அரசியல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 66

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

“எண்ணே சிங்கம் மாதிரி இருந்த ஆளு நீ… எங்கிட்ட கெஞ்சுற மாதிரி வேற யார்கிட்டயும் போயிக் கெஞ்சிடாதண்ணே…

பலமிழந்த யானையை அதன் எதிரிகள்கூட பொருட்படுத்துவதில்லை. எல்லா மிருகங்களும், தங்களுக்கு நிகரான பலமுடைய எதிரியோடு யுத்தம் செய்யவே விரும்புகின்றன. வேட்டையாடுதலையும் யுத்தத்தையும் பிரித்துக்காட்டுவது மிருகங்களுக்கு நடுவிருக்கும் பலம்தான். மூர்த்திக்கும் அறிவழகனுக்கும் காளி இப்போது ஒரு பொருட்டில்லாமல் போனான். ஆனால், சோமுவின் தம்பி பாண்டியனுக்கு இந்த அறமெல்லாம் முக்கியமாக இருந்திருக்கவில்லை. மார்க்கெட்டில் தங்களை எதிர்த்து நின்ற முதல் நாளிலிருந்தே காளி என்பவன் அழிக்கப்பட வேண்டியவன் என்பதுதான் அவனது எண்ணம்.

யாருமே எதிர்க்கத் துணியாத தன்னையும் தனது அண்ணனையும் எதிர்த்து சண்டையிட்டு மார்க்கெட்டைத் தன்வசப்படுத்திக்கொண்ட பிறகு, சோமுவின் குடும்பத்தைச் சூழ்ந்திருந்த சந்தோஷமெல்லாம் காணாமல்போயிருந்தன. தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி, சோமுவின் மரணம் எனப் பதினைந்து வருடங்களில் அந்தக் குடும்பம் எதிர்கொண்ட வீழ்ச்சிகள் ஏராளம். பாண்டியன் கமுதி, பார்த்திபனூர் பக்கத்திலிருந்த தனது சொந்தக்காரர்கள், சாதிக்காரர்கள் எல்லோரையும் பெருமளவில் மதுரைக்கு இடம்பெயரச் செய்தான்.

“ஊர்ல வறக்காட்டுல கெடக்கற காட்டாய்ங்கள ஏண்ணே வேல மெனக்கெட்டு மருதைக்குள்ள கூட்டியாந்துவெக்கிற?” என அவனது தம்பி குமார் குறைபட்டுக்கொண்டான்.

“இவய்ங்கதாண்டா நம்மளுக்கு விசுவாசமா இருப்பாய்ங்க. அங்காளி பங்காளி சாதிக்காரன்னு ஒரு உறுத்து இருக்கும். இத்தன காலம் நம்ம எவ்வளவோ இழந்துட்டோம். இனி எதையும் இழந்துறக் கூடாது...”

பாண்டியன் அடுத்த இருபது வருடங்களுக்காவது மதுரையைக் கட்டியாளும் தனது வெறியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சொன்னான்.

சீமக்கருவேலை மரங்களை வெட்டி, கரிமூட்டம் போட்டுப் பழகிய உரமேறிய கைகளும், வறட்சிக்கும் வறுமைக்கும் பழகிய இறுகிய நெஞ்சமும்கொண்ட பாண்டியனின் சொந்தக்காரன்களுக்குச் சாராயக் கடைகளில் தகராறு இல்லாமல் பார்த்துக்கொள்வது பெரிய காரியமில்லை. வளர்ந்துகொண்டிருந்த மதுரையில் தங்களுக்குள் புதியதொரு தொழில் வாய்ப்பை அடையாளம் கண்டுகொள்ளத் தொடங்கினார்கள். அப்படி ஊரிலிருந்து வந்தவர்களில் மார்நாடு யாராலும் கட்டுப்படுத்த முடியாத சேட்டைக்காரன். முட்டாள்தனமும் முரட்டுத்தனமும் நிரம்பிய அவனிடம் அவனது உறவினர்களே பேசவும் சண்டையிடவும் யோசிப்பார்கள். முள்வெட்டி காப்புக் காய்த்துப்போன கைவிரல்கள் ஒவ்வொன்றும் இரும்புத்துண்டைப் போலிருக்கும். ஒருமுறை செவிட்டில் அறை வாங்கினால் அடிவாங்கியவனுக்குச் செவித்திறன் இல்லாமல் போகும். அத்தனை உறுதியான கைகள் அவனுடையவை. பாண்டியனுக்கு மற்ற எல்லோரையும்விட மார்நாடுதான் நெருக்கமானவன்.

ரெண்டாம் ஆட்டம்! - 66

“அந்த மார்க்கெட்தான்யா எங்களுக்கு எல்லாம். என்னிக்கி அத முழுசா மீட்கறமோ அன்னிக்கித்தான் எங்கண்ணன் சாவுக்கு நியாயம் கிடைச்சாப்ல இருக்கும்” என பாண்டியன் புலம்பும்போதெல்லாம், “எம்புட்டு பெரிய பாறைக்கும் வெடிவெக்கிற விதத்துல வெச்சா மொத்தமா செதச்சு விட்றம்லாம்யா பாண்டியா… கூடிய சீக்கிரம் மார்க்கெட் உன் கைக்குக் கெடைக்க ஏற்பாடு பண்றோம்...” என மார்நாடு ஆறுதலாயிருப்பான்.

சாராயக்கடைகளில் கிடைத்த கொழுத்த வருமானத்தில் கொஞ்சத்தை ஊருக்கு அனுப்பியது போக, மார்நாடும் அவன் பங்காளிகளும் வேறுவிதமாகச் சேமிக்கத் தொடங்கினார்கள். வேறு யாரும் அத்தனை காலம் யோசிக்காததொரு புதிய தொழில் யோசனை அவர்களுக்குள் உதித்திருந்தது. ஒருநாள் கடை முடிந்து எல்லோரும் சாப்பிட்டபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். கோனார் கடை பரோட்டாவோடு சேர்ந்த கறிக்குழம்பு வாசம் அந்தத் தெரு முழுக்க ஆக்கிரமித்திருந்தது. மார்நாடுதான் ஆரம்பித்தான்.

“சென்ட்ரல் மார்க்கெட்ல இருக்க பெரிய யாவாரிய விட்ருவோம். சின்னச் சின்ன யாவாரின்னு பாத்தா எப்பிடியும் இரநூறு பேராச்சும் இருப்பான். இவய்ங்க யாரும் கைல மொதல் வெச்சுக்கிட்டு தொழில் பண்றவய்ங்க இல்ல. அன்னாடம் வர்ற வருமானத்துல மிச்சம் பிடிச்சுத்தான் அடுத்த நாள் யாவாரத்துக்கு சாமான் வாங்குவான்…”

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவன், “அதுக்கு நம்ம என்னய்யா செய்யப்போறோம்?” என்றான்.

“பொறுடா... முழுசாக் கேளு… இப்பிடி அன்னாடங்காச்சிகளுக்கு வாரக் கணக்குல நாம வட்டிக்கிக் குடுக்கலாம். கம்மியான வட்டினு குடுப்போம். நிறைய பொருள் வாங்கற ஆசைல கண்டிப்பா யாவாரிங்க நம்மகிட்ட கடன் வாங்குவானுங்க.”

சுற்றியிருந்த எல்லோருக்கும் சப்பென்று ஆகிவிட்டது.

“அடப் போய்யா நீ வேற… அவய்ங்க வாங்கற அம்பது ரூவா நூறு ரூவா கடனுக்கு நாம வட்டி வாங்கி கோட்டையா கட்ட முடியும்” என இன்னொருவன் சலித்துக்கொண்டான்.

“முட்டாப்பயலே… இரநூறு யாவாரில நூறு பேர் உங்கிட்ட கடன் வாங்கறான்னு வெச்சுக்குவோம். வாரத்துக்கு ஒரு ஆளுகிட்ட இருந்து பத்து ரூவா லாவம்னு வெச்சுக்கிட்டாலும், நூறு பேருக்கு எம்புட்டு ஆகும்னு கணக்குப் போட்டுப் பாரு…”

மார்நாடு அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, கேட்டுக்கொண்டிருந்த எல்லோரின் மனதிலும் பணத்தைக் குறித்த கணக்கு ஓடத் தொடங்கியது. அவர்கள் ஆச்சர்யத்தோடு மார்நாடை பார்த்தார்கள்.

“யேய் சரியான ஆளுதான்யா நீயி… ஆனா, நம்மகிட்ட வட்டிக்கி வாங்குவாய்ங்களா?”

மார்நாடு சிரித்தான்.

“வாங்க வெய்க்கணும். அது மட்டுமில்ல, இந்த யாவாரிங்க மட்டும் நம்மகிட்ட வட்டிக்கிக் காசு வாங்க ஆரம்பிச்சிட்டாய்ங்கன்னா... அதுக்கு அப்பறம் மறைமுகமா அவய்ங்க நம்மளுக்குக் கட்டுப்பட ஆரம்பிச்சிருவாய்ங்க. அன்னிக்கி பாண்டியன்கிட்ட சொன்னன்ல... எம்புட்டு பெரிய பாறையவும் சரியான வெடியவெச்சு நொறுக்கிறலாம்னு… இதான் அந்த வெடி...’’ என்று அவன் சத்தமாகச் சிரிக்க, எல்லோரும் சந்தோஷமாக ஆராவாரம் எழுப்பினார்கள்.

ரெண்டாம் ஆட்டம்! - 66

அத்தனை களிப்பிலும் கொண்டாட்டத்திலும் ஒருவன் மட்டும் சிரித்துக்கொண்டிருந்த மார்நாடை உலுக்கி, “பாண்டியனுக்கு மார்க்கெட்ட மீட்டுக் குடுக்கறதுல நம்மளுக்கு என்னய்யா லாவம்?” எனக் கேட்க, சிரிப்பு மறைந்த மார்நாடு கேட்டவனை ஓங்கி அறைந்தான்.

“ஒக்காலி வறக்காட்டுல கஞ்சிக்குச் செத்துக்கெடந்த நம்மளயெல்லாம் கூட்டியாந்து இங்க உக்காரவெச்சு அழகு பாத்துட்டு இருக்கான். அவனுக்கு விசுவாசமா இருக்கணும்னு நெனப்பில்ல ஒனக்கு…”

ஆங்காரமாக இரைந்த மார்நாடைப் பார்த்த எல்லோருக்கும் கதிகலங்கிப்போனது. அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

“நாளைக்குக் காலைல உன்னய நான் மருதக்குள்ள பாக்கக் கூடாது. ஊருக்கே ஓடிப்போயிரு…” என்று சொன்னபடியே இன்னொருமுறை செவிட்டில் ஓங்கி அறைந்தான். அடி வாங்கியவன் பேச்சு மூச்சின்றி மயங்கி விழுந்தான்.

அறிவழகனைச் சந்திப்பதற்காக காளி நடையாய் நடந்தான். சிறைச்சாலைக்குச் செல்வதற்கு முன்னால் மகனை வெளியே எடுத்துவிட வேண்டுமென்கிற அவனது தவிப்பு நிறைவேறக் கூடியதாயில்லை. வீட்டுக்கும் கட்சி அலுவலகத்துக்குமாக அறிவழகனைத் தேடிச் சென்றபோதெல்லாம் “ஐயா தேனி போயிருக்காரு, ராம்நாட் போயிருக்காரு” என்ற பதில் மட்டுமே அவனுக்குச் சொல்லப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அருளையும் அவன் நண்பர்களையும் பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அறிவழகனை நம்பி பிரயோஜனமில்லை என்பதை தாமதமாக உணர்ந்துகொண்ட காளி, பழக்கமான வழக்கறிஞரின் மூலமாகத் தன் மகனை ஜாமீன் எடுக்கப் போராடினான்.

“வக்கீலய்யா அவென் சின்னப் பையன்… எப்பிடியாச்சும் வெரசா ஜாமீன் வாங்கிருங்க…”

இத்தனை காலமில்லாத பதற்றமும் அச்சமும் சூழ்ந்திருந்த காளியைப் பார்க்க வக்கீலுக்குப் பரிதாபமாயிருந்தது.

“எண்ணே சிங்கம் மாதிரி இருந்த ஆளு நீ… எங்கிட்ட கெஞ்சுற மாதிரி வேற யார்கிட்டயும் போயிக் கெஞ்சிடாதண்ணே… உன்னய ஒருதடவ பாத்துர மாட்டமா, ரெண்டு வார்த்த பேசிர மாட்டமான்னு மருதக்குள்ள இன்னிக்கும் எத்தனையோ பேர் தவிச்சுக்கிட்டு இருக்காய்ங்க. நீ அப்பிடியே இருண்ணே.. இதுக்காகவெல்லாம் கவலப்படாத. அருளோட ஜாமீன நான் பாத்துக்கறேன்… நீ விட்டத பிடிக்கப் பாரு...’’ என்ற வக்கீலின் வார்த்தைகளிலிருந்த உண்மை காளிக்கும் உரைத்தது. மரியாதையைக் கெஞ்சிக் கேட்டு பெற்றுக்கொள்ள முடியாது. எதிர்த்துச் சண்டையிட்டுத்தான் சம்பாதிக்க வேண்டும். துணைக்கு ஒருவருமில்லாமல் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியேயிருந்த மரத்தடியில் நின்றிருந்தவனுக்குள், கொஞ்சம் தலை நரைத்திருந்ததைத் தாண்டி என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது? உற்ற நண்பர்களை இழந்தாலும் உள்ளத்தில் பொங்கும் ரெளத்திரமும் உடலில் திமிறும் பலமும் பொய்யா? காலுக்குக் கீழிருந்த நிலத்தை காளி அழுத்தமாய் மிதித்தான். ‘இந்தக் கால்கள் பிரச்னைகளைக் கண்டு ஓடும் குணமுடையவை அல்ல. யாரிடமும் மண்டியிட்டவை அல்ல. எதிர்த்து நில் காளி…’ என்றொரு குரல் அவன் செவிப்பறைகளிலும் மனதிலும் தொடர்ந்து ஒலிக்க, வேஷ்டியைத் தூக்கி மடித்துக் கட்டிக்கொண்டவன் தூரத்தில் நின்றிருந்த தனது புல்லட்டை நோக்கி நடந்தான்.

(ஆட்டம் தொடரும்)