Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 6

ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!

மதுரைக்காரர்களுக்குத் தியேட்டர்தான் கோயில். உலகின் அத்தனை நெருக்கடிகளுக்குமான விடுதலையை தியேட்டரிலிருக்கும் அந்த மூன்று மணி நேரத்தில் அவர்களால் உணர முடிந்தது.

ரெண்டாம் ஆட்டம்! - 6

மதுரைக்காரர்களுக்குத் தியேட்டர்தான் கோயில். உலகின் அத்தனை நெருக்கடிகளுக்குமான விடுதலையை தியேட்டரிலிருக்கும் அந்த மூன்று மணி நேரத்தில் அவர்களால் உணர முடிந்தது.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்!
மூர்த்தி அண்ணனுக்கு ஒரு பழக்கமிருந்தது. நல்லது கெட்டதெனத் தன்னைத் தேடி வருகிறவர்களுக்குக் கையிலிருப்பதைக் கொடுப்பார். தெரிந்தவர், தெரியாதவரென வித்தியாசம் பார்ப்பதில்லை. அரசியல்வாதிக்கு நிரந்தர நண்பனுமில்லை, எதிரியுமில்லை என்பதற்கான உதாரணம் அவர். தொழிற்சங்கத்தில் தலையெடுத்த நாளிலிருந்தே பகையை மறைமுகமாகவும், நட்பை நேரடியாகவும் வெளிப்படுத்தக் கற்றிருந்தார். கோயில் விசேஷங்கள், விளையாட்டுப் போட்டிகள் எல்லாவற்றின் விளம்பரங்களிலும் அவரது பெயர்தான் முதல் வரிசையில் இடம்பெறும். அவரைச் சுற்றி விழும் வெளிச்சத்தை நம்பித்தான் காளி – சோமு மாதிரியான ஆட்கள் அவரை நெருங்கி வந்தனர். அப்படி வந்தவர்களுக்கு நடுவே, மூர்த்திக்கு நெருக்கமான இடத்தைப் பிடித்துக்கொள்வதற்கான போட்டி ஒவ்வொரு நாளும் அதிகரித்தது. காளியின் ஆட்கள் விளையாட்டுப் போட்டியோ, கோயில் திருவிழாவோ நடத்தினால் அதைவிடவும் பெரிதாக சோமுவின் ஆட்கள் நடத்துவார்கள். இந்தச் செலவுகளுக்காகத் தொழிலையும் விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டபோது, சென்ட்ரல் மார்க்கெட் மட்டுமல்லாமல், மதுரையின் முக்கியமான அத்தனை இடங்களைச் சுற்றியும் பவுசு வாங்கத் தொடங்கினார்கள். ரிக்‌ஷா ஸ்டாண்ட், மதுரை நகருக்குள்ளிருந்த கழிப்பறை கான்ட்ராக்ட் என எல்லாவற்றிலும் தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டனர். இந்தப் போட்டிகள் உச்சத்தை எட்டிய இடம் தியேட்டர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மதுரைக்காரர்களுக்குத் தியேட்டர்தான் கோயில். உலகின் அத்தனை நெருக்கடிகளுக்குமான விடுதலையை தியேட்டரிலிருக்கும் அந்த மூன்று மணி நேரத்தில் அவர்களால் உணர முடிந்தது. மாலை நேரங்களில் தியேட்டர் வாசல்களில் பெருங்கூட்டமாகச் சூழ்ந்திருக்கும் ஆட்களைப் பார்க்கையில் திருவிழாக் கூட்டம் தோற்றுப் போகும். காளிக்கும் அவன் ஆட்களுக்கும் எம்.ஜி.ஆரைப் பிடிக்கும் என்பதாலேயே, சோமுவின் ஆட்களுக்கு அவரைப் பிடிக்காமல்போனது. எம்.ஜி.ஆர் படங்களுக்கு அவர்கள் நாற்பதடி உயரத்தில் கட்-அவுட் வைத்தால், சிவாஜி படங்கள் வெளியானபோது அதைவிட உயரமாக சோமுவின் ஆட்கள் வைக்கத் தொடங்கினார்கள். தொடக்கத்தில் இந்தப் போட்டி ஒருவர்மீது இன்னொருவருக்கு இருந்த வெறுப்பால் நடந்தபோதும், நாளடைவில் இந்த கட்-அவுட் அவர்களின் புதிய அடையாளமாக மாறத் தொடங்கியது.

ரெண்டாம் ஆட்டம்! - 6

மதுரையைச் சுற்றிலும் எப்படி கோயில்களுக்குப் பஞ்சமில்லையோ, அப்படியே திருவிழாக்களுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வீதியில் கோயில் திருவிழா நடந்துகொண்டிருக்கும். சாமி ஊர்வலம், பால்குடம், முளைப்பாரி போடுதலென பகல் நேரங்கள் உற்சாகமாகக் கழிந்தால், இரவு நேரங்களில் நாடக நடிகர்களின் கம்பீரக் குரல்கள் காற்றைக் கிழித்தபடி யிருக்கும். பூம் பூம் மாட்டுக்காரர்கள், சர்க்கஸ் வித்தைக்காரர்கள், யானை ஊர்வலம் என யார் வந்தாலும் அசராமல் வேடிக்கை பார்க்கவும், அவர்களுக்கு அன்பளிப்பை அள்ளி வழங்கவும் மக்கள் தவறுவதில்லை. வித்தை காட்டுகிற வர்களை வேடிக்கை பார்க்கவும், அவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி வைத்துக்கொள்வதை முழுநேர வேலையாகச் செய்யவும் எல்லா வீதிகளிலும் ஓராள் இருப்பான். மணிக்கு இந்த வித்தைக்காரர்களின் மீது எப்போதும் ஈர்ப்புண்டு. அவன் சிறுவனாக இருந்தபோது, தமுக்கம் மைதானத்தில் நடந்த மல்யுத்தப் போட்டியைப் பார்த்ததிலிருந்துதான் உடலைக் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள வேண்டுமென்கிற ஆசையே உருவானது. தாராசிங் – கிங்காங் போன்ற மாமிச மலைகள் நாடு முழுக்க வெவ்வேறு நகரங்களில் மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்டிருந்த காலம் அது. மணி, தாராசிங்கின் ஒரு சண்டையைப் பார்த்த நாளில்தான் அவரைப் போலவே மாற நினைத்தான். மல்யுத்தத்தின் அசைவு களை யாரும் கற்றுக் கொடுக்காமலேயே கற்றுக்கொண்டிருந்தான். எதிராளியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி, முதுகில் மண் விழும்படி எறியும் திறன் அவனிடமிருந்தது. தன் தோற்றத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத அவன் செயல்களைப் பார்க்க காளிக்கு ஆச்சர்யமாக இருக்கும். “ஊரச் சுத்தி ஒரண்ட இழுத்து வெச்சிருக்கமேன்னு பயமே இல்லாம எங்க, என்ன வேடிக்க கண்டாலும் போயிடுறான். இவன என்னதாண்டா செய்றது?” என அவனில்லாத நாள்களில் மருதுவிடமும் மற்றவர்களிடமும் சலித்துக்கொள்வான்.

மாசித் திருவிழாவுக்காகக் கோயில்கள் களைகட்டிக் கொண்டிருந்தன. மார்கழி மாதத்தில் பின் மாலையில் தொடங்கும் குளிர்காலம், கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மாசியில் அதிகாலையில் வந்து முடியும். ‘மார்கழிக் குளிரில் மச்சுக் குளிரும், மாசிக் குளிரில் பொச்சுக் குளிரும்’ எனப் பொதுவாகச் சொல்வார்கள். மாசி, பங்குனி மாதங்களில் ஊரிலிருக்கிற அத்தனை மாரியம்மன்களுக்குமான திருவிழாக்கள் முடிந்து, சித்திரையில் அழகர் திருவிழா தொடங்கும். மூர்த்தி அண்ணனுக்கு, சோலை அழகுபுரத்திலொரு வீடும், தல்லாகுளத்தில் இன்னொரு வீடுமிருந்தன. ஆட்கள் போக்குவரத்து, பேச்சுவார்த்தை எல்லாமே சோலை அழகுபுரத்தில்தான். அதனால், அந்தப் பகுதியில் நடக்கும் எல்லாக் காரியங்களும் அவர் முன்னிலையில் நடப்பதுதான் வழக்கம். முனியாண்டி கோயிலுக்கு முன்னாலிருந்த மைதானத்தில் ‘சைக்கிள் சுற்றும் போட்டி’ நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அவரும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டார். நான்கு நாள்கள், ஒரு வாரம் தொடர்ந்து சைக்கிளைவிட்டுக் கீழே இறங்காமல் ஓட்டும் வித்தைக்காரர்கள் இதுபோல் வருடத்துக்கு ஒரு முறை வருவதுண்டு. ஒவ்வோர் ஊரிலும் குறிப்பிட்ட நாள்கள் தங்கி, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அடுத்த ஊருக்குச் செல்வார்கள். அப்படி வரும்போது, உள்ளூர் பெரியாட்களின் ஆதரவில்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பதால், முதலில் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துவிடுவார்கள். கடைசி நாள் போட்டி முடியும்போது, சிறப்பு விருந்தினர் வந்து பாராட்டி வாழ்த்துவார் என்பதுதான் வழக்கம்.

அடுத்த நாள் காலையில், ரேடியோ குழாய் கட்டப்பட்டு அறிவிப்புச் சத்தம் கேட்கத் தொடங்கியது. “மாபெரும் சைக்கிள் சுற்றும் போட்டி. அன்பானவர்களே... பண்பானவர்களே... இதோ வேறெங்கும் நீங்கள் பார்க்க முடியாத மாபெரும் சைக்கிள் சுற்றும் போட்டி... இன்றிலிருந்து நான்கு நாள்களுக்குத் தொடர்ந்து சைக்கிள் ஓட்டப்போகும் சைக்கிள் வீரனை வந்து பாருங்கள்... ராத்திரி பகலென தொடர்ந்து சைக்கிள் ஓட்டப்போகும் இந்த அதிசய வீரனைக் காண வாருங்கள்...” என்கிற அறிவிப்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க, பள்ளிக்கூடம் கிளம்பிச் சென்ற சிறுவர் சிறுமிகளும், வேலைக்குச் சென்றவர்களும் சில நிமிடங்கள் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றனர். வேலிபோல் கட்டைகள் அடிக்கப்பட்ட வட்டத்துக்குள் ஒருவர் உற்சாகமாக எல்லோரையும் பார்த்துக் கைகளை அசைத்தபடியே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். அதை ஒட்டிப் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையிலிருந்து ஒருவன் தொண்டை கிழிய மைக்கில் அறிவிப்பு செய்துகொண்டிருந்தான். சைக்கிள் ஓட்டியின் பகல் வேளைகள் விநோதமானவை. பகலின் கடும் வெயிலில் தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவதால், உடல் வறண்டு தோல் எரியும். நண்பகலுக்குப் பிறகு, உடலில் குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றிக்கொள்வார். பொழுது சாயும் நேரமாகக் கூட்டம் கூடத் தொடங்கும். அப்போது உற்சாகத்தோடு வித்தைகள் காட்டத் தொடங்குவார். கைகளை விரித்து நின்றபடி ஓட்டுவது, பின் சக்கரத்தை மட்டும் நகர்த்தி ஓட்டுவது என ஒவ்வொரு வித்தையும் அரை மணியிலிருந்து முக்கால் மணி நேரம் வரை செல்லும். இருட்டத் தொடங்கும்போது, பளிச்சென விளக்குகள் எரியத் தொடங்கும். சைக்கிள் ஓட்டியும் உற்சாகமாக நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு, சைக்கிள் ஓட்டியபடியே வாயில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு நெருப்புப் பந்தத்தைக் கையில் பிடித்துக்கொண்டு ஊதுவார். நெருப்புச் சுவாலைகள் பறக்கத் தொடங்கும். வேடிக்கை பார்க்கும் ஆட்கள் நாலணா, எட்டணா எனத் தங்களிடமிருக்கும் காசைக் கொடுப்பார்கள். ஆட்கள் குறைந்துபோன பின்னிரவில், அவர் சைக்கிளில் அமர்ந்த நிலையிலிருக்க, ஓர் ஆள் அவரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு சைக்கிளை நகர்த்துவான். ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ அதேநிலையில் தூங்கும் சைக்கிள் ஓட்டி, மீண்டும் அதிகாலையில் உற்சாகமாக சைக்கிளை ஓட்டத் தொடங்குவார். அறிவிக்கப்பட்ட நாள்கள் முடியும்வரை சைக்கிளைவிட்டு இறங்கக் கூடாது என்பதுதான் விதி.

ரெண்டாம் ஆட்டம்! - 6

நான்காவது நாள் மூர்த்தி அண்ணன் போட்டியை முடித்துவைக்கப் போகிறார் என்பதால், மரியாதை நிமித்தமாக காளி தன் சகாக்களோடு வந்திருந்தான். மூர்த்தி அண்ணன் குடும்பத்தோடு வந்திருந்தார். சைக்கிள் ஓட்டியை வாழ்த்திப் பேசியவர் முந்நூற்று ஒரு ரூபாயை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க, சைக்கிள் ஓட்டி சந்தோஷமாக அவருக்கு நன்றி சொன்னார். அங்கு கூடியிருந்த கூட்டத்தினர் அத்தனை பேரும், சைக்கிளைவிட்டு இறங்கி உற்சாகமாக வளையத்துக்குள் ஓடிவந்த சைக்கிள் ஓட்டியைப் பார்த்து கைதட்ட, மணி மட்டும் கீற்றுக் கொட்டகையை ஒட்டி நின்றிருந்த மூர்த்தி அண்ணனின் மகள் கிருஷ்ணவேணியைப் பார்த்தான். சிலைகளில் இருக்கும் விசேஷமான மினுங்கும் கறுப்பு, தொலைவில் இருப்பவர் களையும் ஈர்க்கும் வசீகரக் கண்கள். புதுவிதமான மாற்றம் ஒன்று அவனுடலில் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு மனம் அவளைப் பார்க்க வேண்டாம் எனத் துரத்த, இன்னொரு மனம் அவளைத் தவிர்த்து எதையும் பார்க்கவோ, நினைக்கவோ மாட்டேனென அடம்பிடித்தது. ஏதோவொரு நொடியில் தற்செயலாக மணியின் பக்கமாகத் திரும்பிய வேணியும் பார்க்க, அவனது பார்வையிலிருந்த தாபத்தைக் கண்டு மின்னல் வெட்டிச் செல்வதைப்போல் ஒரு புன்னகை அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.

(ஆட்டம் தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism