மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 44

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

தலைவரே வழக்கமா நாங்க காசுக்காகத்தான் வேல செய்வோம். ஆனா நீங்க நம்ம கட்சியாளு. அதுவுமில்லாம நீங்க சொல்ற ஆளு லேசுப்பட்ட ஆள் இல்ல.

கழுகின் கண்களில் மிகுந்திருக்கும் வேட்டைக்கான உந்துதல் அத்தனை எளிதில் அடங்கக்கூடியதல்ல. தோல்வியோ, வெற்றியோ தன் இரையிலிருந்து கழுகுகள் ஒருபோதும் கவனத்தைத் திருப்புவதில்லை. எத்தனை உயரத்தில் பறந்தாலும் அவை தமது இரையைத் துரத்தியபடியேதான் இருக்கின்றன. அறிவு, வெகுதொலைவிலிருந்து மருதுவை வேட்டையாடத் துடிக்கும் கழுகாகக் காத்துக்கொண்டிருந்தான்.

உறங்கி எழும் ஒவ்வொரு நாளின் அதிகாலையிலும் துண்டிக்கப்பட்ட கையின் இடத்தில் அவமானம் பெரும் சுமையாக, விரும்பத்தகாத உறுப்பாக வளர்ந்துகொண்டிருந்தது. ஆட்கள் பழக்கமில்லாத ஊரில், உயிருக்கு பயந்து ஒதுங்கியிருக்கும் அந்த வாழ்க்கை, நரகலைத் தின்றதைப்போல் அருவருப்பைத் தந்தாலும் அப்பாவின் விருப்பத்துக்காகத் தாங்கிக்கொண்டான். இன்னொரு வகையில் தனது தடயங்களைக் காட்டிக்கொள்ளாமலேயே வேட்டையாட இதுதான் சரியான வழியென்பது அவனது கணிப்பு. பெயரற்ற கடிதம் வந்து சேர்ந்த சில நாள்களிலேயே மருதுவை ஒழித்துக் கட்டுவதற்கான ஆட்களை திருச்சியில் தேடிக் கண்டுபிடித்துவிட்டான். விஜயன், மனோகர், பாஸ்கர், அற்புதராஜ் எனும் அந்த நான்கு பேருமே அறிவழகனின் கட்சியிலிருப்பவர்கள் என்பதோடு, அரசியல் கொலைகளில் அனுபவமுள்ளவர்கள். மருதுவைக் குறித்து அறிவு சொல்வதற்கு முன்பாகவே அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

ரெண்டாம் ஆட்டம் -  44

“தலைவரே வழக்கமா நாங்க காசுக்காகத்தான் வேல செய்வோம். ஆனா நீங்க நம்ம கட்சியாளு. அதுவுமில்லாம நீங்க சொல்ற ஆளு லேசுப்பட்ட ஆள் இல்ல. இந்த மாதிரி ஒருத்தன சம்பவம் பண்றதுதான் எங்களுக்கும் சவாலா இருக்கும். அதுக்காகவே செய்றோம்” என ஒத்துக்கொண்டார்கள். நான்கு பேரில் அற்புதராஜ் மட்டும் கிளம்பி மதுரைக்குச் சென்று மருதுவின் ஏரியாவிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தான். மருதுவின் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்வது மட்டுமே அவனது வேலை. நிழலைப்போல் மருதுவின் ஒவ்வோர் அசைவையும் கண்காணிக்க வேண்டும், அதேசமயம் அவனுக்குச் சந்தேகம் வரவும் கூடாது என்பதால், அதே தெருவிலிருந்த ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்துவிட்டான். வீட்டிலிருந்து காலை எத்தனை மணிக்கு வெளியேறுவான், மாலை எத்தனை மணிக்குத் திரும்புவான், யாரெல்லாம் அவன் வீட்டுக்கு வருவார்கள் என எல்லாத் தகவல்களையும் ஒரு சில வாரங்களிலேயே மனப்பாடமாக வைத்திருந்தான். வார இறுதி நாளில் அற்புதராஜின் நண்பர்கள் அவனைப் பார்க்க அங்கு வருவதுண்டு. அற்புதராஜ் குடியிருந்த வீட்டைச் சுற்றியிருந்த ஒருவருக்குமே அவன் மீதோ, அவனைச் சந்திக்க வரும் அவனது நண்பர்கள் மீதோ ஒருபோதும் சந்தேகம் வந்ததில்லை.

“ஊர்ல ரொம்பச் செரமம்ணே... மூணு பிள்ளைக, வேல வெட்டி ஒண்ணுமில்லாமத்தான் இங்க வந்து டீ ஆத்திட்டு இருக்கேன்.’’

கடைக்கு ரெகுலராக வருகிறவர்களிடம் உரையாடும்போதெல்லாம் இதைச் சொல்ல அவன் தவறுவதில்லை. இதனாலேயே கஸ்டமர்களுக்கும், கடை முதலாளிக்கும் அவன்மீது பரிதாபமான ஓர் அன்பிருந்தது.

ஐந்து வாரங்களுக்குப் பிறகு, வார இறுதியில் எப்போதும்போல் அற்புதராஜின் நண்பர்கள் அவனைச் சந்திக்க வந்திருந்தனர். அன்றைய தினம் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டவன், நண்பர்களை அழைத்துக்கொண்டு திருமோகூர் கோயிலுக்குச் சென்றான். நான்கு பேருக்குமே கடவுளின் மீது நம்பிக்கையில்லாதபோதும் நிதானமாக அமர்ந்து திட்டத்தை வகுக்க ஓர் இடம் தேவையாகயிருந்தது. சின்னஞ்சிறிய கிராமத்தில் அமைந்த அந்தக் கோயிலைச் சுற்றிலும் வயல்கள். பெரிய கூட்டமில்லை. பேருந்து நிறுத்தத்திலேயே சாப்பிடுவதற்குத் தேவையான நொறுக்குத்தீனிகளை வாங்கியிருந்தவர்கள், கோயிலுக்குப் பின்னால் வயலை ஒட்டி அமர்ந்து ஆலோசிக்கத் தொடங்கினார்கள்.

“நாம நெனைக்கிற மாதிரி மருத நெருங்கறது ஈசியான காரியமில்ல. காளிக்கு மதுரைல எவ்வளவு செல்வாக்கு இருக்கோ, அதேயளவுக்கு இவனுக்கும் இருக்கு. காசு பணந்தான் சேக்கலையே தவிர மனுசங்கள சம்பாதிச்சிருக்கான்” எனத் தொடங்கிய அற்புதத்தை இடைமறித்த விஜயன்,

“அற்புதம், அவன் செத்துப் பொழச்சவன். அதனால நாலு பேர் மதிக்கத்தான் செய்வான். மனுசன்கிட்ட இருக்க கெட்ட பழக்கம் என்ன தெரியுமா? நாலு பேர் மதிக்க ஆரம்பிச்சதுமே தன்னைய பெரிய மனுசனா நெனச்சுக்கிட்டு அப்பிடி மாத்திக்கிறதுக்காக எல்லார்கிட்டயும் நடிக்கிறது. மருதுவும் அதத்தான் செஞ்சுட்டு இருக்கான். கொஞ்சநாள் சாமியார் வேஷம் போட்டான், இப்ப கண்ணுக்கு லச்சணமா ஒரு புள்ளையக் கட்டிட்டு வந்து நிக்கிறான். உண்மையாவே மருதுங்கறவன் யாரு தெரியுமா? நண்பனோட பொண்டாட்டின்னு பாக்காம வேணிகூட படுத்துட்டு, அப்பறம் அவ தலையவே வெட்டி எறிஞ்சான் பாரு, அவன்தான். இப்பயும் அவனுக்குள்ள இருக்கறது அந்த மிருகம்தான். அந்த வேஷத்தால தனக்கு எதும் ஆகப்போறதில்லன்னுதான் இந்த வேஷத்தப் போட்டுட்டு இருக்கான்” என, தான் புரிந்துகொண்டவற்றைச் சொன்னபோது மற்ற மூவரும் மலைத்துப்போய்ப் பார்த்தார்கள்.

“நீ சொல்றதெல்லாம் சரிதான் விஜயா, ஆனா அதுக்காக நாம குருட்டுத் துணிச்சல்ல எறங்கிடக் கூடாதுல்ல.”

“சரிடா அற்புதம். உன் ப்ளான் என்னன்னு சொல்லு” விஜயன் பொறுமையாகக் கேட்கத் தொடங்க, மற்றவர்களும் அற்புதத்தை கவனித்தனர்.

“மருது யாரையும் நம்புற ஆள் இல்ல. முத்தையான்னு ஒருத்தன்தான் எப்பவுமே அவன்கூட இருக்கான். அவன மட்டும்தான் நம்பறான். அவய்ங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வருசம் பழக்கம்போல... அதுக்கு அப்புறம் மருது ரொம்ப மதிக்கிறது காளிய. தெனம் சாயந்தரம் ஒரு மணி நேரம் காளியப் பாத்துப் பேசிட்டுத்தான் வீட்டுக்கு வருவான். மருதுவுக்கு ரெண்டு சாராயக் கடையைப் பாத்துக்கச் சொல்லி, குடுத்திருக்கான் காளி. மருது ரொம்பல்லாம் அங்க போறதில்ல. மத்தியானத்துக்கு மேல கொஞ்ச நேரம் அங்க போறதோட சரி. கணக்கு வழக்குல இருந்து எல்லாத்தையும் முத்தையாதான் பாத்துக்கறான். காலைல எட்டு மணிக்கு வீட்லருந்து கிளம்பி வெளிய போனா ராத்திரி எட்டு மணிக்குத்தான் திரும்ப வருவான். மதியச் சாப்பாட்ட முத்தையா வீட்டுக்கு வந்து வாங்கிட்டுப் போவான். காளி, முத்தையா, வள்ளி இவங்க மூணு பேருதான் மருதுவோட உலகம். இதில்லாம செவ்வா, வெள்ளி ரெண்டு நாளும் கூடலழகர் பெருமாள் கோயிலுக்குப் போறான். சனிக்கிழம ஒருநாள் மட்டும் தண்ணியடிக்கிறதுண்டு. அதும் காளியோட கடைக்கு மேல தனியா இருக்க ரூம்ல… அவன் வீட்ட நெருங்க முடியாது. ஏன்னா வீட்டுக்கு ஒரே வாசல்தான். உள்ள போயி சிக்கலாயிட்டா தப்பிக்கறது கஷ்டம், அதுவுமில்லாம அந்தத் தெருவுல மரம் அசஞ்சாலும் உடனே அவனுக்குத் தெரிஞ்சுடும். வெளிய எப்பவுமே அவங்கூட அவனோட ஆளுங்க இருப்பானுங்க. அதனால அங்கியும் கஷ்டம். நம்மளுக்கு இருக்க ஒரே வாய்ப்பு சனிக்கிழம அவன் குடிக்கிற இடம் மட்டுந்தான்.”

அவன் சொல்லி முடிக்க, மனோகர் குழப்பத்தோடு “ஏண்டா, அங்கியுமே காளியோட ஆளுங்க இருப்பாங்களே... அப்பறம் எப்படி நாம நெருங்கறது?” எனக் கேட்க, “முடியும் மாப்ள. அன்னிக்கி சாராயக்கடைல யாவாரம் எகிறும். அதனால ஆளுங்கல்லாம் வேலைல குறியா இருப்பாங்க. நமக்குக் கிடைக்கிற சின்ன கேப்லதான் நாம எல்லாத்தையும் முடிக்கணும்.”

அவன் நம்பிக்கையோடு சொல்ல, மற்ற மூவருக்கும் அவனது யோசனையே சரியெனப் பட்டது. அடுத்த வாரத்தின் சனிக்கிழமை மருதுவுக்குக் கரைவைக்கப்பட்டதோடு, அறிவழகனுக்கும் செய்தி சொல்லப்பட்டிருந்தது. அறிவு, அந்த சனிக்கிழமைக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கத் தொடங்கினான். மருதுவின் சாவு, தன் கையை மீட்டுத் தராதுதான். ஆனால் மதுரையில் தானிழந்த மரியாதையை மீட்டுத்தரும் என்பதால் அந்த சனிக்கிழமை அவன் வாழ்க்கையில் முக்கியமானதாகயிருந்தது.

ரெண்டாம் ஆட்டம் -  44

எல்லா நாளையும்போல் விடிந்த அந்த சனிக்கிழமை காலை, சிறிது நேரத்திலேயே வழக்கத்துக்கு மாறாக வெயில் குறைந்து மந்தமானது. பெருங்காற்றோடு மழைக்கான முன்னறிவிப்பாக மின்னல்களும் வெட்டத் தொடங்கின. சாலையில் வாகனங்களின் போக்குவரத்து மதியத்துக்கு மேல் மெல்ல குறையத் தொடங்கியிருந்தது. அற்புதராஜ், கடையில் சொல்லிக்கொண்டு அறைக்குத் திரும்பினான். அவன் நண்பர்கள் அவனுக்காகத் தயார்நிலையில் காத்திருந்தனர். இருட்டத் தொடங்கியிருந்த போதும், இரவுக்கு நிறைய நேரமிருந்ததால் அவர்கள் பொறுமையோடு அறையில் காத்திருக்கத் தொடங்கினர். மனோகருக்கு ஏதோவொன்று உறுத்தலாகவே இருந்ததால் “நாம எதுக்கும் மூஞ்சிய மறைச்சிக்கறது நல்லதுன்னு நெனைக்கிறேன்.” என்றான். “ஏண்டா பயப்படறியா?” என விஜயன் கேட்க, “ஆமா மாப்ள. பெரிய சம்பவம், யாராச்சும் ஒருத்தன் அடையாளம் பாத்துட்டாலும் நம்மள விட மாட்டாய்ங்க” என்று சொன்னதை எல்லோரும் ஆமோதித்தனர்.

இடியோ மின்னலோ இல்லாமல் சன்னமான தூறல் மதுரை நகரை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்ததால், கூதலுக்கு சாராயம் குடிக்கவென ஆட்கள் கூட்டம் கூட்டமாகக் கடைகளை நோக்கிப் படையெடுத்தனர். அற்புதம் சொன்ன சாராயக்கடைக்கு நான்கு பேரும் வந்து சேர்ந்தபோது, கடைக்குள் ஆட்கள் நிற்க இடமில்லாத அளவுக்குக் கூட்டம் நிரம்பிவழிந்தது. ஒரேயொரு சாராய போத்தலை வாங்கி வைத்து ஆளுக்குக் கொஞ்சமாகக் குடித்தபடி நோட்டமிடத் தொடங்கினர். மருதுவின் எஸ்டி பைக், கடைக்கு வெளியே அமைதியாக நின்று கொண்டிருந்தது. ஆட்களின் இரைச்சலைத் தாண்டியும் மாடியிலிருக்கும் ரேடியோவிலிருந்து பாடல் ஒலிக்கும் சத்தத்தை இவர்கள் கேட்டனர். மனோகர் மட்டும் படியேறி மாடிக்குச் சென்று மருதுவை நோட்டமிட்டான். வயர் சேரில் நன்கு சாய்ந்து அமர்ந்திருந்தவனின் உடலில் சட்டையில்லை. எதிரில் பெரிதாகத் தொங்கிக்கொண்டிருந்த வேணியின் புகைப்படத்தைப் பார்த்தபடியே நிதானமாகக் குடித்துக்கொண்டிருந்தான். அவன் தனியாக இருக்கிறான் என்பதை உறுதிசெய்துகொண்டதும், மற்றவர்களுக்கு சிக்னல் கொடுத்தான். மறைத்திருந்த ஆயுதங்களோடு மருதுவின் அறைக்குள் அவர்கள் நுழைந்தபோது, கவனமாக முகத்தை மூடியிருந்தனர். மருது சுதாரிப்பதற்கு முன்பாகவே முதல் வெட்டை விஜயன் வெட்டினான். மருது அசரவில்லை, அச்சப்படவில்லை. சத்தமாகச் சிரித்தான். “ரத்தம் பாத்து ரொம்ப நாளாச்சேன்னு ஏங்கிப்போயிருந்தண்டா... வாங்க… வா… வா…” எனச் சத்தமாகக் கத்தியபடி எதிர்கொண்டவனை இப்போது இவர்கள் அச்சத்தோடு பார்த்தார்கள். மனோகரின் காலில் எட்டி உதைத்து அவன் ஆயுதத்தைப் பறித்தவன், அடுத்த சில நிமிடங்களில் தனக்கு எதிரிலிருந்த நால்வரையும் சரமாரியாக வெட்டினான். விஜயன் சொன்ன அந்த மிருகம் இப்போது மருதுவுக்குள் விழித்துக்கொண்டதைப் புரிந்துகொண்டதும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வெறியோடு அவர்கள் அங்கிருந்து எகிறி ஓடத் தொடங்கினார்கள். உடலில் ரத்தம் வழிய மருது இறங்கிவர, சாராயக் கடையும் அந்த வீதியும் பரபரப்பானது. தெருவிளக்கின் கீழ் நின்றவனின் மீது மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது.

(ஆட்டம் தொடரும்)