குறையத் தொடங்கியிருந்தனர். எல்லாம் மலைச்சாமியின் மீதிருந்த அச்சம் என்பதை யாரும் சொல்லாமலேயே தேவி புரிந்துகொண்டாள். அவர்களின் நட்பை சந்திரனும் அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை, மீனாட்சி தியேட்டரில் மதியக் காட்சியின் இடைவேளையின்போது இருவரையும் ஜோடியாகப் பார்த்த சந்திரனுக்கு ஆத்திரம் உச்சத்துக்குச் சென்றது. கோன் ஐஸ் தின்றுகொண்டிருந்தவளின் கூந்தலை இழுத்து செவிட்டிலேயே அறைந்தான். மலைச்சாமி தகராறு செய்ய வேண்டாம் எனத் தன்மையோடு சந்திரனை விலக்கிவிட்டான். “ஏய்... என்னாப்பா நீயி பொம்பளப்புள்ள மேல கைநீட்டிக்கிருக்க?” என்றவனை “ஒக்காலி குள்ளத் தாயோலி... நீ யார்றா குறுக்க வர்ற?” என்று கேட்டபடியே சந்திரன் ஓங்கி அறைந்துவிட்டான். தியேட்டரில் கூடியிருந்தவர்கள் அவர்களைப் பரிதாபமாகப் பார்க்க, சந்திரன் நண்பர்களோடு இருந்த துணிச்சலில் திரும்பவும் அடிக்கப்போனான். மலைச்சாமி பொறுமை இழந்தவனாக, சந்திரனின் வயிற்றில் முட்டித் தள்ளித் தூக்கி எறிந்தான். ஒரு நொடியில் சந்திரனுக்குப் பொறி கலங்கி, உலகம் சுற்றுவதுபோலாகிவிட்டது. அவனது நண்பர்கள் சுதாரித்து மலைச்சாமியை அடிக்க நெருங்க, அவன் தன் இடுப்பிலிருந்த பெரிய கத்தியை வெளியே எடுத்தான்.

“பொடிப்பயகளாச்சே கை நீட்டக் கூடாதுன்னு பொறுமையாப் பேசினா, பெரிய மயிராட்டம் என் மேலயே கை நீட்ற? எவனாச்சும் கிட்ட வந்தீங்கன்னா சங்கறுத்துப் போட்ருவேன்” என முறைத்து நின்றான். சுற்றிலும் ஆட்கள் பார்த்துக்கொண்டிருந்ததால் சந்திரனுக்கும், அவனுடைய ஆட்களுக்கும் உடனடியாகப் பின்வாங்குவது மானக்கேடாகிவிடும் எனத் தோன்ற, திருப்பித் தாக்குவதற்கு நெருங்கினார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் நால்வரையும் அடித்து வீழ்த்தியவன், சந்திரனின் தொடையில் ஆழமாகக் கத்தியை இறக்கினான். வலியில் துடித்துப்போன சந்திரன் அலறவும்தான் அவனுடன் வந்தவர்கள் தாக்குதலை நிறுத்தினார்கள். சந்திரனின் தொடையிலிருந்து கத்தியை உருவி இன்னொருவனைக் குத்துவதற்கு மலைச்சாமி நெருங்க, அவன் அவசரமாகக் கையெடுத்துக் கும்பிட்டான். “அண்ணே விட்ருங்கண்ணே… வலிக்குதுண்ணே” மலைச்சாமி அவனை முறைத்தபடியே கத்தியிலிருந்த ரத்தத்தை சந்திரனின் வேட்டியில் துடைத்தான். கத்தி குத்தப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் கொப்பளித்துக்கொண்டிருக்க, தேவி பதறிப்போய் “எலேய்... முதல்ல அவன ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்கடா” என அவசரப்படுத்தினாள். “செத்தவடம் சும்மா இருக்கியா?” மலைச்சாமி அதட்டும் தொனியில் சொல்ல, அவள் தயக்கத்தோடு அமைதியானாள். சுற்றியிருந்த ஆட்களுக்கு மலைச்சாமியின் தோற்றத்தையும் அவன் நடந்துகொள்வதையும் பார்க்க உடல் நடுங்கியது. முடிந்தவரை தூரமாய் விலகி நின்றுகொண்டனர். தியேட்டர் கேன்டீனிலிருந்த ஆளிடம் “எலேய் வேலு... இவய்ங்களுக்கு கோன் ஐஸ் குடுறா...” என மலைச்சாமி சத்தமாகச் சொன்னான். வேலு பயத்தோடு நாலு கோன் ஐஸ்களை எடுத்துவந்து இவர்களிடம் கொடுத்தபோது, அதைக் கையில் வாங்காமல் திரும்பி மலைச்சாமியைப் பார்த்தனர். “ஒக்காலி என்னடா என் மூஞ்சியப் பாக்கறீங்க? வாங்கிக்கங்கடா...” என அவன் மிரட்ட, நான்கு பேரும் அவசரமாக வாங்கிக்கொண்டனர். ஐஸ் க்ரீம் உருகிக்கொண்டிருந்து. உள்ளங்கையில் ஐஸ் க்ரீமின் குளிர்ச்சியைவிடவும் பயத்தில் அவர்களின் உடல் சில்லிட்டுப்போயிருந்தது. ஐஸ் க்ரீமைத் தின்னாமல் வைத்திருந்தவர்களை “தின்னுங்கடா... உங்களுக்கு வாயில வெக்கிறதுக்கு ஒரு ஆள் வரணுமா?” என மீண்டும் அதட்ட, அவர்கள் அவசர அவசரமாகத் தின்றனர். கத்திக் குத்து வாங்கியதைவிடவும், ஊரே தன்னை வேடிக்கை பார்த்த அவமானத்தைத்தான் சந்திரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“அவன சூதானமா ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்கடா...” மலைச்சாமி பையிலிருந்து செலவுக்குக் காசை எடுத்துக் கொடுத்துவிட்டு சந்திரனை நெருங்கினான்.

“எலேய்... அவ எங்கூடதான் சுத்துவா. நீ பெரிய ஆளு மயிராட்டம் இன்னொருவாட்டி கை நீட்டினன்னு வெச்சுக்க... மச்சான்லாம் பாக்க மாட்டேன். ரெண்டு கையவும் வெட்டி எடுத்திருவேன். சரியா?” எனக் கண்களால் மிரட்ட, சந்திரன் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான். அவனோடு வந்தவர்கள் தப்பித்தால் போதுமென்ற அவசரத்தோடு அங்கிருந்து சந்திரனைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் களைய, மலைச்சாமி அவளோடு சென்று இரண்டாவது பாதிப் படத்தைப் பார்க்கத் தொடங்கினான்.

இந்தச் சம்பவத்துக்கு அப்புறமாகத்தான் மதுரையில் மலைச்சாமியின் பெயர் ஆங்காங்கே அடிபடத் தொடங்கியது. காளிக்காக அறிவழகனின் கையை எடுத்த பிறகு, ஒரே நாளில் அவன் எல்லோருக்கும் தெரிந்தவனாக மாறியிருந்தான். மலைச்சாமிக்கு எங்கு குழி தோண்டலாம் எனத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த முத்தையாவுக்கு, சந்திரனைத் தூண்டிவிடுவது மட்டுமே எளிதான வழி என்கிற பிடி கிடைத்தது. நேரடியாகச் செய்ய முடியாத காரியத்தையெல்லாம் இதுபோல் நிழலாக விலகி நின்று செய்யக்கூடிய சூதை மூர்த்தியிடம் வேலை பார்த்த அனுபவத்திலிருந்து அவன் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தான். ஒருபுறம் மருதுவுக்காகவும் காளிக்காகவும் மலைச்சாமியோடு இணைந்து வேலை பார்த்தாலும், இன்னொரு புறம் மருதுவையும் மலைச்சாமியையும் வேரோடு அழிப்பதற்கான முயற்சிகளையும் அவன் செய்யத் தவறவில்லை.

(ஆட்டம் தொடரும்)