Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 45

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஒவ்வொரு முறை கலவி முடிந்த பிறகும் கண்ணீரோடு இதைச் சொல்ல அவன் தவறுவதில்லை.

ரெண்டாம் ஆட்டம் - 45

ஒவ்வொரு முறை கலவி முடிந்த பிறகும் கண்ணீரோடு இதைச் சொல்ல அவன் தவறுவதில்லை.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

கோட்டைச்சாமி கொலை செய்யப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்…

எப்போதும் கனன்றுகொண்டிருக்கும் நெருப்பின் ஜுவாலைகளைப் பிறர் பார்க்காமல் பாதுகாப்பது இயலாத காரியம். ஜெகதிக்கும் செல்வத்துக்குமிடையில் பற்றிப் படர்ந்தது வெறும் நெருப்பல்ல, நெருப்பாறு. ஒவ்வொருமுறை கூடிக் களிக்கும்போதும் அதன் வெக்கை அதிகரித்ததே ஒழிய குறைவதற்கான சாத்தியங்கள் இல்லாமலிருந்தது.

“இத்தோட நாம முடிச்சுக்கலாம் செகதி. உங்கூட படுக்கறப்பல்லாம் அண்ணனுக்குத் துரோகம் பண்றோமோன்னு மனசு குத்துது.”

ஒவ்வொரு முறை கலவி முடிந்த பிறகும் கண்ணீரோடு இதைச் சொல்ல அவன் தவறுவதில்லை. ஆனால், அந்த மனவுறுதியெல்லாம் அவளை அடுத்தமுறை பார்த்தவுடனேயே தகர்ந்துவிடும். முதல் சில நாள்கள் இந்த ஜெகதி அவன் இப்படிச் சொல்வதிலும், பிறகு மீண்டும் வெறியோடு வந்து கூடுவதிலும் கடும் எரிச்சல்கொண்டிருந்தாள். நாளடைவில் அவன் தன்னையறியாமல் நிகழ்த்திய அந்த விளையாட்டை ரசிக்கத் தொடங்கினாள்.

“உனக்கு எதுக்கு மனசாட்சி குத்தணும்... நான் ஒண்ணும் உங்கண்ணனுக்குப் பொண்டாட்டி இல்லயே?” என அவன் விளையாட்டில் தானும் இணைந்துகொள்ளத் தொடங்கினாள். அவள் அப்படிச் சொன்னதும் அவனுக்குச் சுருக்கென்றிருக்கும்.

“தாலி கட்டின பொண்டாட்டியா இல்லாட்டின்னாலும் உன்ன பொண்டாட்டி மாதிரிதான நடத்தறாரு…”

“ஆமா கிழிக்கிறாரு. அந்தாளு இந்த நாலு சொவத்துக்குள்ள மட்டுந்தாண்டா பொண்டாட்டியா நடத்தறாரு. இதுக்கு வெளில என்னிக்காச்சும் எனக்கு மதிப்பு மரியாத இருந்திருக்கா? அந்தாள விடு... அவர்கூட இருக்க எவனாச்சும் என்னய மரியாதையோட பாக்கறீங்களா? எல்லார் கண்லயும் என் உடம்புமேல இருக்குற வெறியத்தான் பாக்கறேன்...”

செல்வம் அவளை முறைத்தான்.

ரெண்டாம் ஆட்டம் - 45

“முறைக்காத. உனக்கும் என் ஒடம்பு மேலதான் வெறி இருக்கே தவிர, என்மேல ஒரு துளி அக்கற கிடையாது...”

“இந்தா எதுக்கு ஆகாவலியா பேசிட்டு இருக்க? இப்ப என்ன உன்ன மதிக்காம போயிட்டேன்? உன்ன எப்போ பாத்தனோ அப்பவே புடிச்சிருச்சு. உன் ஒடம்பவிடவும் நீதான் எனக்கு முக்கியம்.”

“மூட்றா டேய். உன் கதையல்லாம் எவளாச்சும் கேணச் சிறுக்கிகிட்ட போயிச் சொல்லு.”

இதைச் சிரித்தபடியே அவள் சொன்னாலும், உள்ளூர ஓடும் கசப்பை அவன் உணராமலிருப்பதில்லை. கோட்டைச்சாமியின் மீதிருக்கும் பயத்தை மீறி அவனால் அவளைக் காதலோடு நெருங்க முடிவதில்லை என்பதால்தான் ஒவ்வொரு கலவிக்குப் பிறகும் பிரிவதைக் குறித்தே பேசுகிறோம் என அவனுக்குப் புரிந்தது.

ரவியின் வழிகாட்டுதலோடு அரசியலுக்குள் நுழைவதற்கான தீவிர முயற்சிகளிலிருந்த கோட்டைச்சாமி, ஜெகதியின் வீட்டுக்கு வருவதைக் குறைத்துக்கொண்டிருந்தான்.

“கோட்ட... இதுக்கு முன்னாடி நீ எப்பிடியோ இருந்திருக்கலாம். இனிமே எல்லாத்தையும் நாசுக்கா வெச்சுக்கணும்யா… அரசியலுக்கு வந்துட்டன்னு வெய்யி... உனக்கு வேண்டாதவய்ங்க ஏதாச்சும் செஞ்சு உன்னய அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டா நீ பொம்பள விஷயத்துல மோசமானவன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க. பாத்து சூதானமா இருந்துக்க...” என ரவி கொடுத்திருந்த அறிவுரைதான் முக்கியக் காரணம்.

ஜெகதியும் அதைப் புரிந்து கொண்டிருந்ததால்தான் செல்வத்தோடு அச்சமின்றி நெருங்கினாள். இச்சை, பாம்பின் விஷத்தைவிடவும் கொடியது, ஆனாலும் அதன் வசீகரம் ஒருவனை அத்தனை எளிதில் விடுவிப்பதில்லை. கோட்டைச்சாமிக்கும் அப்படித்தான். அதிகாரம், பதவி இதற்காக அவளிடமிருந்து இடைவெளியை அவன் உருவாக்கிக்கொண்டாலும், அந்த இடைவெளி அவள்மீதான தாபத்தை அதிகரிக்கவே செய்ததால், அவளோடு இருக்கும் தருணங்களில் பசிகொண்ட ஓநாயென மாறிப்போவான். கோட்டையின் மூர்க்கங்களுக்குப் பழகிப்போயிருந்த ஜெகதி, பசியோடிருக்கும் ஒரு மிருகமாக மட்டுமே அவனைக் கருதினாள்.

“நீ வந்ததுக்கு அப்பறந்தாண்டி எல்லாமே நல்லதா நடக்குது. அதிர்ஷ்ட தேவதன்னு சொல்லுவாய்ங்கள்ல... அது நீதான்போல…”

“ஐயோ அப்பா, நீங்க சொல்றதக் கேட்டா அப்பிடியே சிலுத்துக்குது. எங்கூட படுத்திருக்க வரைக்குந்தான் நான் உங்களுக்கு அதிர்ஷ்ட தேவத. இந்த வாசலத் தாண்டிட்டா நான் வெறும் அவுசாரி. உங்களுக்கு உங்க குடும்பமும் பதவியும்தான பெருசு…”

“ஏய் என்னத்தா அப்பிடி சொல்லிட்ட... உனக்கு என்ன கொற வெச்சுட்டேன்?”

ஜெகதி சிரித்தாள்.

“ஒரு கொறையுமில்ல.”

“என்கூடப் பொறந்த தம்பி, அங்காளி பங்காளிகளக்கூட நம்பி தொழில கைல குடுக்கல, உன்னய நம்பி உங்கிட்டதான குடுத்திருக்கேன். உன்மேல எவ்ளோ மதிப்பும் நம்பிக்கையும் இருந்தா இதெல்லாம் செஞ்சிருப்பேன்னு யோசிக்க மாட்டியா?”

“சும்மா அளக்காதிங்க. நீங்க சம்பாதிச்சதவிட பல மடங்கு அதிக லாபம் நான் சம்பாதிச்சுக் குடுக்கறதாலதான் யாவாரத்தக் குடுத்திருக்கீங்க.”

கோட்டைச்சாமி அவள் கண்களிலிருந்த உதாசீனத்தையும் இதழ்களிலிருந்த கேலியையும் கண்டு சிரித்தான். மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் அவளை அணைத்துக்கொண்டு சரிந்தபோது ஜெகதிக்கு உடலெல்லாம் அருவருப்பில் கூசியது. தொண்டைக்குழியில் செல்வத்தின் நினைவு விழுந்து சுழல, விக்கலெடுக்கத் தொடங்கினாள். கோட்டைச்சாமி விலகிப் படுக்க, தண்ணீர் குடிக்க எழுந்து சென்றவள் பக்கத்து அறையிலிருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். ‘முடிச்சிட்டு கிளம்பிட்டாரா?’ என செல்வத்திடமிருந்து வந்த குறுஞ்செய்தியை வாசித்தவள், அதை அழித்துவிட்டு தண்ணீர் குடிக்கச் சென்றாள்.

சரக்கைப் பாதுகாப்பாக ஆந்திராவிலிருந்து எடுத்துவருவது செல்வத்தின் வேலையென்றால், அதை யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் எனச் சரியாகப் பிரித்துக் கொடுப்பது ஜெகதியின் வேலை. மொத்த வியாபாரமும் அவர்கள் இருவரையும் நம்பியிருந்ததால், அவர்கள் தினமும் சந்தித்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிவிட்டது. கோட்டைச்சாமி, ஜெகதியின் வீட்டுக்கு வந்துசெல்லும் நாள்களுக்கு அடுத்த நாள்களெல்லாம் செல்வத்துக்குக் கசப்பானவையாக இருக்கும். “நைட்டு ரொம்ப வேல போல, மூஞ்சில்லாம் பளபளன்னு இருக்கு...” என அவளை எரிச்சலூட்டும்விதமாகவே கேட்டால், “ஆமாடா. ரொம்ப வேலதான். அவனுக்குத் துப்பிருக்கு செய்றான். உனக்கு இல்லயின்னா பொத்திக்கிட்டு இரு” என அவள் முகத்திலடித்தாற்போல் பதில் சொல்வாள். அதன் பிறகு, அவளைக் கண்கொண்டு பார்க்கத் துணிச்சலிருக்காது அவனுக்கு. பேசுவதைக் குறைத்துக்கொண்டு தகவல்களை சோணையின் வழியாகப் பரிமாறுவான். இந்த விளையாட்டு இரண்டு மூன்று நாள்களுக்குத் தொடர்ந்தாலும், ஜெகதி ஒருபோதும் இறங்கி வருவதில்லை. அவள் மீதான பசியில் இவனே மீண்டும் சென்று மண்டியிடுவான்.

ரெண்டாம் ஆட்டம் - 45

“இப்பிடி வந்து நாய்க்குட்டி மாதிரி கால்ல விழுகறயே வெக்கமா இல்ல?”

“உங்கால்ல விழுகறதுக்கு என்ன வெக்கம்?”

“உனக்குக் காரியம் ஆகணும்னா தேன் வடியப் பேசுவடா...”

“சரி அப்பிடியே வெச்சுக்க. என்ன இப்ப?”

கூச்சமே இல்லாமல் அவன் தன்னிடம் மீண்டும் மீண்டும் வந்து சரணடைகிற நாள்களில், ஜெகதி அவனை முழுமையாகத் தன்வசப்படுத்தி ஆட்கொள்வாள். யார்மீதும் நம்பிக்கையோ அன்போ இல்லாததுபோல் தன்னைக் காட்டிக்கொண்டாலும், செல்வத்தோடு கூடுகிற நாள்களில் அவளிடம் அளப்பரிய காதல் வெளிப்படும். உலகிலுள்ள அத்தனை ஆண்களுக்கும் பகிர்ந்தளிக்கக்கூடிய அளவுக்குத் திரளும் அந்தக் காதலை ஒற்றை மனிதனாகச் சமாளிக்கப் போராடுவான்.

“செல்வம், என்னால இப்பிடி இருக்க முடியலடா. மனசுல உன்ன வெச்சுக்கிட்டு இன்னொருத்தனுக்கு அவுசாரியா இருக்கறத தாங்க முடியல.”

“உன்னய அவர்கூட இப்பிடி இருக்க வெச்சுப் பாக்கறதுக்கு எனக்கு மட்டும் ஆசையா என்ன? நானும் ஏதாச்சும் வழி இருக்கான்னுதான் யோசிக்கிறேன்.”

“என்னய இந்த வீட்டுலருந்து எங்கியாச்சும் கூட்டிட்டுப் போயிருடா… அந்தாளு தொடறப்பல்லாம் அருவருப்பா இருக்கு.”

“எங்க போறது செகதி? அவர மீறி இந்தத் தெருவக்கூட நம்மளால தாண்ட முடியாது.”

“எத்தன காலத்துக்கு அந்தாளுக்குப் பயந்துக்கிட்டு அவர் காலுக்குக் கீழயே இருப்ப? நீ தனியா போயி எதும் செய்யணும்னு நெனைக்க மாட்டியா?”

“தனியாவா? கோட்ட அண்ணே இருக்கற வரைக்கும் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல...”

“அப்பிடின்னா அந்தாள முடிச்சு விட்ரு...”

தொண்டைக்குழிக்குள் அடைத்துக்கொண்டிருந்த தன் எண்ணத்தைச் சடாரென அவள் வெளிப்படுத்தியதும், அந்த அறையில் அசாதாரணமான ஓர் அமைதி நிலவியது. தனக்கு மேல் படுத்திருந்த அவளை விலக்கியவன், “போடி தே**யா” எனத் திட்டிவிட்டு எழுந்து சென்றான்.

எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது எனும் நம்பிக்கையில், யோசிக்காமல் அவள் சொல்லிவிட்ட வார்த்தைகள் செல்வத்துக்கு இத்தனை அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. இரண்டு மூன்று நாள்கள் அவள் வீட்டுப் பக்கம் செல்வதை முற்றாகத் தவிர்த்தவன் எல்லா வேலைகளையும் சோணை மூலமாகப் பார்க்கச் சொல்லிவிட்டு, கோட்டைச்சாமியோடு சுற்றினான். “நம்ம நல்லதுக்குத்தானடா சொன்னேன்... அதுக்கு ஏன் கோச்சுக்கிட்ட? வீட்டுக்கு வாடா...”

“புத்தி இல்லாம சொல்லிட்டேன். மன்னிச்சுக்கடா...”

“டேய் லூசு… என்ன ஆச்சுன்னு இப்ப இப்பிடி ஒதுங்கிப் போற... வீட்டுக்கு வந்து தொல...” அவள் அனுப்பிய எந்தக் குறுஞ்செய்திக்கும் செல்வம் பதிலனுப்பவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்ட நாளிலிருந்து அவனுக்குள் இனம் புரியாததொரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது. எங்கே அவளைப் பார்த்தால் அவளின் எண்ணத்துக்கு இணங்கிவிடுவோமோ என்கிற அச்சத்திலேயே அவளைத் தவிர்த்தான். ஏழெட்டு நாள்களுக்குப் பிறகு, கோட்டைச்சாமி ஜெகதியின் வீட்டுக்குச் செல்வதை அறிந்தபோது செல்வம் பரபரப்பானான். அவள் தனக்கு மட்டுமேயானவள் என்கிற புதுவிதமான அழுத்தமும் பித்தும் பிடித்தாட்ட, மூச்சுமுட்டக் குடித்துவிட்டு ஜெகதியின் அத்தனை குறுஞ்செய்திகளுக்கும் பதிலனுப்பத் தொடங்கினான்.

நான்கைந்து நாள்களாக செல்வத்திடம் உருவாகியிருந்த பிரிவின் காரணமாகச் சோர்ந்துபோயிருந்த ஜெகதி, ஞாபகமறதியாகத் தனது செல்போனையும் படுக்கையறையிலேயே வைத்திருந்தாள். அவளிடம் ஒருபோதுமில்லாத சோர்வைக் கண்டுகொண்ட கோட்டைச்சாமி, அவளது செல்போனில் வந்த குறுஞ்செய்திகளை கவனிக்கவும் தவறவில்லை. அவனை நெருங்காமலேயே ஜெகதி வேறு பக்கம் திரும்பி உறங்கிய பின், சத்தமில்லாமல் எழுந்து அவளது செல்போனைத் திறந்து பார்த்தான். செல்வம் அனுப்பிய குறுஞ்செய்திகளை வாசித்து அவனுக்கு வெறி கிளம்பியது.

(ஆட்டம் தொடரும்)