Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 52

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

சில மரணங்கள் பிரிந்து கிடந்தவர்களை ஒன்று சேர்க்கும். சில மரணங்கள் ஒன்றாக இருப்பவர்களைப் பிரித்துவிடும்.

ரெண்டாம் ஆட்டம்! - 52

சில மரணங்கள் பிரிந்து கிடந்தவர்களை ஒன்று சேர்க்கும். சில மரணங்கள் ஒன்றாக இருப்பவர்களைப் பிரித்துவிடும்.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

பெருமரங்கள் வீழும்போது தங்களுக்கருகில் செழித்து வளரும் சின்னஞ்சிறு தாவரங்களையும் அழித்துவிடுகின்றன. அந்தத் தாவரங்கள் அங்கிருந்ததற்கான எந்தச் சுவடும் இல்லாமல் போகும்போது, புதிய மரங்களும் செடிகளும் முளைத்து வளரும். எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த தலைவரின் மரணத்தைத் தொடர்ந்து, தங்களுக்குள் பிரிந்து சண்டையிட்டுக்கொண்டவர்களில் பலர் அடையாளம் தெரியாமல் காணாமல் போகும்படியாக ஆனது.

டிசம்பர் 24, 1987. அதிகாலை 7 மணி அளவில் தமிழக முதல்வர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்கிற செய்தி வானொலியின் வழியாகச் சொல்லப்பட்டபோது தமிழக மக்கள் துயரத்திலாழ்ந்தனர். மதுரை நகரின் அத்தனை தெருமுனைகளிலும் கண்ணீர் அஞ்சலிச் செய்திகள் எழுதப்பட்ட தட்டி போர்டுகள் வைக்கப்பட, கிழவிகளின் ஒப்பாரி ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தது. கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்களும் ஊர்வலங்களும் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ஏராளமானோர் கார்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் மெட்ராஸை நோக்கிப் படையெடுக்கத் தொங்கினர். முதல்வரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவும், அவருக்கு மரியாதை செய்யவும் ஒவ்வொருவருக்குள்ளும் துடிப்பிருந்தது. காளியும் மூர்த்தியும் செய்தி அறிந்ததுமே தங்களது ஆட்களுடன் கிளம்பிவிட்டார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 52

சில மரணங்கள் பிரிந்து கிடந்தவர்களை ஒன்று சேர்க்கும். சில மரணங்கள் ஒன்றாக இருப்பவர்களைப் பிரித்துவிடும். துரதிருஷ்டவசமாக முதல்வரின் மரணத்துக்குப் பிறகு அவரின் கட்சி வெவ்வேறு குழுக்களாகப் பிரிய நேர்ந்தது. ஒருபுறம் பொதுமக்களின் கொந்தளிப்பு, இன்னொருபுறம் வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்த தொண்டர்களுக்கிடையே அதிகாரத்தைப் பிடிப்பதற்கான போர் என மெட்ராஸில் அசாதாரணமானதொரு சூழல் உருவானது.

காளி, தனது ஆட்களுடன் மெட்ராஸுக்குள் நுழைந்தபோது கலவரமான முகத்துடன் பொதுமக்கள் நடமாடுவதை கவனித்தான். சில இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததோடு, கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

“டேய் மருது, நம்ம பயகள எல்லாம் சூதானமா இருக்கச் சொல்லு, ஊர் நெலவரம் ஒண்ணும் சரியாப்படல.’’ காளி நடக்கப்போகிறவற்றை ஊகித்து மருதுவை எச்சரித்தான். அவர்கள் எக்மோரை அடைந்தபோது அவர்களுக்கு முன்பாகவே வந்துவிட்ட மூர்த்தி, காளிக்கும் அவனது ஆட்களுக்குமாகச் சேர்த்து தங்குவதற்கு இடவசதி செய்திருப்பதை அறிந்து அவர்கள் அங்கு சென்றனர்.

‘`ஏண்ணே, போயும் போயும் அவய்ங்ககூடயா தங்கணும்?’’

மருது தயங்கினான்.

``ஊருவிட்டு ஊரு வந்திருக்கம்டா மருது. ரெண்டு நாள் காரியம். கொஞ்சம் நம்ம ஊரு ஆளுகளோடயே இருக்கறதுதான் பாதுகாப்பு’’ என காளி சொன்னதை அவனும் ஆமோதித்தான்.

திருவல்லிக்கேணியிலிருந்த சிறிய விடுதியில் முதல் தளத்திலிருந்த மொத்த அறைகளையும் மூர்த்தி புக் செய்திருந்தார். இந்த ஊரிலும்கூட மூர்த்திக்கு நல்ல செல்வாக்கு இருந்ததை காளி வியப்பாகப் பார்த்தான். ‘`எப்பா காளி, பயக எங்க போனாலும் சேந்து போகச் சொல்லு, சாப்பாடு தண்ணி எல்லாம் ரூமுக்கு வந்துரும். அதுக்காக அலைய வேணாம். இங்க இருந்து தலைவரோட உடம்பவெச்சிருக்க ராஜாஜி ஹால் நடக்கற தூரம். அதனாலதான் இந்த லாட்ஜ புடிச்சேன். செத்த நேரம் ரெஸ்ட் எடுங்க. நாம அப்பறமா கெளம்பி ராஜாஜி ஹாலுக்குப் போவோம்.’’

மூர்த்தி பரபரப்போடு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். காளி, மருது, முத்தையா மூவரும் ஓர் அறையிலும், அவனோடு வந்த மற்றவர்கள் இன்னோர் அறையிலுமாக ஓய்வெடுத்தனர்.

காளி அரசியலுக்கு வர நேர்ந்தது தற்செயலான ஒன்று. வெற்றி தோல்வி கணக்குகள் அவனுக்குப் பழக்கப்படாததால், சிதறிக்கிடந்த தலைமையில் யாரின் பக்கமாக நிற்பதெனக் குழம்பினான். அவனுக்கிருந்த குழப்பத்தைவிடவும் அதிகமாக மருதுவுக்குக் குழப்பமிருந்தது. ‘`என்னண்ணே இத்தன காலம் இருந்த இடம் தெரியாம இருந்தவய்ங்கள்லாம் இப்ப ஆளாளுக்கு நாந்தான் முதல்வருன்னு துடிக்கிறாய்ங்க...’’ எனக் கவலையோடு கேட்டான்.

‘`இந்த லோலாயித்தனமே இருக்கக் கூடாதுன்னுதாண்டா நான் அரசியல் பக்கமே வராம இருந்தேன். பழகுன பழக்கத்துக்கு விசுவாசமா இருந்தமா, செய்ற தொழில்ல கரெக்டா இருந்தமா... இவ்வளவுதான் நம்மளுக்குத் தெரியும். எப்ப, எவன் பக்கம் நின்னா பதவி கெடைக்கும்னு குரங்குக்குட்டி மாதிரி இங்கியும் அங்கியும் தாவிக்கிருந்தா அது என்னடா பொழப்பு?’’

‘‘சரிண்ணே கஷ்டமோ நஷ்டமோ இப்ப ஒரு முடிவு எடுத்தாகணுமே... எந்தப் பக்கமா நிக்கலாம்னு இருக்க?’’

‘`நல்லா யோசிச்சுப் பாத்துட்டண்டா. தலைவரோட சம்சாரத்துக்கு ஆதரவா அவங்க அணில நிக்கிறதுதான் சரின்னு தோணுது.’’

‘‘ஆனா எனக்கென்னவோ அந்த நடிகைதான் இதுக்கு அப்பறம் கட்சிய கைப்பத்துவாங்கன்னு தோணுதுண்ணே.’’

‘`மருது... எனக்கு லாவ நட்டக் கணக்கெல்லாம் பாக்கத் தெரியாது. உனக்கு குடுக்கற மரியாதைய எப்பிடி உன் சம்சாரத்துக்கு குடுக்கறனோ அந்த மாதிரி, தலைவருக்குக் குடுத்த மரியாதைய அவர் சம்சாரத்துக்குக் குடுக்கப்போறேன்.’’

காளி நிறைய யோசிக்க விரும்பவில்லை.

பிற்பகலுக்குப் பிறகு காளியும் மூர்த்தியும் தங்களுடைய ஆட்களோடு முதல்வரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலுக்குச் சென்றனர். எல்லாச் சாலைகளிலும் மக்கள் வெள்ளம். வெவ்வேறு ஊர்களிலிருந்து மக்கள் வந்த வண்ணமிருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறிப்போயினர். இதற்கிடையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டமாகச் சென்ற தொண்டர்கள், ரயில்களை யெல்லாம் அடித்துச் சேதப்படுத்தத் தொடங்கினர். ரயிலில் வந்த பயணிகளின் அலறல் நீண்ட தூரம் கேட்டுக்கொண்டிருந்தது. கூட்டத்தின் மூர்க்கத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய சூழல் உருவானது. தலைவரின் இறுதி ஊர்வலம் போர்க்களமானது. அதிகாரத்துக்குக் காத்திருந்த ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்குச் சிலரைச் சேர்த்துக்கொண்டு தலைமைப் பதவிக்கான யுத்தத்துக்கு ஆயத்தமானார்கள். ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற நம்பிக்கையில் இத்தனை காலம் நண்பர்களாயிருந்த தொண்டர்கள் ஏன் எதற்கென யோசிக்க அவகாசமில்லாமல் அடித்துக் கொண்டனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவரும் முதல்வருக்கு இறுதி மரியாதை செய்தனர். ஆட்களை சில நொடிகளுக்குமேல் தலைவரின் உடலுக்கு அருகில் நிற்க அனுமதிக்கவில்லை. காளிக்கு முதலில் கால் கடுத்தது, பிறகு வலி பழகி மரத்துப்போனது. உலகைப் பற்றின சிந்தனைகள் எல்லாம் தொலைந்துபோய் சூனியம் அப்பிக் கொண்டது. பறிபோன தனது வாழ்க்கை திரும்பக் கிடைக்கக் காரணமான தலைவன் இனி இல்லை. நீண்ட நேரம் காத்திருந்து, முதல்வரின் இறந்த உடலைக் கண்டதும் காளிக்குக் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடைந்து சத்தமாக அழத் தொடங்கினான். ‘‘எங்களையெல்லாம் அநாதையா விட்டுட்டுப் போயிட்டியே தலைவா...’’ என மாரிலடித்துக்கொண்டு அழுததை மருதுவும் முத்தையாவும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘`எண்ணே அழுவாதண்ணே... அழுவாத...’’ என்றபடியே முத்தையா அவனது தோள்களை இறுகப் பற்றிக்கொண்டு வரிசையில் நகர்த்திச் சென்றான். காளி அழுவதை நிறுத்தவில்லை. நீண்ட வளாகத்தைத் தாண்டி வருகிறவரை அவனது அழுகுரல் தொடர்ந்து ஒலித்தபடியே இருந்தது. ராஜாஜி ஹாலிலிருந்து சிறிது தூரம் வந்த பிறகு காளிக்கு அழுது அழுது தொண்டை கட்டிப்போனது. டிசம்பர் மாதத்துக் குளிரையும் மீறி மக்கள் வெள்ளத்தால் அசாத்தியமான வெக்கை சூழ்ந்திருந்தது, சோர்விலும் களைப்பிலும் தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்ததால் காளி மருதுவை அழைத்துக்கொண்டு சென்றான். கூட்டத்தில் எல்லோரையும் அலையவைக்க வேண்டாமென எண்ணி இருவர் மட்டுமே கடைக்குச் சென்றார்கள். நிற்க இடமில்லாதபடி கடையில் கூட்டம். ‘`எண்ணே ரெண்டு டீ குடுங்க’’ மருது கூட்டத்துக்குமேல் சத்தமாகக் கத்தினான். தேநீருக்காகக் காத்திருந்த இருவரிடமும் ஆழ்ந்த மெளனம். அமைதியாக மக்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். எதிர்பாராததொரு விநாடியில் எங்கிருந்தோ வந்த தொண்டர் கூட்டமொன்று கடையிலிருந்தவர்களை அடித்து விரட்டியதோடு, கடையையும் அடித்து நொறுக்கத் தொடங்கியது. காளியால் சுதாரிக்க முடியவில்லை. ‘`எண்ணே வாண்ணே போயிருவோம்’’ என மருது அவன் கைகளைப் பற்றி இழுத்தபோதுகூட அவன் என்ன செய்வதெனத் தெரியாமல்தான் மலங்க மலங்கப் பார்த்தான். இரண்டு பேர் கட்டையால் காளியின் தலையில் ஓங்கியடித்தனர். மண்டை பிளந்து ரத்தம் கொப்பளிக்க மருது அவசரமாகத் தனது சட்டையைக் கழற்றி காயத்தில் வைத்தான். ‘`வாண்ணே போயிருவோம்...’’ என இழுத்தபடி ஓடிய மருதுவின் கையைப் பற்றியிருந்த காளிக்கு கண்கள் இருண்டு மயக்கம் வர, தற்செயலாகத் தன் ஆட்களோடு வந்த மூர்த்தி மருதுவையும் காளியையும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

காளி தனது அறையில் சோர்வாகப் படுத்திருக்க, அவனோடு வந்தவர்கள் கவலையோடு உட்கார்ந்திருந்தனர். அறைக்குள் சுழன்ற குளிர்காலத்தின் ஈரவாடை காட்டமாயிருந்தது. மின்விசிறி வேகம் குறைவாகச் சுழன்றதால், மருது காளியின் அருகில் அமர்ந்து விசிறிவிட்டுக் கொண்டிருந்தான். லாட்ஜுக்கு வெளியே இரவு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்ததன் சத்தம் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டிருக்க, மூர்த்தி பெரிய பைகளில் உணவும் மதுவும் எடுத்து வந்தார். முத்தையாவுக்கும் மருதுவுக்கும் அவரை முகம் பார்த்துப் பேச சங்கடமாயிருந்ததால் பொதுவாக ‘`வாங்கண்ணே’’ என்று சொல்லி எழுந்தனர்.

ரெண்டாம் ஆட்டம்! - 52

“என்னப்பா இப்ப பரவால்லயா?” என அவர் மருதுவிடம் கேட்க, “பரவால்லண்ணே. ஆனா வலியில அப்பப்ப அனத்திட்டு மட்டும் இருக்காப்டி...’’ என்றான்.

‘`ஒண்ணும் ஆகாது. நீங்க பட்டினி கெடக்காம சாப்டுங்க...’’ எனப் பையை நீட்டினார். பேச்சு சத்தம் கேட்டுக் கண்விழித்த காளி, எழுந்து கட்டிலில் வசதியாக உட்கார்ந்தான்.

‘`பரவால்லப்பா படுத்துக்க, ஏன் எந்திரிக்கிற...’’ என்று மூர்த்தி காளியிடம் சொல்ல, “இருக்கட்டும்ணே. நீங்க உக்காருங்க...” என காளி சிரித்தான்.

கட்டிலில் அவன் கால்மாட்டில் அமர்ந்த மூர்த்தி ‘`வந்த இடத்துல இப்பிடி ஆகிருச்சேன்னு சங்கடப்படாதப்பா... அரசியல் இப்படித்தான...’’ எனச் சிரிக்க, காளியும் ஆமோதித்துச் சிரித்தான்.

``யேய் நீங்க சாப்பிடுங்கய்யா...’’ என்று காளி தன் ஆட்களிடம் சொல்ல, அவர்கள் உணவுப் பொட்டலத்தைப் பிரித்தனர். முத்தையா மதுபோத்தலைத் திறந்து காளிக்கும் மூர்த்திக்கும் ஆளுக்கொரு லோட்டாவில் மதுவை ஊற்றிக் கொடுத்தான். மதுவருந்தத் தொடங்கியபோது மீண்டும் அவ்வறையில் மெளனம் குடியேறத் தொடங்கியது. சில நிமிடங்களுக்குப் பிறகு அறையின் கதவைத் திறந்துகொண்டு மூர்த்தியின் மகன் அறிவு உள்ளே வர, மருதுவும் முத்தையாவும் ஒருவரையொருவர் தயக்கத்தோடு பார்த்துக் கொள்ள, காளி சுதாரித்து, `‘வாப்பா அறிவு’’ என்றான்.

‘`பரவால்லயாண்ணே இப்ப...’’ என்று கேட்ட அறிவின் கண்கள் மட்டும் மருதுவின் மீதிருந்தன. ``பரவால்லப்பா. தூங்கி எந்திரிச்சா சரியாப்போகும்’’ என்ற காளி முத்தையாவைப் பார்க்க, அவன் இன்னொரு லோட்டாவில் மதுவை நிரப்பி அறிவிடம் நீட்டினான். மதுவை வாங்கிக்கொண்ட அறிவு நிதானமாக குடிக்கத் தொடங்கினான். மூர்த்தி ஏதோ திட்டத்தோடு வந்திருப்பதாக காளிக்குத் தோன்றியது. அவராகப் பேசட்டுமெனக் காத்திருந்தான்.

‘`காளி, தலைவர் பதவிக்காக வெளியே பெரிய போரே நடந்துக்கிருக்கு, நீ யாரு பக்கம் போறதுன்னு யோசிச்சிருக்க?’’

‘`யோசிக்க என்னண்ணே இருக்கு? தலைவருக்கு அப்பறம் அவரு சம்சாரம்.’’

‘`ஏய் என்னப்பா வெவரமில்லாத ஆளா இருக்க... அந்தம்மாவுக்கு என்ன அரசியல் தெரியும்? நான் நடிகையோட அணிலதான் சேரப்போறேன். அதுக்காக மதுரைல பெரிய கூட்டத்தையே தயார் பண்ணிட்டேன். நீயும் வந்துர்றதுதான் உனக்குப் பாதுகாப்பு.’’

‘`இல்லண்ணே எனக்கு அது தோதுப்படாது. நான் லாவ நட்டத்தையெல்லாம் யோசிக்கலண்ணே. மனசுக்கு சரின்னு தோணுது செய்றேன்’’ என காளி தன் நிலைப்பாட்டில் தெளிவாயிருந்தான்.

அரசியல்வாதியாக மூர்த்திக்கு நடிகையை உள்ளும் புறமும் நன்றாய்த் தெரியும். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் நடிகை எல்லோராலும் கவனிக்கப்பட்டவர் என்பதோடு எந்த ஒன்றிலும் இறுதிவரை போரிட்டுப் பார்க்க வேண்டுமென்கிற அவரின் பிடிவாத குணம் அத்தனை எளிதில் பின்வாங்கக் கூடியதல்ல. அதனால் முடிவு என்னவாக இருந்தாலும் அவரின் பக்கம் நிற்கவே விரும்பினார்.

மூர்த்தி தீவிரமாக தனது அணிக்கு மதுரையில் பெரும் படையைத் திரட்டிக்கொண்டிருந்தார். ஆச்சர்யமாக மதுரையில் நீண்டகாலமாக கட்சியிலிருந்த பலரும் காளியைவிட்டு விலகி மூர்த்தியின் பக்கமாகச் சேர்ந்தனர். பல்வேறு யுத்தங்களைக் கடந்து இறுதியில் தலைவரின் மனைவியே முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது காளி உட்பட யாராலும் அதை நம்ப முடியவில்லை.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism