Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 53

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

என் அனுபவத்துல சொல்றேன்யா காளி, அந்த நடிகைதான் இனி இந்தக் கட்சியோட எதிர்காலம்.

ரெண்டாம் ஆட்டம்! - 53

என் அனுபவத்துல சொல்றேன்யா காளி, அந்த நடிகைதான் இனி இந்தக் கட்சியோட எதிர்காலம்.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

அரசியல் விளையாட்டு எதிர்பாராத திருப்பங்களில் முடிய, காளி ஆதரித்த முன்னாள் முதல்வரின் மனைவி ஒரு மாத காலம் மட்டுமே ஆட்சியிலிருக்க முடிந்தது. அவருக்குப் பின்னாலிருந்த எல்லோரும் நடிகையின் அணியில் சேர்ந்துவிட, முதல்வரின் மனைவி அரசியலைவிட்டு முழுமையாக விலகியிருந்தார். காளி எல்லாவற்றையும் சோர்வோடு கவனித்துக் கொண்டிருந்தான். கண்ணுக்கு முன்பாகவே மூர்த்தி மிகவேகமாகத் தன் பழைய அதிகாரத்தைப் பெறுவதற்கான வேலைகளைச் செய்துவந்தார்.

‘என் அனுபவத்துல சொல்றேன்யா காளி, அந்த நடிகைதான் இனி இந்தக் கட்சியோட எதிர்காலம். இப்ப நாம அந்தம்மாவுக்கு ஆதரவா நின்னம்னா பின்னாடி மதுரைய மட்டுமில்ல, திருச்சிக்குத் தெக்க கன்னியாகுமரி வரைக்கும் நாம ஆளலாம்...” என மூர்த்தி நம்பிக்கையோடு சொன்னதன் பின்னாலிருந்த லாபக் கணக்குகள் இப்போதுதான் காளிக்கு விளங்கியது. மூர்த்தியைச் சுற்றி முன்னைவிடவும் பெருங்கூட்டம் திரளத் தொடங்கியிருக்க, அறிவழகன் மீண்டும் மதுரைக்குத் திரும்பினான். ‘நீ தோற்ற இடத்திலேயே உன்னை ஜெயிக்கப் பண்ணுவேன்’ என்னும் பைபிள் வாசகம் எழுதப்பட்ட பிரமாண்டமான தட்டி போர்டுகளில் மூர்த்தி மற்றும் அறிவழகனின் முகங்கள் வரையப்பட்டு, மதுரை நகரை அலங்கரித்துக்கொண்டிருந்தன. பெரியார் பேருந்து நிலையத்துக்கு எதிரிலும், கோரிப்பாளையம் சந்திப்பிலும் சினிமாப் படங்களுக்கு வைக்கப்படும் பிரமாண்டமான விளம்பர போர்டுகளைவிடவும் பெரிதாக இவர்கள் இரண்டு பேருக்குமான போர்டுகளிருந்ததை மதுரைக்காரர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள். இழந்த அதிகாரம் திரும்பக் கிடைத்த வேகத்தில் அறிவு பழைய கணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கினான். இந்தமுறை பகை அவனுடையது மட்டுமல்ல என்பதால், விஜயனையும் அவன் நண்பர்களையும் தனது பாதுகாப்பில் மதுரையில் தங்கவைத்துக் கொண்டான். உடலிலிருந்த வெட்டுக்காயங்கள் குணமாகியிருந்தபோதும் வடு இன்னும் உயிர்ப்போடே இருந்தது. அவர்கள் நான்கு பேரும் இந்த முறை ஐந்தாவதாக ஒருவனை மருதுவைக் கண்காணிக்கத் தேடுகையில்தான் விஜயனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

ரெண்டாம் ஆட்டம்! - 53

‘‘அறிவண்ணே, மெட்ராஸ்ல இருந்த உனக்கு ஒருத்தன் லெட்டர் அனுப்பி மருதுவக் கொல்லச் சொல்றான்னா உன்னய அவனுக்கு நல்லாத் தெரிஞ்சிருக்கு. அதவிட முக்கியமா மருது மேல உன்னாட்டமே அவனுக்கும் பகையிருக்கு. அந்தாளு யாரா இருக்கும்னு நெனைக்கிற?’’

அவன் இப்படிக் கேட்ட பிறகுதான் அறிவுக்கும் உரைத்தது. மருதுவுக்கும் தனக்கும் பொதுவான ஆட்களின் முகங்களை யோசித்தபோது, முத்தையாவைக் கண்டுகொள்ள அவனுக்கு நீண்ட அவகாசம் தேவைப்படவில்லை, ஆனால், அவனுக்கும் மருதுவுக்கும் என்ன பகையாக இருக்கக்கூடும்?

‘‘எனக்கு ஒருத்தன்மேல சந்தேகம் இருக்கு. ஆனா, அவன்தான்னு உறுதியாச் சொல்ல முடியல.’’ அறிவு பிடிகொடுக்காமல் சொல்ல, ‘‘நீ ஆள் யாருன்னு சொல்லு. மிச்சத்த நாங்க பாத்துக்கறோம்’’ விஜயன் பரபரத்தான்.

‘‘முத்தையா மட்டும்தான் எங்க எல்லாருக்கும் பொதுவான ஆளு. போன தலைமுற ரௌடில இருந்து இன்னிக்கி பெரிய பெரிய ஆளா இருக்கற எல்லாருக்குமே அவன் பழக்கம். சொல்லப்போனா மருது இன்னிக்கி நம்புற ஒரே ஆள் முத்தையாதான்’’ என அறிவு சொல்ல, விஜயனும் அவன் நண்பர்களும் சிரித்தார்கள். அறிவு புரியாமல் அவர்களைப் பார்க்க, ‘‘அவந்தாண்ணே நம்மாளு’’ என்றான் விஜயன்.

‘‘எப்பிடிப்பா சொல்ற?’’

‘‘அவனுக்குத் தெரிஞ்ச, அவங்கூட இருந்த எல்லாரும் இன்னிக்கி பெரிய பெரிய ஆளா இருக்காய்ங்க. ஆனா, அவென் இன்னும் ஒரு ஆளா ஆகல. தன்னோட வளர்ச்சிக்குத் தடையா இருக்கறது மருது. அவன ஒழிக்கணும்னுதான் உன்னயத் தூண்டிவிட்ருக்கான்.’’

விஜயன் சொன்னதிலிருந்த நியாயம் அறிவுக்கு உறைக்க, அவனும் ஆமென ஆமோதித்தான். ஒன்றரை வருட காலம், உணவை மறுத்து, இனிப்பை மறுத்து, பெண் வாடையை ஒதுக்கிக் காத்திருப்பதெல்லாம் ரத்தம் குடிக்க வேண்டு மென்பதற்காகத்தான். பசியறியாத மிருகத்துக்கு வேட்டையின் குரூரம் கைவராதென்பதால் அவர்கள் தங்களைப் பசியோடே வைத்திருந்தனர். இப்போது காற்று தங்களுக்குச் சாதகமாக இருப்பது உறுதியாக, வேட்டைக்கான நாளைக் குறித்துவிட்டனர்.

காளி தனது கடைகளுக்குச் சென்று வியாபாரக் கணக்குகளை கவனிப்பதைக் குறைத்துக்கொண்டு சிம்மக்கல்லில் இருந்த தனது அலுவலகத்திலேயே நேரத்தைச் செலவழித்தான். அடுத்த தேர்தலுக்கான மும்முரத்தில் எல்லோரும் மூழ்கிப்போயிருந்ததால், மிக நெருக்க மானவர்களைத் தவிர்த்து வேறு யாரையும் காளி சந்திப்பதில்லை. முதல் சில நாள்கள் சுப்பு மதிய உணவை எடுத்து வந்துகொண்டிருந்தாள். வீட்டிலிருந்து ரிக்‌ஷாவில் இவ்வளவு தூரம் அவள் தனியாக வருவது நல்லவிதமாகப் படாததால், ‘‘எத்தா சோறு குடுக்கறதுக்காக நீ இம்புட்டுத் தூரம் அலையாத, பயககிட்டு குடுத்துவிடு’’ என காளி கண்டிப்பாகச் சொல்லிவிட்டான். பகல் வேளைகளில் மருதுவுடனும், இரவுப் பொழுதுகளை காளியுடனும் கழிப்பதிலேயே முத்தையாவின் முழு நேரமும் செலவாகிக்கொண்டிருந்தது.

காளியிடமிருந்த குழப்பத்தைக் கவனித்த முத்தையா ஒருநாள், ‘‘எண்ணே அன்னிக்கே மூர்த்தி சொன்ன மாதிரி செஞ்சிருக்கலாம்லண்ணே...’’ என முத்தையா அவன் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டு சொல்ல, பதிலுக்கு காளி ‘‘அப்பிடி செஞ்சா அவருக்கும் நம்மளுக்கும் என்னடா வித்தியாசம்? நீயும் நானும் விசுவாசத்த மதிக்கிற ஆளுக. அவரு சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி தன்னயப் பாதுகாப்பாவெச்சுக்கணும்னு நெனைக்கிற ஆளு…’’ என்றான்.

‘‘அப்பிடி இருக்கதுல என்னண்ணே தப்பு... உனக்காக இல்லாட்டியும் எங்க எல்லாருக்காகவும் அப்பிடி செஞ்சிருக்கலாம்ல…’’

காளி திரும்பி முத்தையாவைப் பார்க்க, ‘‘உனக்கென்னண்ணே நல்ல வசதி வாய்ப்புன்னு எல்லாத்தையும் சேத்துட்ட. எங்களப் பாரு இன்னும் அஞ்சுக்கும் பத்துக்கும்தான் அல்லாடிக்கிருக்கோம். கல்யாணம் காட்சி பண்ணல, நல்லது கெட்டது பாக்கல. எங்க காலம்லாம் இப்பிடியே போயிரும்ல…’’ என கசப்போடு சொல்லிவிட்டு, முத்தையா அங்கிருந்து வெளியேறினான். அவன் குரலிலிருப்பது ஏக்கமல்ல, பொறாமை, வெறுப்பு எல்லாம் கலந்த ஒன்று என்பதைக் காளி புரிந்துகொண்டான்.

பகையின் பார்வையிலிருந்து ஒவ்வொரு நாளும் தன்னைக் காத்துக்கொண்ட மருது, தனக்கு விரிக்கப்பட்ட வலை யாருடையது என்ற தேடலை நிறுத்தியிருக்கவில்லை. தன் நிழலைக்கூடச் சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கியிருந்த நேரத்திலும், அவன் முழுமையாக நம்பியது முத்தையாவையும் காளியையும் மட்டும்தான். அவர்கள் இருவரைத் தவிர்த்து வேறு எவரும் தன் அசைவுகளை அறியாத வண்ணம் கவனமாயிருந்தான். வேட்டைக்கு மிக நன்றாகப் பழகிய மிருகம், தன்னை வேட்டையாடத் துடிக்கும் மிருகத்தின் வாடையை மிக எளிதில் கண்டு சுதாரித்துக்கொள்ளும். தீமையின் நிழல்கள் தனக்கு மிக அருகில் சுற்றிக்கொண்டிருப்பதை மருது தெளிவாக உணர்ந்திருந்தான்.

தன்னைக் காத்துக்கொள்ள வேண்டுமென்கிற உறுதிகொண்ட பிறகு மருதுவுக்கு பிடரியிலும் கண்கள் முளைத்திருந்தன. சாவுக்கு அஞ்சி ஓடுவதைவிட அதை எதிர்த்துச் சண்டையிடுவதே சிறந்த வழி என்கிற முடிவோடு மருது தன் அன்றாட வேலைகளை கவனிக்கத் தொடங்கினான். திருமங்கலத்தில் நடக்கும் வைகாசித் திருவிழாவுக்குப் போக வேண்டுமென வள்ளி ஆசைப்பட்டாள். தட்டிக்கழிக்க விரும்பாமல் மருது தன்னோடு முத்தையாவை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு வள்ளியோடு காரில் புறப்பட்டான்.

ரெண்டாம் ஆட்டம்! - 53

திருவிழாக்கள்தான் அதுவரையில்லாதபடி ஊர்களை அழகாக்கிவிடுகின்றன. மகிழ்ச்சியும் பரவசமும் நிரம்பிய முகங்கள் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்திருந்தன. பதிமூன்று நாள்கள்கொண்ட திருவிழாவில் அன்று பத்தாம் நாள். எக்குத்தப்பான கூட்டம். குமரன் கோயில் சந்தில் காரை நிறுத்திவிட்டு மூவரும் நடந்தனர். கோயிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் இருந்த கடைகளில் கூடியிருந்தது மக்கள் கூட்டம். மாரியம்மன் கோயிலில் வழிபாட்டை முடித்துவிட்டு, குண்டாற்றைக் கடந்து பழைய காட்டு பத்திரகாளியம்மன் கோயிலுக்குச் சென்றனர். திருவிழாக் கூட்டத்தைக் கண்ட பூரிப்பிலிருந்த வள்ளியின் முகத்தைப் பார்க்க மருதுவுக்கு ஆறுதலாயிருந்தது. புளியமரங்கள் சூழ, மையமாக அமைந்திருந்த பத்திரகாளி கோயிலுக்கு முன்பாக வலதுபக்கம் கம்மங்காடு. அவர்களுக்கு முன்னும் பின்னும் பெரிய அளவில் ஆட்கள் கூட்டமில்லை. பாதை அரையிருட்டில் கிடந்ததால் மெதுவாகவே நடந்தனர்.

வள்ளியோடு பேசியபடி வந்ததால் மருது கம்மங்காட்டில் உண்டான சலசலப்பை கவனிக்கவில்லை. அவன் சுதாரிப்பதற்குள்ளாகவே நீண்ட வாளொன்று அவன் முதுகில் இறங்கியது. ‘அய்யயோ மாமா...’ என அலறிய வள்ளியின் வாயை ஒருவன் இறுகப் பற்றி மூட, மருது எதிர்த் தாக்குதலுக்குத் தயாரானான். தன்னை பலியெடுக்க வந்திருப்பவர்கள் அதே நான்கு பேர்தான் என்று தெரிந்துகொண்டதும் திடீரென ஒரு துணிவு வந்தது. ‘‘ஒக்காலி எத்தன தடவ எங்கிட்ட குத்துப்பட்டாலும் உங்களால சும்மா இருக்க முடியாதுல்ல... இந்த வாட்டி மொத்தமா முடிச்சிர்றேன்...’’ என்றபடியே முதுகில் வழிந்த ரத்தத்தைப் பொருட்படுத்தாமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டான். திரும்பி முத்தையாவிடம், ‘‘முத்து கத்தியக் குடுறா’’ என்று கேட்க, முத்தையா அவசரமாகக் கத்தியை எடுத்து வந்தான். அவர்கள் நால்வரும் பயந்து சில அடிகள் பின்வாங்க, கத்தியை வாங்க நீட்டிய கையைத் தாண்டி நீண்ட கத்தி அவனது கழுத்திலிறங்கியது. மருது குழப்பத்தோடு திரும்பிப் பார்க்க, ‘‘சாவுடா தாயோலி... செத்துரு...’’ என கத்தியபடியே முத்தையா மீண்டும் குத்த வந்தான். பயத்தில் கைகள் நடுங்க கத்தி கோணல் மாணலாய் மருதுவின் உடலில் இறங்கியது.

வள்ளி அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்க, விஜயனும் அவன் நண்பர்களும் மருதுவைச் சூழ்ந்து வேட்டையாடத் தொங்கினார்கள். மருதுவின் அலறலைக் கேட்டு கரும்பு வயலில் காவலுக்கிருந்த நாய்கள் மிரண்டு குரைத்தன. ஒருவன் மருதுவின் கழுத்தைத் தனியாக அறுத்தெடுத்தபோது, ரத்தம் கரும்பு வயல்களில் தெறித்தது. துண்டிக்கப்பட்ட தலையில் பெரிய கற்களைப் போட்டு சிதைக்கத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் கோயிலுக்கு வந்த ஆட்களெல்லாம் அங்கு நடந்த பயங்கரத்தைக் கண்டு அலற, பித்துப் பிடித்தவள்போலான வள்ளி தப்பித்து ஓட முயன்றாள். சடாரென சுதாரித்த முத்தையா யோசிக்காமல் துரத்திச் சென்று அவள் கழுத்தில் கத்தியைச் செருகினான். வள்ளியின் மருண்ட கண்களில் உயிர் வாழ்வதற்கான தவிப்பு இன்னும் மிஞ்சியிருக்க, உடல் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. விஜயனும் அவன் ஆட்களும் உடலெங்கும் தெறித்திருந்த மருதுவின் ரத்தத்தைக் கழுவிக்கொள்ளாமல் குண்டாறு பாலத்தை நோக்கி நடந்தனர். பொருட்காட்சிக்கு வந்திருந்த கூட்டம் ரத்தக் காட்டேரிகளைப்போல் வரும் இவர்களைக் கண்டு மிரண்டு ஓட, இழந்த மானத்தைத் திரும்பப் பெற்ற பூரிப்பில் அவர்கள் நிதானமாக நடந்து சென்றார்கள்.

(ஆட்டம் தொடரும்)