Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 56

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

ஏய், செத்தவென் மருதக்குள்ள பெரிய ஆளாம்யா. ஏற்கெனவே ரெண்டு வாட்டி யார் யாரோ வெரட்டியும் வெட்டியும் ஆள் சாகல.

ரெண்டாம் ஆட்டம்! - 56

ஏய், செத்தவென் மருதக்குள்ள பெரிய ஆளாம்யா. ஏற்கெனவே ரெண்டு வாட்டி யார் யாரோ வெரட்டியும் வெட்டியும் ஆள் சாகல.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்
திருமங்கலம் ஆஸ்பத்திரியின் பிணவறைக்கு வெளியே சீந்துவாரின்றிக் கிடந்தன மருது, வள்ளி இருவரின் உடல்களும். கை வேறு கால் வேறாகவும், துண்டிக்கப்பட்ட தலையுடனும் கிடந்த மருதுவின் உடலிலிருந்து வழிந்த குருதியெல்லாம் உறைந்து போயிருந்ததால் பிணவறையைச் சுற்றி சவத்தின் கவுச்சி நிரம்பியிருந்தது. பிணவறையைச் சுற்றியிருந்த ஆலமரங்களில் அடைபட்டிருந்த பறவைகள், கெட்ட சகுனத்தை எதிர்கொண்ட குழப்பத்தில் தொடர்ந்து அலறிக்கொண்டிருந்தன.

மருது கொல்லப்பட்ட செய்தியை காளி கேள்விப்பட்டபோது நள்ளிரவைக் கடந்திருந்தது. தன் ஆட்களைத் திரட்டிக் கொண்டு இரவோடு இரவாக திருமங்கலத்துக்கு வந்து சேர்ந்தான். தூங்கி வழிந்த மருத்துவ மனையின் பின்வாசல் வழியாக நுழைந்த போது, காவலுக்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியன் இன்னும் சிலரோடு அங்கு வந்தான். ‘‘மார்ச்சுவரி எந்தப் பக்கம்ப்பா?’’ காளிக்கு வார்த்தைகள் குழறின. “அந்த ரெட்டக் கொலையாண்ணே...’’ ஆஸ்பத்திரி ஊழியன் பம்மியபடி கேட்க, காளி ஆமென்றான். “வண்டிய இங்கியே ஓரமா நிப்பாட்டிட்டு வாங்க” என்றதும், வாசல் கதவை ஒட்டியே கார் நிறுத்தப்பட்டது. காளியும் அவன் ஆட்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களைத் தொடர்ந்து சென்றார்கள். மருத்துவமனை முழுக்க வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட கல் கட்டடங்கள். சுவரை ஒட்டியே செடிகள் வளர்ந்திருந்ததால், ஈர வாடைக்குப் பூச்சிகள் அப்பியிருந்தன. ஒரேயொரு மஞ்சள் நிற விளக்கு மட்டுமே எரிந்துகொண்டிருந்த பிணவறைக்கு வெளியே, ஓலைப்பாயில் சுற்றப்பட்ட சதைப்பிண்டமாக மருதுவைக் கண்டதும் தாங்க மாட்டாமல் காளி கதறியழுதான். அவனோடு வந்தவர்களுக்கு அவனை ஆறுதல்படுத்தும் துணிச்சலில்லை. ஒரு பெண்ணைக் கொலை செய்ததன் வழியாக குற்றவுலகுக்குள் வந்த மருது, இன்னொரு பெண்ணின் கொலையோடு தன் வாழ்வை முடித்துக்கொண்டிருந்தான். ரிப்போர்ட் எழுதுவதற்காக ஆஸ்பத்திரியில் காத்திருந்த போலீஸ்காரர், கொல்லப்பட்டவனின் உறவினர்கள் வந்துவிட்ட செய்தியறிந்து பிணவறைக்கு வந்தபோது முரட்டு உருவமாக நின்ற காளியின் கதறலைக் கண்டு வருத்தப்பட்டார்.

ரெண்டாம் ஆட்டம்! - 56

மருதுவின் உடலை அள்ளியெடுத்த இடத்திலிருந்த ரத்தக் கறை அதீத கவுச்சியோடு காற்றில் கலந்துபோயிருந்தது. ‘‘ஏய், செத்தவென் மருதக்குள்ள பெரிய ஆளாம்யா. ஏற்கெனவே ரெண்டு வாட்டி யார் யாரோ வெரட்டியும் வெட்டியும் ஆள் சாகல. இந்தவாட்டி அவென் கெட்ட நேரம் நம்மூர்ல சாகணும்னு இருந்திருக்கு.’’ நான்கைந்து பேர் சுற்றி நின்று வெட்டியும், சின்ன அலறலைக்கூட வெளிப்படுத்தாமல் எதிர்த்து நின்ற மருதுவின் தீரத்தை திருமங்கலத்து மக்கள் வியந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆற்றுப் பாலத்திலிருந்து பத்திரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலையை போலீஸ்காரர்கள் அடைத்து வைத்திருந்தபோதும், ஊர்க்காரர்கள் வேறு பக்கங்களின் வழியாக நுழைந்து மருது கொல்லப்பட்ட இடத்துக்கு வந்து பார்த்தனர். அந்தச் சின்னஞ்சிறிய மண் பாதை முழுக்க, சிதறி உலர்ந்துபோயிருந்த குருதியின் தடங்கள் அழுத்தமாயிருந்தன.

காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரர்கள் வந்தவர்களைத் துரத்தி சலித்துப்போய், ஒரு கட்டத்துக்குமேல் ‘எக்கேடோ கெட்டுப் போங்கடா’ என விட்டுவிட்டார்கள். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், கொலை செய்தவர்களைச் சரியாக அடையாளம் சொல்ல முடியாதவர்களா யிருந்தார்கள். “ரெண்டு பேரக் கொன்னுட்டு திருவிழாக் கூட்டத்துக்குள்ள தெனாவெட்டா நடந்து போயிருக்காய்ங்க. ஒருத்தரு கூடவாய்யா ஆளுகள அடையாளம் பாக்கலை...” வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர், கோயிலுக்கு முன்னால் ஆத்திரத்தோடு கத்திக் கொண்டிருந்தார். கோயிலையொட்டி கடை வைத்திருந்த ஆள் இன்னும் பதற்றம் விலகாதவராக, ‘‘ஐயா, திருவிழாக் கூட்டத்துல பாதிப் பேரு பக்கத்து ஊர்கள்ல இருந்து வந்தவய்ங்க. அதுமில்லாம கொலையப் பண்ணிட்டு வந்தவனுங்க முகத்தப் பாக்கற துணிச்சல் யாருக்குமில்ல. வேட்டைய முடிச்சுட்டு வர்ற காளியாத்தா மாதிரி அவய்ங்க மூஞ்சியெல்லாம் ரத்தக்காடு… இப்ப நெனச்சாலும் ஈரக்கொல நடுங்குது…” எனப் படபடப்போடு சொன்னார். யாரையும் விசாரித்துப் பலனில்லை என்கிற ஆத்திரத்தில் இன்ஸ்பெக்டர், ‘‘ரெண்டு நாளைக்கி எவனையும் இந்தப் பக்கம் அலோ பண்ணாதீங்கய்யா…” என கான்ஸ்டபிள்களிடம் உத்தரவிட்டுச் சென்றார்.

கரிமேட்டைச் சுற்றிய அத்தனை தெருமுனை களிலும் மருதுவுக்கான கண்ணீர் அஞ்சலி எழுதப்பட்ட தட்டி போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. காளி, சாராயக் கடைகளுக்கு விடுமுறை விட்டிருந்தான். அந்தப் பகல், ரத்தம் குடிக்கும் வெறியோடு உக்கிரமேறியிருந்தது. தனக்கு ஆறுதலாக, உற்ற துணையாயிருந்த ஒரேயொரு நண்பனை இழந்துவிட்ட வெறியில் உடல் அடங்காமல் துடித்துக்கொண்டிருந்தது. இரண்டு முறை சாவைத் தின்று செரித்தவன் இந்த முறை எப்படி அதனிடம் தோற்றுப்போனான் என்கிற யோசனை மூளைக்குள் உதித்தது. எதிரியின் மீதான பலத்தை மறந்து, துரோகி யாராயிருக்குமென புத்தி சிந்திக்கவைத்தது. எதிரிகளையும் துரோகிகளையும் வேட்டையாடி ரத்தம் குடிக்கும் வெறியை அடக்கிக்கொள்ள முடியாமல் காளி சாராயத்தைக் குடித்தான். நாவைக் கீறி இறங்கிய சாராயத்தின் காட்டம், அவனுக்குள்ளிருந்த எரிமலையைத் தணிப்பதற்கு பதிலாகத் தூண்டிவிடவே செய்தது. எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறிவிடலாமென்கிற பதற்றத்திலேயே மருதுவுக்கான இறுதிச் சடங்குகளை காளி அக்கறையோடு செய்துகொண்டிருந்தான்.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட மருதுவின் உடலை, சிரமங்கொண்டு மருத்துவர்கள் தைத்துக் கொடுத்து துணியில் கட்டி அனுப்பியிருந்தார்கள். கண்களிருந்த இடத்தில் இரண்டு குழிகள் மட்டுமே மிஞ்சியிருந்ததால் மருதுவின் முகத்தை வேறு யாரும் பார்ப்பதற்கு காளி அனுமதிக்கவில்லை.

கணவன், மனைவி இருவருக்குமாகச் சேர்த்துக் கட்டப்பட்ட பெரிய தேரில் ஊர்வலம் தொடங்கியது. பாதி வழியில் மூர்த்தியும் அறிவும் வந்து இணைந்துகொண்டனர். சாவு ஊர்வலத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் இருந்தன அவர்களின் பாவனைகள். காளியும் அவனது ஆட்களும் கூட்டத்தில் வந்து நிற்கும் நரிகளாகவே அவர்களைப் பார்த்தாலும், அப்போதைக்கு எதுவும் செய்யாமல் அமைதி காத்தனர். பிணம் வைக்கப்பட்டிருந்த தேருக்குப் பின்னால் நிதானமாக நடந்த அறிவு, ஒவ்வொரு தப்படியிலும் அளவில்லாத வெற்றியை உணர்ந்தான். சாலை முழுக்க தூவப்பட்ட மலர்களின் மீது நடக்கையில், அவை மருதுவின் உடலுக்காக அல்லாமல் தனது வெற்றிக்காகத் தூவப்பட்டதாக நினைத்தான். இழந்த கைகள் ஒருபோதும் திரும்பக் கிடைக்காதுதான். ஆனால், தகித்துக்கொண்டிருந்த பகை அடங்கிவிட்ட ஆறுதல் அவனுக்கு. காளி இப்போது தனியன். மருதுவையும் முத்தையாவையும் நம்பியதைப்போல் அவன் வேறு யாரையும் நம்பப்போவதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மீது உருவாகும் சந்தேகமும் பயமுமே அவனை அழித்துவிடுமென நினைத்த அறிவு, தன்னை எதிர்க்க இனி மதுரையில் ஒருவருமில்லை எனப் பூரித்துப்போனான். தத்தனேரி சுடுகாட்டுக்குள் அம்மிய கூட்டத்துக்குள் செல்லாமல் தூரமாக நின்றுகொண்ட அறிவும் மூர்த்தியும், நொறுங்கிப்போன முகத்தோடு சடலங்களுக்கு கொள்ளிவைத்த காளியைப் பார்த்தபோது, அவன் தனது வீழ்ச்சிக்கும் சேர்த்தே எரியூட்டுவதாகத்தான் நினைத்துக்கொண்டனர்.

ரெண்டாம் ஆட்டம்! - 56

‘‘அந்தத் தாயோலி கைய வெட்டின அன்னிக்கே கழுத்தறுத்துப் போட்ருக்கணும்டா… நம்மகூட ராசியாப் போற மாதிரி ஏமாத்தி, இப்ப காத்திருந்து கருவறுத்துட்டாய்ங்களே...” தன்னோடு இருந்தவர்களிடம் காளி திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அவனைச் சுற்றியிருந்த அத்தனை பேருமே ரத்தம் குடிக்கும் வெறியில் ஒரு போருக்குத் தயாராகத்தான் இருந்தார்கள். எதிரிகளை அடையாளம் கண்டுகொண்டபோதே, காளி துரோகியையும் அடையாளம் கண்டுவிட்டிருந்தான். அவனது ஆட்கள் மதுரை முழுக்க முத்தையாவைத் தேடிக் கொண்டிருந்தனர். எத்தனையோ துரோகங்களையும் மரணங்களையும் கடந்து வந்திருந்தபோதும் காளியால் முத்தையாவின் துரோகத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது நிழலைவிடவும் முத்தையாவை அதிகமாக நம்பியிருந்தான். ‘`அவென் நல்லவென் இல்ல, வெசம்னு சொன்னப்பல்லாம் நீ நம்பலையே ண்ணே… இப்ப பாத்தியா?’’ காளியின் ஆளொருவன் அவனிடம் சொல்ல, ‘‘அவன் செய்ற எல்லாத்தையும் விசுவாசத்துல செஞ்சதாத்தாண்டா நெனச்சிட்டு இருந்தேன். ஆனா மனசுக்குள்ள வெசத்த வெச்சுக்கிட்டு செஞ்சிருக்கான். அந்த வெசப் பாம்ப அடிச்சுக் கொன்னாத்தாண்டா என் ஆத்திரம் அடங்கும்” என காளி ஆத்திரத்தில் கத்தினான்.

கீழவளவுக்கு வெளியிலிருந்த தென்னந்தோப்பில் முத்தையா பாதுகாப்பாகப் பதுங்கியிருந்தான். காளியிடம் சிக்கினால் என்னாவோம் என்கிற அச்சத்தைவிடவும், மருது உயிரோடில்லை என்பதில் பெரும் ஆறுதல் அவனுக்கு. மூர்த்தி தனக்கான பாதுகாப்பை உறுதி செய்யாதவரை நீதிமன்றத்தில் சரணடைவதில்லையென முத்தையா உறுதியாக இருந்தான். முத்தையாவுக்கு ஆதரவாக விஜயனும், அவன் நண்பர்களும் மூர்த்தியிடம் மன்றாடினார்கள்.

‘‘ஏய், அவென் என்ன நம்மளுக்காகவாப்பா செஞ்சான்... தன்னோட பகைய தீத்துக்கறதுக்காக நம்மளப் பயன்படுத்திக்கிட்டான்.’’ மூர்த்தி பிடிகொடுக்காமல் பேசினார்.

‘‘அண்ணே, அவென் நம்மளுக்காக செஞ்சானோ இல்லையோ, அவென் இருந்ததாலதான் மருதுவக் கொல்ல முடிஞ்சுது. இந்த ஒருவாட்டி மட்டும் அவனுக்கு ஆதரவு குடுங்கண்ணே...’’

‘‘அவென் எம்புட்டு வெசப்பயன்னு உங்களுக்குத் தெரியாதுய்யா. நேருக்கு நேரா அருவாளத் தூக்கிட்டு வந்து சண்ட போடுறவன்கிட்டகூட பகைய மறந்து ராசியாப் போயிரலாம். ஆனா, இவன மாதிரி ஆளுக கிட்டயே போகக் கூடாது.’’

“ஒவ்வொருத்தனுக்கும் அவென் செய்ற செயலுக்கு ஒரு நியாயம் இருக்கும். அவென் நியாயத்த அவனே சொன்னாத்தான நம்மளுக்குத் தெரியும்... முத்தையாவ நீங்க சேத்துக்கவும் வேணாம், விலக்கவும் வேணாம். காப்பாத்தி மட்டும் விடுங்க.”

விஜயன் ஒரே பிடிவாதமாக நின்றான். மூர்த்தி மனம் இரங்குவதாக இல்லையென்பதை கவனித்த அறிவு, ‘‘விஜயன், நீங்க போயி முத்தையாகிட்ட சொல்லுங்க, நான் அவருக்குக் கண்டிப்பா பாதுகாப்பு குடுப்பேன். எதுக்கும் பயப்பட வேணாம்” எனச் சம்மதம் தெரிவிக்க, அதற்கு மேலும் மறுக்க மனமில்லாமல் மூர்த்தியும் மனம் இரங்கினார்.

(ஆட்டம் தொடரும்)