Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 59

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

கோவமும் அவசரமும் தற்காலிகமானதொரு வெற்றியைத் தந்துவிடலாம். ஆனால் மரியாதையைச் சம்பாதித்துவிட முடியாது

ரெண்டாம் ஆட்டம்! - 59

கோவமும் அவசரமும் தற்காலிகமானதொரு வெற்றியைத் தந்துவிடலாம். ஆனால் மரியாதையைச் சம்பாதித்துவிட முடியாது

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

“Let your plans be dark and impenetrable as night, and when you move, fall like a thunderbolt.” - Art of war

அதிகாரத்தின் மீதான பேராசைதான் யுத்தங்களுக்கான விதையாய் விழுகிறது. இளம் வயதிலிருந்து செல்வம் தன்னைத் தயார்படுத்திக்கொண்டது கோட்டைச்சாமிக்கு எதிராக மட்டுமல்ல, தன்னையும் தன் அப்பனையும் பயன்படுத்திக்கொண்ட அத்தனை பேருக்கும் எதிராக. அவன் ஜெயிக்க நினைத்த நூறு யுத்தங்களுக்கான துவக்கம் மட்டுமே கோட்டைச்சாமி. விளையாட்டுத்தனங்கள் நிரம்பிய இளைஞனுக்குள் வன்மத்தையும் வன்முறையையும் விதைத்து, தனது தேவைகளுக்காக கோட்டைச்சாமி பயன்படுத்திக்கொள்ளத் துவங்கினான். ஆண்டிச்சாமி கொலை ஒரு விபத்து, அதிலிருந்து தப்பித்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நினைத்த செல்வத்தை அப்படிச் செல்லவிடாமல் பார்த்துக்கொள்வதில் கோட்டைச்சாமி கவனமாயிருந்தான். தன் வாழ்க்கை திசைமாறுவதை நினைத்து செல்வம் ஆத்திரமுறும்போது, “ஆத்திரப்பட்டா அது நம்மளுக்கு எதிராதாண்டா தம்பி முடியும். பொறுமையா இரு, நம்மளுக்கான நேரம் வரட்டும்” என முத்தையா மட்டுப்படுத்துவார்.

“நான் யாருக்காகவெல்லாம் நாயா ஒழச்சனோ, விசுவாசமா இருந்தனோ அவய்ங்க எல்லாமே என்னயப் புழுவாத்தான் பாத்தாய்ங்க. யாரோட கிரீடத்துக்கும் நான் ஆசப்படல, எனக்குத் தேவையா இருந்ததெல்லாம் கொஞ்சம் மரியாதையும் மதிப்பும்தான். ஆனா என்னய ஊளையனாவும் அடிமையாவும்தான் நடத்தினாய்ங்க. உன்னய எப்பிடி அவய்ங்க சிரிச்சு ஏய்க்கிறாய்ங்களோ அதையே நீயும் செய்யி...”

கோவமும் அவசரமும் தற்காலிகமானதொரு வெற்றியைத் தந்துவிடலாம். ஆனால் மரியாதையைச் சம்பாதித்துவிட முடியாது என்பதை முத்தையாவின் வாழ்க்கை அவனுக்கு உணர்த்தியிருந்தது. எந்தக் காரணங்களுக்காகவெல்லாம் அப்பாவை வெறுத்தானோ, அந்தக் காரணங்களுக்குப் பின்னாலிருந்த நியாயங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வந்தபோது அவரின்மீது பரிதாபமே மிஞ்சியது.

ரெண்டாம் ஆட்டம்! - 59

மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில், திருநகருக்கும் தோப்பூருக்கும் நடுவிலிருந்த கண்மாயில், கட்சியின் தென்மண்டல மாநாடு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாதபடி பிரமாண்டமான மாநாட்டு அரங்கமும் பந்தலும் அமைக்கப்பட்டன. சாலையின் இருபுறங்களையும் அலங்கரித்த பேனர்கள், சித்திரைத் திருவிழாவை மிஞ்சின கூட்டமென மதுரை அல்லோலகல்லோலப்பட்டது. நேரடி அரசியலில் ஈடுபடுவதை நீண்டகாலமாகத் தவிர்த்துவந்த ரவி, இந்த மாநாட்டைத் தனக்கான களமாக எடுத்துக்கொண்டு வேலைசெய்திருந்தார். எந்த அரசியல் தலைவருக்கும் சேராத பெருங்கூட்டத்தைச் சேர்த்திருந்தவர், தனது ஆதரவாளர்களோடு கட்சியில் சேர்ந்தார். கட்சித் தலைவரின் வாரிசு என்ற வகையில், அவ்வளவு காலமிருந்த கவனமெல்லாம் மாறி, கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மாறிப்போனார். கட்சித்தலைவரே இத்தனை பிரமாண்டமான கூட்டத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. ‘இத்தனை காலம் பதுங்கியிருந்த சிறுத்தை இப்போது பாய்ந்திருக்கிறது. ரவிதான் இனி கட்சியின் தென்மண்டலத்திற்கு வழிகாட்டி’ என மாநாட்டு மேடையிலேயே தலைவர் புகழ்ந்துவிட்டுச் சென்றார். ரவியின் இந்த வெற்றியில் முக்கியப் பங்கு செல்வத்துக்கும் ஜெகதிக்குமிருந்தது. ராமநாதபுரம், சிவகங்கை, மேலூர் பகுதிகளிலிருந்து அவர்கள் திரட்டிக் கொண்டுவந்திருந்த கூட்டம் அசாதாரணமானது.அதனாலேயே ஜெகதிக்கு மாவட்டப் பொறுப்பாளர்களில் முக்கிய இடம் ஒதுக்கப்பட்டது.

கருப்பு, முனுசோடு மதுரைக்குள் நுழைந்தபோது, வெவ்வேறு ஊர்களில் தலைமறைவாகியிருந்த அவனின் பங்காளிகள் செல்வத்துக்கு எதிரான யுத்தத்துக்குத் தயார்நிலையில் காத்திருந்தார்கள். அவனது துரோகமும் நயவஞ்சகமும் அவனை எத்தனை முறை கொலை செய்தாலும் அடங்காத வன்மத்தை அவர்களுக்குள் உருவாக்கியிருந்தது. ‘கைத்தண்டிப்பய, நம்ம குடும்பத்தோட வேரையே அசச்சுப் பாத்துட்டானேடா...’ என்று அரற்றிய சங்கரியிடம் “கூட வெச்சிருக்கறது வெசப்பாம்புன்னு தெரியாமயே இத்தன காலமா அதுக்கு பால ஊத்தி இருக்கோம் அத்தாச்சி’ என வெறுப்போடு சொன்னான். பகையும் பழியும் தள்ளிப்போடும்போது பன்மடங்காகி விடுவதைப்போல, செல்வத்தை எதுவும் செய்ய முடியாத ஒவ்வொரு நாளும் அவன்மீதான அவர்களின் வெறுப்பை அதிகரித்தபடியே இருந்தது.

அம்சவல்லியின் கொலை வழக்கில், காவல்துறையினர் அவர்களைத் தேடிக்கொண்டிருந்ததால் எச்சரிக்கையாக நகருக்குள் வராமல் ஒத்தக்கடையில் பதுங்கிவிட்டார்கள். நரசிங்கப்பெருமாள் கோயிலுக்குச் செல்லும் சாலையில், மார்க்கெட்டை ஒட்டியிருந்த சின்னஞ்சிறிய வீடு. வீட்டைச் சுற்றியிருந்த எவர்சில்வர் பட்டறைகளில் இருபத்துநான்கு மணிநேரமும் வேலை நடந்துகொண்டிருந்ததால், பட்டறை ஆட்களின் நடமாட்டமே அவர்களுக்குப் பாதுகாப்பாயிருந்தது. அந்தச் சின்னஞ்சிறிய வீட்டுக்குள்ளிருந்தபடியே மதுரைக்குள் செல்வத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆட்களின் மூலமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். அரசியல்வாதி எனும் புதிய செல்வாக்கு செல்வத்திடமிருந்ததை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. “எப்பிடிடா ரவி அண்ணனப் புடிச்சு இவென் கட்சில சேந்தான், இந்தத் தாயலி நம்மகிட்ட எச்சி சோறுதானடா தின்னுட்டு இருந்தான்.’ முனுசு ஆற்றமாட்டாமல் கேட்க, “அவென் இதையெல்லாம் இன்னிக்கி நேத்து யோசிச்சு வெக்கலைண்ணே. எப்பயோ முடிவு பண்ணிட்டுக் காத்திருந்திருக்கான்” என்று கருப்பு சொன்னான்.

செல்வத்தை எதுவும் செய்ய முடியாமல் பதுங்கிக் கிடந்ததில், ஏமாற்றமும் வெறுப்பும் அதிகரிக்கத் துவங்கியது. போதாக்குறைக்கு இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த சில்வர் பட்டறையின் சத்தத்தால் நிதானமிழக்கத் துவங்கினார்கள். “எலெய் அவென் ஒரு ஆளுன்னு அவனுக்கு லைன் போட்டுத் தூக்கணுமா? எறங்கி செய்வம்டா கருப்பு...” என எல்லோருக்கும் மூத்தவன் குடிவெறியில் கத்த, “இப்பிடி நாம அவசரப்பட்டுத்தாண்ணே அவங்கிட்ட தோத்திருக்கோம். அன்னிக்கி சீட்டு வெளாடுறப்போ கொஞ்சம் கட்டுப்பாடா இருந்திருந்தா சண்ட வந்திருக்காது. நம்ம அண்ணனும் செத்திருக்காது. நம்ம கூடயே இருந்து நம்மளப் பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிருக்கான். ஆனா அவனப் பத்தி நம்மளுக்கு எதுவும் தெரியல. அவன முழுசா அழிக்கணும்னா கொஞ்சம் பொறுமையாத்தான் இருக்கணும்” என கருப்பு மட்டுப்படுத்தினான்.

“இது வெறும் சண்டையாவோ கொலையாவோ இருக்கக் கூடாதுண்ணே. மதுரைல இனிமே எவனும் நம்மள எதித்து நிக்கணும்னு யோசிக்கவே கூடாது. அந்த மாதிரி ஒரு அடியா இருக்கணும்.”

தனக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலையை கருப்பு சிரமங்கொண்டு கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான். ஒருபுறம் போலீஸ்காரர்கள், இன்னொருபுறம் அம்சவல்லியின் ஆட்கள் என வெளியில் தங்களைக் காவு வாங்கக் காத்திருக்கும் எதிரிகள் அனேகம். செல்வத்தைப் பழியெடுப்பதற்கு முன்னால் அவர்களிடம் அகப்பட்டுவிடக் கூடாது என்பதில் கருப்பு எச்சரிக்கையாய் இருந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 59

கருப்புவின் ஆட்கள் செல்வத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் கரைவைத்துத் துரத்தினார்கள். செல்வமும் முத்தையாவும் அவர்களின் கண்களுக்கு முன்பாகவேதான் சென்றுவந்தார்கள். ஆனால், அவர்களை நெருங்குவது எளிதாயில்லை. எப்போது கண்ணில் படுவார்கள், எப்போது காணாமல் போவார்கள் என ஒருவராலும் அனுமானிக்க முடியாது. மனிதர்களின் பார்வையிலிருந்து சடாரென மறைந்துவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. கருப்புவின் ஆட்களுக்கு இதில் புரியாமலிருந்தது சேகரின் நடமாட்டமே இல்லாமலிருந்ததுதான். மதுரைக்குள் அவன் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லாமலிருந்தது.

கருப்புவின் ஆட்களுக்கு செல்வம் போக்குக் காட்டிக்கொண்டிருந்தான். முழுதாக அவர்களின் பார்வையிலிருந்து மறைந்தும்விடாமல், சிக்கவும் செய்யாமல் கண்ணாமூச்சி விளையாடியதெல்லாம் ரவி அண்ணனிடமிருந்து வரப்போகும் சாதகமான பதிலை எதிர்பார்த்துதான். கோட்டைச்சாமி குடும்பம் எதிர்க்கப்போவது செல்வம் என்ற தனிமனிதனை அல்ல. அவன் சார்ந்த கட்சியை. ஜெகதி இந்தமுறை அம்சவல்லியின் குடும்பத்தையும் கோட்டைச்சாமியின் குடும்பத்தையும் எதிரெதிராக வைத்துத் தாயக்கட்டைகளை உருட்டத் துவங்கினாள். அம்சவல்லியின் சாவுக்குப் பழிவாங்கக் காத்திருக்கும் அவள் குடும்பத்தினரோடு கைகோப்பதன் மூலம், தங்கள் வேலை எளிதாகிவிடும் என்பது அவளது கணக்கு. அவர்களை நெருங்குவதற்கான எளிய வழியாகக் கட்சியும் ரவியுமிருந்தனர்.

“அவய்ங்ககிட்ட நீங்க பேசினாத்தாண்ணே சரியா வரும்.”

“என்னனு பேசி அவய்ங்கள வழிக்குக் கொண்டுவர்றதுத்தா... இன்னிக்கி அம்சவல்லியக் கொன்னது வேணும்னா கருப்பும் அவன் பங்காளியுமா இருக்கலாம். ஆனா, அவங்க அப்பன் ஆண்டிச்சாமி சாவுக்கு செல்வமும் ஒரு காரணம். அத மறந்திட்டு உங்ககூட ராசியாப் போவாய்ங்கன்னு எனக்குத் தோணல…”

“மொதல்ல கண்ணுக்கு முன்னாடி இருக்க பிரச்சனைய ஒழிச்சிருவம்ணே. மிச்சத்த அப்பறம் பேசிக்கலாம். அவய்ங்களால தனியா கோட்டச்சாமி குடும்பத்த எதுத்து நிக்க முடியாது. நாங்களும் கூட சேந்தா அவய்ங்களுக்குத்தான பலம்... எல்லாம் நல்லபடியா முடிஞ்சுட்டா அவய்ங்க பழைய மாதிரியே மதுரக்குள்ள வந்து தொழிலப் பாக்கலாம். அதுக்கு என்ன உதவி வேணுமோ அத நாங்க செய்றோம்.”

அவள் எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்ட பிறகுதான் தன்னிடம் வந்திருக்கிறாள் என அவருக்குப் புரிந்தது. ஆனால், அம்சவல்லியின் குடும்பத்தினர் இதற்கு இசைவார்கள் என்கிற நம்பிக்கை வந்திருக்கவில்லை.

“சரித்தா, உனக்காக வேணும்னா நான் ஒருக்கா பேசிப் பாக்கறேன்” என்று சொல்லியனுப்பினார்.

(ஆட்டம் தொடரும்)