Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 46

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

நீங்க மட்டுமில்ல, நாங்களும் அவனைத் தப்பாத்தான் கணிச்சுட்டோம். அவனுக்குச் சாவு பயமே இல்ல.

ரெண்டாம் ஆட்டம் - 46

நீங்க மட்டுமில்ல, நாங்களும் அவனைத் தப்பாத்தான் கணிச்சுட்டோம். அவனுக்குச் சாவு பயமே இல்ல.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஒவ்வொரு நாளின் விடியலுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்லும் மருதுவைப் பொறுத்தவரை, சாவு எப்போதோ அவனைக் கடந்துபோன ஒன்று. அதனாலேயே சாவைக் குறித்த அச்சங்களிலிருந்து விடுபட்டுவிட்டவனாக இருந்தான். உடலில் பட்டிருந்த காயங்களுக்காகக் கட்டுப்போட காளிதான் அவனை வற்புறுத்தி அழைத்துச் சென்றான். மருதுவின் மனதுக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மிருகம் விழித்துவிட்டிருந்ததோடு, அடக்கிவைக்கப்பட்ட பசி கனன்று எரியத் தொடங்கியது. எவர்மீதும் ஆயுதம் ஏந்துவதில்லை என எடுத்திருந்த உறுதியெல்லாம் தவிடுபொடியாகி, தனது கடைசி எதிரிவரை ஒருவனையும் விடாமல் அழித்துவிடும் வெறி கிளம்பியிருந்தது மருதுவுக்குள்.

மருது இன்னொரு முறையும் சாவைத் தின்று செரித்துவிட்டான் என்கிற செய்தியைக் கேள்விப்பட்ட அறிவு, அச்சத்தில் முற்றாக நொறுங்கிப்போனான். அவனது அதிர்ஷ்டமா... தனது துரதிர்ஷ்டமா... எது அவனைத் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்கிற கேள்விக்கு பதில் கிடைப்பதாக இல்லை. வெட்டுப்பட்டவர்களைப் பார்க்க திருச்சி ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த அறிவழகனைப் பார்க்க, இவர்கள் நான்கு பேருக்கும் தயக்கமாக இருந்தது.

ரெண்டாம் ஆட்டம் - 46

“பரவாயில்ல அற்புதம். நீங்க உங்களால முடிஞ்சத செஞ்சீங்க. அவனுக்கு நேரம் நல்லாருக்கு. பொழச்சுக்கிட்டான். இதுக்கு அப்பறம் அவனை அழிக்கிறத மறந்துட்டு என்னயக் காப்பாத்திக்கப் பாக்கறேன்.”

அவன் வார்த்தைகளில் இருந்த இயலாமையையும் அச்சத்தையும் புரிந்துகொண்ட அற்புதராஜ் “நீங்க மட்டுமில்ல, நாங்களும் அவனைத் தப்பாத்தான் கணிச்சுட்டோம். அவனுக்குச் சாவு பயமே இல்ல. அதனாலதான் எத்தனை பேர் வெட்டினாலும், எப்பிடி வெட்டினாலும் துணிச்சலா எதுத்து நிக்கிற ஆளா இருக்குறான். அவன அழிக்கணும்னா அவனுக்கு இருக்கிற வெறியும் துணிச்சலும் இருக்கணும்” என்றான்.

“தலைவரே... இப்ப பகை உங்களுக்கும் அவனுக்கும் இல்ல. எங்களுக்கும் அவனுக்கும். இதுவரைக்கும் நாங்க கரவெச்சு எவனும் தப்பிச்சதில்ல. இவன் தப்பிச்சது மட்டுமில்லாம, எங்க நாலு பேரையும் நல்லா பதம் பாத்துட்டான். பதிலுக்கு அவன் தலைய எடுத்தாத்தான் எங்க மனசு ஆறும்.”

அடிபட்ட மிருகத்தின் ரெளத்திரத்தோடு விஜயன் சொல்ல, அறிவு பதறிப்போய், “ஏய் விடுங்கப்பா. அவன் சாவு நம்மளால இல்லன்னு ஆகிப்போச்சு. விட்ருங்க. நீங்க நாலு பேரும் நல்லபடியா தப்பிச்சு வந்ததே போதும். நாம மறந்துட்டு அடுத்த வேலையப் பாப்போம்” என்று அவர்களை ஆறுதல்படுத்தினான்.

“அப்பிடி ஒதுங்கிப் போறதுக்கா உசுரக் காப்பாத்திக்கிட்டு தப்பிச்சு வந்தோம்? இது கெளரவப் பிரச்னை தலைவரே. உங்களுக்குச் சொன்னாப் புரியாது. எத்தன மாசமானாலும் சரி, வருசமானாலும் சரி. அவனைக் கொல்றதுதான் இனி எங்களுக்கு இருக்கிற ஒரே வேல. நீங்க கெளம்புங்க” என்ற அற்புதராஜின் கண்களில் பகையின் நெருப்பு எரியத் தொடங்கியதை கவனித்த அறிவு, அவர்களுக்குப் பேசிய தொகையைத் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான். அப்போதும்கூட பெயரிடாத அந்தக் கடிதத்தைத் தனக்கு யார் அனுப்பியிருப்பார்கள் என்கிற சந்தேகம் அவனுக்கு வந்திருக்கவில்லை.

சோகத்தில் வாடிப்போயிருந்த முத்தையாவை கவனித்த காளியும் அவன் ஆட்களும் மருதுவுக்காகக் கவலைப்பட்டு அவன் இப்படி வாடிப்போயிருக்கிறான் என நினைத்தனர். முத்தையாவின் மனம், மருதுவின் மீதான பயத்திலும் பொறாமையிலும் புழுங்கிக் கொண்டிருந்தது. தன்னால் ஒருபோதும் இவனை வெல்ல முடியாதா... எல்லோருக்காகவும் வெட்டுக்குத்து வாங்கியே தன் வாழ்க்கை முடிந்துபோகுமா என்கிற கவலையில் அவனுக்கு உடல் கசந்தது. எங்காவது தூரமாய் ஓடிப்போய்விடலாமென நினைக்கும் போதெல்லாம் “முத்தையா மட்டும் அன்னிக்கி என் பக்கத்துல இருந்திருந்தான்னா ஒரு பய என்னையத் தொட்ருக்க முடியாதுண்ணே” என மருது யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டு எரிச்சலாவான். இவன் உண்மையிலேயே அவ்வளவு நம்புகிறானா அல்லது ஆழம் பார்க்கிறானா என்ற சந்தேகமெழும். கசப்போடு அவர்களைப் பார்த்துச் சிரிப்பான். மருதுவுக்குத் துணையாக காளி, மலைச்சாமியையும் விட்டுவிட்டுச் சென்றதால் முத்தையாவுக்குச் சுமை கூடியிருந்தது. தனக்கான இடம் கண் முன்னாலேயே நழுவிப்போவதை உணர்ந்து நொந்துகொண்டான்.

மலைச்சாமி முழு நேரமும் மருதுவோடு பாதுகாப்புக்கு இருக்க வேண்டியிருந்ததால், தேவியை அடிக்கடிப் பார்க்க முடியாமல் போனது. நள்ளிரவுக்கு மேல் மருது அயர்ந்து உறங்கின பிறகு, சைக்கிளை எடுத்துக்கொண்டு அவளைப் பார்க்கக் கிளம்பிச் செல்வான். தெருவிளக்குகள்கூட இல்லாத இருள் நிரம்பிய சின்னஞ் சிறிய சந்துக்குள் நுழைந்து, அந்த அகால நேரத்தில் அவளது வீட்டை நெருங்கும் முன் துரத்தி வரும் நாய்களின் குரைப்பொலிகளைக் கேட்டு அவள் உறக்கம் களைந்து வெளியே வருவாள். பருவ வயதினரைப்போல் பேசவோ, கொஞ்சவோ அவகாசமில்லாமல் அவளைப் பார்த்த நொடியிலேயே மலைச்சாமி புணர்ச்சிக்குத் தயாராகிவிடுவான். தேவியின் வீட்டுக்குப் பின்னாலிருந்த வெட்டவெளி அவர்களுக்கு வசதியாகப்போனதால், அவன் வரும் நாள்களில் பாயோடு தயாராகிவிடுவாள்.

“ஏண்டி உனக்கு கோவமே வரலையா?”

“எதுக்கு?”

“படுக்கறதுக்கு மட்டும்தான் எங்கிட்ட வருவியான்னு கேக்கத் தோணலியா?”

“அப்பிடிக் கேட்டுட்டா மட்டும் படுக்காம போயிடப்போறியா? ஒவ்வொருத்தனும் ஒவ்வொருவிதமா லவ் பண்றான். உனக்கு இப்பிடித்தான் லவ் பண்ணத் தெரியும்னா நான் அப்பிடியே ஏத்துக்கறேன்.” அவள் சிரிப்பாள்.

“நல்லா அனுபவிச்சுட்டு, நான் கம்பி நீட்டிட்டா என்ன செய்வ?”

“உன் சட்டத் துணி, தல மயிரு எல்லாம் இருக்கு. எடுத்துட்டுப் போயி செய்வென வெச்சிருவேன். அப்பறம் வயிறு வெடிச்சுத்தான் சாவ…” எனக் குறும்பாகச் சொன்னவளை முன்னைவிடவும் இறுக்கமாக அணைத்துக் கொள்வான்.

அவர்களின் நள்ளிரவு சந்திப்புகளும் சல்லாபமும் அந்தப் பகுதியில் ஒரு சலசலப்பாக மாறியபோது, சந்திரன் அவமானத்தால் புழுங்கினான். அவனோடு இருந்தவர்களில் ஒருவன், “பங்காளி... இத சுமுகமா முடிக்கணும்னா மருது அண்ணன்தான் பேசணும். ஆனா, அவர் இருக்க நெலமைல இப்போ ஏதும் செய்ய முடியாது. அவருக்கு அப்புறம் இந்தக் கெடாயன் கட்டுப்படறது முத்தையா அண்ணனுக்குத்தான். அவருகிட்டப்போயி விஷயத்தச் சொல்லுவோம். எதாச்சும் வழி சொல்லுவாரு…” என யோசனை சொன்னான். சந்திரனுக்கும் அது சரியென்று பட, நண்பர்களோடு ஒருநாள் மாலை சாராயக் கடைக்குக் கிளம்பிச் சென்றான். ஆட்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், முத்தையாவும் ஓய்வாகத்தான் இருந்தான்.

ரெண்டாம் ஆட்டம் - 46

“அண்ணே வணக்கம்ணே…” சந்திரன்தான் அவனை நெருங்கிப் பேச்சை ஆரம்பித்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டாலும் காட்டிக்கொள்ளாத முத்தையா “சொல்லுய்யா தம்பி?” எனச் சாதாரணமாகக் கேட்டான். “ஒரு சின்ன மேட்டர்ணே. உங்க உதவி வேணும்” என சந்திரன் இழுக்க, “என்ன உங்கக்கா விஷயமா பேசணுமா?” என முத்தையா சிரித்தான். சந்திரன் அவமானத்தில் தலைகுனிந்து கிடக்க “வெக்கமா இல்லயா உங்களுக்கெல்லாம்? ஒவ்வொருத்தனும் கெடா மாடு மாதிரி வளந்திருக்கீங்க... இப்பிடி ஊர் சிரிக்க விட்ருக்கீங்களேய்யா... என் அக்கா தங்கச்சி இந்த மாதிரி செஞ்சிருந்தா இந்நேரத்துக்கு அவள சங்கறுத்துப் போட்ருப்பேன்” முத்தையாவின் ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்குள் நஞ்சை இறக்கிக்கொண்டிருந்தது. “முழுசா அசிங்கப்படுறதுக்கு முன்னாடி ஒண்ணு... கெட்டி வெச்சிருங்க. இல்லன்னா... வேற முடிவ எடுங்க. நாளப் பின்ன நீ இன்னொரு வீட்ல எப்பிடிய்யா பொண்ணு கெட்டுவ?” தன்னிடமிருந்த கடைசி ஆயுதத்தையும் முத்தையா பிரயோகித்துவிட, வந்திருந்தவர்கள் சமாதானம் பேசுவதற்கான அவசியமின்றியே கிளம்பிவிட்டார்கள்.

அன்று இரவு மருது, வள்ளியோடு அவள் அம்மா வீட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருக்க, சந்திரனின் நண்பனொருவன் மலைச்சாமியைத் தேடி மருதுவின் வீட்டுக்கு வந்தான். அந்த நேரத்தில் அவனைப் பார்த்த மலைச்சாமி சந்தேகத்தோடு “என்னடா?” எனக் கேட்க “இருந்திருந்தாப்ல அக்காவுக்கு சொகமில்லாமப் போச்சு… எங்க யாருக்கும் என்ன செய்றதுன்னு தெரியல. சந்திரன் உன்னயக் கையோட கூட்டியாரச் சொன்னான்” என அழுகையோடு சொன்னான். மலைச்சாமி தயங்கியபடியே மருதுவைப் பார்க்க, “மல, நான் முத்தையாவக் கூப்ட்டுக்கறேன். நீ உடனே கிளம்பிப் போயி என்னன்னு பாரு...” மருது பையிலிருந்து செலவுக்குப் பணத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பிவைத்தான்.

சந்திரனின் நண்பன், மலைச்சாமியை வேறு பாதையில் அழைத்துச் செல்ல, “எங்கடா போற?” என மலைச்சாமி பதற்றமானான். “அக்காவ இப்ப எங்க வீட்ல வெச்சிருக்கோம்” என அவன் திரும்பிப் பார்க்காமலேயே சொல்லிவிட்டு வேகமாக சைக்கிளை மிதித்தான். வில்லாபுரத்துக்கும் முன்பாக இருந்த கண்மாயை ஒட்டிய மண்பாதையில், வரிசையாக இருந்த நான்கு வீடுகளில் ஒரு வீட்டில் மட்டும் வாசலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு சந்திரனின் நண்பன் அவசரமாக வீட்டுக்குள் செல்ல, மலைச்சாமியும் அவனுக்குப் பின்னால் சென்றான். பழைய மரக்கதவை விலக்கி உள்ளே சென்றபோது, தேவி ஒரு நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டிருந்தாள். மலைச்சாமி சுதாரித்து கத்தியை எடுப்பதற்கு முன்னால் அவனுக்குப் பின்னாலிருந்து இரண்டு பேர் ஆவேசமாகக் கத்தியை இறக்கினார்கள். மலைச்சாமி கத்தியை உருவும் அவகாசத்தில், இன்னும் இரண்டு பேர் கத்தியைச் சொருக, பார்த்துக்கொண்டிருந்த தேவி அலறினாள். மலைச்சாமி மயங்கிச் சரிய, அவன் வயிற்றிலிருந்து உருவியக் கத்தியால் சந்திரன் தேவியின் கழுத்தை அறுத்தான். அவள் அலறல் சில நொடிகளிலேயே அடங்கிப்போனது.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism