Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 49

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

போலீஸ்காரர்கள் ஒரு குற்றவாளியைத் தேடுவது போலல்ல; ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியைத் தேடுவதுபோல.

காலம், காயங்களை ஆற்றினாலும் வடுக்கள் மறைவதில்லை. பகையின் சாட்சியாக அவை எப்போதும் மனதைக் கிளறியபடியேதான் இருக்கின்றன. மருதுவின் கழுத்துக்கு வந்த கத்தி, அவன் உயிரைக் குடிக்கும் துணிவின்றி தோற்று ஓடி ஏழெட்டு மாதங்கள் கடந்துபோயிருந்தன. காளி உட்பட மருதுவோடிருந்த அத்தனை பேரும் சம்பவத்தை மறந்துவிட்டிருந்தபோதும், மருது மட்டும் தன்னைக் காவு வாங்க வந்த கத்திக்குச் சொந்தக்காரனை ரகசியமாகத் தேடிக்கொண்டிருந்தான்.

போலீஸ்காரர்கள் ஒரு குற்றவாளியைத் தேடுவது போலல்ல; ஒரு குற்றவாளி இன்னொரு குற்றவாளியைத் தேடுவதுபோல. எல்லோருக்கும் தெரிந்த வெளிச்சங்களை ஒதுக்கி, ஆள் நடமாட்டமற்ற இருளில் தேடும்போதுதான் சக குற்றவாளிகளின் தடத்தைத் தெரிந்துகொள்ள முடியும். மருதுவுக்கு அந்த இருண்ட உலகம் வேறு யாரையும்விட நன்கு பரிச்சயமானது என்பதால், தன்னைத் தேடி வந்தவர்களை மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருந்தான். அந்தத் தேடலில் அவன் தனக்கு நம்பிக்கையாக உடன் வைத்துக்கொண்டது முத்தையா ஒருவனை மட்டும்தான். தனக்கு இப்போது இருக்குமிடமே போதும் என்கிற எண்ணம் வந்துவிட்டதால், முத்தையாவும் மருதுவுக்குக் கட்டுப்பட்ட ஆளாகத் தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்கியிருந்தான். எப்போதும்போல், வாரத்தில் ஒரு நாள் சாராயக் கடைக்கு மேலிருக்கும் அந்த அறையில் தனியாக மது அருந்தும் வழக்கத்தை மருது மாற்றியிருக்கவில்லை. மற்ற ஆட்களென்றால் இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு அந்த இடத்துப் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மருது மற்றவர்களைப்போல் இல்லை.

ரெண்டாம் ஆட்டம்! - 49

“முத்து என்னையக் கொல்ல வந்தவய்ங்களப் பத்தி என்னடா நினைக்கிற?”

ஒருநாள் மதுவருந்தும்போது மருது கேட்க, முத்தையாவுக்குக் கெதக்கென்றிருந்தது. “ஏண்ணே இன்னுமா அத நீ மறக்கல… உனக்கு வேண்டாதவய்ங்க எத்தனையோ பேரு இருக்காய்ங்க. அதுல ஒருத்தன் வம்மவெச்சு செஞ்சுட்டான். அத மறந்துட்டு எப்பயும்போல இருண்ணே.”

“இல்லடா முத்து… குத்துப்பட்டு உசுரக் காப்பாத்திக்கிட்டு ஓடுனவய்ங்க கண்ண நல்லா பாத்துட்டேன். அவய்ங்களும் லேசுப்பட்ட ஆள் இல்ல. ஒருநாள் இல்ல ஒருநாள் கண்டிப்பா என்னையத் தேடி வருவாய்ங்க...”

“என்னண்ணே சொல்ற?”

“இந்தத் தொழில்ல இருக்கவன் மிருகம் மாதிரிடா. சண்டைக்குப்போனா ஜெயிக்கணும் இல்ல செத்துறணும். காயத்தோட திரும்பிட்டா அந்தப் பக தீரவே தீராது… அவய்ங்க கண்டிப்பா என்னையத் தேடி வருவாய்ங்க. அதனாலதான் நான் முந்திக்கணும்னு பாக்கறேன்.”

பதற்றத்திலும் அதிர்ச்சியிலும் முத்தையா உறைந்துபோனான். அவன் அப்படி உறைந்திருப்பதைப் பொருட்படுத்தாத மருது “அவய்ங்க எடுத்தோம் கவுத்தோம்னெல்லாம் பொருள எடுத்துட்டு வரலடா… என்னைய நல்லா வாட்ச் பண்ணி இருக்காய்ங்க. அதனாலதான் மத்த எடத்த எல்லாம் விட்டுட்டு, கரெக்டா இங்க குறிவெச்சு வெட்ட வந்திருக்காய்ங்க. என்னையப் பத்தி அவ்ளோ தெரிஞ்சிருக்குன்னா நாளைக்கு எங்கூட இருக்க யாரையாச்சும் முடிச்சுவிடணும்னு அவய்ங்களுக்குத் தோணும். மனுசனுக்கு வெறி புடிச்சுட்டா, அடங்கற வரைக்கும் ரத்தம் குடிக்கணும்னுதான் நெனப்பான். அவய்ங்களுக்கு வெறி புடிக்கிறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்டா...”

மருது சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முத்தையாவின் நிதானத்தை உருக்குலைத்துப்போட்டன. இவ்வளவு யோசிக்கிற மருதுவுக்கு இதற்கெல்லாம் பின்னால் தானும் ஒரு காரணமாயிருக்கக்கூடும் என்பதைக் கண்டுபிடிக்க நீண்ட காலம் தேவைப்படப் போவதில்லை என உரைத்தது. நண்பனைப் பகைத்துக்கொள்ளும் களம், நேரடியான சண்டைக்கானதில்லை என உள்ளுணர்வு உணர்த்த, மதுக்கடைகளில் ‘மருதுவைக் கொல்ல ஆள் அனுப்பியது அறிவுதான் என்கிற செய்தியை வதந்தியாகப் பரவவிட்டான் முத்தையா. பரபரப்பான செய்திகளை ஆர்வத்தோடு கேட்கிற எவரும், அந்தச் செய்தி எவரிடமிருந்து வந்திருக்கக் கூடுமென்பதை யோசிப்பதில்லை. நீண்ட நாள்களுக்குப் பிறகு, மூர்த்தியின் பெயரும் அறிவின் பெயரும் மதுரைக்குள் ரகசியமாக அடிபடத் தொடங்கியபோது, சோமுவின் தம்பியும் அவன் பங்காளிகளும் சுதாரித்துக்கொண்டார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 49

அரசியல் தனக்குச் சரிப்படாதென ஒதுங்கியிருந்த மூர்த்தியிடம், சோமுவின் தம்பி அறிவு குறித்த செய்தியைச் சொன்னபோது, அவர் அச்சத்தில் உறைந்துபோனார்.

“அண்ணே, மருதுவுக்குக் கரவெச்சு தட்டிவிடப் பாத்தது நம்ம தம்பிதான்னு ஊரெல்லாம் பேச்சா இருக்கு…” மூர்த்தி அவன் சொன்னதை நம்ப முடியாமல் அவசரமாக மறுத்தார். “ஏய்... அவனே பாவம் இந்த ஊரும் வேணாம், பகையும் வேணாம்னு ஒதுங்கியிருக்கான். அவன் எதுக்கு இதையெல்லாம் செய்யப்போறான்... தேவையில்லாம எதையாச்சும் சொல்லி அவன இதுக்குள்ள இழுத்துவிட்றாதியப்பா…”

“இல்லண்ணே. எதிரிங்க கண்டுபிடிச்சு முந்துறதுக்குள்ள நீங்களே தம்பிகிட்ட விசாரிச்சு ஒரு வழி பண்ணிருங்க” சோமுவின் தம்பி அழுத்தமாகச் சொன்னதைக் கேட்டு மூர்த்தி தயக்கத்தோடு அறிவை போனில் பிடித்தார்.

“எலேய் அறிவு... ஊருக்குள்ள என்னென்னமோ பேசிக்கிருக்காய்ங்க, எல்லாம் உண்மையா?”

“என்ன... மருதுக்குக் கரவெச்சது நான்தான்னு பேசிக்கிறாய்ங்களா?”

அறிவு சாதாரணமாகச் சொன்னதைக் கேட்டு அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“அட மோசக்காரப்பயலே... இதெல்லாம் உன் வேலதானா? எலேய்... என்ன காரியம் பண்ணிவெச்சிருக்க? அவய்ங்களுக்குத் தெரிஞ்சா எத்தன வருசம் ஆனாலும் உன்னயத் தேடி வந்து கருவறுப்பாய்ங்க.”

“அட போப்பா… அதுக்காக ஒன்னயாட்டம் பயந்துக்கிட்டு இருக்கச் சொல்றியா? கையில்லாம வாழ்ற ஒவ்வொரு நாளும் மூக்குமேல பீ ஒட்டினாப்ல கேவலமா இருக்கு. இப்பிடி ஓடி ஓடி ஒளிஞ்சுதான் அந்த மானங்கெட்ட உசுரக் காப்பாத்திக்கணுமா? அவன் ஈரக்கொலைய அறுத்துப் போட்டாத்தான் என் மனசு ஆறும். ஒரு தடவ தப்பிச்சுட்டான். அடுத்த தடவ எப்பிடி தப்பிக்கிறான்னு பாக்கறேன்...”

அறிவின் குரலில் வெளிப்பட்ட வெறுப்பும் பகையும் அத்தனை சீக்கிரத்தில் தீரக்கூடியதல்ல என்பதைப் புரிந்துகொண்ட மூர்த்தி, பேச்சற்றவராக போனை வைத்துவிட்டார்.

முத்தையாவின் கணக்கு தப்பவில்லை. மூர்த்தி தன்னையும், தன் மகனையும் காத்துக்கொள்வதற்கான வழிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். ‘எதிரி வலிமையானவனாக இருக்கையில், பணிந்துபோவதும் ஒரு வகையில் வீரம்தான்’ என அவரது அரசியல் அனுபவம் சொல்லிக் கொடுத்திருந்தாலும், இப்போது தற்காத்துக் கொள்ளவேணும் சண்டையிட வேண்டிய நெருக்கடி உருவாகியிருந்தது. சண்டையிடுவதற்கான தேவை வந்தவுடன், அதிகாரத்தின் மீதான பசியும் அவருக்குள் கிளர்ந்தெழத் தொடங்கியது. பல வருடங்களுக்கு முன் சாதாரண மில் தொழிலாளியாக உலகை எதிர்கொண்ட மூர்த்தி அல்ல இவர். எல்லா உயரங்களையும் வீழ்ச்சிகளையும் எதிர்கொண்டு உரமேறிப்போயிருந்த அனுபவம் எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்கிற தெளிவை அவருக்குக் கொடுத்திருந்தது. காளிக்கு எதிராக ஒரு யுத்தத்தைத் தொடங்க மனதளவில் தயாராகியிருந்தார். கடந்த காலத்தில் தனக்கிருந்த அரசியல் தொடர்புகளையெல்லாம் சாமர்த்தியமாகத் திரும்பப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியவர், ஆள் பலத்துக்காக சோமுவின் குடும்பத்தைச் சேர்த்துக்கொண்டார். சாராயக்கடைகள், தண்டல், மார்க்கெட் என மதுரையின் பெரும்பாலான தொழில்களை காளியிடம் இழந்ததில், சோமுவின் குடும்பத்தினர் மூர்த்திக்குப் பக்கபலமாக நின்றனர்.

ரெண்டாம் ஆட்டம்! - 49

1987-ம் வருடம் அக்டோபர் இறுதியில், தமிழக முதல்வர் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துத் திரும்பியிருந்தார். கண்ணுக்கெட்டிய தூரத்தில் வங்காள விரிகுடாவின் இன்னோர் எல்லையில் தமிழினம் தன் உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடிக்கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளை முதல்வர் வெளிப்படையாக ஆதரித்திருந்ததோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்துகொண்டிருந்தார். எதிர்த்துப் போராடத் துணிவில்லாதவனுக்கு உரிமைகள் உடைமையாவதில்லை என்கிற நோக்கோடு ஏராளமான இயக்கங்கள் தமிழீழத்தில் போராடிக்கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில், இலங்கை அதிபர் ஜெயவர்தனேவும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இறங்கியிருந்தது.

1983-ம் வருடம், ஜூலை மாதக் கலவரத்துக்குப் பின், ஏராளமான தமிழ் மக்கள் இலங்கையிலிருந்து தோணிகள் மூலமாகத் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரத் தொடங்கினார்கள். மண்டபம் தோணித்துறையிலும், ராமேஸ்வரத்தின் கடல் எல்லையிலும் மூர்த்திக்கு இப்போதும் நல்ல செல்வாக்கு இருந்தது. அதனாலேயே தமிழ்நாட்டுக்கு வந்து செல்லும் இயக்க ஆட்கள் சிலரோடு பழக்கமும் இருந்தது. தன் பழைய கட்சியிலிருந்த செல்வாக்கையும், தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கத்திலிருந்த பழக்கத்தையும் வைத்து மூர்த்தி, நடிகரின் கட்சியில் இணைந்துவிட்டார். காளி உட்பட மதுரையின் முக்கியமானவர்கள் ஒருவரும் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. புதிதாகக் கட்சியில் சேர்ந்திருந்த மூர்த்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கும் சூழல் காளிக்கு உருவானது. காட்சிகள் மாறி, மேகங்கள் இருள் சூழத் தொடங்கியிருப்பதை கவனித்த முத்தையா, இது சமாதானத்துக்கான அழைப்பா, யுத்தத்துக்கான அறைகூவலா எனப் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

(ஆட்டம் தொடரும்)