Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 50

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஆடிக்காற்றில் மரங்கள் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. காற்றின் பெரும் சப்தம் விநோத ஒலிகளாக எதிரொலித்துக் கொண்டிருக்க, திறந்திருந்த ஜன்னல்கள், `படார் படாரெ’ன அடித்துக்கொண்டன

ரெண்டாம் ஆட்டம்! - 50

ஆடிக்காற்றில் மரங்கள் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. காற்றின் பெரும் சப்தம் விநோத ஒலிகளாக எதிரொலித்துக் கொண்டிருக்க, திறந்திருந்த ஜன்னல்கள், `படார் படாரெ’ன அடித்துக்கொண்டன

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஜெகதியின் சூது

விசேஷ நாளுக்கான அலங்காரங்களோடு ஜொலித்துக்கொண்டிருந்த, ஜெகதியின் வீட்டுப் பின்வாசல் கதவில் தொங்கிக்கொண்டிருந்த ஆட்டின் கழுத்திலிருந்து குருதி சொட்டிக் கொண்டிருந்தது. சற்றைக்கு முன்னர் நீண்ட அலறல்களோடு தனது கடைசி இருப்பை வெளிப்படுத்தியிருந்த அதன் கண்களில், இறப்புக்கு முந்தைய அச்சம் இன்னும் மிச்சமிருந்தது. கோட்டைச்சாமியின் தம்பிகளான கருப்புவும் ராசேந்திரனும் அறுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியைத் தனித்தனியாக வெட்டியெடுத்தார்கள். ஆட்டின் வயிற்றைக் கிழித்து, குடல்களைத் தனியாக எடுத்த கருப்பு, அவற்றைச் சுத்தம் செய்ய முனுசிடம் கொடுத்தான். குடல்களுக்குள்ளிருக்கும் கழிவுகளை அகற்ற அதற்குள் நீரேற்றி, குடலின் இரு பக்கத்தையும் அடைத்து மேலும் கீழுமாக அசைத்துப் பின் வெளியேற்ற வேண்டும்.

இப்படி நிதானமாகச் சுத்தம் செய்தால் மட்டும்தான் அந்தக் குடல் சாப்பிட உகந்ததாகயிருக்கும். சமயங்களில் ஆடு அறுக்கப்படுவதற்கு முந்தைய நாள், வேப்பமரத்தின் இலைகளைச் சாப்பிட்டிருந்தால் அதன் குடல்களில் கசப்பு தேங்கியிருக்கும். இந்தக் கசப்பை நீக்க, சுத்தம் செய்யும்போது நீரோடு உப்பையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும். வீடெங்கும் கவுச்சி அப்பிக்கிடக்க, உதவிக்கு இரண்டு ஆட்களை வைத்துக்கொண்டு ஜெகதி பரபரப்பாகச் சமைத்துக்கொண்டிருந்தாள்.

கோட்டை, தன் தம்பி கருப்புவைத் தேடி கறி அறுக்கும் இடத்துக்கு வந்தான். “டேய் கருப்பு, பயகளுக்குப் போன் பண்ணியா... சரக்க எடுத்துட்டுக் கிளம்பிட்டானுகளா?”

“செத்தவடத்துல கிளம்பிரு வாய்ங்கண்ணே...”

“பயகள நம்பலாமாடா? மொத மொதல்ல பெரிய காரியம் பண்றாய்ங்க. செல்வம் மாதிரி வெவரமான பயலுகளா?”

“ஐய்யய்ய… நீ அந்த வேலைய மறந்துட்டு ஜாலியா இரு… நான் பாத்துக்கறேன்...” என கருப்பு சிரிக்க, கோட்டை நம்பிக்கையில்லாமல் தலையாட்டிவிட்டுச் சென்றான்.

ஆடிக்காற்றில் மரங்கள் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. காற்றின் பெரும் சப்தம் விநோத ஒலிகளாக எதிரொலித்துக் கொண்டிருக்க, திறந்திருந்த ஜன்னல்கள், `படார் படாரெ’ன அடித்துக்கொண்டன. கருப்பு எல்லா ஜன்னல்களுக்கும் கொண்டிகளை மாட்டிவிட்டான். மாலை நேர விருந்துக்கான தயாரிப்புகளை முடித்திருந்த ஜெகதி, குளித்துவிட்டுத் தனது அறையிலிருந்து வெளியே வந்தாள். எந்தவோர் ஆணையும் பார்த்தவுடன் வசீகரித்துவிடும் அபூர்வமான இளமையும் உடல் வனப்பும் மிகுந்து கிடந்த அவளை, கோட்டைச்சாமியின் தம்பிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. பிற்பகலிலிருந்து குடித்திருந்த மது, உடலின் சகல நரம்புகளிலும் உறங்கிக்கிடந்த உணர்ச்சிகளைக் கிளறிவிட்டது.

“என்ன அத்தாச்சி... இப்பத்தான் குளிச்சியா?” கண்களில் காமம் கொப்பளிக்கக் கேட்ட கருப்புவுக்கு மயக்கம் தரும் புன்னகையைப் பதிலாகத் தந்தாள். இரவு மெல்லக் கவிழ்ந்தபோது காற்றின் வேகம் அதிகரித்திருந்தது. விருந்துக்கு ஆயத்தமான கோட்டைச்சாமியும் அவன் தம்பிகளும் ஒன்றாக அமர்ந்து மதுவருந்தத் தொடங்கினார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 50

“எண்ணே... நம்ம வீட்டுப் பொம்பளையாளுக இல்லாம நாம இப்பிடி உக்காந்து தண்ணியப் போட்டுக்கிட்டே பேசி, கொள்ள நாளாச்சுல்லண்ணே...” என்று முனுசு, அவர்களின் பழைய சந்தோஷமான தருணங்களை நினைவுபடுத்தினான். மற்ற பங்காளிகளும் அவன் சொன்னதை ஆமோதிக்க, “மொட்டப்பயலா சுத்தினவரைக்கும் ஒண்ணும் தெரியல, இஷ்டத்துக்குச் சுத்திக்கிருந்தோம். குடும்பம் குட்டின்னு ஆகி நாலு காசு சம்பாதிக்கணும்னு வந்ததுக்கு அப்பறம், இதப் பத்தியெல்லாம் யோசிக்கவே முடியலையேடா...” எனச் சமாதானப்படுத்துவதைப்போல் கோட்டைச்சாமி சொன்னான்.

“ஆமா, நீ ஆளானதுக்கு அப்பறந்தான் அங்காளி பங்காளிகள எல்லாம் விட்டுட்டு, செல்வம் பயலத்தான எப்பயும் கூட வெச்சுக்கிட்ட… நீ எல்லாத்தையும் அவனுக்குப் பாத்துப் பாத்து செய்யவும்தான் மார்க்கெட் ஏலத்துல நம்மளுக்கே தூக்கி வாயில வெச்சுட்டுப் போயிட்டான்.”

ஒரு தம்பி இப்படிச் சொன்னதைக் கேட்டதும் கோட்டைச்சாமிக்கு சுர்ரென எறியது. “எலேய் ராசேந்திரா இத்தோட நிப்பாட்டிக்க. ஆகாவலித்தனமா பேசாத, நல்லதுக்கில்ல” கோட்டைச்சாமி அவனை அமட்ட, எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த ஜெகதி “இந்தா, எதுக்கு அந்தப் பயலத் திட்டிக்கிட்டு இருக்க. குடிச்சமா சோத்த தின்னமான்னு இல்லாம எல்லாத்துக்கும் ஒரண்ட இழுத்துக்கிட்டு… சாப்பாடு எடுத்து வெக்கவா?” என கோட்டைச்சாமியை இடைமறித்தாள். கோட்டைச்சாமி திரும்பி அவளை முறைத்தான். “அடிச்சாலும் புடிச்சாலும் என் பங்காளிக இவய்ங்க. நீ உன் பொச்சப் பொத்திக்கிட்டு போ…” கோட்டைச்சாமி இப்படிச் சொன்னதன் பின்னாலிருந்த அசலான காரணத்தை ஜெகதி மட்டுமே அறிவாள். சில விநாடிகள் அங்கிருந்த ஆண்களின் கண்கள் தன்னை உற்றுநோக்குவதைப் புரிந்துகொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டாள்.

“டேய் கருப்பு, அலமாரில சீட்டுக் கட்டு கெடக்கும் எடுத்துட்டு வாடா...” உறைந்து கிடந்த கருப்பு, கோட்டையின் குரலைக் கேட்டு சுதாரித்துக் கொண்டான். வேஷ்டியை ஒருமுறை இறுக்கிக் கட்டியபடி எழுந்தவன், அவசரமாகச் சென்று சீட்டுக் கட்டுகளை எடுத்துவந்து போட்டான்.

மதுக் கோப்பைகள் தீரத் தீர நிரப்பப்பட்டன. பெருந்தாகத்தோடு குடித்துக்கொண்டிருந்த கோட்டைச்சாமியும் அவன் தம்பிகளும் சிறிது நேரத்திலேயே சீட்டாட்டத்தின் சுவாரஸ்யத்துக்குள் ஆழ்ந்துபோய்விட்டார்கள். விளையாட்டாகத் தொடங்கிய முதல் சுற்று ரம்மியில் கோட்டைச்சாமி ஜெயித்தான். எதிர்பாராமல் கிடைத்த அந்த வெற்றி, அவனுக்குள் கிடந்த அகந்தையைக் கிளற “எலேய், சும்மா சும்மா விளையாடினா சீட்டுக்கும் மரியாத இல்ல, எனக்கும் மரியாத இல்ல. காசுவெச்சு விளையாடுவமா?” என்று கேட்டான்.

“எண்ணே, ஏதோ சும்மா உக்காந்து குடிக்கிறதுக்கு பதிலா விளையாடிக்கிருக்கோம். காசு கீசுன்னு போச்சுன்னா அப்பறம் சடவாப் போயிரும்…” கருப்பு சுதாரித்து மறித்தான்.

“எலேய் கிறுக்குத் தாயோலி, என்னத்த சடவா போகப் போகுது? தோத்துருவம்னு பயப்படறியா?” கோட்டைச்சாமி சிரிக்க, முனுசும் ராஜேந்திரனும் “சரிண்ணே... காசுக்கே ஆடுவோம். ஆட்டைக்கு எம்புட்டுன்னு நீயே சொல்லு” என அவனோடு உடன்பட்டனர். கோட்டைச்சாமி தன் ட்ரவுசர் பைக்குள் கையைவிட்டு மொத்தமாகப் பணத்தை அள்ளிவைத்தான். “அம்பதாயிரம். சம்மதமா?” சுற்றியிருந்த எல்லோரின் கண்களையும் பார்க்க, அவர்களிடம் ஒரு தயக்கமிருந்தது. ராசேந்திரன் மட்டும் யோசிக்காமல் பணத்தை எடுத்துவைத்தான். முனுசும் மற்றவர்களும் யோசிக்க, “கையில துட்டு இல்லயின்னா என்னடா அப்புறமா காசு குடுங்க…” என்று கோட்டைச்சாமி அவர்களைத் தூண்ட, அவர்களும் சம்மதித்தனர். கோட்டைச்சாமி தன் கையிலிருந்த சீட்டுக் கட்டுகளை முனுசிடம் தள்ளினான். முனுசு நிதானமாகச் சீட்டுகளைக் கலைத்துப்போட, சுவாரஸ்யத்தை மீறின இன்னொரு விளையாட்டு தொடங்கியிருந்தது.

பகல் முழுக்க வீசிய பேய்க்காற்று, இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்ததால் விநோதமான நிசப்தம் அந்த வீட்டினுள் சூழத் தொடங்கியது. சீட்டு விளையாட்டின் சுவாரஸ்யத்தில் மூழ்கிக்கிடந்தவர்கள், அவ்வப்போது கோப்பையிலிருந்த மதுவையும் குடிக்க மறக்கவில்லை. யாரும் கேட்காமலேயே ஜெகதி ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் சிறு தட்டுகளில் ஆட்டிறைச்சியைப் பரிமாறிக்கொண்டிருந்தாள். ஒரு கையில் சீட்டுகளும், இன்னொரு கையில் மதுவுமாயிருந்த கோட்டையின் பங்காளிகள் ஒவ்வொருவரின் கண்களும் ஜெகதியின் மேனியை மேயத் தவறவில்லை. தன்னை எதிர்நோக்கிய அத்தனை கண்களுக்கும் தாபத்துக்கான அழைப்பைத் தர அவள் தவறவில்லை. ஆட்டிறைச்சியின் கூடுதலான உப்பும் காரமும் ஒவ்வொரு மிடறு மதுவையும் உக்கிரமாக மாற்றிக்கொண்டிருந்தன. எண்ணெயும் மசாலாவும் வழிந்தோடிய சற்றே பெரிதான இறைச்சித்துண்டை கையில் வைத்தபடி, “அத்தாச்சி இம்புட்டு ருசியா நான் ஆட்டுக்கறி தின்னதே இல்ல...” என ஜெகதியின் உடல் முழுக்க ராசேந்திரன் கண்களை அலையவிட்டான். “அதுக்கென்ன இனிமே எப்ப வேணுமோ சொல்லுங்க, நான் ஆக்கிப் போடுறேன்.” என்று சிரித்த ஜெகதியை, விளையாட்டு சுவாரஸ்யத்தில் கோட்டைச்சாமி கவனிக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் சீட்டுக் கட்டுகள் களைத்துப் போடப்பட்டபோது, அவ்விடத்தில் மர்மமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. போதை அவர்களுக்குள் உறங்கிக்கிடந்த தாபத்தை மட்டுமல்லாமல், கோட்டைச்சாமியின் மீதான எரிச்சலை, கோபத்தையெல்லாம் கிளறத் தொடங்கியது. தனக்கே தெரியாமல் கோட்டைச்சாமி நிறைய பணத்தைத் தோற்கத் தொடங்கியிருந்தான். தான் தோற்றுக்கொண்டிருப்பது தெரியாமலேயே சூதாடும் ஒருவன் ஆபத்தானவன் என்பதை நன்கறிந்திருந்த முனுசு, கோட்டையை எச்சரிக்கும்விதமாக “எண்ணே, ஆட்ட போதும்... உனக்குக் கை நிக்கலன்னு நினைக்கிறேன். நாம நிறுத்திக்குவோம்” என்றான்.

ரெண்டாம் ஆட்டம்! - 50

“அடேயப்பா என் செம்புழுத்தி. என்னத்த ஆட்ட நிக்கல... ஒரு அஞ்சு லட்சத்த தோத்திருப்பனா?” என கோட்டைச்சாமி எகத்தாளமாகக் கேட்க, “இல்ல இப்பவே பதிமூணு லட்சத்த விட்டுட்ட. பேசாம விட்ருவோம்” முனுசு இப்படிச் சொன்னதும் கோட்டையின் அகந்தை முன்னிலும் அதிகமானது. “நான் என்ன அன்னக்காவடியாடா, காச விட்டுட்டம்னு கவலப்பட. ஒக்காலி இந்த ஆட்டைக்கி என் விரகனூர் தோப்ப வெக்கிறண்டா… எட்டு ஏக்கரு. ஜெயிக்கிறவன் எடுத்துக்க…” என ஆவேசமாகக் கத்த, பேராசை கொழுந்துவிட்டெரிந்த அவன் பங்காளிகள், அதற்குக் காத்திருந்ததைப்போல் “ரைட்டு வா… பாத்துக்குவோம்…” என உற்சாகமாகத் தயாரானார்கள்.

கருப்புவுக்கும் முனுசுக்கும் மட்டும் ஓர் உறுத்தலிருந்தாலும், கோட்டைச்சாமியை இப்போது கட்டுப்படுத்த முடியாதென்பதை உணர்ந்து விளையாட்டில் ஐக்கியமானார்கள். சீட்டு களைக்கப்பட்ட இடைவெளியில் கழிவறைக்குச் செல்ல எழுந்து சென்ற ராசேந்திரன், சமையலறையில் உணவுகளைத் தயார் செய்துகொண்டிருந்த ஜெகதியைப் பார்த்தான். அவள் தலைக்குமேல் காலையில் அறுக்கப்பட்ட ஆட்டின் தலை சுடப்பட்டு, பக்குவமாகச் சாப்பிடத் தயாரான நிலையிலிருந்தது. சத்தம் வராமல் நடந்து சென்று, அவளைப் பின்னாலிருந்து இறுக்கி அணைக்க, அவள் பதறி விலக்கினாள். “தம்பி என்ன செய்ற? உங்கண்ணன் பாத்தா அவ்ளோதான். போயிருப்பா…” ஜெகதி படபடப்போடு சொல்ல, “அவென் கெடக்கறான் குடிகாரத் தாயலி… நீ மட்டும் உம்னு சொல்லு. இப்பயே உன்னய எங்கியாச்சும் தூக்கிட்டுப் போயிடறேன்.” குடிவெறியில் காமம் கொப்பளிக்கப் பேசியவனைப் பார்த்துச் சிரித்தாள். “உங்கண்ணனைப் பாத்தா ஒண்ணுக்குப் போயிருவ. நீதான என்னயத் தூக்கிட்டுப் போற ஆளு… போடா டேய்...” அவனைப் பிடித்து சமையலறைக்கு வெளியே தள்ளினாள். ராசேந்திரனுக்கு ஒரே நேரத்தில் கோட்டையின் மீதும், ஜெகதியின் மீதும் அசாத்தியமான வெறியும் பகையும் உருவாகின.

உள்ளத்தில் பெருங்கடலெனப் பகை ஊறிப்போனவனுக்கு சூதாட்டத்தில் வெற்றி கைகூடிவரும் வழக்கத்தின்படி, அன்றைய தினம் ராசேந்திரனுக்கானதாக இருந்தது. கோட்டை தனது தோப்பை மட்டுமல்லாமல் தனது காரையும், திருநகரிலிருக்கும் தனது மதுக்கூடத்தையும் தோற்றுவிட்டிருந்தான். ஒவ்வொரு முறை தோற்கும்போதும், தோற்ற எல்லாவற்றையும் ஒரே விளையாட்டில் ஜெயித்துவிட வேண்டுமென்கிற வெறி அவனுக்குள் கூடியது. கோட்டையின் பரபரப்பைக் கண்டு ராசேந்திரன், “என்னண்ணே இப்பிடி தோத்துக்கிருக்க. பேசாம ஆட்டத்த நிறுத்திருவமா?” எனக் கேலியாகக் கேட்க, “அதுசரி… நீ எல்லாத்தையும் செயிச்ச பகுமானத்துல போயிருவ… தோத்த நான் வாயில வெரல சப்பிக்கிட்டுப் போறதா?’ என கோட்டைச்சாமி கோபப்பட்டான். ராசேந்திரன் சீட்டுக் கட்டுகளை கோட்டைச்சாமியை நோக்கி நகர்த்தினான்.

“சரிண்ணே, கடைசியா ஒரு ஆட்ட வெச்சுக்குவோம். நீ ஜெயிச்சிட்டா எங்கிட்ட தோத்த எல்லாத்தையும் குடுத்துடறேன். பதிலுக்கு நான் ஜெயிச்சுட்டா, அந்தா நிக்கிறாளே அவள ஒரு நாளைக்கி எங்கூட அனுப்பு…” என ஜெகதியைப் பார்த்து கையை நீட்டினான். கோட்டைச்சாமிக்கு சுர்ரென தலையில் ஏற, அதே வேகத்தில் ராசேந்திரனை ஓங்கி எட்டி உதைத்தான். அவனது பங்காளிகள் அவசரமாக வந்து விலக்கிவிட்டனர். “எண்ணே அவன் என்ன தப்பா கேட்டுட்டான்... அவ என்ன உனக்குப் பொண்டாட்டியா... வெப்பாட்டிதான?” என இன்னொருத்தனும் ராசேந்திரனுக்கு ஆதரவாகச் சொல்ல, கோட்டைச்சாமி தன் தம்பிகள் ஒவ்வொருவரின் கண்களிலும் கொப்பளித்த காமத்தை அப்போதுதான் முதன்முறையாக கவனித்தான். “தாயோலிகளா நீங்க எல்லாரும் என் பங்காளிங்கன்னு நம்பி நான் விருந்துக்குக் கூப்ட்டா, கடைசில என்னயவே ஏறப் பாக்கறீங்கள்ல… எந்திரிங்கடா… ஒருத்தனும் என் முன்னால நிக்கக் கூடாது… வெளிய போங்கடா…” ஆவேசமாகக் கத்தினான்.

அச்சத்தில் போதை காணாமல்போய் அவர்கள் அவசரமாக வெளியேற, அவ்வளவு நேரமும் பொறுமையாயிருந்த ஜெகதி கோட்டைச்சாமியை ஓங்கி அறைந்தாள். முகத்தில் மட்டுமல்லாமல் உடம்பிலும் முதுகிலும் விடாமல் அடித்தவள் அடிப்பதை நிறுத்தவே இல்லை. “தேவிடியாப் பயலே, நீ மொதல்ல வெளில போடா….” என ஆங்காரமாகக் கத்தினாள். “நீ என்னய மதிச்சிருந்தா... இவய்ங்களும் என்னய மதிச்சிருப்பாய்ங்க. நீ அவுசாரியாப் பாக்கவுந்தான இவய்ங்களும் வீடேறி வந்து என்னய அசிங்கப்படுத்திட்டுப் போயிருக்காய்ங்க. போயிரு இங்கருந்து... போடா...” ஆத்திரத்தோடு கத்தியவளைக் கட்டுப்படுத்த, கோட்டைச்சாமி பிடித்து உலுக்கி நிறுத்த முயன்றான். “ஏய் எதுக்குடி கத்துற இப்ப? பெரிய பத்தினி மயிராட்டம் நாடகத்தப் போடாத… நீ யாருன்னு எனக்குத் தெரியாதா? மூடுறி…” என்றவனைத் தன்னிலிருந்து விலக்கியவள் “நான் பத்தினி இல்லல. அப்பறம் என்ன மயித்துக்கு இங்க வர்ற? வெளில போ… உன் அதிகாரத்தையெல்லாம் போயி உன் பொண்டாட்டிகிட்ட வெச்சுக்க... எங்கிட்ட வெச்சுக்காத… அறுத்துருவேன்…” போதையில் தடுமாற்றத்தோடு நின்றுகொண்டிருந்த கோட்டைச்சாமியைப் பிடித்து கதவுக்கு வெளியே தள்ளினாள். உடலெங்கும் வியர்வையோடு வாசலில் நின்றவனுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. ஆடி அமாவாசை நாளின் அடர்த்தியான இரவு, நகரை முழுமையாகச் சூழ்ந்திருந்தது.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism