Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 54

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

கருப்பு என்ன முடிவெடுப்பதெனத் தெரியாத குழப்பத்திலிருந்தான். தொழிலில் எல்லோரும் தங்களை மறப்பதற்கு முன்பாக அதை மீட்டெடுத்தாக வேண்டும்.

ரெண்டாம் ஆட்டம்! - 54

கருப்பு என்ன முடிவெடுப்பதெனத் தெரியாத குழப்பத்திலிருந்தான். தொழிலில் எல்லோரும் தங்களை மறப்பதற்கு முன்பாக அதை மீட்டெடுத்தாக வேண்டும்.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

தலைமறைவு நாள்கள் கருப்புவுக்கு உவப்பானவையாக இல்லை. வெக்கை அணு அணுவாகத் தின்றுகொண்டிருந்தாலும், செய்வதற்கு எதுவுமில்லாததால் இரவு பகல் பாராமல் குடித்துக்கொண்டிருந்தார்கள். நெப்போலியன் பிராந்தி போத்தல்கள் அறையில் குவிந்துகிடந்தன. ஒவ்வொரு நாளும் மதுரையிலிருந்து வரும் செய்திகளால் அவனது ஆத்திரம் முன்னைவிடவும் அதிகரித்துக்கொண்டிருந்தது.

கோட்டைச்சாமியின் சாம்ராஜ்யமாக இருந்த எல்லாப் பகுதிகளிலும் செல்வம் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறான் என்பதை இவனால் செரிக்க முடியவில்லை. அண்ணன் சாவுக்குப் பழி தீர்த்ததோடு பிரச்னைகள் முடியப்போவதில்லை என்னும் கசப்பான நிஜம் வருங்காலத்தை அச்சத்தோடு பார்க்கச் செய்தது. செல்வம் ஆந்திராவிலிருந்து இரண்டாவது லோடு சரக்கை இறக்கியிருக்கிறான் என்று தெரிந்த நாளில் கருப்புவுக்கு வெறி உச்சத்திலேற, இருந்த ஆத்திரத்தையெல்லாம் முனுசிடம் வெளிப்படுத்தினான்.

‘‘அன்னிக்கி நான் சொன்னப்ப நம்ம மாட்டன்னு சொன்னே... இப்ப பாத்தியா, நம்பவெச்சு கழுத்தறுத்துருக்காய்ங்க’’ குடிவெறியில் கருப்புவுக்கு சொற்கள் குழறின. ஆத்திரத்தில் அதிர்ந்த உடலை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாத அவனைப் பார்த்து முனுசு அச்சங்கொண்டான்.

‘‘அவய்ங்க நம்மகிட்ட நாடகமாடுவாய்ங்கன்னு நெனச்சுக்கூட பாக்கலடா கருப்பு. அப்புராணியாட்டம் நடிச்சு நம்மள ஏச்சுப்புட்டாய்ங்க.’’

‘‘ஒரு கோடி ரூவா சரக்க தூக்கினதும் இல்லாம அத நம்ம ஏரியாலயே வித்து காசும் பாத்துட்டாய்ங்க. நம்மளப் பாத்து குனிஞ்சு கும்புடு போட்டவனெல்லாம் இனி முதுகுக்குப் பின்னால சிரிப்பாய்ங்கண்ணே.’’

ரெண்டாம் ஆட்டம்! - 54

‘‘அப்டியெல்லாம் ஆயிராதுடா கருப்பு. நாம இத்தன பங்காளிக இருந்தும் ஒருத்தன் நம்மள ஜெயிச்சிட்டான்னா நாம என்னடா ஆம்பளைங்க... நாம ஊருக்குள்ள இறங்கணும். அதுக்கு ஒரே வழி சரண்டராகி பெயில் வாங்கறதுதான். நீ உடனே வக்கீல்கிட்ட பேசு…’’

கருப்பு என்ன முடிவெடுப்பதெனத் தெரியாத குழப்பத்திலிருந்தான். தொழிலில் எல்லோரும் தங்களை மறப்பதற்கு முன்பாக அதை மீட்டெடுத்தாக வேண்டும். மற்றவர்களுக்குத் தங்கள் மீதிருக்கும் பயம்தான் தொழிலுக்கு முதலீடு. அந்த பயத்தை இன்னொருவன் சம்பாதிக்க அனுமதிக்கவே கூடாதென்பதை சிறுவயது முதலே கோட்டைச்சாமி அவனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறான். தொழிலை மீட்க வேண்டுமானால், இழந்த மரியாதையை மீட்க வேண்டும். வீட்டுக்குள் அடைந்து கிடக்கப் பிடிக்கவில்லை. நடந்து ஊருக்கு வெளியே சென்றபோது அறுவடை முடிந்த வயல்களெல்லாம் வறண்டு கிடந்தன. அடுப்புக் கரிக்காக புகைமூட்டம் போடப்பட்டிருந்த சீமைக் கருவேலங்காட்டை ஒட்டின மேட்டிலிருந்து இன்னும் புகை அடங்கியிருக்கவில்லை. கையோடு எடுத்து வந்திருந்த நெப்போலியனோடு ஒரு வயலுக்குள் இறங்கி உட்கார்ந்தவன், ஒவ்வொரு மிடறாக பிராந்தியைக் குடிக்கத் தொடங்கினான். ஆத்திரமும் வெறுப்பும் மறந்து சோர்வோடு உழன்றவன், அப்படியே மல்லாந்து படுத்தான். இருள் நிரம்பிய வானில் அடர்ந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி கிடந்தவன், தன் அண்ணனின் நினைவுகளில் மூழ்கிப்போனான்.

கோட்டைச்சாமியின் வீட்டில் சாவுக்களை நிரந்தரமாகப் படிந்துவிட்டதைப்போல் இருண்டு கிடந்தது. இரவு பகலென எப்போதும் சொந்தக்காரர்கள் வந்துபோன வாசலில் வெயில் மட்டுமே நிரம்பியிருக்க, தினப்படி சோற்றுக்குப் பழக்கப்பட்டுப் போயிருந்த தெருநாய்கள் மூர்க்கத்தோடு வீட்டைப் பார்த்துக் குரைத்துக்கொண்டிருந்தன. கருப்புவும் அவன் பங்காளிகளும் ஆளுக்கொரு பக்கமாகத் தலைமறைவாகியிருந்ததால், பெண்கள் அச்சத்தோடு நாள்களைக் கழித்தனர். சங்கரிக்கு உலகம் வெறுத்துப்போனது, தன்னைச் சூழ்ந்த எல்லா சந்தோஷங்களும் தொலைந்து, கோட்டைச்சாமியுடன் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் கனவைப்போல் கரைந்துபோய்விட்ட விரக்தியில், அழுது ஓய்ந்து போனாள். இதற்கு மேல் திராணியில்லையென சுருண்டு கிடந்தவளைத் தேற்ற அவளின் பிள்ளைகள் போராடிக்கொண்டிருந்தனர்.

முன்வாசலை ஒட்டிய ஊஞ்சலில் படுத்துக் கிடந்தவளுக்கு, வெக்கையில் கழுத்தைச் சுற்றி முத்து முத்தாக வியர்த்திருந்தது. அருகில் வந்தமர்ந்த சங்கரியின் மகன் அவளது சேலை முந்தானையால் வியர்வையைத் துடைத்து விட்டான். கண்ணீர் உலர்ந்த முகத்தோடு திரும்பிப் பார்த்தவளிடம், ‘‘ஈஸ்வரி அக்கா தேடி வந்திருக்கும்மா...’’ என சுரத்தில்லாமல் சொன்னான். ஒழுங்காகச் சாப்பிடாமல் தெம்பற்றுப் போனவளின் முகம் ஒடுங்கிப் போயிருந்தது. உடையைச் சரிசெய்தபடியே எழுந்தவள், விருப்பமேயில்லாமல் ஈஸ்வரியைப் பார்க்கச் சென்றாள். பதற்றத்தோடு உட்கார்ந்திருக்கும் ஈஸ்வரியைப் பார்க்க கேதம் கேட்க வந்தவளைப்போல் தெரியவில்லை. சேலைக்குள் விரல்களை நுழைத்து பதற்றத்தோடு சுற்றிக்கொண்டிருந்தவள், சங்கரியைப் பார்த்ததும் அடக்க மாட்டாமல், ‘‘எக்கா…’’ எனச் சத்தம் போட்டு அழத் தொடங்கினாள். அழுவதற்கான காரணம் தெரியாததால் அமைதியாக இருந்த சங்கரி ‘‘ஏய் எதுக்குடி அழுவுற? என்னன்னு சொல்லு...’’ என நெருங்கி அவளை அணைத்துக்கொண்டாள். ஈஸ்வரி, தலையிலும் வயிற்றிலுமாக அடித்துக்கொண்டு அழுதாளே ஒழிய சொல்ல வந்ததைச் சொல்வதாக இல்லை. ‘‘ஏய் கிறுக்குச் சிறுக்கி என்னன்னு கேக்கறன்ல…’’ என சங்கரி அவளை அமட்ட, ‘‘உன் குடியக் கெடுத்தது அடுத்தாளு இல்லக்கா. உன்கூடயே இருந்தவய்ங்கதான்…’’ என அரற்றி அழுதாள்.

‘‘ஏய் என்னடி சொல்ற?’’ சங்கரி அதிர்ச்சியோடு கேட்க, ‘‘உன் புருஷன வம்மவெச்சுக் கொன்னது அந்தத் திண்டுக்கல் பிள்ள இல்ல, கூடயே இருந்த செல்வமும் அவன் அண்ணனும்தாங்க்கா…’’ தொண்டைக்குழிக்குள் அடைத்துக்கொண்டிருந்த துயரமும் துரோகமும் தெறித்து விழ, சங்கரிக்குத் தலை சுற்றுவதுபோலிருந்தது. அருகிலிருந்த மகனை ஆதரவுக்காகப் பற்றிக்கொண்டவள், அப்போதும் நம்பிக்கையற்றவளாக, ‘‘செல்வம் அவரு கூடப்பொறக்காத தம்பி மாதிரிடி… அவன் செஞ்சிருக்க மாட்டான்…’’ என தனக்குத் தானே சமாதானம் சொல்வதுபோல் சொல்லிக்கொண்டாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 54

‘‘ரெண்டு நாளா அந்த சேகர் பயகூடதான் வெரகனூர் தோப்புல இருந்தேன்… குடிச்சுட்டு அவனே அவன் வாயால சொன்னதத்தான் சொல்றேன். சரக்கத் தூக்கினதும் அவய்ங்கதான்... கோட்டயண்ணன கழுத்தறுத்ததும் அவய்ங்கதாங்க்கா...’’

சங்கரிக்கு பூமி காலுக்குக் கீழ் நழுவிவிடுவதைப் போலிருந்தது. அடக்க முடியாமல் தலையிலடித்துக்கொண்டு அழுதாள்.

‘‘கருப்பா… நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்… என் வீட்டுச் சோத்தத் தின்னுட்டு எனக்கே துரோகம் பண்ணி இருக்காய்ங்களே.. அவன் கண்ண காக்கா கொத்தக் கூடாதா... அவன் வீட்டுல எழவு விழக் கூடாதா? நல்லவன் மாதிரி இருந்து ஏச்சுபுட்டாய்ங்களே… ஏச்சுப்புட்டாய்ங்களே…’’

கட்டுப்படுத்த முடியாமல் அழுதவளுக்கு கருப்புவின் நினைவு வர, அவனும் இந்தக் குடும்பமும் என்ன மாதிரியான சுழலில் சிக்கியிருக்கிறோம் என நினைத்ததும், அச்சத்தில் வயிற்றைக் கலக்கியது.

அவசரமாக எழுந்து ஓடியவள் டி.வி-க்கு அடியில் கிடந்த செல்பேசியை எடுத்து கருப்புவுக்கு அழைத்தாள். முதல் மணியிலேயே எடுத்தவன், ‘‘அத்தாச்சி... நானே ஒரு விஷயமா கூப்புடணும்னு இருந்தேன். நீ போயி நம்ம வக்கீல ஒரு எட்டுப் பாத்துட்டு வரியா?’’ எனச் சோர்வோடு சொன்னான். அவனைத் தொடர்ந்து பேசவிடாதவளாய், ‘‘டேய் கருப்பு எல்லாம் போச்சுடா… நாசமாப் போச்சு’’ எனச் சத்தமாக அழுதாள்.

‘‘என்னாச்சு அத்தாச்சி. ஏன் அழுதுக்கிருக்க?’’

சங்கரி தன்னை இயல்புக்குக் கொண்டுவர முடியாதவளாக அழுகையினூடே ‘‘நம்ம கூட இருந்தவய்ங்களே நம்மள அழிச்சிருக்காய்ங்கடா கருப்பு... இந்த செல்வம் பயதாண்டா எல்லாத்துக்கும் காரணம்…’’ எனக் கதறினாள்.

‘‘ஆமா... சரக்கத் தூக்கி நம்ம ஏரியாலயே வித்திருக்கான்னு எங்களுக்கும் தெரியும். நீ கொஞ்சம் பொறுமையா மட்டும் இரு… இந்தப் பிரச்னைய முடிச்சிட்டு அவன் சோலிய முடிச்சு விட்ருவோம்…’’

‘‘போடா கிறுக்குக்கூ... சரக்காவது மயிராவது? உங்க அண்ணனக் கொன்னது அவனும் சேகரும்தாண்டா... பாவத்த அவய்ங்க பண்ணிட்டு, பழிய வேற ஆள் பக்கம் திருப்பி விட்டிருக்காய்ங்க.’’

கருப்புவால் அவள் சொன்னதை நம்ப முடியவில்லை. செல்வத்துக்கு கோட்டைச்சாமியின் மீதிருந்தது கோவமல்ல, பகையென்பதை கோட்டைச்சாமியேகூட நம்ப மாட்டான்.

‘‘அத்தாச்சி, எவனோ தப்பா சொல்லி இருக்கான். உண்மையா இருக்காது.’’

‘‘முட்டாப்பயலே இன்னுமா புரியல, அவனுக்கு உங்கண்ணன் தொழில்ல மட்டுமில்ல... அந்தச் சிறுக்கி மேலயும் கண்ணு. அவளும் இவனும் சேந்துதாண்டா எல்லாத்தையும் செஞ்சிருக்காய்ங்க.’’

கருப்புவுக்கு ஆத்திரத்தில் தலை சுற்றியது. பழகிய நண்பனால் வஞ்சிக்கப்பட்ட ஆத்திரமும், எல்லோரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொண்டுவிட்ட அச்சமும் சூழ, என்ன செய்வதெனத் தெரியாமல் தடுமாறினான். கையிலிருந்த செல்பேசி தவறி கீழே விழுந்து உடைய, கருப்பு ஆத்திரத்தோடு சுவரில் குத்தினான். ‘‘செல்வம்… ஒக்காலி உன் தலைய அறுத்து எறிஞ்சாதாண்டா என் வெறியடங்கும்...’’ என அலறியவன் சுவரில் குத்துவதை நிறுத்தவே இல்லை. விரல்களிலிருந்து ரத்தம் கொப்பளிக்க ஆத்திரத்தோடு அலறிக்கொண்டிருந்தவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த முனுசு, அவசரமாகப் பிடித்து இழுத்து உட்காரவைத்தான். ஆத்திரம் கொண்ட காட்டெருமையென கருப்புவின் உடல் நடுங்கிக்கொண்டேயிருக்க, ஒரு நிலையில் இருக்க முடியாமல் ‘‘முனுசு... அவய்ங்களக் குடும்பத்தோட அறுத்துப் போடணும் முனுசு… நம்ம எச்சியத் தின்ன நாயிங்க… நம்ம குலத்தையே அழிச்சிட்டாய்ங்க… விடக் கூடாது முனுசு…’’ என அரற்றிக்கொண்டிருந்தான். கோட்டைச்சாமியின் குடும்பத்திலிருந்த ஒவ்வொருவரின் நாவிலும் செல்வத்தின் ரத்தம் குடிக்கும் வெறி ஏறியிருந்தது.

(ஆட்டம் தொடரும்)