மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 64

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

“எலேய் இது நாம அவய்ங்களுக்குப் போட்ட லைன் இல்ல, அவய்ங்க நம்மளுக்குப் போட்ட லைன்… தப்பிச்சு ஓடிருங்கடா…”

கொட்டாம்பட்டியிலிருந்து மேலூர் வரும் நெடுஞ்சாலையை இரவு நேர வாகனங்களின் இரைச்சல் ஆக்கிரமித்திருந்தது. சாலையை ஒட்டியிருந்த காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த கருப்பும் அவன் பங்காளிகளும், தாங்கள் எதிர்பார்க்கும் வாகனம் வருவதற்காகப் பதற்றத்தோடு காத்திருந்தார்கள். ரத்தம் குடிக்கும் வெறியோடு அடைபட்டுக்கிடந்த மிருகங்களிடமிருக்கும் மூர்க்கமும் வெறியும் அவர்களின் உடல்களில் நிரம்பியிருந்தன. எதையெல்லாம் செல்வம் தங்களிடமிருந்து பறித்துக்கொண்டானோ, அதையெல்லாம் மீட்டெடுத்துவிடும் உத்வேகமும், கோட்டையின் சாவுக்குப் பழியெடுக்கத் துடிக்கும் வெஞ்சினமும் அவர்களுக்குள் ஊறிப்போயிருந்தன.

“அவென் நம்மகிட்டருந்து நம்ம அண்ணன மட்டுமில்ல, யாவாரத்தையும் எடுத்துக்கிட்டான். அவென் எப்பிடி நேக்கா நம்ம சரக்க தூக்கினானோ அதே மாதிரி நாமளும் அவென் சரக்கத் தூக்கிரணும்…” முனுசு தன் பங்காளிகளிடம் அடிக்கடி இதை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான். எத்தனை தொழில்கள் இருந் தாலும், கோட்டைச்சாமியின் குடும்பத்துக்குப் பெரிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது இந்த வியாபாரம்தான். அதனாலேயே அதை மீட்டெடுத்துவிடத் துடித்தார்கள்.

செல்வமும் ஜெகதியும் கோட்டைச்சாமி வைத்திருந்த எல்லையையெல்லாம் தகர்த்து, புதிய எல்லைகளை உருவாக்கத் தொடங்கி யிருந்தனர். பொருளைக் கொடுத்து பணமாக வாங்கின வியாபாரத்தைத் தாண்டி, பொருளுக்கு ஈடாகத் தங்கத்தை இலங்கையிலிருந்து இறக்கு வதென இதற்கு முன்னர் யாரும் செய்யாததைச் செய்துகொண்டிருந்தார்கள். மதுரையிலிருக்கும் முக்கியமான நகைக்கடைக் காரர்கள் எல்லோரும் அவர்களிடமிருந்து தங்கம் வாங்கிக்கொள்ளத் தயாராக இருந்தார்கள். ஜெகதி தங்கத்தை மையப்படுத்திய புதிய வளையத்தை மிகத் திறமையாக உருவாக்கியிருந்ததை, மதுரையில் அவர்களைப்போலவே ரெண்டாம் நம்பர் வேலைகளைச் செய்துவந்தவர்கள் ஆச்சர்யத்தோடும் அச்சத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 64
ரெண்டாம் ஆட்டம்! - 64

கோட்டைச்சாமியின் தம்பிகளுக்கும் செல்வத்தைவிடவும் ஜெகதியின் மீதே அதீத அச்சமிருந்தது. “சூனியக்காரி மாதிரி எல்லாரையும் மயக்கி ஆட்டிவெக்கிறாளேய்யா…” என முனுசு புலம்பும்போதெல்லாம், “தட்டுவாணி முண்ட, ஒண்ணுமே தெரியாதவளாட்டம் அண்ணன்கூட இருந்தா. இன்னிக்கி என்னடான்னா கட்சியில மாவட்ட மகளிரணிப் பொறுப்பு. அவளச் சுத்தி எப்பவும் பத்து அம்பது பேரு பாதுகாப்புக்கு ஆளுக. அவ கொரவலைய அறுத்தாத்தான் எனக்கு ஆத்திரம் அடங்கும்” என கருப்பு அனத்துவான். அந்த அனத்தல், ஜெகதியின் மீதான வெறுப்பா அல்லது அவளை அடைய முடியாத ஏமாற்றமா எனத் தெரியாமல் அவனோடிருந்தவர்கள் குழம்பினார்கள்.

கருப்பு தன் ஆட்களோடு நின்றிருக்கும் இடத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளியிருந்த செக்போஸ்ட்டில் அவர்களின் ஆள் ஒருவன் வண்டிக்காகக் காத்திருந்தான். அதிகாலை மூன்று மணி சுமாருக்கு அவர்கள் எதிர்பார்த்த வண்டி செக்போஸ்ட்டைத் தாண்டியது. உஷாரானவன், அலைபேசியில் கருப்புவை அழைத்தான். முதல் அழைப்பொலியிலேயே கருப்பு எடுத்தான். “சொல்றா... வண்டி வந்துருச்சா?” எனப் பரபரப்பாகக் கேட்டான். “ஆமாய்யா... இப்பதான் க்ராஸ் பன்றாய்ங்க. டிரைவரும் அவன்கூட இன்னொரு ஆளும்தான் இருக்கான். இன்னும் பத்து நிமிசத்துல அங்க வந்துருவாய்ங்க.”

“சரி நாங்க பாத்துக்கறோம்… நீ அங்கருந்து கிளம்பிரு...”

இணைப்பைத் துண்டித்த கருப்பு, தன்னோடு இருந்தவர்களுக்கு யார் யார் எந்தப் பக்கமாகச் சுற்றிவளைக்க வேண்டுமெனச் சொல்லிவிட்டு, வேகமாகச் சாலையை நோக்கி நடந்தான். அந்த நேரத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு லாரி இண்டிகேட்டர் போட்டு வண்டியை இடது ஓரமாக நிறுத்த வந்தது. எரிச்சலான கருப்பு அரிவாளை உருவப்போவதாகச் சொல்லி சைகை காட்ட, லாரி டிரைவர் உயிர்பயத்தில் வண்டியை நிறுத்தாமல் விரைந்து செலுத்தினான். நான்கடி இடைவெளியில் அவர்கள் ஐந்து பேரும் பிரிந்து தனித்தனியாக நின்றுகொண்டனர். காலடியில் பெரிய பெரிய உருண்டைக் கற்களையும் தயாராக வைத்திருந்தனர். வெளியூர் பேருந்துகள், சரக்கு லாரிகள் என விரைந்துகொண்டிருக்க, அவற்றுக்கு நடுவே காய்கறிகளை ஏற்றிய 407 வேன் ஒன்று வருவது தெரிந்ததும், கருப்பு எல்லோருக்கும் சிக்னல் கொடுத்தான். காலடியிலிருந்த கல்லை எடுத்து அந்த வண்டியில் எறிய ஆயத்தமானார்கள். வண்டி அவர்களை நெருங்கி வர, கையிலிருந்த கற்களை வண்டியின் கண்ணாடியில் எறிந்தார்கள். கல்லெறிபட்டு கண்ணாடி உடைந்ததோடு, வண்டி ஓட்டியவனின் மண்டையும் உடைய, அவன் அவசரமாக பிரேக் அடித்து நிறுத்தினான்.

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட இந்தத் தொழிலில், ஆபத்தான நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது இயல்பு. கருப்பு சரக்கை எடுக்க வேண்டுமெனத் திட்டமிட்டபோது, அவர்களுக்கு வழக்கமாகச் சரக்கு கொடுக்கும் வியாபாரியின் உதவியை நாடினான். “உங்கண்ணன் எப்பேர்ப்பட்ட ஆளு... உனக்காக இல்லன்னாலும் அவர் மூஞ்சிக்காகக் கண்டிப்பா செய்றேன் தம்பி...” என வியாபாரி வாக்களித்திருந்தார். சரக்கு எப்போது வரும், எந்த வண்டியில் வருமென்கிற எல்லாத் தகவல்களையும் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே அவர் கருப்புவுக்கு அனுப்பிவிட்டார். கருப்பு தன் பங்காளிகளோடு கூடிப் பேசி இந்த இடம்தான் வண்டியை மறிக்க சரியான இடமென முடிவெடுத்தான். எந்தப் பக்கம் சென்றாலும் ஐந்து கிலோமீட்டர்களுக்குள் ஊரெதுவும் இல்லாத காட்டுப்பகுதி, பெரிய வெளிச்சமும் இல்லாததால், காட்டுக்குள் பதுங்கிக்கொள்ளவும் வசதி. இதையெல்லாம் கணித்துத்தான் வந்திருந்தார்கள்.

மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட, டிரைவர் வேனை நிறுத்திவிட்டு அலறினான். வேன் சாலையில் தாறுமாறாக ஓடி நிற்க, கருப்புவும் அவன் பங்காளிகளும் வேகமாக ஓடிப்போய் வண்டியைச் சுற்றி நின்றார்கள். மிதமான வேகத்தில் வந்த அரசுப் பேருந்து, வேன் சீரற்று நிற்பதையும் ஆட்கள் சுற்றி நிற்பதையும் கவனித்து வேகத்தைக் குறைக்க, முனுசு கையிலிருந்த ஒரு கல்லை பேருந்தில் எறிந்தான். இருட்டுக்குள் ஆயுதங்களோடு நின்றிருந்த ஆட்களைக் கவனித்துவிட்ட பேருந்து ஓட்டுநர், பதறிப்போய் வண்டியை வேகப்படுத்தினார். பேருந்தில் அரைத் தூக்கத்திலிருந்தவர்கள்கூட கண்விழித்து சாலையில் நடக்கும் கொடூரத்தைப் பார்த்து அலறினார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட வண்டியிலிருந்து இறங்கிய டிரைவர், கருப்பைக் கையெடுத்துக் கும்பிட்டான். அவனை இழுத்து சாலையின் ஓரமாகத் தள்ளிவிட்ட கருப்பு “ராசேந்திரா, வெரசா வண்டில ஏறி ஸ்டார்ட் பண்ணு…” எனத் தன் பங்காளி ஒருவனுக்கு உத்தரவிட்டான்.

ராஜேந்திரன் வண்டியில் ஏறப்போக, அதேநேரத்தில் வேனின் பின் கதவுகள் திறக்கும் சத்தம் கேட்டது. கருப்புவும் அவன் ஆட்களும் குழப்பத்தோடு திரும்பிப் பார்க்க, வேனின் பின்பக்கத்திலிருந்து திமுதிமுவென பத்திருபது பேர் இறங்கினார்கள். வாள்களும் அரிவாளும் ஏந்திய அந்தக் கூட்டத்தில் அம்சவல்லியின் தம்பியும் ராகவனும் இருப்பதை கவனித்துச் சுதாரித்துக்கொண்ட கருப்பு, தான் சூழ்ச்சியில் விழுந்திருப்பதைத் தெரிந்துகொண்டு காட்டுக்குள் ஓடத் தொடங்கினான். அவனோடு வந்தவர்கள் என்ன செய்வதெனத் தெரியாமல் பரபரக்க, அவர்களைத் திரும்பி பார்க்காமலேயே,

“எலேய் இது நாம அவய்ங்களுக்குப் போட்ட லைன் இல்ல. அவய்ங்க நம்மளுக்குப் போட்ட லைன்… தப்பிச்சு ஓடிருங்கடா…” எனக் கத்தியபடியே கருப்பு காட்டுக்குள் எகிறினான். சாலையோரத்தில் கிடந்த அடிவாங்கிய டிரைவர், இடுப்பிலிருந்து கத்தியை உருவிக் குத்தவர, லாகவமாக விலகிய கருப்பு தன்னிடமிருந்த பட்டாக்கத்தியை அந்த டிரை வரின் கழுத்தில் இறக்கினான். கழுத்தின் இடது பக்கத்தில் நுழைந்து வலது பக்கமாய் வெளியேறும் படியான ஆழமான குத்து. டிரைவர் ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிய, அருகிலிருந்த தென்னந் தோப்புக்குள் கருப்பு குதித்தோடி மறைந்தான்.

ரெண்டாம் ஆட்டம்! - 64

வண்டியைச் சுற்றி நின்றி ருந்த கருப்பின் பங்காளிகள் ஆளுக்கொரு திசையில் ஓட, அம்சவல்லியின் ஆட்கள் கொலைவெறியோடு துரத்தினார்கள். வண்டி யிலிருந்த சரக்கைத் தூக்க வந்த ஆறு பேரில் மூன்று பேர், திசைக்கு ஒருவராக ஓடித் தப்பிக்க, மிச்சமிருந்த மூன்று பேர் மாட்டிக்கொண்டார்கள். அம்சவல்லியின் தம்பி, தன் அப்பா கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை யெல்லாம் தீர்த்துக்கொள்ளும் வெறியோடு வேட்டையாடத் தொடங்கினான். கொல்லப்பட் டவர்களின் உடல்கள் தேசிய நெடுஞ்சாலையில் தலை வேறு கால் வேறாக வெட்டி எறியப் பட்டிருந்தன. அம்சவல்லியின் ஆட்கள் வந்த வேனில் மின்னல் வேகத்தில் தப்பிக்க, ரத்தவாடை தேடி தூரத்திலிருந்து வந்த நாய்கள் ஆக்ரோஷமாகச் சாலையை மறைத்து, குரைத்துக் கொண்டிருந்தன. செய்தியறிந்து மேலூர் காவல் நிலையத் திலிருந்து போலீஸ்காரர்கள் அங்கு வந்தபோது, சாலையில் நீண்ட தூரம்வரை வாகனங்கள் காத்திருந்தன.

கருப்பு, முனுசு, ராஜேந்திரன் மூவரும் சாவை அருகில் கண்டுவிட்ட அச்சத்தில் தப்பி ஓடி காட்டுக்குள் பதுங்கியிருந்தனர். “ஒக்காலி... இந்தவாட்டியும் எழப்பு நம்மளுக்குத்தாண்டா கருப்பு” என ராஜேந்திரன் ஆவேசமாகக் கத்தினான். “ஜெகதியும் செல்வமும் வீரத்தவிடச் சூழ்ச்சிய நம்புறவய்ங்கங்கற உண்மைய மறந்தது நம்ம தப்பு ராசேந்திரா...”

“என்னடா சொல்ற?”

“சரக்க தூக்கப் போறோங்கறது ஆந்திராக்காரனுக்குத் தெரியும். அவன் சொல்றதுன்னா செல்வத்துக்கிட்டதான் சொல்லியிருப்பான். ஆனா இந்த வண்டில இருந்தது யாரு? அம்சவல்லி ஆளுக...”

ராஜேந்திரனுக்கும் முனுசுக்கும் அப்போதுதான் உறைத்தது.

“எதிரிக்கி எதிரி நண்பன்னு சேந்துக்கிட்டாய்ங்கடா கருப்பு...” முனுசு நடுக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் சொல்ல, “ஆமாண்ணே... நாம அழிக்கணும்னு நெனச்சுட்டுதான் இருக்கோம். அவய்ங்க செயல்படுத்திட்டு இருக்காய்ங்க...”

“எத்தன நாளைக்கிடா இப்டி ஓட்றது?”

“இனி ஓடி பிரயோஜனம் இல்ல. வாழ்வோ சாவோ நேருக்கு நேரா நின்னு பாத்துருவோம்.” கருப்பு உறுதியாக ஒரு முடிவெடுத்தவனாகத் தோட்டத்தில் நிறுத்தியிருந்த வண்டியை நோக்கி நடக்க, அவன் பங்காளிகளும் அவனைத் தொடர்ந்து சென்றனர்.

(ஆட்டம் தொடரும்)