Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 62

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

எந்த உண்மையிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போராடினானோ அந்த உண்மை பூதாகரமாக அவனெதிரில் நின்று, அவனை ஏளனம் செய்யத் தொடங்கியது.

ரெண்டாம் ஆட்டம்! - 62

எந்த உண்மையிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போராடினானோ அந்த உண்மை பூதாகரமாக அவனெதிரில் நின்று, அவனை ஏளனம் செய்யத் தொடங்கியது.

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

தனது பொறுப்புகளை அருள் சிரமமின்றி கையாண்டதைக் கண்ட காளி, சட்டென முதுமை சூழ்ந்துவிட்டதாக உணர்ந்தான். உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக யாரையும் எதிர்த்து நின்று சண்டையிடத் தேவையில்லை. எதிர்கொள்ளும் ஒவ்வொரு வரையும் சந்தேகத்தோடு பார்ப்பதற்கான அவசியம் இருக்கப்போவதில்லை. வீடடங்கிய ஓய்வில் மருதுவின் இழப்பிலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்ளத் தொடங்கியிருந்தான். ரத்தமும் அரசியலும் விருப்பமின்றி அவனது வாழ்வில் நுழைந்து, வெறுங்கையோடு ஊரைவிட்டு வந்தவனின் காலடியில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கித் தந்திருந்தது.

மகிழ்ந்து அனுபவிக்க முடியாத அந்த சாம்ராஜ்யம், அவனோடு இருந்தவர்களையெல்லாம் காவு வாங்கிவிட்டதால் தன்மீதும் சாவின் வாடையை உணர்ந்தான். சில சமயம் மணியின் குருதியும், சில சமயம் மருதுவின் குருதியும் அவன் உள்ளங்கையிலிருந்து பொங்கி வழியும். தொடக்கத்தில் பதறி அலறியவனை, பதினேழு வருடங்களில் பார்த்த கொலைகளின் நினைவுகள் ரத்தத்தின் அச்சுறுத்தல்களிலிருந்து மீட்டிருந்தன. யாருடைய இழப்புக்காகவும் குற்றவுணர்ச்சி கொள்ள முடியாதபடி மனம் மரத்துப்போகத் தொடங்கியது. அவனிடம் உள்ளும் புறமுமாக நிகழும் அத்தனை மாற்றங்களையும் கவனிப்பவள் சுப்புத்தாயி மட்டும்தான். யாரையும் பகைத்துக்கொள்ள முடியாதபடி கனியத் தொடங்கியிருக்கிறான் என்கிற நம்பிக்கை நீண்டகாலத்துக்குப் பிறகு அவளுக்கு வந்தது.

“நீயா ஒரு முடிவெடுப்பன்னுதான் நானும் பொறுமையா இருந்தேன். குடும்பத்த பாத்துக்கற அளவுக்கு அருளு வந்துட்டான். இப்பயே மலருக்கு ஒரு மாப்பிள்ளையப் பாத்து கட்டிவெச்சாத்தான், நாம தெம்பா இருக்க காலத்துலேயே பேரன் பேத்திய வளக்க முடியும்.”

ரெண்டாம் ஆட்டம்! - 62

சுப்புத்தாய், பருவமெய்தி திருமணத்துக்குக் காத்திருக்கும் மகளை நினைவுபடுத்தினாள்.

“அவளுக்கு என்ன வயசாகிருச்சுன்னு கல்யாணம் பண்ணிவெக்கச் சொல்ற?”

“வர்ற மாசி பொறந்தா அவளுக்கு இருவது வயசு முடியப்போகுது. அவ சடங்காகி ஆறு வருசமாச்சு. குடும்பம் குட்டின்னு நெனப்பு இருந்தாத்தான உனக்கு? `சடங்கான பிள்ளைய வீட்டுக்குள்ளயே வெச்சிருக்கியே... எப்ப கட்டிக் குடுக்கப்போற’ன்னு ஊர்ல இருக்கவங்கல்லாம் கேக்கறப்போ, என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம எனக்குத்தான் மண்டக்காய்ச்சலா இருக்கும். மத்த வேலையவெல்லாம் விட்டுட்டு நல்ல பயலா பாரு. இதுக்கு மேலயும் தள்ளிப்போட வேணாம்.”

காளி அவள் பேச்சுக்குச் சம்மதித்து தலையசைத்தான். அவன் மனதில் மலர் இப்போதும் ஒரு சிறுமியாகத்தான் தெரிந்தாள். ஒரே வீட்டுக்குள்ளிருந்தாலும் தனது குடும்பத்திடமிருந்து எவ்வளவு தூரம் அந்நியமாக இருந்திருக்கிறோம் எனக் குற்றவுணர்ச்சி கொண்டான்.

காயங்கள் முழுமையாக குணமாகி, காளி எப்போதும்போல் வெளியில் சென்றுவரத் தொடங்கினான். நீண்ட ஓய்விலும் உறக்கத்திலும் கண்ணுக்குக் கீழும், கன்னத்துக்குக் கீழும் சதை விழத் தொடங்கியிருந்தது. சாராயக்கடை விவகாரங்களில் பெரிதாக ஈடுபாடு காட்டுவதைக் குறைத்துவிட்டு, மார்க்கெட்டுக்கு மட்டும் தினமும் சென்றுவந்தான். வியாபாரிகளின் முகத்தில் இப்போதும் காளிக்கான மரியாதைஇருந்தது. எத்தனை ஏற்ற இறக்கங்கள் வந்துபோனபோதும் இந்த மார்க்கெட் தன்னைக் கைவிட்டிருக்கவில்லை என்கிற நிஜம் முன்னிலும் அதிக பிணைப்பை உருவாக்கியிருந்தது. காளியின் அலுவலகம், அரசி மண்டிகள் நிரம்பிய வீதியில் ஒரு மாடியிலிருந்தது. நான்கு பேர் சேர்ந்தாற்போல் உட்கார்ந்தால் நிறைந்துவிடக்கூடிய சிறிய இடம். மார்க்கெட் விவகாரங்களைத் தீர்த்துவைக்கச் சொல்லி தினமும் பத்து பேராவது வந்துவிடுவார்கள். எல்லோருடைய குறை நிறைகளையும் கேட்கும் நேரமிருந்ததால் முகம் சுளிக்காமல் பொறுமையாகக் கேட்பான். காலை ஒன்பது மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை அங்கிருப்பதை வழக்கமாக்கிக்கொண்ட பத்தாவது நாளது. அண்ணன் தம்பிகளுக்குள் கடையைப் பிரித்துக்கொள்வதற்கான ஒரு வழக்கு வந்திருந்தது. காளி எவ்வளவு எடுத்துச் சொல்லியும் இருவரும் ஒரு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. ‘செரி ரெண்டு பேரும் போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க…” என அனுப்பிவைத்துவிட்டு காளி அலுவலகத்துக்கு வெளியே வந்து நெட்டி முறித்தான். எதிரிலிருந்த டீக்கடையைப் பார்த்து ‘முருகா ஒரு டீ குடுத்துவிடுப்பா...’ எனச் சத்தம்போட, கடையிலிருந்தவன் “சரிண்ணே” என்றபடி உற்சாகமாகக் கையசைத்தான். சட்டையைச் சரிசெய்தபடி அலுவலகத்துக்குள் வர எத்தனித்தவன், படியேறிவரும் ஆளைக் கவனித்து நின்றான்.

அழுக்கான உடையில், களைந்த தலையோடு வந்து நின்றவனின் உடலில் மெல்லிய நடுக்கமிருந்தது. அவன் முகத்தை ஏறிட்ட காளிக்கு நிதானம் தப்பி ஆத்திரம் பீறிட்டது. ‘ஒக்காலி இங்க எதுக்குடா வந்த?’ முறுக்கேறிய கைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டான். பஞ்சப்பராரியென நின்றிருந்த முத்தையா, பதிலேதும் சொல்லாமல் கையைக்கட்டி அவனைப் பார்த்தான். தொடர்ந்த குடியாலும், உறக்கமின்மையாலும் இருண்ட அவன் முகத்தில் சாவு பயம் ஊடுருவியிருந்தது. “உன்னயத்தாண்டா கேக்கறேன் வெண்ண, சாகறதுன்னா எங்கியாச்சும் போயி செத்துரு... எதுக்கு இங்க வந்து நிக்கிற?” ஆத்திரத்தில் எச்சிலைக் காறி வெளியில் துப்பினான். ஆத்திரத்தில் துடித்த காளியின் கண்களை ஏறிட்ட முத்தையா “ஏன் ஆத்திரத்த அடக்கிட்டு நிக்கிற? என்னய அடிக்கணும்னு தோணுதுல்ல... அடி. உன்னய அண்ணனா நெனச்சுதான இத்தன வருசம் கூட இருந்தேன்… என்னயக் கொல்றதுக்கு உனக்கு இல்லாத உரிமையா… வந்து கொன்று…’ எனப் பிதற்றலாகச் சொன்னான். “நீ எம்புட்டு விசுவாசப் புழுத்தின்னுதான் பாத்துட்டன்லடா… இனியென்ன மிச்சமிருக்கு... எல்லாத்தையும் மறக்கணும்னு நெனச்சுக்கிருக்கேன். சனியன் மாதிரி என் முன்னால வந்து நிக்காத…” எரிச்சலோடு காளி அலுவலகத்துக்குள் சென்றான்.

கண்ணாடி டம்ளரில் தேநீர் எடுத்துவந்த பையன், டேபிளில் வைத்துவிட்டு வாசலில் நின்ற முத்தையாவை கவனித்தான். “அண்ணே ஒரு டீ போதுமா, இன்னொண்ணு வேணுமாண்ணே…” என்று காளியிடம் கேட்க, “ஒண்ணு போதும், நீ போப்பா...’’ என அவசரமாக அவனை விரட்டினான். முத்தையாவின் முகத்தை ஏறிட விரும்பாதவனாகத் தேநீரைக் கையிலெடுத்துக் கொண்டு வேறு பக்கமாகத் திரும்பி நின்று குடிக்கத் தொடங்கினான்.

“என்னய இப்பிடி பச்சநாவியாப் பாத்து அருவருப்பாகறியே, இதை ஏன் உன் எதிரிங்ககிட்ட காட்டலை. என்னயக் கொல்லணும்னு இருக்கற துடிப்பு அவய்ங்களக் கொல்லணும்னு ஏன் இல்லாமப்போச்சு ஒனக்கு?”

அதிர்ச்சியில் கையிலிருந்த தேநீர் டம்ளர் கீழே விழுந்துவிடாமல் இறுகப் பற்றியபடி, காளி திரும்பி முத்தையாவை முறைத்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 62

“எதுக்கு மொறைக்கிற? உண்மையத்தான் சொல்றேன்… ஒன்னால அவய்ங்கள எதும் செய்ய முடியாது… ஏன்னா நீ அவய்ங்களுக்கு பயப்பட ஆரம்பிச்சிட்ட. இப்ப உன்னையக் காப்பாத்திக்கிட்டா போதும் உனக்கு… அப்பிடித்தான…”

“டேய்… பழகுன பாவத்துக்கு உன்னய இப்பிடியே உயிரோட விடுறேன்... ஓடிரு… இன்னும் எதையாச்சும் சொன்னயின்னா சும்மா இருக்க மாட்டேன்…”

“நான் போகத்தான் போறேன். அவென் சொன்ன மாதிரி புழுவாவே வாழ்ந்துட்டுப் போறேன். ஆனா நீ மானத்தோட வாழ்றதா உன்னய நீயே ஏமாத்திக்காத. உண்மையாவே மருது சாவுக்குப் பழியெடுக்கணும்னு நெனச்சா, இந்த நேரத்துக்கு உன் எதிரிக்கு வட்டம் போட்ருப்ப… உன்னையும் உன் குடும்பத்தையும் காப்பாத்திக்கிட்டா போதும்னு நெனைக்கிறதாலதான், மைனராட்டம் வெள்ளையும் சொள்ளையுமா இப்பிடி சுத்திக்கிட்டு இருக்க.”

அவன் வார்த்தைகளிலிருந்த உண்மை காளியைத் தடுமாற்றம்கொள்ள வைத்தது. முத்தையாவைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு பக்கமாகத் திரும்பியவனிடம் “நல்லாருண்ணே… உனக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம்தான். நீ வசதியா இருக்க, நான் ஒண்ணுமில்லாம இருக்கேன். மத்தபடி ரெண்டு பேருக்குமே இப்ப முதுகெலும்பு இல்ல… நல்லாரு…” என்ற முத்தையா, காளியின் பதிலுக்குக் காத்தி ராமல் திரும்பிப் படியிறங்கி நடந்தான். தன் கையிலிருந்த தேநீர் டம்ளரை காளி ஆத்திரத்தில் தூக்கி எறிய, சுவரில் பட்டுத் தெறித்தது. எந்த உண்மையிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போராடினானோ அந்த உண்மை பூதாகரமாக அவனெதிரில் நின்று, அவனை ஏளனம் செய்யத் தொடங்கியது.

அலுவலகத்தைவிட்டு வெளியேறப் பிடிக்காமல் காளி முடங்கிக் கிடக்க, இருபது வயது மதிக்கத்தக்க இளைஞனொருவன் அவசரமாக அவனைத் தேடி வந்தான். மின்விசிறியின் `கிறீச்’ ஒலி மட்டுமே நிரம்பியிருந்த அலுவலகத்தில், சடாரென அவன் ஓடி வந்த பரபரப்பு சத்தம் கேட்டு காளி நிமிர்ந்து என்னவென்பதுபோல் பார்த்தான்.

“அண்ணே... கொஞ்சம் அவசரம்…”

“எதுவா இருந்தாலும் நாளைக்கு வாப்பா.”

“அருளு கூட்டியாரச் சொன்னாண்ணே…”

அந்த இளைஞனிடமிருந்த பரபரப்பு இப்போது காளியையும் தொற்றிக்கொள்ள, சடாரென இருக்கையிலிருந்து எழுந்தான். ‘என்னாச்சுப்பா என்ன பிரச்னை?’

“நீங்க மொதல்ல வாங்கண்ணே…”

“எலேய் என்னன்னு சொல்லுடா வெண்ண...’

காளி ஆத்திரமாகக் கத்தினான்.

“ஒரு பிரச்னையாகிடுச்சுண்ணே. அருள செல்லூர் டேஷன்ல வெச்சிருக்காங்க…”

காளியிடமிருந்த அமைதியும் ஓய்வும் காணாமல்போய், பதற்றம் தொற்றிக்கொண்டது. காத்திருக்கப் பொறுமையில்லாமல் அந்த இளைஞன் படியிறங்கி ஓட, காளியும் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

(ஆட்டம் தொடரும்)