Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 60

“மாமா... அவங்களுக்கு உன்மேல இன்னும் நிறைய கோவமிருக்கு. என்ன இருந்தாலும் ஆண்டிச்சாமி அண்ணன் சாவுக்கு நீயும் ஒரு காரணம். அதுக்காக ஒருவாட்டி அவங்ககிட்ட மன்னிப்பு கேட்ரு...”

பிரீமியம் ஸ்டோரி

பைக்காராவிலிருந்து திருப்பரங்குன்றம் வரையிலும் சாலை முழுக்க பக்தர்கள் கூட்டம். காவடி எடுத்தபடியும் பால்குடங்களைத் தூக்கியபடியும் மஞ்சள் உடை அணிந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பியபடியும் சென்றுகொண்டிருந்தனர். வைகாசி விசாகத்துக்காகச் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாகத்தோடு முருகனைத் தரிசிக்க சென்றுகொண்டிருந்தார்கள். பக்தர்களின் கூட்டத்தால் மதுரை திருமங்கலம் சாலையில் கடும் வாகன நெரிசல் உருவாகியிருந்தது.

அம்சவல்லியின் உறவினர்கள், ரவி அண்ணனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு சமாதானத்துக்காகச் சென்றுகொண்டிருந்தார்கள். சொன்ன நேரத்துக்குப் போய்ச் சேர முடியாதோ என்கிற பரபரப்பில், அம்சவல்லியின் தம்பி அடிக்கொரு முறை காரின் ஹார்னை அழுத்திக்கொண்டிருந்தான். அருகில் அமர்ந்திருந்த அவன் மாமா, “ஏய்... எதுக்குய்யா கெடந்து துடிக்கிற? இப்ப அவய்ங்க காரியத்துக்காகத்தான் நாம போறோம், பத்து இருபது நிமிசம் லேட்டாப் போறதால ஒண்ணும் கெட்டுப்போகாது. நீ பதட்டப்படாத” எனச் சிரித்தார். அவன் பதிலெதுவும் சொல்லாமல் சாலையில் கிடைத்த சின்ன இடைவெளியைப் பயன்படுத்தி லாகவமாய் காரை முன்னோக்கிச் செலுத்தினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 60

மூன்று மாடிகள் கொண்ட கட்சி அலுவலகத்தின் இரண்டாவது மாடியிலிருந்த மீட்டிங் ஹாலில், செல்வம் வகையறாவும் அம்சவல்லி வகையறாவும் அமைதியாகக் காத்திருந்தார்கள். அறையில் நிலவிய அசாதாரணமான வெக்கையைக் குளிர்சாதனங்களால் கட்டுப்படுத்த முடிந்திருக்கவில்லை. ‘அவய்ங்க பேசட்டும் செல்வம், நீ அவசரப்பட்டு வார்த்தைய விட்றாத’ என வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே ஜெகதி எச்சரித்திருந்தாள். தன்னை வெறுப்போடு நோக்கிய அம்சவல்லி குடும்பத்து ஆட்களின் கண்களைத் தவிர்க்க விரும்பாமல், அமைதியாக செல்வம் எதிர்கொண்டான். தங்களைக் கொல்ல வந்த ஆட்களின் விரல்களை வெட்டி எடுத்துச் சென்று, ஒரு அதிகாலையில் அந்தக் குடும்பத்திலிருந்த அத்தனை பேரையும் மிரட்டியது நினைவுக்கு வர, தன்னையும் மீறி செல்வத்துக்கு சிரிப்பு வந்தது. சூழல் கருதி இதழ்களை மடித்து வாய்க்குள்ளாகவே சிரிப்பை அடக்கினான். தங்களை நோக்கிய கேலியைக் கவனித்துவிட்ட அம்சவல்லியின் தம்பி, ‘‘ஒக்காலி என்ன மயித்துக்குடா சிரிக்கிற?’’ எனச் சத்தமாகக் கத்தினான். சற்றே பெண் சாயலோடு அதீத ஒலியில் எதிரொலித்த அவனது குரலைக் கேட்டதும், செல்வத்துக்கு சிரிப்பு அதிகமாக, அவசரமாகக் கையால் வாயை மூடிக்கொண்டான். அம்சவல்லியின் தம்பி சடாரென எழுந்து, தான் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் சேரை செல்வத்தை நோக்கி எரிய, செல்வம் சுதாரித்து விலகினான். பின்னால் அமர்ந்திருந்த சோணை, ‘‘எலேய் பெரிய ஆளு மயிராட்டம் பண்ணிட்டு இருந்தயின்னா இங்கயே நெஞ்சுல மிதிச்சு கொன்றுவேன். பொத்திக்கிட்டு உக்காரு...” எனக் கத்த, அம்சவல்லி யின் குடும்பத்து ஆட்கள் ஆத்திரத்தோடு சண்டைக்கு எழுந்தார்கள். ‘‘ஏய் சோண சும்மா இருக்க மாட்டியா?’’ ஜெகதி திரும்பி அவனைப் பார்த்து கத்தினாள். ‘‘நீங்க சரியான ஆம்பளைங்களா இருந்தா வாங்கடா... இங்கியே இப்பயே யாரு பெரியாளுன்னு போட்டுப் பாத்திரலாம்…” என அம்சவல்லியின் தம்பி இடைவிடாமல் கத்திக் கொண்டிருந்த அதேநேரத்தில், ரவி தன் ஆட்களோடு கதவைத் திறந்து உள்ளே வந்தார். ‘‘ஒரு அஞ்சு நிமிஷம் நான் வர்றதுக்கு லேட் ஆச்சுன்னா அதுக்குள்ள ஏழ்ரைய கூட்டிருவீங்களாய்யா? இப்பிடி அடிச்சிக்கிட்டு சாகறதுக்கா ரெண்டு பக்கத்து ஆளுகளையும் வரச் சொன்னேன். என் எடத்துல வந்து மல்லுக்கட்டினீங்கன்னா அப்பறம் எனக்கென்னய்யா மரியாத?” அவரின் குரலுக்குக் கட்டுப்பட்டவர்களாக எல்லோரும் மெளனித்து நிற்க, அவ்வறையில் கடும் அமைதி நிலவியது. “உக்காருங்க எல்லாரும்...” என்றபடியே ரவி அண்ணன் இரண்டு குடும்பத்துக்கும் நடுவில் உட்கார்ந்தார். நாற்காலிகள் ஒழுங்கு செய்யப்பட்டு ஆட்கள் உட்கார, யார் முதலில் பேசுவதெனத் தெரியாமல் இரண்டு பக்கத்து ஆட்களும் அமைதியாக இருந்தனர்.

“எத்தா ஜெகதி, இவய்ங்க ஒருத்தனுக்கும் பொறுமையா பேசத் தெரியாது, நீயே எல்லா வெவரத்தையும் சொல்லு.”

ஜெகதி திரும்பி செல்வத்தைப் பார்க்க, அவன் கண்களால் சம்மதத்தை வெளிப்படுத்தினான்.

“இங்கேருங்க… நம்மளுக்குள்ள இப்பிடி மாறி மாறி அடிச்சுக்கிட்டா இழப்பு நம்மளுக்குத்தான். பொதுவான எதிரி கோட்டச்சாமியும் அவன் குடும்பமும்தான். கோட்டச்சாமிய நாங்க ஓச்சு விட்டுட்டோம். அவென் குடும்பத்த ஒழிக்கிறதுக்கான வழி என்னவோ அதப் பேசுவோம்.”

ஜெகதி ரவியண்ணனுக்கும் அம்சவல்லியின் குடும்பத்துக்கும் பொதுவாகச் சொன்னாள்.

அவள் பேசுவதிலிருந்த நிதானத்தையும் தெளிவையும் கவனித்த அம்சவல்லியின் கணவன், அவள் சாதாரணமானவளில்லை என்பதைப் புரிந்துகொண்டு தன்னோடு இருந்தவர்களை ‘எதுவும் பேச வேண்டாம்’ என அமைதிப்படுத்திவிட்டு நிதானமாக ரவியைப் பார்த்தான்.

“அண்ணே உங்க பேச்ச மதிச்சுதான் இம்புட்டுத் தூரம் வந்தோம். இது எங்க பிரச்சன. எப்பிடி பாத்து முடிச்சிவிடணும்னு எங்களுக்குத் தெரியும்” என்று சொல்லி முடிக்கும் முன்பாகவே, “நீங்களே முடிச்சி விட்ருவீங்கன்னா இத்தன வருஷம் ஏன் முடிக்காம இருந்தீங்க?” என செல்வம் சத்தமாகக் கேட்டான். கூட்டத்தில் இன்னொரு முறை சலசலப்பு வரக்கூடாதென சுதாரித்த ஜெகதி,

‘‘ஏய் செல்வம் நான் பேசிட்டு இருக்கன்ல… நீ சும்மா இருக்கறதுன்னா இரு… இல்லன்னா இவய்ங்களக் கூட்டிட்டு வெளிய போயிரு…” எனக் கத்தினாள். எல்லோரின் முன்பாக அப்படிப் பேசுவாளென எதிர்பார்க்காத செல்வத்துக்குச் சடாரென ஆத்திரமெழுந்தாலும் இடம் கருதி அமைதிகாத்தான். எல்லோரும் தன்னையே பார்ப்பதுபோலிருக்க, தொடர்ந்து அங்கு அமர முடியாமல் திரும்பி சோணையிடம் ‘‘டேய்... கூட இருந்து என்னன்னு பாருங்க. நான் வெளில இருக்கேன்’’ என்று சொல்லிவிட்டு அவசரமாக எழுந்து வெளியே சென்றான்.

ஜெகதியின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் கட்டுப்பட்ட செல்வத்தைப் பார்க்க, ரவிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ‘எப்பேர்ப்பட்ட வீரனையும் ஒரு பொம்பளப் புள்ளையாலக் கட்டுப்படுத்திர முடியும்போல’ என மனதில் நினைத்துக்கொண்ட போது, ஜெகதியின் மீது முன்னிலும் அவருக்கு மரியாதை அதிகமானது.

ரெண்டாம் ஆட்டம்! - 60

“பிரச்னையப் பேசிப் பெருசாக்கறதுக்காக உங்க எல்லாரையும் இங்க வரச் சொல்லல. கடந்த காலத்துல நடந்தத மறந்துட்டு, இனிமே வரப்போறத நல்லபடியா வெச்சுக்கணும்னுதான் வரச் சொல்லியிருக்கேன். ராகவா... உன் சம்சாரம் அம்சவல்லி நம்ம கட்சில இருந்த பிள்ள, அந்தப் பிள்ள சாவுக்குக் காரணமானவய்ங்கள எதாச்சும் செய்யணும்னு எனக்கு மட்டும் ஆத்திரம் இருக்காதாய்யா…”

ரவி ஜெகதிக்கு ஆதரவாகப் பேசினார். ‘‘அண்ணே இதே மதுரக்குள்ள என் மாமென் ஆண்டிச்சாமி எம்புட்டு ஃபோர்ஸா வாழ்ந்தாருன்னு எல்லாருக்குமே தெரியும். ராசாவாட்டம் வாழ்ந்த மனுஷன துள்ளத் துடிக்கக் கொன்னாய்ங்க. அத்தோட விடாம அவரு குடும்பமே மருதக்குள்ள வாழ முடியாத அளவுக்கு மெரட்டி தொரத்தி விட்டாய்ங்க. இப்ப எல்லாத்தையும் மறந்துட்டு எப்பிடிண்னே ராசியாப் போறது?”

ராகவன் நிதானம் தவறாமல், அதேசமயத்தில் குரலிலில் கோபம் கொப்பளிக்கச் சொன்னான். “அது எல்லாத்துக்கும் காரணம் கோட்டச்சாமியும் அவன் தம்பிங்களும்தானய்யா. செல்வம் அவய்ங்ககிட்ட வேலைக்கி இருந்த பய… அவய்ங்க சொன்னத செஞ்சிருக்கான். இதுக்காக அவன ஏன் பகைச்சுக்கறீங்க?”

அவரது கேள்விகளுக்குப் பதில் இல்லாமல் எல்லோரும் அமைதியாய் இருக்க, மெளனம் நிரம்பிய அந்தச் சின்னஞ்சிறு இடைவெளியைத் தனக்கானதாய் எடுத்துக்கொண்டு ஜெகதி பேசத் தொடங்கினாள். “உங்களுக்கே தெரியும், செல்வம் கோட்டச்சாமிக்கும் அவர் குடும்பத்துக்கும் எவ்ளோ விசுவாசமா இருந்தான்னு. ஆனா, ஒரு சின்ன பிரச்னன்னு வந்தப்போ அவனையே போட்டுப் பாக்கணும்னு நெனச்சதாலதான், தன்னக் காப்பாத்திக்க அவன் கோட்டச்சாமியக் கொன்னான். இப்ப உங்களுக்கு எப்பிடி பகையோ அதே மாதிரிதான் அவய்ங்க எங்களுக்கும் பகை. நம்மளுக்கு நடுவுல சண்ட போடுறதுக்கு இப்ப ஒரு காரணமும் இல்ல. ஆனா, நாம சேந்து அவய்ங்கள எதுக்கறதுக்கு எல்லா நியாயமும் இருக்கு.”

“சரி உன் பேச்சுக்கே வர்றோம்… அப்பிடி உங்ககூட கூட்டுச் சேர்றதால எங்களுக்கு என்ன லாபம்?” ராகவனின் பேச்சில் கோபம் குறைந்து காரியத்தைச் சாதிப்பதற்கான கணக்குகள் ஓடத் தொடங்கியிருந்தது. இனி அவர்களைத் தன் வழிக்குக் கொண்டுவருவது பெரிய காரியமில்லை எனப் புரிந்துகொண்ட ஜெகதி, திரும்பி சோணையிடம் ‘‘செல்வத்தக் கூட்டிட்டு வா” என்றாள். சோணை அவசரமாக வெளியே சென்றான்.

“நீங்க இதுக்கு முன்ன மருதக்குள்ள எப்பிடி இருந்தீங்களோ, இனி அப்பிடி இருக்கலாம். உங்களுக்கு எதாச்சும் பிரச்னைன்னா நாங்க நிப்போம். அதுமிட்டுமில்ல, உங்க வீட்ல ஒரு ஆளுக்குக் கட்சில போஸ்டிங் குடுக்கறதுக்கு அண்ணன் சம்மதம் சொல்லியிருக்காரு.”

அவள் சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் ராகவனும் அவனோடு இருந்தவர்களும் திரும்பி ரவியைப் பார்க்க, அவரும் ‘ஆம்’ எனத் தலையாட்டினார். என்ன முடிவெடுப்பது எனத் தெரியாத குழப்பத்தோடு அம்சவல்லியின் குடும்பத்தினர் தங்களுக்குள் குசுகுசுவெனப் பேசிக்கொள்ள, செல்வம் அறைக்குள் நுழைந்தான். ஜெகதி தனது இருக்கையிலிருந்து எழுந்துசென்று செல்வத்தின் கைகளைப் பற்றிக்கொண்டாள். “மாமா... அவங்களுக்கு உன்மேல இன்னும் நிறைய கோவமிருக்கு. என்ன இருந்தாலும் ஆண்டிச்சாமி அண்ணன் சாவுக்கு நீயும் ஒரு காரணம். அதுக்காக ஒருவாட்டி அவங்ககிட்ட மன்னிப்பு கேட்ரு...’’ என்று சத்தமாகச் சொல்ல, ரவியண்ணனும் அம்சவல்லி குடும்பத்து வீட்டாளுகளும் நம்ப முடியாத ஆச்சர்யத்தோடு அவளைப் பார்த்தார்கள். செல்வம் திகைத்துப்போய் அவளைப் பார்க்க, அவள் கண்களால் அவனிடம் மன்றாடினாள். அத்தனை பேருக்கும் முன்னால் தன்னை நிர்வாணப் படுத்திவிட்டதைப் போல் மனமுடைந்து போனவனுக்கு உடல் நடுக்கம் கண்டது. ஜெகதி அவன் கை விரல்களை இறுகப் பற்றி, பார்வையால் இன்னொருமுறை மன்றாட, செல்வம் தட்டுத் தடுமாறி, ‘‘என்னய மன்னிச்சிருங்க… நான் வேணும்னு அவரக் கொல்லல…’’ என செல்வம் சொல்லி முடித்தான். சிதறி விழுந்த அந்த வார்த்தைகளோடு தனது தன்மானமும் சிதறிப் போனதாய் நினைத்தவன், தன்னைப் பற்றியிருந்த ஜெகதியின் கைகளை வெறுப்போடு விலக்கிவிட்டு அவளிடமிருந்து தள்ளி வந்து நின்றான்.

அம்சவல்லியின் குடும்பத்திலிருந்து எல்லோருக்கும் பொதுவாய், ‘‘அண்ணே... உங்க முடிவுக்கு நாங்க கட்டுப்படறோம்ணே…” என ராகவன் சொல்ல, விவகாரம் சுமுகமாய் முடிந்துவிட்ட திருப்தியில் ரவி, “நல்லதுய்யா... எல்லாரும் இருந்து சாப்ட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

(ஆட்டம் தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு