Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 57

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

‘‘எண்ணே நான் வேணும்னே செய்யலண்ணே… உன்னய எம்புட்டுப் புடிக்கும்னு உனக்கே தெரியும்ல… எனக்கு வேற வழி தெரியலண்ணே...

ரெண்டாம் ஆட்டம்! - 57

‘‘எண்ணே நான் வேணும்னே செய்யலண்ணே… உன்னய எம்புட்டுப் புடிக்கும்னு உனக்கே தெரியும்ல… எனக்கு வேற வழி தெரியலண்ணே...

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

தென்னந்தோப்பை ஒட்டிய ஒத்தை வீட்டில் பிற்பகல் நேரத்தின் வெயிலைப் பொருட்படுத்தாமல் வெற்றுடம்போடு முத்தையா அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். குதிகாலில் ஈரம் படரத் தொடங்க, மெல்ல கண் விழித்தான். ஈரம் கணுக்காலைத் தாண்டி கெண்டைக்கால் முழங்கால் தொடையெனத் தழுவி உடலெங்கும் வேகமாக ஆக்கிரமிக்கத் தொடங்க, பதறியெழுந்து உட்கார்ந்தான். சற்றைக்கு முன் கொல்லப்பட்ட மனிதனின் குருதி முத்தையாவின் உடலெங்கும் படர்ந்தது. வெட்டப்பட்ட தலையைக் கையில் ஏந்தியபடி நின்ற மருதுவின் முண்டம் விகாரமாயிருந்தது. துண்டிக்கப்பட்ட தலையில் அசாத்தியமான சிரிப்பு. ‘‘என்னடா முத்து இதுக்குத்தான ஆசப்பட்ட... இப்ப சந்தோசமா?’’

முத்தையா பதறிப்போனான். ‘‘எண்ணே நான் வேணும்னே செய்யலண்ணே… உன்னய எம்புட்டுப் புடிக்கும்னு உனக்கே தெரியும்ல… எனக்கு வேற வழி தெரியலண்ணே… நான் பாத்துப் பழகின என்கூட இருந்த எல்லாரும் ஒரு ஆளாகிட்டாய்ங்க. நான் மட்டும் அன்னக்காவடியா சுத்தினப்போ அசிங்கமா இருந்துச்சுண்ணே. வளர்றதுக்கு ஒரு வாய்ப்பு வந்தப்போ நீ குறுக்க வந்துட்ட. அதாண்ணே செஞ்சேன்.’’

மருதுவின் தலை உருண்டு முத்தையாவின் மடியில் அமர்ந்துகொண்டது. ‘‘இம்புட்டு வருசமா எங்ககூட இருந்தும் ஏன் உன்னால ஒரு ஆளா வளர முடியலைன்னு யோசிச்சியா?’’ தன்னையே உற்றுநோக்கும் மருதுவின் தலையைப் பார்க்க துணிவில்லாமல் முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான். அந்தக் கேள்வி அவனை உறுத்திக்கொண்டிருந்தது. அதற்கான விடையைத்தான் இத்தனை நாள்களாக அவனும் தேடிக்கொண்டிருக்கிறான். ‘‘தெரியலண்ணே…’’ மருதுவின் தலை சத்தமாகச் சிரிக்க, முத்தையா ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தப் போராடினான். சிரிப்புச் சத்தம் அடங்குவதாயில்லை. ‘‘ஒக்காலி என்ன மயித்துக்குடா சிரிக்கிற... நீ செஞ்ச எல்லாத்துக்கும் சேத்துதான உன் தலைய வெட்டித் தூக்கிட்டு வந்திருக்கேன். இப்பத் தெரியுதா நான் யாருன்னு... தெரியுதாடா?’’ முத்தையா தனக்குள்ளிருக்கும் அச்சம் தெரிந்துவிடக் கூடாதென்கிற பதற்றத்தோடு அலற... மருதுவின் சிரிப்புச் சத்தம் அடங்குவதாயில்லை. ஆத்திரத்தோடு அந்தத் தலையிலிருந்த முடியைப் பிடித்துத் தூக்கியவன் அதன் இரண்டு கண்களையும் விரல்களால் நோண்டி எடுத்தான். அப்போதும் மருதுவின் சிரிப்பு அடங்கியிருக்கவில்லை. ஏமாற்றத்தோடு அந்தத் தலையைத் தூக்கி எறிய சிரிப்பு ஓய்ந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 57

முத்தையா திரும்பி தலையைப் பார்த்தான். ‘‘முத்து… நானோ, காளியோ, மணியோ செஞ்ச எல்லாத்தையும் நாங்கதான் செஞ்சோம்னு இந்த ஊரு உலகமே தெரிஞ்சுக்கற மாதிரி செஞ்சம்டா. உன்னயப் பாத்து நாலு பேர் பயப்படணும்னா உங்கிட்ட ஈவு இரக்கமே இல்லன்னு அவய்ங்களுக்குத் தெரியணும். நீ ஒரு ஊளப்பய…. அடுத்தவென் நிழல்லயே உன் காரியத்த சாதிக்கணும்னு நெனைக்கிறதாலதான் நீ அடியாளாவே இருக்க… சாவுக்குப் பயந்தவனால எதையும் சாதிக்க முடியாது… நீ காலம் முழுக்க ஊளப்பயலாவே வாழ்ந்துதான் சாவ. ஏன்னா அது உன் ரத்தத்துல இருக்கு…’’ மருதுவின் குரல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய, சர்வமும் ஒடுங்கிப்போயிருந்த முத்தையா வெடித்து அழத் தொடங்கினான். மருதுவின் உடலும் தலையும் நொடியில் கரைந்து காணாமல் போயிருந்தன. எதற்காக இப்படி மறைந்து வாழ்கிறோம்... விவரம் தெரிந்த வயதிலிருந்து எல்லாவற்றுக்கும் அச்சப்பட்டு ஓடிக் காப்பாற்றிய இந்த உயிர் எதைச் சாதித்துவிட்டது? தன்னை நினைத்து அவமானமும் அருவருப்புமாயிருந்தது அவனுக்கு.

விஜயனும், அவனின் நண்பர்களும் மேலூரைச் சுற்றியிருக்கும் ஊர்களில் முத்தையாவைத் தேடிக்கொண்டிருந்தனர். ‘‘தோப்பவிட்டு எங்கியும் போக மாட்டேன். எதுவா இருந்தாலும் இங்கியே வந்துருங்கய்யா…’’ என்றுதான் கடைசியாக முத்தையா சொல்லி அனுப்பியிருந்தான். திடீரென அவன் காணாமல் போயிருந்ததில் அவர்களுக்குக் கலக்கம். இரண்டு நாள்களுக்குப் பின்பாகத்தான் மருதுவின் கொலை வழக்கில் அவன் மதுரை நீதிமன்றத்தில் சரண்டரான செய்தி கிடைத்தது. விஜயன் அனுப்பானடியிலிருந்த அறிவழகனைச் சந்திக்கச் சென்றான். விஜயனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாத குழப்பத்திலும் யோசனையிலும் அறிவழகன் பேச்சற்றுப் போயிருந்தான்.

‘‘என்னண்ணே, நாம ஒண்ண நெனச்சுட்டு இருந்தா இவென் அவசரப்பட்டு ஏதேதோ செஞ்சுட்டான்.’’

‘‘அதான் விஜயன் எனக்கும் புரியல. சரண்டரானது மட்டுமில்லாம உங்க யாரையும் காட்டியும் குடுக்கல. மருதுவ தனியா வெட்டினதா சொல்லி இருக்கான்.’’

ரெண்டாம் ஆட்டம்! - 57

‘‘ஊரே வேடிக்க பாத்துச்சேண்ணே நாங்க ரத்தக் காட்டேரியா வந்தத? அப்பறம் எப்பிடி இவென் ஒத்த ஆளா செஞ்சம்னு சொல்லுவான்.’’

‘‘ஊர் பாத்துச்சு. ஆனா, துணிஞ்சு யாரு வந்து சாட்சி சொல்லுவா?’’

விஜயன் யோசித்தான். ஏதோவொன்று தவறாகப்பட்டது. ‘‘அண்ணே இதுல இருந்து நாம அவன வெளிய கொண்டுவரலைன்னா அவென் ஆயுசு செயில்லயே முடிஞ்சு போயிரும்ணே…’’

அறிவழகனுக்கு அவன் சொன்னதிலிருந்த நியாயம் புரிந்தது. ஆனால், முத்தையாவின் மனவோட்டத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘‘அவென் ஏதோ காரியமாத்தான் தனியா கொன்னதா சரண்டராயிருக்கான் விஜயன்… எதுவா இருந்தாலும் சரி, நான் வாக்கு குடுத்தது குடுத்ததுதான். நம்ம வக்கீல்கிட்ட சொல்லி வெளிய எடுக்க ஏற்பாடு செய்றேன்’’ என விஜயனை நம்பிக்கையோடு அனுப்பிவைத்தான்.

காளியைச் சுற்றியிருந்த வெளிச்சங்கள் அடையாளமின்றிக் கரைந்து அவன் தனியனாகிப் போயிருந்தான். மருதுவின் சாவுக்குக் காரணமான முத்தையாவின் மீதான பகை மட்டும் அவனுக்குள்ளிருந்த பழைய காளியை விழிப்போடு வைத்திருந்தது. இரண்டு முறை சிறையில் முத்தையாவைச் சந்திக்கச் சென்றவனை முத்தையா சந்திக்க மறுத்துவிட்டான்.

முத்தையாவுக்கு ஜாமீன் கிடைத்து வெளியேறின நாளில் மதுரை அவனது ரத்தம் குடிக்கக் காத்திருந்தது. விக்ரமாதித்யனின் தோளில் தொற்றிக்கொண்ட வேதாளமென சாவு தன்னை ஆக்கிரமித்திருப்பதை நன்கறிந்திருந்த முத்தையாவிடம் இப்போது அச்சமில்லை. விஜயனின் ஆதரவில் கீரைத்துறையில் புதிய வீட்டில் தங்கியிருந்தான். யாரையும் சென்று சந்திக்க விரும்பாதவனாகக் கிடந்தவனை இருள் வேகமாகச் சூழ்ந்துகொண்டது. ஊர் அடங்கும் நேரத்தில் வாசலில் நிழலாடுவதை உணர்ந்து வெளியே வர, காளி தனியாக நின்றிருந்தான். ஆயுதமோ ஆள் பலமோ இல்லாமல் தனியனாக வந்து நின்றவனின் மனதில் முத்தையாவின் மீதான வெறி பற்றியெறிந்துகொண்டிருந்தது.

‘‘எங்கிட்ட இருந்து சொத்து சொகம்னு எத எடுத்துட்டுப் போயிருந்தாலும் போடான்னு விட்ருப்பேன். ஆனா, வெட்டாம குத்தாம துரோகம் பண்ணிக் கொன்னுட்டியேடா…’’

காளியின் கைகளில் நரம்புகள் முறுக்கேற, இறுகின முகத்தோடு முத்தையாவை நோக்கி வந்தான். முத்தையா பயந்து விலகவோ அச்சப்படவோ இல்லை. இந்த யுத்தத்துக்குத் தானும் தயாராகவே இருப்பவனைப்போல் வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டான். வீட்டுக்குள்ளிருந்து விஜயனும் அவன் நண்பர்களும் முத்தையாவுக்கு ஆதரவாக வந்து நிற்க, காளி அப்படியே நின்று தனக்கு எதிரிலிருந்த ஐந்து பேரையும் பார்த்துச் சிரித்தான். முன்னோக்கி நகராமல் இரண்டடி பின்னால் நகர்ந்தவன் அவர்களை வரச் சொல்லி சைகை செய்ய, அவர்கள் நகராமல் அப்படியே நின்றனர்.

ரெண்டாம் ஆட்டம்! - 57

‘‘வாங்கடா... இன்னும் எத்தன பேரா இருந்தாலும் வாங்க. இன்னிக்கி மோதிப் பாத்துடலாம்.’’ வேட்டைக்கான வெறி நிரம்பிய கண்களோடு காளி அலற, எதிர்பாராத நொடியில் அவனுக்குப் பின்னாலிருந்து முதுகில் ஒரு கத்தி இறங்கியது. அதிர்ந்து திரும்பிப் பார்த்தபோது இளைஞனொருவன் இரண்டு மூன்று முறை ஆவேசமாகக் காளியைக் குத்தினான். அவன் சட்டையைப் பிடித்து நிறுத்த முயன்ற காளியிடமிருந்து லாகவமாய் விலகிப்போனான்.

‘‘டேய் போதும் நிப்பாட்டு. அவன் சாகக் கூடாது’’ என விஜயன் கத்தினான். முதுகிலிருந்து கொப்பளித்த குருதியைக் கட்டுப்படுத்தும் திராணியின்றி காளி சரிந்து உட்கார்ந்தான். சில நிமிடங்களுக்குப் பின் கையில்லாத ஒரு மெலிந்த உருவம் தனக்கு முன்னால் நிழலாடுவது போலிருக்க, கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பது அறிவழகன் என்று தெரிந்தது. ஒருவன் காளிக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுக்க, பெருந்தாகத்தோடு நீரைக் குடித்தவன் ஆத்திரத்தில் சொம்பைத் தூக்கி எறிந்தான். தன் இயலாமையைச் சகிக்க முடியாமல் வெறுப்போடு காறித் துப்பினான். காளியை நெருங்கி வந்த அறிவழகன், காலால் அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

‘‘இனி உன்னால எதும் செய்ய முடியாது காளி.’’

காளி அவசரமாகத் தரையில் அடித்தான். ‘‘எனக்கு அவன் உசுரு வேணும்.’’

‘‘பாதுகாப்பு குடுப்பேன்னு வாக்குக் குடுத்திருக்கேன். என் வாக்க என்னால மீற முடியாது’’ என்றபடியே காளியின் நெஞ்சில் ஓங்கி எத்தினான். ‘‘எல்லாம் முடிஞ்சிருச்சு காளி. இதோட நிறுத்திக்கோ. எங்க வழில குறுக்க வராத, உன் வழில நாங்க வர மாட்டோம்.’’ சுருண்டு கீழே விழுந்த காளியால் எழுந்துகொள்ள முடியவில்லை. விஜயன் வந்து அவனை எழுப்பி உட்காரவைத்தான். அறிவு நிதானமாக அவனுக்கு அருகில் குத்தவைத்து அமர்ந்தான். ‘‘முத்தையாவ ஏன் உசுரோட விட்றேன் தெரியுமா?’’ காளி தெரியாதெனத் தலையாட்டினான். ‘‘இவென் இனிமே வெறும் புழு… இந்தப் புழு சாகக் கூடாது காளி… நீயும் நானும் இல்லாமப் போனாலும் முத்தையாங்கற இந்தப் புழு இருக்கும். கடைசி வரைக்கும் சீந்துவாரில்லாம இவென் சீரழியணும்… அதுக்காக மட்டும்தான் உசுரோட விட்ருக்கேன்’’ என்றபோது காளி அவன் கண்களில் தெரிந்த வெறுப்பைக் கவனித்தான். கடந்த காலத்தில் முத்தையாவுடனான அறிவழகனின் பகை இன்னும் அப்படியேதானிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட காளி நிதானமாகத் தலையை உயர்த்தி முத்தையாவைப் பார்த்தான். முத்தையாவின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைந்து அவனொரு புழுவாக உருமாறிக் கொண்டிருந்தான். அந்தப் புழுவைப் பார்க்க அருவருப்புக் கொண்டவனாக காளி தலையைத் திருப்பிக்கொண்டான்.

(ஆட்டம் தொடரும்)