அலசல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 51

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

செல்வத்தைத் தன்னிலிருந்து பிரிப்பதற்காகவே, மார்க்கெட் ஏலப் பிரச்னையை கோட்டை பயன்படுத்திக்கொண்டிருக்கிறான் என்பதை ஜெகதி அறிந்திருந்தாள்

”கோட்டைச்சாமி நொறுங்கிப்போயிருந்தான். தன் தம்பிகளுக்கு ஜெகதியின் மீது இத்தனை தாபமும் வெறியும் இருக்குமென்பதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாத் திசைகளிலும் சூனியம் நிரம்பிவிட்டதைப்போல் சிந்தனை இருண்டிருந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு, தனக்கு அருகில் ஒருவரும் இல்லையென்கிற வெறுமை உரைக்க, காரை ஒரு வீதியிலிருந்த தெருவிளக்கின்கீழ் நிறுத்தினான். நிழலைப்போல் எப்போதும் உடனிருந்த செல்வமோ, பாதுகாப்பு அரணாக நின்ற தம்பிகளோ இப்போதில்லை. தனக்குத் தெரியாமல் செல்வம் ஜெகதியோடு ஏற்படுத்திக்கொண்ட உறவு, ஒருவிதமான துரோகமென்றால் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தன்னிடம் நேரடியாகவே கேட்ட தம்பிகளின் செயல் இன்னொருவிதமான துரோகம். பெண் விஷயத்தில் அண்ணன் தம்பிகளென்கிற பாகுபாடெல்லாம் இல்லை, எல்லா ஆண்களுக்கும் ஒரே விதிதான்போல.

ஜெகதி அவனது வாழ்வில் வந்த பிறகுதான் பெண்ணின் உடல் எத்தனை மகத்துவமானது என்பதைப் புரிந்துகொண்டிருந்தான். முதன்முறையாக அவளோடு கூடிக் களித்த இரவில் ‘உடலின் ஒவ்வொரு செல்லிலும் துளிர்க்கும் இந்தப் பரவசம்தான் காமமென்றால், இத்தனை காலமாகத் தான் செய்துகொண்டிருந்ததெல்லாம் என்ன?’ என்று அவனுக்குத் தோன்றியது. ஜெகதி அந்தப் பரவசத்தை ஒவ்வொரு கூடலிலும் தரத் தவறுவதில்லை. அவனைப் பித்தனாக்கிவிட்டிருந்தாள். செல்வத்துடனான அவளது இணக்கத்தைத் தெரிந்துகொண்ட பின்னும் அவளை மன்னித்து, செல்வத்தைப் பகைத்துக்கொள்ளக் காரணமாயிருந்தது அந்தப் பித்துதான். அவள் மீதிருக்கும் வெறுப்பை கோட்டையின் கண்கள் காட்டிவிடத் துடிக்கும்போதெல்லாம் இச்சை அந்த உணர்வை வென்றுவிடும். அவள் உடலின் சூடு, அந்த நறுமணம் எல்லாவற்றின் முன்னாலும் வெறுப்பு நொறுங்கிக் காணாமல்போகும்.

ரெண்டாம் ஆட்டம்! - 51

செல்வத்தைத் தன்னிலிருந்து பிரிப்பதற்காகவே, மார்க்கெட் ஏலப் பிரச்னையை கோட்டை பயன்படுத்திக்கொண்டிருக்கிறான் என்பதை ஜெகதி அறிந்திருந்தாள். அவன் வெறுப்பைக் காட்டிக்கொள்ளாததைப்போல, இவளும் ஏமாற்றத்தைக் காட்டியிருக்கவில்லை. கோட்டைச்சாமிதான் வழக்கத்துக்கு மாறாக, தொடர்ந்து அவள் வீட்டிலேயே தங்கத் தொடங்கினான். அழகர்கோவில் செல்லும் வழியில் புதிதாக வாங்கியிருந்த தோட்டத்து வீட்டிலிருப்பது ஜெகதிக்குப் பிடிக்குமென்பதால், அங்கு அழைத்துச் சென்றான். இன்னொருவனோடு அவள் கூடியிருக்கிறாள் என்கிற எண்ணம் அவனது அகந்தையைத் தூண்டும்போதெல்லாம், வெறிகொண்ட மிருகம்போல் அவளோடு கூடுவான். ஜெகதியால் இந்த வன்முறையைச் சகிக்க முடியவில்லை. ஆனால் அந்த முரட்டு உடலை வீழ்த்துவது எளிதானதல்ல என்கிற புரிதலோடு பொறுத்திருந்தவளுக்கு ஒரு கட்டத்துக்குமேல் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது. பாதி இயக்கத்தில் நிறுத்தியவன், “எதுக்குச் சிரிக்கிற?” எனப் பதற்றத்தோடு கேட்டான்.

“ஒண்ணுமில்ல… சும்மா சிரிச்சேன்...” என்று சொல்லிவிட்டு இந்தமுறை சத்தமாகச் சிரித்தாள். கோட்டைச்சாமிக்கு சர்வமும் அடங்கிப்போக, வியர்வையைத் துடைத்துக்கொண்டு பாதியிலேயே எழுந்து சென்றான்.

ஜெகதியின் மீது கோட்டைச்சாமியின் குடும்பத்திலிருந்த பெண்களுக்குத் தீராத வெறுப்புஇருந்ததைப்போலவே ஆண்களுக்கு அவள்மீது ரகசிய ஈர்ப்பிருந்தது. பெண்கள் வெறுப்பை அப்பட்டமாகக் காட்டியதைப்போல் ஆண்கள் தங்களுக்குள்ளிருக்கும் ஈர்ப்பை வெளிப்படுத்தத் துணிந்திருக்கவில்லை. வெறுப்புகளோடும் இச்சைகளோடும் தன்னை உற்றுநோக்கும் அத்தனை கண்களுக்குப் பின்னாலிருக்கும் மனங்களையும் நன்கறிந்திருந்த ஜெகதி, இச்சை கொப்பளிக்கும் கோட்டைச்சாமியின் தம்பிகளையே அவனுக்கு எதிரான ஆயுதமாகத் திருப்ப முடிவுசெய்தாள். செல்வத்தின் விலகலுக்குப் பிறகு தன்னைச் சமாதானப்படுத்த கோட்டைச்சாமி செய்யும் எல்லாவற்றையும் புரிந்துகொண்ட ஜெகதி, நிறைய யோசித்து ஒரு முடிவெடுத்திருந்தாள். தோட்டத்து வீட்டிலிருந்து மதுரைக்குத் திரும்பிய இரவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவனிடம், “உங்க வீட்டு ஆளுகல்லாம் எங்கிட்ட மூஞ்சி குடுத்தே பேசறதில்ல. ஆடி அமாவாசைக்கி எல்லாரையும் வீட்டுக்கு விருந்துக்குக் கூப்டேன்...” என்று கேட்டாள். எல்லோரையும் கூட்டிவர அவனுக்கும் ஆசைதான்.

“ஏய் எனக்கு மட்டும் ஆச இருக்காதாடி… எல்லாரும் சண்ட சத்தமில்லாம ஒண்ணா இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா, அது நடக்காத காரியம். என் தம்பிகள கூப்டறேன். கண்டிப்பா வருவாய்ங்க…”

“அது சரி, பத்து கெடா மாடுகளுக்கு ஆக்கிப்போடணும்னு இருந்தா, அதை யார் மாத்த முடியும்? கூப்டு...” ஜெகதி சிரித்தாள். “பரவால்ல விடு… உன் கையால சோறு திங்கற கொடுப்பின என் வீட்டுப் பொம்பளைகளுக்கு இல்லயின்னு நெனச்சுக்க...”

ரெண்டாம் ஆட்டம்! - 51

கோட்டை அவளைச் சமாதானப்படுத்தும் விதமாகச் சொல்ல, “யோவ் யோவ்... உன் நாடகத்த நிப்பாட்டு. உன் வீட்டம்மாவப் பாத்தா பல்லுபோன பாம்பாட்டம் எப்பிடி பம்முவன்னு நான்தான் அன்னிக்கே பாத்துட்டனே…” என்றதும், கோட்டைச்சாமி சிரித்துச் சமாளித்தான்.

‘எதனால் இந்தத் தனிமை? தம்பிகளையும் நண்பர்களையும்விட இவள் அத்தனை முக்கியமா?’ குழப்பத்தோடு காரின் ஸ்டீயரிங்கில் ஓங்கி அடித்தான். ‘அவய்ங்கள விருந்துக்குக் கூப்ட்டுருக்கக் கூடாது. இல்ல, செல்வத்த தனியா விட்ருக்கக் கூடாது... ம்ஹூம் இவகூட அவனைப் பழக விட்ருக்கக் கூடாது… இல்ல இல்ல… இந்த மோசக்காரிய நான் விரும்பியிருக்கக் கூடாது… எனக்குக் குடும்பம் இல்லயா... புள்ளைங்க இல்லயா… ச்சே, இவளைப் பாத்திருக்கவே கூடாது…’

மனம் கிடந்து குழப்பத்தில் அடித்துக்கொள்ள, தன்னை மீறி எழுந்த அழுகையை அடக்க முடியாமல் ஸ்டீயரிங்கில் சாய்ந்தான். தவறுதலாகக் கைபட்டு காரின் ஹாரன் சத்தம் எதிரொலிக்க, தெருவில் படுத்திருந்த நாய்கள் மிரண்டு எழுந்து அலறியபடியே ஓடின. கோட்டைச்சாமி முகத்தைத் துடைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் பாதையில் காரை இயக்கினான்.

ஊர் அடங்கியிருந்தது. அடர்த்தியான இரவில், சாலையில் வாகனங்களே இல்லாமல் பெரும் அமைதி சூழ்ந்திருக்க, ரயில்வே க்ராஸிங்கை ஒட்டிய பழைய பாலத்தின் கீழ் யாரோ இரண்டு பேர் கடும் போதையில் சண்டை போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு வண்டியின் வேகத்தைக் குறைத்தான். சில நொடிகளிலேயே அந்த இருவரின் முகங்களும் அடையாளம் தெரிய, வண்டியின் வேகத்தைக் குறைத்து நிறுத்தினான். கதவைத் திறந்து இறங்கியவன் “முத்தையாண்ணே, எதுக்கு இந்த நேரத்துல ரோட்டுல சண்ட போட்டுக்கிருக்கீங்க...” கேட்டபடியே நெருங்கிச் சென்றான். முத்தையாவும் சேகரும் சட்டையெல்லாம் கிழிந்து முகத்தில் ரத்தம் வழிய நின்றுகொண்டிருந்தனர். முத்தையாவின் கையில் பெரிய இரும்புக்கம்பியும், சேகரின் கையில் உடைந்த பியர் பாட்டிலுமிருந்தது. “எலேய் சேகரு, போதையப் போட்டா சும்மா இருக்க மாட்டியா? பெரிய மனுசங்கிட்ட ஒரண்ட இழுத்துக்கிருக்க...” என்றபடியே அவன் கையிலிருந்த பியர் பாட்டிலை வாங்கி ஓரமாகப் போட்டான். முத்தையா, முகத்திலிருந்த ரத்தத்தைத் துடைத்தபடியே அழும் குரலில் “நல்ல நேரத்துல வந்த கோட்ட... இந்தத் தாயோலிக்கி இத்தன வருசமா என் ரத்தத்தச் சிந்தி கஞ்சி ஊத்தியிருக்கேன். நல்லா தின்னு கறிய வளத்துட்டு, இன்னிக்கி என்னயவே ஊளப்பயங்கறான்” என்று சொல்ல, கோட்டை திரும்பி ஓங்கி அறைந்தான். “ஏண்டா... ஊருக்காரய்ங்க அப்பிடிச் சொன்னா நீயும் சொல்லுவியா... லூசுப்பயலே…” என்றதும் சேகர் அவனை முறைத்தான். “ஏண்ணே... அவென் ஏதோ போதைல சொன்னா அதுக்காக நீ கம்பியத் தூக்கிட்டு சண்டைக்கு வந்துருவியா? இந்தப் பயகளுக்கு உன்னயப் பத்தி என்னண்ணே தெரியும். எத்தனையோ பேரு செஞ்ச பாவத்துக்கு நீ பழி சொமந்திருக்க. உன் அரும எவனுக்கும் தெரியலன்னு நெனச்சுக்க...” கோட்டை அவரது தோள்களில் தட்டிக் குடுத்துவிட்டு சட்டைப்பையிலிருந்து பணத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தான். “மூஞ்சி மொகரையெல்லாம் ரத்தமா இருக்கு. ரெண்டு பேரும் ஆஸ்பத்திரிக்கிப் போங்க மொதல்ல...” என்றபடி காரை நோக்கித் திரும்ப, முத்தையா தன் கையிலிருந்த கம்பியால் கோட்டையின் தலையில் ஓங்கி அடித்தார். கோட்டை அதிர்ந்து திரும்பிப் பார்க்க, கீழே கிடந்த பியர் பாட்டில எடுத்து சேகர் கோட்டையின் வயிற்றில் குத்தினான். கோட்டை சுதாரிக்கும் முன்பாகவே, முத்தையா கம்பியால் இன்னொருமுறை ஓங்கி அடிக்க, “ஒக்காலி... ஊளத் தாயோலிகளா... பாவம் பாத்துப் பேசினா என்னயவே நொட்ட வந்துட்டீங்களா?” அவசரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தன் இடுப்பில் எப்போதும் வைத்திருக்கும் கத்தியைத் தேடினான். ஜெகதி அந்தக் கத்தியை அவனிடமிருந்து வாங்கி வீட்டு அலமாரியில் வைத்தது நினைவுக்கு வந்தபோதுதான், இது திட்டமிட்டு நடக்கும் சம்பவம் என்பது அவனுக்கு உறைத்தது. கோட்டை சத்தமாகச் சிரித்தான். உடல் அதிரச் சிரித்தபடியே நின்றவனுக்கு எதிரில் செல்வம் வேகமாக வந்தான்.

கோட்டை, சடாரென முத்தையாவின் கையிலிருந்த இரும்புக்கம்பியைத் தட்டிப் பறித்து சண்டைக்குத் தயாராக, நெருங்கி வந்த செல்வம் சுதாரித்தான். முத்தையாவுக்கும் சேகருக்கும் அவன் கையைக் காட்ட, அவர்கள் கோட்டையைச் சுற்றி வட்டம்போட்டார்கள். “எண்ணே... நீ யாருன்னு உலகத்துக்கு வேணா தெரியாம இருக்கலாம். எனக்குத் தெரியும், உனக்கு சண்டபோடத் தெரியாது. பேசாம நின்னயின்னா ரெண்டு நிமிசத்துல சங்கறுத்துட்டுப் போயிருவேன். இல்லன்னா, வம்பா அடிவாங்கிச் சாவ...” செல்வம் மறைத்துவைத்திருந்த அரிவாளை வெளியே எடுத்தபடி கவனமாக நெருங்கினான். “வாடா… டேய்… சின்னப் பயலே… நீயா நானான்னு பாத்துருவோம்...” என கோட்டை ஆத்திரத்தோடு கத்த, செல்வம் இரண்டு அடிகள் முன்னால் வர, கோட்டையும் நகர்ந்தான். பின்னால் நின்ற சேகர் அந்த இடைவெளியில் பியர் பாட்டிலால் கோட்டையின் முதுகில் குத்த, ஆவென அலறினான். பின்னால் சேகரை அடிக்கத் திரும்பிய அடுத்த நொடி, கையிலிருந்த அரிவாளால் செல்வம் வெட்டினான். ஒன்று இரண்டென வெட்டுகள் தொடர, எதிர்க்க முடியாமல் கோட்டை சரியத் தொடங்கினான். “நீதான் நல்லா வாழ்ந்துட்டல்ல... சந்தோசமா சாவுண்ணே. எதுக்கு மல்லுக்கட்டிட்டு இருக்க...” என்றபடியே செல்வம் இன்னொரு முறை வெட்டினான்.

கோட்டை அரை மயக்கத்தில் கிடக்க, சேகரும் முத்தையாவும் அடுத்து என்ன என்பதுபோல் பார்த்தார்கள்.

“எல்லாம் ஆரம்பிச்ச இடத்துலவெச்சே முடிச்சுவிட்ருவோம். தூக்கி வண்டில போடுங்க” என்ற செல்வம், காரை நோக்கி வேகமாக நடந்தான்.

(ஆட்டம் தொடரும்)