மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம் - 48

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

ஒரு மனிதனின் மீதான வெறுப்பு சடாரென உருவாகக் கூடியதல்ல. வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு காலங்களில் விதைக்கப்படுகிறது.

சித்திரைத் திருவிழாவுக்காக மதுரை நகரம் கோலாகலமாகத் தயாராகியிருந்தது. தமுக்கத்தில் பொருட்காட்சி தொடங்கியிருந்ததால், மாலை நேரங்களில் மக்களின் முகங்களில் அலாதியானதொரு மகிழ்ச்சியும் பரவசமும் பொங்கிவழிந்தன. மதுரை, கோயில்களின் நகரம் மட்டுமல்ல, திருவிழாக்களின் நகரமும்கூட. ஒவ்வொரு மாதமும் ஏதோவொரு பகுதியிலிருக்கும் கோயிலில் திருவிழா நடக்கும்.

பால்குடம் எடுப்பது, முளைப்பாரி போடுவதென அந்தப் பகுதியே ஜொலிக்கும். ஒரு கோயிலைவிட இன்னொரு கோயிலில் அதிகமாக பால்குடம் எடுப்பதற்கும், முளைப்பாரி போடுவதற்கும் போட்டி போட்டுக்கொண்டு செய்வார்கள். எல்லாத் திருவிழாக்களுக்கும் உச்சமாக வருவது சித்திரைத் திருவிழா. எங்கிருந்து வருகிறார்களெனத் தெரியாத ஜனங்கள் பெருமளவில் மதுரைக்கு வந்துசேர்வார்கள். மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றிலிறங்கும் வைபவமும் மதுரைக்காரர்களைப் பொறுத்தவரை கோயில் திருவிழா அல்ல, குடும்பச் சடங்கு. அவர்கள் வாழ்வின் எல்லா சந்தோஷமான தருணங்களும் ஏதோவொரு வகையில் இந்தத் திருவிழாவோடு தொடர்புடையதாயிருக்கும். மதுரையின் சித்திரை மாத நாள்களை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அது கொண்டாட்டங்களுக்கான ஊரென்பது தெரியும்.

கோட்டைச்சாமி தன் குடும்பத்தினரோடு ஒரு நாளும், ஜெகதியோடு ஒரு நாளுமாகப் பொருட்காட்சி சென்றுவந்தான். செல்வத்தையும் அவன் நண்பர்களையும் தவிர்த்துவிட்டு, தன் பங்காளிகளோடு முதன்முறையாகத் திருவிழாக்களுக்குச் செல்வதை வீட்டிலிருந்த எல்லோருமே விநோதமாகப் பார்த்தார்கள். கோட்டைச்சாமியின் தம்பி கருப்பு மட்டும் தனியான ஒரு நேரத்தில் “என்னண்ணே... இப்பல்லாம் எங்க போனாலும் செல்வத்த கழட்டி விட்றே... எதும் கோளாறு பண்ணிட்டானா?” எனக் கேட்டான்.

“அதெல்லாம் இல்லடா… எல்லாத்தையும் ஒரு எல்லையோட வெச்சுக்கணும்னுதான்…” என கோட்டைச்சாமி சமாளித்தாலும், கருப்புவுக்கு அவன் வார்த்தைகளில் நம்பிக்கை வந்திருக்கவில்லை.

ரெண்டாம் ஆட்டம் - 48

ஒரு மனிதனின் மீதான வெறுப்பு சடாரென உருவாகக் கூடியதல்ல. வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு காலங்களில் விதைக்கப்படுகிறது. யார்மீது பொறாமையுணர்ச்சி மிகுகிறதோ அவர்களின் மீது வெறுப்பும் அதிகரித்துவிடுகிறது. செல்வத்துக்கு இத்தனை காலமாக கோட்டைச்சாமியின் மீது திரண்டிருந்த பொறாமையுணர்ச்சிகள், ஜெகதியின் வருகைக்குப் பின்னால் வெறுப்பாகத் திரண்டிருந்தன. பார்வையில், சொற்களிலெல்லாம் கோட்டையின் மீதிருந்த அன்பு விலகி, கசப்பு கொப்பளித்ததை மற்றவர்களும் கவனிக்கத் தொடங்கியிருந்தனர். கோட்டைச்சாமிக்கும் இந்தக் கசப்புக்கான காரணங்கள் தெரிந்திருந்தாலும், அதற்காக நேரடியாக எந்த எதிர்வினையையும் செய்யவில்லை. இருவருமே வஞ்சம் தீர்த்துக்கொள்ள தங்களுக்கான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர்.

செல்வத்திடம் உருவாகியிருந்த மாற்றத்தை கவனித்து, சோணை சுதாரித்திருந்தான். கோட்டைச்சாமியின் ஆட்கள் திருவிழா பகுமானத்தில் சுற்றிக்கொண்டிருக்க, இவர்கள் நான்கு பேரும் தனியாக மதுவருந்தச் சென்றார்கள். சோணைக்கு மனதளவில் சில திட்டங்களிருந்தன. அவற்றை உடைத்துப் பேசுவதற்கான தருணம் இதுவென உறுதியாகயிருந்தான்.

“யோவ் செல்வம்... என்னய்யா... கோட்ட அண்ணே என்ன சொன்னாலும் மொறச்சுக்கிட்டு நிக்கிற?” தயக்கத்தோடு கேட்டான்.

“என்ன செய்யச் சொல்ற? இத்தன காலமா நாம அவர்கிட்ட இருக்கோம். நம்மளுக்குன்னு எதாச்சும் செய்றாப்ளையா? அவரு பங்காளிகளையெல்லாம் பாரு... நோகாம நொங்கு திங்கிறாய்ங்க” என செல்வம் சொன்னதை, பல நாள்களாக அவன் நண்பர்கள் சொல்லத் தவித்துக்கிடந்தார்கள். கோட்டையோடு அவனுக்கு இருக்கும் நெருக்கம் காரணமாகவே சொல்லாமல் தவிர்த்திருந்தனர். இப்போது அவனே மனம் உடைந்து சொன்னபோது, சோணையும் மற்றவர்களும் அமைதியாகத் தங்களுக்குள் பார்த்துக்கொண்டனர். செல்வம் ஊற்றியிருந்த மதுவை அவசரமாக எடுத்துக் குடித்தான்.

“இதப் புரிஞ்சுக்கறதுக்கு உனக்கு இத்தன வருஷம் ஆச்சாய்யா?” செல்வம் நிமிர்ந்து சோணையைப் பார்த்தான்.

“செல்வம் நாம என்னதான் பாசத்தோட வேல செஞ்சாலும், அவய்ங்க நம்மள வேலக்காரனாத்தான் பாக்கறாய்ங்கய்யா... ஆறேழு வருசமா அவர்கூட இருந்திருக்கோம். நம்மளுக்கு எதாச்சும் கெடச்சிருக்கா? ஆனா அவய்ங்களப் பாரு... எம்புட்டு ஃபோர்சா வளந்திருக்காய்ங்கன்னு. அவய்ங்க சொகுசா அனுபவிக்கிறதெல்லாம் நம்மளோட உழைப்புய்யா…”

சோணை சொன்னதிலிருந்த உண்மையைப் புரிந்துகொண்ட செல்வம், நிதானமாக ஆமோதித்துத் தலையாட்டினான்.

“நாங்களே கொஞ்ச நாளா உங்கிட்ட சொல்லணும்னுதான் இருந்தோம். நாம ஊரானுக்கு ஒழச்சதெல்லாம் போதும். பேசாம தனியா வந்துரலாமா?”

செல்வத்துக்குக் கெதக்கென்றிருந்தது. பதற்றத்தோடு திரும்பி சோணையைப் பார்த்தான்.

“ஏய் சோண, படக்குன்னு எப்பிடிரா தனியா வர்றது? நாம தனியா ஏதாச்சும் செய்யணும்னா மொதல் போடணும்... நாலு ஆளுக பழக்கவழக்கம் வேணும்...” செல்வம் தயங்கினான்.

“என்னய்யா பயப்படறியா?”

“பயமா, இன்னும் மிச்சமிருக்க மரியாதையான்னு தெரியலடா…”

“நாமளா வெளிய வர வேணாம், அவரே அனுப்பற மாதிரி செய்வோம்.”

செல்வம் புரியாமல் பார்க்க “அடுத்த மாசம் ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் ஏலம் வருது. கோட்ட எப்பிடியும் அவரு பங்காளி எவனுக்காச்சும் எடுத்துக் குடுக்கணும்னுதான் யோசிப்பாப்ள. எவனைக் கை காட்றாரோ அவன்கிட்ட பேசி மண்டையக் கழுவிட்டம்னா ஏலத்த நாம எடுத்துரலாம். அவர் பேச்சக் கேக்கலைங்கற கடுப்புல கண்டிப்பா ஏதாச்சும் நடக்கும்…”

“இல்லடா சரியா வரும்னு தோணல… கோட்ட அவ்ளோ லேசுல கோவப்படற ஆள் கெடையாது…”

சோணை பொறுமையிழந்தவனாக செல்வத்தின் பேச்சை மறித்தான். ‘‘இப்பயே உன்னய என்ன செய்யலாம்னுதான் யோசிச்சுட்டு இருப்பாப்ள… எங்க எல்லாருக்கும் தெரியும்... உனக்கும் ஜெகதிக்கும் என்ன ஓடுதுன்னு. அந்தாளுக்குத் தெரியாம இருக்கும்ண்டா நெனைக்கிற?’’

சோணை இதைச் சொன்னபோது, சமீபமாக கோட்டைச்சாமி தன்னை எல்லாவற்றிலும் விலக்கிவைத்திருப்பதற்கான காரணத்தை செல்வம் சடாரெனப் புரிந்துகொண்டான். அவன் மனம் பலவாறாக யோசித்துக் குழம்பியது. முடிவெடுப்பதற்கான தருணம் வந்துவிட்டதைப் புரிந்துகொண்ட செல்வம், “சரிடா... நீ சொன்ன மாதிரியே செய்வோம். வர்றதப் பாத்துக்கலாம்.” தீர்மானமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்.

ரெண்டாம் ஆட்டம் - 48

ஜெகதியுடனான சந்திப்புகள் குறைந்தன. செல்வம் தனக்கானதொரு வட்டத்தை ரகசியமாக உருவாக்கிக்கொள்ளத் தொடங்கியபோது, அப்பாவும் அண்ணனும் உறுதுணையாக இருந்தால் மட்டுமே அந்த வட்டம் பாதுகாப்பானதாக இருக்குமென நம்பினான். முத்தையா இரண்டு நாள்களுக்கு முன்பாகத்தான் ஒரு கேஸிலிருந்து விடுதலையாகி வந்திருந்தார். வந்ததிலிருந்து வீட்டிலேயே குடியும் கூத்துமாக இருந்தது. மூன்றாவது நாள் செல்வமும் சேர்ந்துகொண்டான். இரண்டாவது சுற்று மதுவைக் குடிக்கும்போது, “எப்பா... கோட்டச்சாமியவிட்டுத் தனியா வந்துரலாம்னு பாக்கறேன். நீ என்ன சொல்ற?” என்று செல்வம் தனது நோக்கத்தை முத்தையாவிடம் சொன்னான். முத்தையாவும் சேகரும் இவனை ஆழமாக ஊடுருவிப் பார்த்தனர். இனி தன் முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்கிற உறுதி அவன் முகத்தில் வெளிப்பட்டது.

“சரிடா செல்வம். வாழ்வோ சாவோ ஒரு முடிவு எடுத்துட்ட. அதுல உறுதியா இரு. உன் பயக எல்லாரும் உனக்கு நேரடியா வேல செய்யட்டும். நானும் உங்க அண்ணனும் நிழலா இருக்கோம். இந்த ஊர்க்காரய்ங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் ஊளையாத்தான் தெரியும். ஆனா, எங்க ரெண்டு பேருக்கு மட்டும்தான் இந்த ஊர்ல உண்மைலயே எவன் வீரன், எவன்லாம் ஊளைங்கற உண்மை தெரியும். மத்தவனோட பலவீனத்தையெல்லாம் நம்ம பலமா மாத்துவோம். தைரியமா இரு…”

முத்தையா, உற்சாகப்படுத்தும்விதமாகச் சொல்லிவிட்டு மதுவை எடுத்து அவன் கையில் கொடுத்தார்.

“நம்மளால சிக்கல் இல்லாம எல்லாத்தையும் செஞ்சுர முடியுமாப்பா?” செல்வத்தின் முகத்தில் பயம் அப்பட்டமாக வெளிப்பட்டது. முத்தையா சிரித்தார். “முப்பது வருசமா இந்த ஊர்ல தாட்டியக்காரன்னு சொல்லிக்கிட்ட எல்லார்கிட்டயும் அடிமையா இருந்துட்டண்டா... மேல ஏறி வந்து ஒரு ஆளா நின்னுடணும்னு நெனச்சப்பல்லாம் எனக்குத் தோள் கொடுக்க ஒருத்தன்கூட இல்ல. அதனாலயே எதும் செய்ய முடியாம என்னைய ஊளையாவே வெச்சுக்கிட்டேன். இந்த உசுர இத்தன காலம் காப்பாத்தி இருக்கது எதுக்கு தெரியுமா? ஒருநாள் இந்த ஊர ஆளணும்னுதான். என்னாலயும் உங்க அண்ணனாலயும் முடியாது. ஆனா, உன்னால முடியும்னு எனக்கு எப்பவோ தெரியும். நீ அதுக்குத் தயாராகணும்னுதான் காத்திருந்தேன். நாம எத்தன காலத்துக்குத்தாண்டா அடிமையா இருக்கறது? உழைக்கிறதெல்லாம் நாம, திங்கிறது அவய்ங்க. கண்ணு முன்னாலயே ஒவ்வொருத்தனும் வளர்றதப் பாக்கறப்போ வயிறு எரியும். எதும் செய்ய முடியாது. ஆனா இனிமே செய்வோம்.” முத்தையா நம்பிக்கையாகச் சொன்னார்.

செல்வத்தின் யோசனைப்படி எல்லாம் கூடிவந்தது. நள்ளிரவுக்குமேல் ஜெகதியைத் தேடிச் சென்றான். அவனுக்கான காத்திருப்பின் தகிப்பில் தன்னைத் தானே எரித்துக் கொண்டிருந்தவள், அவனைக் கண்ட பரவசத்தில் ஆவி தீர அணைத்து முத்தமிட்டாள். சல்லாபத்துக்கான சிலிர்ப்புகளை ஒதுக்கிவைத்த செல்வம், “என்னையக் கொஞ்சம் பேசவிடு ஜெகதி. இத அப்பறம் வெச்சுக்கலாம்.” என ஒதுக்கினான். ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் என்னவெனப் பார்த்தாள். “நீ சொன்னத யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். நாம தனியா வந்துரலாம்” அவன் சொன்னதைக் கேட்ட சந்தோஷத்தில், இறுக்கமாக அணைத்துக்கொண்டாள். “அப்பா… இப்பயாச்சும் உனக்குப் புத்தி வந்துச்சே…” எனச் சிரித்தவளிடம், “ஆனா அதைச் செய்யணும்னா எனக்கு உன் உதவி வேணும்” புதிரோடு சொன்ன செல்வத்தைத் தன்னிலிருந்து விலக்கிய ஜெகதி “நீ எதுக்கும் கவலப்படாத. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்” என நம்பிக்கையோடு சொன்னாள்.

(ஆட்டம் தொடரும்)