Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 58

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

எனக்கும் தெரியும்டா… அதான் ஆட்டத்த மாத்தி ஆடுன்னு சொல்றேன். அவனக் கொஞ்ச நாளைக்கி எங்கியாச்சும் ஒளிச்சுவெச்சிருவோம்.

ரெண்டாம் ஆட்டம்! - 58

எனக்கும் தெரியும்டா… அதான் ஆட்டத்த மாத்தி ஆடுன்னு சொல்றேன். அவனக் கொஞ்ச நாளைக்கி எங்கியாச்சும் ஒளிச்சுவெச்சிருவோம்.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம். ஆயுதங்களும் கொலைகளும் நிரம்பிய யுத்தங்களைப்போல் அரசியல் யுத்தங்களுக்கு முடிவுகள் இருப்பதில்லை. வஞ்சகமும் சூதும் நிரம்பிய இந்த யுத்தத்தில் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க, ஒருவன் நேர்மையாளனாகவும் துணிச்சல்மிக்கவனாகவும் இருப்பது மட்டுமே தகுதியாகாது. எல்லோரையும் ஏமாற்றத் தெரிந்தவனாக, தனது தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்.

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், ரவி மதுரைக்குள் வந்தபோது மிகச் சாதாரண மனிதன். கடைகள், வட்டித் தொழில் எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தவர். தன்னைச் சுற்றி விசுவாசமானவர்களைச் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினார். இயல்பிலேயே விசுவாசத்துக்காக வாழ்வதை லட்சியமாகக்கொண்ட மதுரைக்காரர்கள், அவரிடம் கூடுதல் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்கள். பழகுகிறவர்களிடம் தன்னைச் சாதாரண மனிதனாகக் காட்டிக்கொண்டாலும், அந்த மனிதனின் அந்தரங்க விருப்பமெல்லாம் ராஜா வேஷம் போட்டுக்கொள்வதில்தான் இருந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 58

ஒரு நகரம் வளரும்போது அங்கு வியாபாரங்களும், மக்கள் போக்குவரத்தும், வசதி வாய்ப்புகளும் மட்டும் அதிகரிப்பதில்லை, குற்றங்களும் அதிகரிக்கின்றன. குற்றங்கள் இல்லாமல் வளர்ச்சிகள் இல்லை என்பது எத்தனை நிதர்சனமோ, எல்லாக் குற்றங்களும் அரசியலோடு தொடர்புடையவை என்பதும் நிதர்சனம். இதனாலேயே மதுரையின் வெவ்வேறு பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அத்தனை தலைக்கட்டுகளையும் ரவி தனது குடையின் கீழ் ஒருங்கிணைக்க நினைத்தார். தொழில் சார்ந்தும், ஏரியா பங்கீடுகள் சார்ந்தும் அவர்களுக்குள்ளிருக்கும் போட்டி, பகை எல்லாம் அவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் தடுத்தன. இவர்களிடம் தனித்தனியாகப் பேசி பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்தவர், ஒரு ஞாயிற்றுக்கிழமை அழகர்கோவிலில் இருக்கும் தன் தோட்டத்து வீட்டுக்கு எல்லோரையும் விருந்துக்கு அழைத்தார். மற்றவர்கள் விருந்தாக மட்டுமே பார்த்த அந்தச் சந்திப்பை, ரவி தன் அரசியல் வாழ்வுக்கான விதையாக நினைத்தார். மூன்று ஏக்கர் தென்னை, அதையடுத்து எட்டு ஏக்கரில் கொய்யா எனப் பரந்து விரிந்த தோப்பு. உள்ளே நுழைந்ததுமே இடது பக்கமாக வார இறுதியில் அவர் ஓய்வெடுக்கும் வீடு. வீட்டுக்கு முன்பாகவே பந்தல் போடப்பட்டு தடபுடலாக விருந்து நடந்துகொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்து பேச்சுவார்த்தை தொடங்கிய நேரத்தில், வந்திருந்த எல்லோருமே அவரது கோரிக்கைக்குச் சம்மதிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டிருந்தனர்.

“எத்தன நாளைக்கித்தான்யா இப்பிடி அஞ்சுக்கும் பத்துக்கும் அடிச்சுக்கிட்டு இருப்பீங்க. இந்தச் சில்ற சண்டையெல்லாம் ஓரமா வெச்சுட்டு வந்தீங்கன்னா, உங்களுக்கு நூறு பேர் வேல செய்ற மாதிரியான ஆளா மாறலாம்.”

இயல்பிலேயே அதிர்ந்து பேசும் வழக்கமில்லாத ரவி, புன்னகையோடு இதைச் சொன்னபோது கூடியிருந்த எல்லோரிடமும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. புதிதாக வேலை கொடுக்கப்போகிறார் என நினைத்தவர்கள் தங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் எனத் தெரியாமல் திகைத்தனர். ஓரிருவர் மட்டும் “புரியலண்ணே” எனத் தயங்கியபடியே கேட்க, ரவி முன்னைவிடவும் நிதானமாக, “அத்தன பேரும் கரவேட்டிக்கி மாறுங்க. ஆனா நீங்க கட்ற கரவேட்டி நம்ம கட்சி கரவேட்டியா இருக்கணும். அப்பிடி மாறினா மதுர மட்டுமில்ல, தேனி, சிவகங்க, ராம்நாட், திருநெல்வேலின்னு தெக்க முழுக்க நாம ஆளலாம்…” என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, வந்திருந்த அத்தனை பேரும் ஆச்சர்யத்தில் பேச்சற்றுப் போனார்கள். இதற்கு முன் ஒருவரும் இத்தனை பெரிய வாய்ப்பைத் தந்ததில்லை. அவர் ஒப்புக்குச் சொல்லக் கூடியவரில்லை என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியும். அந்தக் கூட்டத்தில் சிலர், இருக்கிற வட்டத்தைவிட்டு வெளியேற அச்சங்கொண்டு தவிர்த்துவிட்டார்கள். சிலர் வரப்போகும் அதிகாரத்தின் பலன்களைக் கணக்கிட்டு சம்மதித்துவிட்டார்கள். விருந்து முடிந்து எல்லோரும் கிளம்பிச் சென்ற பின்புதான் நினைத்த காரியம் சரியானபடி நடந்துவிட்ட நிறைவு ரவிக்கு வந்தது. இவர்களை வைத்து ஒரு போரை நடத்தலாம்தான். ஆனால், ரவிக்குச் சரியான தளபதி தேவைப்பட்டான். தன் சொல்லை மறுக்காத, முழுமையான நம்பிக்கைக்குரிய ஆள். அப்படி ஒருவனுக்காகக் காத்திருந்த வேளையில் அவரே எதிர்பாராமல் செல்வம் தேடி வந்தான்.

“ஏ... வாப்பா செல்வம்… வராத ஆளு வந்திருக்க, என்ன விசேஷம்?” ரவி ஆர்வமாக அவனிடம் பேச்சு கொடுத்தார்.

“அன்னிக்கி சொன்னீங்களேண்ணே, எப்ப உதவின்னு வந்தாலும் செய்வேன்னு…”

“ஆமாய்யா…”

“இப்ப உங்க உதவி வேணும்ணே. கோட்டச்சாமி உயிரோட இல்ல. அவரு தொழில் எல்லாத்தையும் நான்தான் கன்ட்ரோல் பண்றேன். ஆனா எனக்குப் பாதுகாப்பு வேணும். எத்தன ஆள் பலம் இருந்தாலும் பதவில இருக்க அதிகாரத்துக்கு ஈடாகாது… அதான் உங்களத் தேடி வந்தேன்.”

செல்வம் தன் மனதிலிருந்ததைத் தெளிவாக அவரிடம் வெளிப்படுத்த, ரவி சிரித்தார். “நடந்த எல்லாத்தையும் நானும் கேள்விப்பட்டன்யா… அவய்ங்கதான் மொதல்ல எங்கிட்ட வருவாய்ங்கன்னு நெனச்சேன், நல்லவேள நீ முந்திக்கிட்ட. உன்ன மாதிரி ஒருத்தன்தான் எனக்கும் வேணும். சம்மதம்னா சொல்லு, இந்தக் கட்சில உனக்கு ஒரு பெரிய இடம் இருக்கு” தனது வேலை எளிதாக முடிந்துவிடும் என்கிற ஆர்வத்தோடு ரவி சொல்ல, செல்வம் நிதானமாக அவரிடம் “நான் இப்பவும் நிழலாத்தாண்ணே இருக்கப்போறேன். எனக்கு பதிலா என் அண்ணன் உங்ககூட இருப்பான். அவனுக்குப் பின்னால நின்னு உங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் நான் செய்வேன்” எனத் தன் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தினான். செல்வத்தின் நிதானத்தில் ஏமாற்றமிருந்தபோதும், அவன் தன்னோடு இருப்பது யானை பலமென்பதால் ரவி மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்.

பரமேஸ்வரியின் மூலமாக கோட்டைச்சாமியின் கொலைக்குப் பின்னாலிருந்த ரகசியங்கள் வெளிப்படும் என்பதை எதிர்பார்த்திராத செல்வம் நிதானமிழந்தான். எந்த முகத்தைக்கொண்டு இப்போது சேகரை ரவியண்ணனிடம் அழைத்துக்கொண்டு போவது? அதிகாரத்தில் இருக்க வேண்டியவனுக்கான முதல் தகுதி ரகசியங்களைக் காக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சேகர் அதற்கு ஒருபோதும் சரிப்பட மாட்டான் என்கிற ஏமாற்றத்தில் செல்வம் பதற்றமாகியிருந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 58

“கிறுக்குத் தாயோலி, வேற ஆளே கெடைக்கலியாடா உனக்கு? அவளே ஒரு ரெண்டு ரூவா டிக்கெட்டு… அவகிட்ட குடிச்சுட்டுப் போயி எல்லாத்தையும் ஒளறியிருக்கியேடா...”

மன்னிக்கவும் முடியாமல், கண்டிக்கவும் முடியாமல் செல்வம் புலம்ப, “ஒளறணுங்கறதுக்காகக் குடிக்கல செல்வம்...” என சேகர் அப்பாவியாகச் சொன்னான். நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருப்பதை அவர்கள் இருவரையும்விட ஜெகதி தெளிவாக உணர்ந்திருந்தாள். தங்களைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை முழுமையாக உணர்ந்திருக்காத செல்வத்தைத் தனியாக வீட்டின் பின்புறத்துக்கு அழைத்துச் சென்றாள். அமாவாசை முடிந்து இரண்டு நாள்களே ஆகியிருந்ததால், வானில் அடர்த்தியான இருள் சூழ்ந்திருந்தது. ராப்பூச்சிகளின் சத்தம் அகோரமாக எதிரொலித்துக்கொண்டிருக்க, அவள் என்ன சொல்லப்போகிறாள் என செல்வம் பரபரப்போடு காத்திருந்தான்.

“இப்ப சேகருக்கு பதவி முக்கியமா, இல்லையாங்கறது விஷயமில்லை. அவன் உசுரக் காப்பாத்தணும். அதுக்கு என்ன வழினு யோசி.”

“அவன் உசுரும் முக்கியம், பதவியும் முக்கியம்… பதவி இல்லாமப் போச்சுன்னா நம்ம எல்லார் உசுரும் போயிரும்டி…”

“எனக்கும் தெரியும்டா… அதான் ஆட்டத்த மாத்தி ஆடுன்னு சொல்றேன். அவனக் கொஞ்ச நாளைக்கி எங்கியாச்சும் ஒளிச்சுவெச்சிருவோம். இங்க முடியலையா... போட் ஏத்தி கடலுக்கு அந்தப் பக்கம் மன்னாருக்கு அனுப்பிடுறேன்.”

”உனக்குப் புரியல ஜெகதி, அவன ஏன் கட்சில சேக்கணும்னு நெனச்சேன் தெரியுமா? நம்மகிட்ட அதிகாரமும் இருக்கும், நிழல் மறைவுல நம்மளோட தொழிலையும் நாம பாத்துக்கலாம். அவன விட்டா நம்பிக்கையான இன்னொரு ஆள் நம்மளுக்குக் கெடைக்க மாட்டான்.”

“லூசு, ஏண்டா யாரோ ஒருத்தர யோசிக்கிற… அதிகாரத்த நீ கைல எடு.”

செல்வம் அவளைப் புரியாமல் பார்க்க, “நீ அரசியலுக்குப் போ... உனக்குப் பின்னாடி இருந்து நான் தொழில கவனிச்சுக்கறேன்.” ஜெகதி நெருங்கி அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். அவனது உள்ளங்கை வியர்வையின் ஈரத்திலிருந்து எத்தனை அச்சம் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்துகொண்டவள், முகத்தையும் நெற்றியையும் துடைத்துவிட்டாள். அவள் விரல்களைப் பற்றியபடியே யோசித்த செல்வம், “நான் யாரு... என்ன தொழில் செஞ்சேன்னு ஊர் உலகத்துக்கே தெரியும். என்னயப் பாத்து பயப்பட வேணும்னா செய்வானுங்க, மரியாத இருக்காது. எனக்கு ஒண்ணு தோணுது. சொல்லட்டுமா?”

“சொல்லு செல்வம்…”

“யோசிச்சுப் பாத்தா, என்னையவிடவும் சேகரவிடவும் நீதான் சரியான ஆளா இருப்ப. பேசாம நீ அரசியலுக்குப் போயிடேன்...” தன்னைப் பற்றியிருந்த ஜெகதியின் விரல்களில், நடுக்கமும் குளிரும் அதிகரிப்பதை கவனித்த செல்வம் அவளைச் சமாதானப்படுத்தும் பொருட்டு இறுக்கி அணைத்தான். ஜெகதிக்கு அச்சத்தில் மூச்சு முட்டியது. அவனைத் தன்னிலிருந்து விலக்க விரும்பாதவளாக, “இல்லடா… எனக்கு எந்த வெளிச்சமும் வேணாம். இப்பத்தான் கோட்டச்சாமி தொல்ல இல்லாம நிம்மதியா இருக்கேன். பதவி, அதிகாரம், அதுனால வர்ற பிரச்னைங்கன்னு எதையும் தாங்கற சக்தி இல்ல...” என்றபடியே அவன் தோள்களில் முகத்தைச் சாய்த்துக்கொண்டாள். இருவருக்குமிடையில் சடாரென விழுந்த சின்னஞ்சிறிய மெளனத்தில் அடர்த்தியேறிக் கொண்டிருக்க, “நம்ம எல்லார் நல்லதுக்காகவும் இத செய்டி… யார்கிட்ட எப்பிடிப் பேசணும், பழகணும்னு நீதான் சூதானமா நடந்துக்குவ. பயப்படாத, உனக்கு எந்தப் பிரச்னையும் வராது. நான் இருக்கேன்…” என்றபடியே செல்வம் அவள் மறுக்க அவகாசம் தராமல் இதழ்களைக் கவ்விச் சுவைக்கத் தொடங்கினான்.

(ஆட்டம் தொடரும்)