Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 5

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

செல்வத்தைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள நிறைய பேர் முயன்றார்கள். அவன் யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. அவனிடம் வேறு தெளிவான திட்டமிருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 5

செல்வத்தைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள நிறைய பேர் முயன்றார்கள். அவன் யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. அவனிடம் வேறு தெளிவான திட்டமிருந்தது.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்
போரில் இழப்புகளைக் கண்டு அஞ்சுகிறவனுக்கானதல்ல வெற்றி. சொல்லப் போனால், இந்தப் போரைத் தொடங்கியது கோட்டைச்சாமிதான். அவரோடு மனப்பிசகு வந்து விலகிய சில நாள்களிலேயே அவரது ஆட்கள் இவனுக்கு லைன்போடத் தொடங்கி விட்டார்கள். தனது எல்லா ரகசியங்களும் தெரிந்த திறமையான வேலைக்காரன் தன்னைவிட்டுச் செல்வதை எந்த முதலாளியும் விரும்புவதில்லை. அப்படிச் செல்லும்பட்சத்தில் அவனது தடம் தெரியாமல் அழிப்பதுதான் பாதுகாப்பு. கோட்டைச்சாமியும் அதையேதான் செய்தார். அவர் ஆட்களைப் பற்றிய அத்தனை விவரங்களும் செல்வத்துக்குத் தெரியுமென்பதால், லைன் போடுவதற்காக சிவகங்கையிலிருந்து சிலரை வரவழைத்திருந்தார். செல்வம், நீண்டகாலம் சம்பவக்காரர்களோடு இருந்து பழகியதால் எப்போதும் சுதாரிப்பாக இருப்பான். அவனைவிடவும் சுதாரிப்பாக லைன் போடுகிறவர்கள் இருக்க வேண்டும். ஒரு கொலைக்காக லைன் போடுவதென்பது கட்டடம் கட்டத் தேவைப்படும் ப்ளூ பிரின்ட் போல் முக்கியமானது. தெளிவான ஸ்கெட்ச் இல்லாதுபோனால் காரியம் சொதப்பும். குறிப்பிட்ட ஆள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பான்... முதலில் எங்கு செல்வான்... எங்கு டீ குடிப்பான்... வழக்கமான அவன் வேலைகள் என்னென்ன... அவன் நண்பர்கள் யார்... அவன் பலம், பலவீனம் என்ன... ஒருநாளைக்கு எத்தனை முறை ஒண்ணுக்குப்போவான்... என்பதுவரை நுட்பமாக அவனை அலசி ஆராய்ந்துவிடுவார்கள். சம்பவம் செய்யும்போது, அவனது அன்றாட நடவடிக்கையிலிருந்து சின்ன மாற்றம் நடந்தால்கூட எதுவும் செய்யாமல் நகர்ந்துவிட வேண்டும். நல்ல சம்பவக்காரன் செய்யும் வெற்றிகரமான செயலென்பது தன்னையும் பாதுகாத்து, எதிரியையும் முடிப்பதுதான்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செல்வத்தைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள நிறைய பேர் முயன்றார்கள். அவன் யாருக்கும் பிடிகொடுக்கவில்லை. அவனிடம் வேறு தெளிவான திட்டமிருந்தது. மதுரை நகருக்குள் இன்றைய தேதியில் 12 இடங்களில் பொட்டலங்கள் கை மாறுகிறதென்றால், அவற்றில் முக்கால்வாசி கோட்டைச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஒன்றிரண்டு இடங்களில்தான் வேறு ஆட்கள் செய்துகொண்டிருந்தார்கள், ஆனால், அவை உதிரி வியாபாரம். செல்வத்தின் கணக்கு, மதுரை மட்டுமல்லாமல் கோட்டைச்சாமியின் கட்டுப்பாட்டிலிருந்து விநியோகமாகும் எல்லா ஏரியாவையும் கைப்பற்றுவதுதான். அது அத்தனை எளிதானதல்ல. ஒரு யுத்தத்துக்குத் தேவைப்படுவதைப்போல் ஏராளமான ஆட்களும், ஆயுதங்களும் தேவை. அவன் தனக்கான ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தான். செல்வத்துக்குப் பக்கபலமாக அவன் அண்ணன் தனசேகரும், அப்பா கைவாகனமும் வேலை செய்தார்கள். கைவாகனம் காளி–சோமு காலத்திலிருந்து மதுரையில் தலையெடுத்த அத்தனை தாட்டியக் காரர்களையும் பார்த்தவர். வேறு யாருக்குமில்லாத அனுபவம் அவருக்கு உண்டு. அந்த அனுபவம்தான், செல்வத்துக்கான முதலீடாகவும் கோட்டைச்சாமியின் அச்சத்துக்கான காரணமாகவும் அமைந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 5

அவன் போக்கிலேயே நிழலென நான்கு பேர் எப்போதும் தொடர்ந்து சென்றார்கள். சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதும், தலை வேறு முண்டம் வேறாக அறுத்துப் போட்டுவிடும் வெறி ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருந்தது. அப்படியொரு சந்தர்ப்பத்தை செல்வம் அவர்களுக்குத் தருவதாகத் தெரியவில்லை. 360 டிகிரியில் சுழலும் விசேஷக் கண்களைக்கொண்டவன் போல் எச்சரிக்கையாக இருந்தான். ஜீவா நகரில் வழக்கமாகச் செல்லும் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, முதலாளி தயங்கியபடியே விஷயத்தை உடைத்தார். ‘‘ஏய் செல்வம், கோட்ட ஒனக்கு கர வெச்சிட்டாருன்னு நெனைக்கிறனப்பா, கொஞ்ச நாளா புது ஆளுக நீ வந்துட்டுப் போறதுக்கு அப்றம்லாம் வர்றாய்ங்க. சூதானமா இரு…’’ என்று சொல்ல, செல்வம் சிரித்தான். ‘‘அவய்ங்க மூணு மாசத்துக்கு முன்னாடியே லைன் போட ஆரம்பிச்சிட்டாய்ங்கன்னு தெரியும்ணே. வரட்டும். எந்தூர்க்காரனா இருந்தா என்ன... பூடம் தெரியாம சாமியாடிட்டு இருக்காய்ங்க. பொருள கைல எடுக்குற அன்னிக்கித்தான் நான் யாரு, இந்த ஏரியா எப்டின்னு தெரியப்போகுது’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். புது ஊர் என்பதால் அவர்களால் எடுத்தோம் கவிழ்த்தோமெனச் சம்பவம் செய்துவிட முடியாது. அவர்கள் செல்வத்தின் நடவடிக்கைகளைத் தொடர்ந்ததைப்போலவே செல்வமும் அவர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்துகொண்டிருந்தான். செல்வத்தைத் தெரிந்துகொள்ள கோட்டைச்சாமிக்கு ஆட்கள் தேவைப்பட்டதுபோல் அவரைத் தெரிந்துகொள்ள செல்வத்துக்கு ஒருவரும் தேவையாக இருந்திருக்கவில்லை. அவரின் ஒவ்வொரு நிமிட நடவடிக்கையும் இவனுக்கு அத்துப்படி. பல வருடங்களாக உடனிருந்து பார்த்தவன் என்பதால், எப்போதோ அவருக்கான இடத்தைக் குறித்துவிட்டிருந்தான்.

பாண்டியூரில் செல்வமும் சோணையும் பாதுகாப்பாகப் பதுங்கியிருந்தார்கள். சரக்கை ஏற்றியிருந்த வண்டி, ஜெகதிக்குச் சொந்தமான ரைஸ் மில்லில் இருந்தது. பகல் இரவென வெக்கை எப்போதும் ஊரைச் சூழ்ந்திருந்தது. ஆளற்ற வீதிகளில் நாய்களின் குரைப்பொலிகளும், ஆந்தையின் அலறலும் கேட்கையில் இனம்புரியாத அச்சம் உருவாகும். ஊரின் மையமாக இருந்தது வீடு. சுற்றியிருந்த நான்கு வீதிகளையும் இணைப்பதுபோல் அகலம். இரண்டாவது மாடியில் ஏராளமான புறாக்கள் வளர்வதால் எப்போதும் அவற்றின் `பவ்... பவ்...’ சத்தமும், றெக்கைகள் படபடக்கும் சத்தமும் கேட்டபடியே இருக்கும். மூன்று வேளைகளும் சுவையான உணவுகள் வந்தபோதும், அவர்களால் அவற்றை ரசித்துச் சாப்பிட முடியவில்லை. “எதுக்கு சும்மா பயந்துட்டு இருக்கிய... இந்த ஊருக்குள்ள நம்மள மீறி ஒருத்தரும் வந்துர முடியாது” என ஜெகதியின் அம்மா தைரியம் கொடுத்தபோது ‘‘பயம்லாம் இல்லங்கம்மா, சுதாரிப்பா இருக்கேன்’’ எனச் செல்வம் சிரித்தான்.

நள்ளிரவில் வீதியில் நாய்கள் குரைக்கும் சத்தம் எதிரொலித் ததைத் தொடர்ந்து, ஒரு கார் அந்த வீட்டை நெருங்கி வரும் சத்தம் கேட்டது. செல்வம் சுதாரித்து எழுந்து, சோணையோடு இரண்டாவது மாடிக்கு ஓடினான். மாடியிலிருந்து வீட்டின் முன்னால் வந்து நின்ற காரை கவனிக்க, ஜெகதியும் தனசேகரும் வந்திருந்தனர். இருவரும் நிதானமாக இறங்கி வாசலுக்கு வந்தனர். பதற்றம், தவிப்பு எல்லாம் விலகி, ஜெகதி அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள். அவள் உடலின் சூடு தன்னுடலில் படர்ந்தபோது இனி எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளித்து விடலாமென்கிற துணிச்சல் அவனுக்குள் பிறந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 5

“ரொம்ப நேரம் நாங்க இருக்க முடியாது செல்வம். விடியறதுக்கு முன்ன கெளம்பியாகணும்” என்று தனசேகர் சொல்ல, செல்வம் புரியாமல் ஜெகதியைப் பார்த்தான். “வா சொல்றேன்...” அவள் விறுவிறுவென வீட்டுக்குள் நடந்தாள். ஜெகதியின் அம்மா அவர்களுக்குத் தேநீர் தயாரிக்கச் சென்றாள். ஜெகதியின் தம்பி “ஏதாச்சும் தேவைன்னா போன் பண்ணுக்கா, நானும் சித்தப்பாவும் ரைஸ் மில் வரைக்கும் போயிட்டு வர்றோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

ஜெகதியின் முகம் சரியான உறக்கமில்லாமல் சோர்ந்துபோய், கண்களைச் சுற்றி கருவளையம் விழுந்திருந்தாலும், அவளுக்கேயான நிரந்தரமான அழகு அவனைச் சுண்டி இழுத்துக்கொண்டிருந்தது. செல்வத்துக்குப் பேசவெல்லாம் பொறுமையில்லை. அவளோடு கூட வேண்டும். அச்சம், வெறி, குழப்பமென எல்லா உணர்வுகளும் கரைந்து மீண்டும் பழைய செல்வமாக அவன் உருக்கொள்ள அவளின் உடல் மட்டும்தான் ஒரே துணை. அவளை நெருங்கி உட்கார்ந்தான். தோள்களைப் பற்றிக் கொண்டும் கைகளை இறுக்கிக்கொண்டும் தனது தேவையைச் சொல்லிவிடும் தவிப்பிருந்தது. அவள் நிதானமாக விலகி, ‘‘ஏய் லூசுப் பயலே... இதுக்கா அவசரம், செத்த பொறுடா...’’ எனக் கடிந்துகொண்ட பிறகு, அமைதியாகத் தலையைக் குனிந்துகொண்டான்.

எல்லோருக்கும் தேநீர் வந்தது. ‘‘கோட்டச்சாமியக் கொன்னது யாரு, எவருன்னு அவய்ங்க இன்னும் கண்டுபிடிக்கல. ஆனா, சரக்க லவட்டினது நீதான்னு தெரிஞ்சிடுச்சு’’ என்று ஜெகதி சொல்ல, ‘‘ஆமாடா செல்வம். காலைலயே கோட்டையோட தம்பியும் முனுசுமா தேடி வந்தாய்ங்க. செல்வம் ஏதோ கோவத்துல சரக்கத் தூக்கிட்டான், திருப்பிக் குடுக்கச் சொல்லு. அவனுக்கும் பங்கு தர்றோம், நாம ராசியாப் போயிரலாம்னு பேசினாய்ங்க. ஐயாதான், ‘ஏய் அவனே சொகமில்லாம பெரியாஸ்பத்திரில கெடக்கானப்பா’ன்னு சொல்லி அனுப்பிட்டாரு” என்றான் தனசேகர். இருவர் சொல்வதையும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த செல்வம், “பொருளக் கைப்பத்துற வரைக்கும் பம்மத்தான் செய்வாய்ங்க. இனி தள்ளிப்போட்டு பிரயோஜனமில்ல... நாம கூடிய சீக்கிரமே கைமாத்திக் காசாக்கப் பாக்கணும்” என்று சொல்ல, ஜெகதியும் சேகரும் ஆமோதித்துத் தலையசைத்தார்கள். “நம்பிக்கையான ஆளுக கைக்குப் போகணும், அதேசமயம் நாமதான் கைமாத்துறோம்னு தெரியவும் கூடாது. முக்கியமா இதுல பேருவாதி சரக்காச்சும் மதுரக்குள்ளயே கைமாறணும். அப்பத்தான் கோட்டச்சாமி குடும்பம் இனி இந்தத் தொழில் செய்யவே மாட்டாய்ங்கன்னு எல்லாரும் நம்புவாய்ங்க” என்று செல்வம் சொல்ல, “அம்புட்டுத் துணிச்சலா நம்ம பக்கம் யார்யா நிப்பாய்ங்க?” என சோணை குழப்பத்தோடு கேட்டான். “காசு கெடைக் கிதுன்னா எல்லாத்துக்கும் ஆள் இருக்கும் சோண. சேகரு... நீ இன்னிக்கே பாதி சரக்க எடுத்துட்டு வெரகனூர் போயிரு. மிச்சத்த ஒண்ணு ரெண்டு நாள்ல நானும் சோணையுமா எடுத்துட்டு வர்றோம்” என்று செல்வம் தீர்மானமாகச் சொன்னான்.

(ஆட்டம் தொடரும்)