Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 55

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

பொன் விளையும் பூமியென இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களைச் சொல்லலாம், அத்தனை செழிப்பான பூமி.

ரெண்டாம் ஆட்டம்! - 55

பொன் விளையும் பூமியென இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களைச் சொல்லலாம், அத்தனை செழிப்பான பூமி.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

கீழவளவு ஊருக்கு வெளியே மலையடிவாரத்திலிருந்தது கோயில். இந்தப் பக்கத்து ஊர்களில் எங்கிருந்து பார்த்தாலும் இந்த மலைக்கு மேலிருக்கும் பாறை மட்டும் தனியாகத் தெரியும். மரங்களும் செடிகளும் அடர்ந்த மலையின் மீது பெரிய தொப்பி வைத்ததுபோலிருக்கும் அந்தப் பாறை. எத்தனை உக்கிரமான வெயில் அடித்தாலும், வெக்கை தெரியாதபடிக்கு மரங்களும் தென்னந்தோப்பும் சூழ்ந்த பகுதி. நேர்ச்சை போட்ட பக்தர்கள் வந்துபோகாத நாளில்லை. விடிகாலை முதலே சாமியாடிக்குக் குறி சொல்வதற்கும், பூசை போடுவதற்கும் நேரம் சரியாயிருக்கும். வெள்ளலூர் நாட்டு மக்களின் மத்தியில் இந்தக் கோயிலுக்கு நல்ல செல்வாக்குண்டு.

பொன் விளையும் பூமியென இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களைச் சொல்லலாம், அத்தனை செழிப்பான பூமி. முத்தையாவின் அப்பா பல வருடங்களுக்கு முன்பு இங்கிருந்துதான் பஞ்சம் பிழைக்க மதுரை நகருக்குச் சென்றார். அவர் காலத்திலும் சரி, அவருக்குப் பின்பாகவும் சரி... முத்தையா இந்தக் கோயிலுக்கு அதிகம் வந்ததில்லை. குலமும் குடியும் செழிப்பாயில்லாதவனுக்கு குலசாமி ஒரு கேடா என்றுதான் எப்போதும் கசப்போடு இருப்பான். அவனுக்கு வேண்டுமானால் ஐயனாரின்மீது கசப்பும் வெறுப்பும் இருந்திருக்கலாம். ஐயனாருக்கு எல்லோரின்மீதும் இருப்பதைப்போலவே அவன்மீதும் அக்கறை மட்டுமே இருந்தது. தன்னைத் தேடிவந்து கேட்கிற எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கும் தாராள மனம் அவருக்கிருந்ததை அவரை முழு மனதோடு நம்பிய ஒவ்வொருவரும் அறிவர்.

ரெண்டாம் ஆட்டம்! - 55

ஐயனாரின் மீதான அவனது நம்பிக்கையின்மையை அவனின் மனைவிதான் மாற்றினாள். ‘‘குலசாமிங்கறது உனக்குப் பொன்னும் பொருளும் குடுக்கறதுக்காக இல்ல. உனக்கு நல்லது கெட்டது வர்றப்போ நீ மனசு விட்டுப் பேசிக்கிறதுக்காக. மனுசப்பய பொய் சொல்லாம மனசாட்சிக்கு நேர்மையா பேசறது சாமிகிட்ட மட்டும்தான். அந்தக் கொஞ்ச நேர நேர்மை இருந்தாத்தான் நீயும் நானும் மனுஷ ஜென்மம். உனக்கு இது புரிஞ்சுட்டா கோயிலுக்கு ஏன் போகணுங்கறதும் புரியும்’’ என்று அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்த பிறகு கோயிலுக்குச் செல்வதற்கான மனநிலைக்கு வந்தான்.

மனிதர்களோடு பேசித் தீர்க்க முடியாத கணக்குகளையெல்லாம் சாமியோடு முத்தையா பேசித் தீர்த்துக்கொண்டிருந்தார். பிறர் வீடுகளில் வெளிச்சம் கிடைப்பதற்காகத் தன்னையே விளக்காக்கி எரிந்த அந்த மனிதரின் தியாகத்துக்கு உரித்தான மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்திருக்கவில்லை. சக மனிதர்களிடம் எதிர்பார்த்து பயனில்லையென்கிற ஏமாற்றத்தோடு கீழவளவு ஐயனாரிடம் அவர் சரணடைந்தது நாற்பது வயதில்தான். அன்றுமுதல் தனது எல்லா மனக்குறைகளையும் இங்கு வந்து புலம்பி அழுது செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தவருக்கு, இத்தனை வருடங்கள் எதற்காகக் காத்திருந்தோமோ அது கிடைத்துவிட்ட நிறைவும் மகிழ்வும் இப்போது. சேகரும் முத்தையாவும் மேலூர் சந்தையில் முழுக்க கறுப்பு நிறத்தினாலான ஒரு கெடா குட்டியைப் பிடித்து வந்திருந்தனர். பொங்கல் வைக்கவும், காது குத்து நிகழ்வுக்காகவும் கோயிலில் நல்ல கூட்டம். முத்தையா பயபக்தியோடு ஐயனாரின் முன்னால் விழுந்து வணங்கிவிட்டு மூன்று முறை உள்ளங்கை நிறைய நாணயங்களை அள்ளி உண்டியலில் போட்டார். ஐயனாருக்கு பூசை முடிந்ததும், விபூதி அடித்துவிட்டு பூசாரியிடம் சந்தையில் பிடித்துவந்த ஆட்டை விட்டுவிட்டு மன நிறைவோடு மதுரைக்குக் கிளம்பினார்கள்.

வானில் செந்நிற மேகங்கள் திரளத் தொடங்கியிருந்தன. யுத்தத்தைத் தொடங்கியவன் ஆயுதங்களை எறிந்துவிட்டுப் பின்வாங்க இயலாது. போரில் வெற்றி தோல்வி தீர்மானமாகும் வரையிலும் சண்டையிட்டுத்தான் ஆக வேண்டும். செல்வத்தின் ஆயுதம் ரத்தமும் சதையுமான ஜெகதி என்பதால், அவன் இந்த யுத்தத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியிலிருந்தான். மற்ற ஆயுதங்கள் அதைக் கையாள்கிறவனின் கட்டுப்பாட்டிலிருக்கும். செல்வத்தின் ஆயுதம் அவனையே கட்டுப்படுத்தக் கூடியது. அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவனாக அவன் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருந்தான். கோட்டைச்சாமியின் சாவுக்குப் பழியெடுக்க எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவன் பங்காளிகள் தன்னைத் தேடி வரலாம் என்கிற எண்ணம் அவனுக்குள் ஆழமானதோர் அச்சத்தை விதைத்துவிட்டிருந்தது. கோட்டையின் துண்டிக்கப்பட்ட தலையை அவனது குடும்பம் தேடித் தவித்ததையும், அந்தத் தலைக் கிடைக்காமலேயே அவனுடலை எரித்ததால் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த வெறுப்பையும் மதுரையின் சரிபாதி சனம் கண்கூடாகப் பார்த்திருந்தது. ‘‘அவய்ங்க சாம்ராஜ்யத்த அழிச்சதக்கூட மன்னிச்சு விட்ருவாய்ங்கய்யா பங்கு... கோட்டச்சாமிய செதச்சத மறக்கவும் மாட்டாய்ங்க... மன்னிக்கவும் மாட்டாய்ங்க’’ என சோணை அவ்வப்போது பயத்தோடு நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தான். இவ்வளவு காலமும் அவனுக்கு முன்னாலிருந்தது கோட்டைச்சாமி என்னும் ஒற்றை எதிரி. இப்போது அம்சவல்லியின் குடும்பத்துப் பகையும் அவனுக்கு முன்னால் பூதாகரமாக அச்சுறுத்திக்கொண்டிருந்தது.

செல்வம் குழப்பமும் அச்சமும் சூழப்பட்டவனாயிருந்தான். ஜெகதியை வெறுத்து ஒதுக்கவும் முடியாமல், முன்பைப்போல் முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் மனம் தவித்தது. தன்மீது கொண்டிருக்கும் அன்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவள் என்பதை அறிந்துகொண்டபோது, இந்தக் கண்மூடித்தனமான நேசத்தால் உருவாகும் ஆபத்துகளை நினைத்து அச்சமுற்றான். இழப்பதற்கு எதுவுமே இல்லாத நாள்களில் இருந்த துணிச்சல் இப்போதில்லை. இந்த ஊரை ஆள வேண்டுமென்பது எப்போதோ மனதில் விதைக்கப்பட்ட விதை. எல்லாம் கூடிவரும் சமயத்தில் அது கைநழுவிப் போய்விடக் கூடாதெனக் கலக்கம்கொண்டான்.

‘‘ரொம்ப யோசிக்காத செல்வம், எதுவும் உன் கைமீறிப் போகாது. நீதான் கோட்டச்சாமியக் கொன்னங்கறது எப்பிடி அவன் குடும்பத்துக்குத் தெரியாதோ, அதே மாதிரிதான் போஸ்டர் ஒட்டினது அம்சவல்லி இல்லை... நானுங்கற விஷயமும் யாருக்கும் தெரியாது.’’

‘‘இப்போதைக்குத் தெரியலை, ஆனா கூடிய சீக்கிரமே தெரிஞ்சுரும்டி…’’

ரெண்டாம் ஆட்டம்! - 55

‘‘தெரியட்டும். அவங்களுக்குத் தெரியறதுக்குள்ள உன்னோட பலத்தக் கூட்டிரு. வெறும் ஆள் பலமோ, பண பலமோ மட்டும் இப்ப உனக்கு உதவாது. அரசியல் பலம் வேணும். உன் அண்ணனால நல்ல அரசியல்வாதியா ஆக முடியுமான்னு தெரியலை. ஆனா உன்னாலயும் என்னாலயும் முடியும். மத்த பொம்பளயெல்லாம் மனசுக்குப் புடிச்சவனோட கஷ்டநஷ்டத்துல மட்டும்தான் பங்கு போட்டுக்குவா. நான் நீ செஞ்ச பாவத்துலயும் பங்கு போட்டுருக்கேன். அதனால பதவி நம்ம ரெண்டு பேத்துல ஒருத்தருக்கு இருந்தாத்தான் நல்லது.’’

‘‘சேகரு பாவம்டி…. அவன எதாச்சும் ஒரு வழில செட்டில் பண்ணி விடலன்னா நம்ம மேல இருக்க கடுப்புல அவன முடிச்சு விட்ருவாய்ங்க.’’

‘‘மதுரைய ஆளணுங்கறதுதான உங்களோட லட்சியம். அந்த லட்சியத்துக்காக ஒரு உயிரத் தியாகம் பண்ணலாம் தப்பில்ல.’’

ஜெகதியின் சொற்களைக் கேட்டதும் அவனுக்கு சுர்ரென தலைக்கு ஏறியது. நெஞ்சில் கனன்ற வெறுப்பைக் காட்டிவிடாமல் தவிர்க்க, அவசரமாக வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான்.

முத்தையாவின் தோற்றம் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது. திருத்தமான உடை, நறுக்கின மீசை, படிய வாரப்பட்ட தலையென இதுவரையில்லாத ஆளாகப் புத்தம் புதிய பல்சர் வண்டியில் சேகரோடு சுற்றிவந்தார். ‘ஒருத்தனுக்கு கோமணத்துல காசு வந்துட்டா கோழி கூப்புட பட்டு வருமாம்…’ என அவர்களின் வேஷத்தைக் கண்டு முத்தையாவின் மனைவி புலம்பியதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எப்படித் தொழிலை நடத்த வேண்டுமென்கிற திறமை செல்வத்துக்கு இருந்தாலும், அந்தத் தொழிலில் எந்தப் பிரச்சனைகளும் வராமலிருக்க யாரெல்லாம் தேவைப்படுவார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. ஓய்வுபெற்ற போலீஸ்காரர்கள், அரசியல் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள், நொடித்துபோன தொழிலதிபர்கள், சில்லறை ரௌடிகளாக இருந்து பெரிதாக வளராமல் போனவர்களென முத்தையா தனது இத்தனை வருடப் பழக்க வழக்கத்திலிருந்த ஆட்களையெல்லாம் தேடித் தேடிச் சந்தித்தார்.

‘‘எப்பா ரவி அண்ணே நம்மளுக்கு வாக்குக் குடுத்த மாதிரி உதவுவாருதான். ஆனா, நாம அதுக்காக சும்மா போயி நின்னுடக் கூடாது. நம்ம பின்னால ஒரு கூட்டத்தைக் கூட்டிட்டுப் போனாத்தான் நம்மளையும் மதிப்பாங்க. இல்லன்னா கட்சில கூட்டத்தோடு கூட்டமா போயிருவோம்’’ என்று செல்வம் சொன்னதிலிருந்த நியாயம் அவருக்கும் தெரிந்திருந்தது. அதனாலேயே எல்லா மட்டத்திலுமிருந்து தங்களுக்கான ஆட்களைத் தேடிச் சென்றார். தம்பியும் அப்பாவும் சேர்ந்து கட்டிக்கொண்டிருக்கும் இந்த சாம்ராஜ்யத்தை தாம்தான் ஆளப்போகிறோமென்கிற நினைப்பிலேயே சேகர் இரவுகளில் உறங்குவதில்லை.

இந்த மொத்த விளையாட்டிலும் ஜெகதி சலிக்காமல் தொடர்ந்து தாயக்கட்டைகளை உருட்டிக்கொண்டிருந்தாள். வஞ்சகமும், வெறுப்பும், பகையும் நிறைந்த இந்த விளையாட்டு அவளுக்குப் பிடித்துப்போயிருந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் ஆண்கள் தோல்விகளுக்கும் வீழ்ச்சிக்கும் அச்சப்படுகிறவர்கள் என்பதை நன்கறிந்திருந்த ஜெகதி செல்வத்தைத் துணையாகக்கொண்டு இந்த விளையாட்டை ஒரு யுத்தமாக நடத்த விரும்பினாள். தன்னை வஞ்சித்த ஒவ்வொருவரையும் வீழ்த்துவதற்கான சந்தர்ப்பம் இதுவென அவள் மனம் எண்ணியது. ஒரு பெண்ணை தனக்கு இணங்கச் செய்வதன் மூலமாக, அவளை அடிமையாக்கிவிடலாமென நினைத்த அத்தனை ஆண்களும் இப்போது எதிரெதிராக இருந்ததால், அவர்களில் யார் தோற்றாலும் ஜெகதிக்கு லாபமே. கோட்டைச்சாமி மிரட்டி அவளை ஆக்கிரமித்தானென்றால் செல்வத்துக்கு காதல் ஒரு காரணமாயிருந்தது. அவர்கள் இருவருக்கும் தேவையாகயிருந்த தெல்லாம் அதிகாரம் மட்டுமே. அந்த அதிகாரத்தின் இளைப்பாறுதலுக்குத் தேவையான ஒரு பெண்ணுடல் மட்டுமே இவள். அதனாலேயே அந்த அதிகாரத்தை தன்வசமாக்கிக்கொள்ளும் துடிப்பு அவளுக்குள் எரிமலையென வெடித்துக் கொண்டிருந்தது.

(ஆட்டம் தொடரும்)