மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 67

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

“அண்ணே... அவய்ங்க பலம், பலவீனமெல்லாம் இப்ப நம்மளுக்குத் தெரியும், இனியும் தள்ளிப்போட்டம்னா சரியா இருக்காது. மொத்தமா இறங்கிடலாம்.”

பெரும் போராட்டத்துக்குப் பிறகு அருளுக்கு ஜாமீன் கிடைத்தது. நாற்பது நாள்கள் சிறைச்சாலையின் இருண்ட சுவர்களையும், இரக்கமற்ற முரட்டு மனிதர்களையும் பார்த்துப் பழகியிருந்தவனுக்கு உடலும் மனமும் இறுகிப்போயிருந்தன. விதிவசத்தால் செய்யும் தவறுகளுக்காகச் சிறைக்குச் செல்கிறவர்களுக்கும், குற்றத்தை விரும்பிச் செய்து சிறை செல்கிறவர்களுக்கும் சிறைச்சாலை வெவ்வேறான அனுபவங்களையே பரிசளிக்கிறது. முதலாவது வகை ஆட்கள், இனி ஒருபோதும் குற்றத்தின் பக்கமாகச் செல்லவே கூடாதென்கிற அச்சத்தோடு தண்டனையைக் கழிக்கிறார்கள். இரண்டாவது வகையான ஆட்கள், குற்றங்களைச் செய்வதிலிருக்கும் விநோத போதையுணர்ச்சியின் உச்சத்தைச் சிறைச்சாலையில் கண்டுகொள்கிறார்கள்.

தனது கடையைக் காப்பாற்றிக்கொள்ள அறிவு மேற்கொண்ட முதல் சண்டை விளையாட்டுத்தனமானது. திருட்டுத்தனமாகச் சரக்கு ஓட்டுகிறவர்கள் அவனுடைய எதிரிகள் அல்ல, எதிரிகளிடம் கூலிக்கு இருப்பவர்கள். அவர்களை தண்டிப்பதற்கு பதிலாக, எச்சரித்தால் மட்டும் போதுமென்கிற தெளிவோடுதான் கைகளை மட்டும் எரித்துவிட்டான். தான் செய்வது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மட்டுமே என்கிற எண்ணம் கண்மூடித்தனமான துணிச்சலைத் தந்திருந்தது. கண்மூடித்தனமான அந்தத் துணிச்சலுக்குப் பலனில்லாமல் இல்லை. ஆனால் அது தற்காலிகமானது.

ரெண்டாம் ஆட்டம்! - 67

சிறைச்சாலையில் அதுவரையில்லாத தனிமை சூழ்ந்துகொண்டதால், தற்காலிகமாகத் தனிமை உணர்ச்சியிலிருந்து தப்பித்துக்கொள்ள போதையைத் தேர்ந்தெடுத்தான். கட்டுப்பாடுகளும் நெருக்கடிகளும் அதிகரிக்கும்போது, போதைதான் விடுதலையைக் கொடுக்கிறது. ‘பி’ பி்ளாக்கிலிருந்து எல்லா பிளாக்குகளுக்கும் கஞ்சா பொட்டலங்கள் சிரமமின்றி அனுப்பி வைக்கப்பட்டன. கன்விக்ட் வார்டர்களும், நீண்டகால ஆயுள்கைதிகளும் அந்த வியாபாரத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மாலை சூரிய அஸ்தமனத்தோடு எல்லோரும் செல்லுக்குள் அடைக்கப்பட்டால், மீண்டும் சூரிய உதயத்தின்போதுதான் கதவுகள் திறக்கப்படும். நீண்ட இரவுகளை முதல் சில நாள்கள் உறங்கிக் கடத்திவிட முயன்றான். சாத்தியமில்லாததோடு, சிறையின் உணவுகள் ஒத்துக்கொள்ளாமல் அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நான்கு நாள்களிலேயே உடல் சோர்ந்துவிட, தனது செல்லிலிருந்த சக கைதிகளின் வழிகாட்டலில் கஞ்சாவை எடுத்துக்கொள்ளத் தொடங்கினான். கஞ்சாவின் புகை முதலில் அவனை நிலைகுலையச் செய்தது. உடல் சோர்வு நீங்கி, பசி அதிகரித்து, கிடைத்ததையெல்லாம் தின்னத் தொடங்கினான். உடலில் சோர்வும் அசதியும் விலகி தினவெடுக்க, இரண்டு வாரங்களுக்குள்ளேயே புதுவிதமான முரட்டுத்தனங்கள் அவனுக்குள் பிறந்திருந்தன.

தனிமையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக எடுத்துக்கொண்ட கஞ்சாவின் போதை, எதிரிகள் மீதான வன்மத்தையும் வெறியையும் அதிகரிக்கச் செய்தது. காளி ஒரே நேரத்தில் தங்களை மீட்கவும் மார்க்கெட்டைத் தக்க வைத்துக்கொள்ளவும் ஒற்றை ஆளாகப் போராடிக்கொண்டிருப்பதை நினைத்து அருள் கவலையுற்றான்.

“நாம அசந்த நேரமாப் பாத்து கூட்டத்தோடு முடிச்சுவிடப் பாக்குறாய்ங்களா... வெளிய போனதும் ஒருத்தன விடாம கருவறுக்கணும்…” எனக் கொந்தளிக்கும் அருளைப் பார்க்க அவனது நண்பர்களுக்கு அச்சமாயிருக்கும். “எலேய் அருளு… போதைல அதையும் இதையும் ஒளறாத… இந்த ஜெயில் சுவத்துக்கு நிறைய காது இருக்கு. நாம பேசற எல்லாத்தையும் ஒட்டுக் கேட்கும். எப்போ, எப்பிடி தகவல் வெளிய போகும்னு தெரியாது. நம்மளுக்கு முன்னாடி நம்ம எதிரிங்க சுதாரிச்சுருவாய்ங்க…” என அவனை மட்டுப்படுத்த முயன்றார்கள். அவர்கள் அருகிலிருக்கும் நேரத்தில் அமைதியாக இருப்பவனுக்கு, இரவில் தனித்துவிடப்படும்போது வெஞ்சினம் மீண்டும் தலைதூக்கிவிடும்.

சாராயக்கடை சலசலப்புகள் முடியும் முன்பாகவே, பாண்டியனின் ஆட்கள் காளியின் பிற தொழில்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் தலையிட்டு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். சாராயக்கடை சண்டை வழக்கில் ஜாமீன் கிடைத்திருந்த அருளும் அவன் நண்பர்களும் ஒரு மாதகாலம் ஓசூர் காவல் நிலையத்தில் தங்கி கையெழுத்து போட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் ஓசூரிலிருந்தார்கள். மதுரையின் வெக்கைக்குப் பழக்கப்பட்டுப்போன உடல், ஒசூரின் குளிர் தாங்காமல் துவண்டது. இரண்டாவது நாளே அருளுக்குக் கடுமையான காய்ச்சல் கண்டதால், அவன் ஊரில் நடக்கும் செய்திகள் எதையும் விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியாமல் முடங்கிப்போனான். உடல் குணமாகி பத்து நாள்களுக்குப் பிறகு, காளிக்கு போன் செய்து பேசினான். “அருளு... நான் சொல்ற வரைக்கும் நீ அங்கியே இரு…” என காளி அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். “எப்பா உன்னய அங்கனக்குள்ள தனியா விட்டுட்டு நான் இங்க என்ன செய்வேன்? கண்டிஷன் கையெழுத்து முடிஞ்சதும் மருதைக்கி வந்துருவேன்...” என இவன் பிடிவாதமாகச் சொல்ல, “எலே வெண்ண... சொல்றத மட்டும் செய்யிடா… பெரிய புடுங்கி மாதிரி பதிலுக்குப் பதில் பேசாத…” என காளி ஆத்திரப்பட, பதில் சொல்லாமல் அருள் இணைப்பைத் துண்டித்தான். காளியைச் சுற்றி எதுவும் சரியாயில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

மார்நாடின் கணக்குப் பொய்க்கவில்லை. மார்க்கெட்டிலிருந்த சிறு வியாபாரிகள் பெரும்பாலானவர்களும் அவர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கத் தொடங்கியிருந்தார்கள். “அப்புச்சி... ஒரு அவசரமும் இல்ல, உங்களுக்குத் தோதுப்படறப்போ துட்டத் திரும்பக் குடுங்க…” என எல்லோரிடமும் தன்மையாகப் பேசும் மார்நாடு, ஏலத்துக்கோ போட்டிக்கோ செல்லாமல் சாமர்த்தியமாக மார்க்கெட்டுக்குள் தனது ஆதிக்கத்தை விதைக்கத் தொடங்கினான். மார்க்கெட்டுக்குள் அவனது செல்வாக்கு ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதோடு, தனது ஆட்களை விசுவாசமாக இருக்கச் சொல்லி கண்டித்த சம்பவமும் தெரிந்து பாண்டியன் நெகிழ்ந்துபோயிருந்தான்.

“ஏய் பங்காளி... இத்தன வருஷமா எங்களுக்குக்கூட இப்பிடியொரு யோசன வரலையேடா…” என பாண்டியன் மார்நாடை மனதாரப் புகழ்ந்தான்.

“ஏப்பு, என்னய இம்புட்டுத் தூரம் கூட்டியாந்து, உக்காரவெச்சு, நல்லது கெட்டது செய்றீக… உங்களுக்கு எது தேவையோ அத நீங்க கேக்காமலேயே முடிச்சுக் குடுக்கணும்ல… மார்க்கெட்டப் பத்தி இனிமே நீங்க கவலையே படாதீங்க. நான் பாத்துக்கறேன்...” என மார்நாடு அடக்கமாகச் சொல்வான்.

அருள் தகராறு செய்ததன் காரணமாக, செல்லூர் பாலத்தினருகே இருந்த காளியின் சாராயக்கடை சீல்் வைக்கப்பட்டிருந்தது. பெரிய வருமானம் வரக்கூடிய கடை அடைக்கப்பட்டு விட்ட வருத்தத்திலிருந்து மீள்வதற்கு முன்பாகவே மார்க்கெட்டுக்குள் பாண்டியனின் ஆட்கள் ஊடுருவிக்கொண்டிருக்கும் செய்தியும் அவனுக்கு வந்து சேர்ந்தது. யாரிடம் சண்டையிடுவது... எதைக் காப்பாற்றிக்கொள்ள சண்டையிடுவது? தன்னைச் சுற்றி ஒவ்வொரு நாளும் பூதாகரமாகும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் திராணியின்றி காளி ஸ்தம்பித்துப்போகத் தொடங்கினான்.

ரெண்டாம் ஆட்டம்! - 67

“காளி, உன்னயச் சுத்தி இருக்க எல்லா துன்பம் தொரட்டையும் கவனிச்சுட்டுதான் இருக்கேன். ஆனா, ஒண்ணை மட்டும் யாவகத்துல வெச்சுக்க. இந்த மார்க்கெட் உங்கிட்ட இருக்கணும். இது வந்ததுக்கு அப்பறந்தான் உனக்கு உன் வாழ்க்கைல எல்லாம் கெடச்சுது. இத மட்டும் எப்பயும் விட்றாத… மார்க்கெட்டுக்குள்ள பூராம் கமுதிக்காரய்ங்க தாட்டியம்தான். முழுசா கைமீறிப் போறதுக்குள்ள சுதாரிச்சுக்கோ…”

கட்டப்பெருமாள் அண்ணன் அவன் மீதிருந்த அக்கறையிலும் அன்பிலும் எச்சரித்துவிட்டுப்போனார். “சரிண்ணே... நான் பாத்துக்கறேன்” என அவருக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு யோசித்த காளியின் சிந்தனையிலிருந்து சாராயக்கடைகளும், பிற வியாபாரங்களும் மெல்ல மறைய, மார்க்கெட்டின்மீது கவனம் விழுந்தது. யார் கைவிட்டாலும் தனது ஊரும் ஊர் மக்களும் கைவிட மாட்டார்கள் என்கிற நினைப்பு வர, ஊரிலிருக்கும் தன் மச்சினனுக்குத் தகவல் சொல்லி அனுப்பினான். அடுத்த நாளே சிந்துபட்டியிலிருந்து காய்கறி வியாபாரிகளாக அவனது உறவினர்கள் மார்க்கெட்டுக்குள் இறங்கினார்கள்.

சிந்துபட்டியிலிருந்து வந்திருந்த காளியின் ஆட்கள் மார்க்கெட்டுக்குள் வெவ்வேறு கடைகளில் வேலை செய்வதுபோல், பாண்டியனுடைய ஆட்களின் போக்குவரத்தைக் கண்காணிக்கத் தொடங்கினார்கள். வாரத்தில் எந்தெந்த நாள்களில் வருகிறார்கள், எத்தனை பேர் வருகிறார்கள், யாரெல்லாம் அவர்களிடம் வட்டிக்கு வாங்குகிறார்கள் என்கிற எல்லா விவரங்களையும் சேகரித்துக் கொண்டவர்கள், காளியிடம் எல்லாவற்றையும் ஒப்பித்தார்கள். “அண்ணே, அவய்ங்களும் ஊர்லருந்து பெரிய போர்ஸா வந்துருக்காய்ங்கபோல, ஆனா மார்க்கெட்டுக்குள்ள வசூலுக்கு வர்றது ரெண்டு மூணு பேருதான். மார்நாடுன்னு ஒருத்தன்தான் மொத்த கூட்டத்துக்கும் தலைவன் மாதிரி இருக்கான். யாவாரிக காசு வாங்கலைன்னாலும், அவய்ங்களே வலிய சிரிச்சுப் பேசி குடுக்கறாய்ங்க. அவய்ங்க நோக்கம் வட்டிக்கு விட்றதா தெரியல… இருக்கற சிறு வியாபாரிக அம்புட்டு பேரையும் உனக்கு எதிரா திருப்பற மாதிரிதான் தெரியுது…” காளி எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டான்.

அவனிடமிருந்து தாக்குதலுக்கான எந்த உத்தரவும் வரவில்லை என்பதை ஏமாற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்த அவனது உறவினன், “அண்ணே... அவய்ங்க பலம், பலவீனமெல்லாம் இப்ப நம்மளுக்குத் தெரியும், இனியும் தள்ளிப்போட்டம்னா சரியா இருக்காது. மொத்தமா இறங்கிடலாம்” எனப் பரபரத்தான். அவனை அமைதிப்படுத்தும்படியாக காளி, “இல்ல வேம்பு… கொஞ்சம் பொறுமையா இரு… அவய்ங்க நாம எப்ப எறங்குவம்னுதான் காத்துட்டு இருப்பாய்ங்க. கொஞ்ச நாளைக்கி எதும் செய்ய வேணாம். நீங்க ரெண்டு செட்டா பிரிஞ்சிருங்க. ஒரு செட்டு, இங்க மார்க்கெட்ட பார்த்துக்கங்க. இன்னொரு செட்டு, பாண்டியன் மருதக்குள்ள எங்கல்லாம் பவுசு வாங்கறான், சைக்கிள் ஸ்டாண்ட், கக்கூஸு எதெல்லாம் அவன் கன்ட்ரோல்ல இருக்குன்னு நோட்டம் பாருங்க. நாம அடிச்சம்னா அடி ஒரு இடத்துல மட்டும் விழுகக் கூடாது. ஒரு விஷயத்த நல்லா தெரிஞ்சுக்கங்க. அவய்ங்களுக்குப் பின்னாடி அறிவும், அவன் கட்சியும் சப்போர்ட்டுக்கு இருக்கு. எம்புட்டுத் தூரத்துக்கு வேணும்னாலும் எறங்கிச் செய்வாய்ங்க” எனச் சொல்லி முடிக்க, “ராணுவமே பின்னாடி இருக்கட்டும்ணே… உனக்குப் பின்னாடி நாங்களும் நம்ம ஊரும் இருக்கம்ணே… தைரியமா இரு” என்றபடியே காளியின் உறவினன் சிரித்தான்.

(ஆட்டம் தொடரும்)