அலசல்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 69

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

“பொய் சொல்லாத…. நாம இந்த நெலமைல இருக்கக் காரணம் செல்வம். நீ அவனையே எப்பிடி கழட்டிவிடுறதுன்னு பாத்துட்டு இருக்க. ஆனா இவய்ங்ககிட்ட ஏன் ஒட்டப் பாக்கற?”

வீடு முழுக்கச் சிரிப்பும் கும்மாளமும் நிரம்பியிருந்தன. ஆண்டிச்சாமியின் பழைய வீடு. எதிரிகளுக்கும் பகைக்கும் பயந்து கைவிட்டோடிய நீண்டகாலத்துக்குப் பிறகு திரும்பியதால் பெருகிய மகிழ்ச்சியின் விளைவான சிரிப்பொலி. ஆண்டிச்சாமியின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் எனப் பெருங்கூட்டத்தைக் கூட்டி விருந்து கொடுத்துக்கொண்டிருந்தனர். வாழ்ந்து கெட்டவர்கள், இன்னொரு முறை சீரும் சிறப்புமாக வாழக் கொடுத்துவைப்பது அபூர்வத்திலும் அபூர்வமாக நடக்கக்கூடிய ஒன்று.

அந்தக் குடும்பம் இழப்புகளிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டதால், இனம் புரியாத மகிழ்ச்சியிலும் வெற்றிக்களிப்பிலும் திளைக்கத் தொடங்கியது. முற்பகல் வெயிலின் வெளிச்சம் ஜன்னல் வழியாகப் படர, ஜெகதி முன்னால் நின்று எல்லோருக்குமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். நெற்றியிலும் கழுத்திலும் வியர்வை ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருக்க, ஆண்டிச்சாமியின் குடும்பத்து ஆட்கள் அவளை அதிசயமும் ஆச்சர்யமுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“எத்தா ஜெகதி, உன்னய நாங்க விருந்துக்குக் கூப்ட்டா... நீ எங்களுக்கும் சேத்து ஆக்கிப்போட்டுட்டு இருக்க?” ஆண்டிச்சாமியின் மனைவி மனம் பூரித்தவளாகக் கேட்டாள்.

“நீங்க விருந்துக்குன்னு கூப்டப்ப இம்புட்டுப் பேரு வருவாங்கன்னு எனக்குத் தெரியாது. இங்க வந்து பாத்தா ஒரு ஊரே திரண்டிருக்கு. உங்கள சமைக்க விட்டுட்டு நான் அங்க உக்காந்து வாயப் பாத்துட்டு இருந்தா நல்லாவா இருக்கும்…”

ஜெகதி அவளைப் பார்த்துப் பேசக்கூட பொறுமையில்லாதவள்போல் ஆட்டுக்கறிக் குழம்பைச் செய்வதில் தீவிரமாக இருந்தாள்.

“எல்லாம் சரித்தா, குழம்புக்குத் தனி மசாலு, சுக்காவுக்கு தனி மசாலுன்னு எல்லாத்தையும் உன் கையாலயே செய்யணுமா?”

ரெண்டாம் ஆட்டம்! - 69

“என்ன இப்பிடி சொல்லிட்டிய... எதுல வேணாலும் கொற வெக்கலாம், விருந்துல கொற வெக்கலாமா? அதும் இந்த மாதிரி கவுச்சி சமைக்கிறப்ப மணக்க மணக்க செஞ்சாத்தான செய்ற நம்மளுக்கும் சந்தோசம், சாப்டறவய்ங்களுக்கும் சந்தோசம்...”

அடுப்பிலிருந்த பெரிய வாணலியில் நிறைய நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்கத் தயாராகிக்கொண்டிருந்தாள். வெந்தயம், கடுகோடு கறிவேப்பிலை சேர்ந்து தாளிக்கும் மணம் வீட்டை நிறைத்தது. கொதிக்கும் குழம்பில் தாளித்ததைச் சேர்த்தவள், சின்னக் கரண்டியில் கொஞ்சம் குழம்பை அள்ளினாள்.

“கைய நீட்டுங்க...” என ஆண்டிச்சாமியின் மனைவியிடம் சொல்ல, அந்தப் பெண் சேலையில் ஒரு முறைக்கு இரு முறை கையைத் துடைத்துவிட்டு நீட்ட, ஜெகதி கொதித்து அடங்கிய கறிக்குழம்பை ஊற்ற, அந்தப் பெண் நாக்கால் குழம்பைத் தீண்டினாள். உப்பு, ஒரப்பு எதுவும் மிஞ்சாத கச்சிதத்தோடும், இதுவரை சுவைத்துப் பார்த்திராத விநோதச் சுவையோடுமிருந்தது அந்தக் குழம்பு. கறிக்குழம்பின் சுவை நாக்கிலிருந்து பிரிந்து உடலெங்கும் நரம்புகளில் ஓடியது. “எத்தா எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லருந்து இம்புட்டு ருசியா கறிக்குழம்பு தின்னதேயில்ல. எங்க வீட்லருந்த பொருளையெல்லாம் வெச்சுதான நீயும் சமச்ச, அப்பறம் எப்பிடி இப்பிடி ஒரு ருசி…’’ நாவில் படிந்துபோன சூட்டையும் மீறி, ஜெகதிவைத்த குழம்பின் ருசியும் மணமும் அந்தப் பெண்ணை வசீகரித்திருந்தது.

“ருசி குழம்புல சேக்கற பொருள்ல மட்டுமில்லம்மா... சமைக்கிறவங்களோட கையிலயும் இருக்கு...” ஜெகதி அவளைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள்.

வீதியை மறைத்துப் பந்தல் போட்டிருந்ததால், விருந்துக்கு வந்திருந்தவர்களின் வாகனங்கள் தெரு முனையிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. ஆள் வரத்தின்றி பல வருடங்களாக இருண்டுகிடந்த வீட்டில், திடீரென ஆளும் பேருமாய்க் கூடித் திரிந்ததை அந்த வீதியிலிருந்தவர்கள் ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வீட்டின் முதல் மாடியில் ஆண்டிச்சாமியின் குடும்பத்தினரும், ஜெகதியின் ஆட்களும் வெக்கையைப் பொருட்படுத்தாது மதுவருந்திக்கொண்டிருந்தார்கள். ஆண்டிச்சாமியின் மகனுக்குத்தான் எல்லோரிலும் கூடுதலான போதை தேவையாயிருந்தது. ஜெகதியின் தம்பி சுரேஷ், செலவு பார்க்காமல் வெளிநாட்டுச் சாராயத்தை வாங்கி வந்திருந்தான். அவன் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட ஆண்டிச்சாமியின் மகன், போதையிலும் ஆற்றாமையிலும் அழுது தீர்க்கத் தொடங்கினான். “சுரேஷு... சொன்னா நம்புவியோ, நம்ப மாட்டியோ... உங்க அக்காவப் பாக்கறப்பல்லாம் எனக்கு எங்க அக்காவப் பாக்கற மாதிரியே இருக்குதுய்யா… எங்க அக்காவும் இப்பிடித்தான். வீம்பு புடிச்சது, யாருக்கும் எதுக்கும் அஞ்சாது. ஒத்த ஆளா கடைசி வரைக்கும் கோட்டச்சாமிக்குக் கொடச்சலக் குடுத்துட்டே இருந்துச்சு… ஆனா காப்பாத்த முடியாம சாகக் குடுத்துட்டம்யா…” அக்காவைப் பிரிந்த துயரத்திலும், இழந்தவை எல்லாம் கிடைத்த மகிழ்ச்சியிலும் அழுதுகொண்டிருந்தான்.

“இந்தா... இன்னிக்கி சொத்து, சொகம் எல்லாம் வந்திருச்சு, அனுபவிக்க எங்கக்கா இல்லயேய்யா… சாகக் குடுத்துட்டமே… ஐயோ… மாமா… எங்கக்காவச் சாகக் குடுத்துட்டமே…” என ராகவனைப் பார்த்தும் சத்தமாக அழுவதற்கும், ஜெகதி பெரிய பாத்திரத்தில் சமைத்த மட்டன் சுக்காவை எடுத்து வருவதற்கும் சரியாக இருந்தது. ராகவனைப் பார்த்து அழுதுகொண்டிருந்த அம்சவல்லியின் தம்பி, இப்போது ஜெகதியைப் பார்த்து முன்னிலும் சத்தமாக அழத் தொடங்கினான். “ஜெகதி அக்கா… என் சாமி அம்சவல்லிய உரிச்சுவெச்ச மாதிரி இருக்கியேக்கா…. கொணத்துலயும் மொகத்துலயும் நீ அப்பிடியே அம்சவல்லிதான்…” என அவளின் கைகளைப் பற்றி அழ, ஜெகதி திரும்பித் தன் தம்பியைப் பார்க்க, அவன் எந்த உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளாமல் வேறு பக்கமாகத் திரும்பிக்கொண்டான்.

“ஏ தம்பி, முடிஞ்சத நெனச்சு அழுதுக்கிருந்தா சரியாப்போகுமா... விடுய்யா… யாரெல்லாம் உங்க குடும்பத்துக்கு வில்லங்கமா இருந்தாய்ங்களோ எல்லாத்தையும் ஓச்சு விட்ருவோம்…” என்றபடியே ஜெகதி லாகவமாக அவனிடமிருந்து தனது கைகளை உருவிக்கொண்டாள்.

சுற்றிலும் அமர்ந்து மதுவருந்திக்கொண்டிருந்தவர்கள், அவனின் அழுகையைப் பொருட்படுத்துவதை மறந்து, மட்டன் சுக்காவின் மணத்துக்கும் சுவைக்கும் கட்டுப்பட்டவர்களாக ஒரு மிடறு அருந்துவதும், இரண்டு வாய் கறியைத் தின்பதுமாக இருந்தார்கள். ஜெகதி எழுந்துகொண்டு அங்கிருந்து கிளம்ப யத்தனிக்க, அம்சவல்லியின் தம்பி விடாப்பிடியாக மீண்டும் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான்.

“எக்கா, எங்களுக்கு இம்புட்டு செஞ்சிருக்க. உனக்கு என்னிக்குமே விசுவாசமா இருப்பம்க்கா… நீ செத்தவடம் இங்கியே உக்காரு…”

ஜெகதிக்கு அந்தச் சூழல் ஒவ்வாமையைக் கொடுத்தது. சுற்றிலுமிருந்த ஆண்களின் கண்கள் போதையில் தன்னையும் தன்னுடலையும் மேய்ந்தலைவதைப் புரிந்துகொண்டாள். ஆண்களின் கண்களில் கொப்பளிக்கும் இந்த வெறியும் தாபமும் அவள் வெறுக்கும் ஒன்று. தன்னுடைய தாபத்தைத் தீர்த்துக்கொள்ள ஆண் எந்த எல்லைக்கும் செல்வானென்கிற கடந்தகால அனுபவங்கள் கசப்பாக அவளுக்குள் படிந்துபோனதால், ஆண்களின் மீது அவள் எந்தவிதமான மரியாதையையும் கொண்டிருப்பதில்லை. அம்சவல்லி தம்பியின் பிடிவாதம் ஜெகதிக்குள் எரிச்சலை அதிகமாக்கியது. “தம்பி, நீங்க ஆம்பளையாளுகளா தண்ணி போட்டுட்டு இருக்கீங்க. நான் நடுவுல உக்காந்துட்டு இருந்தா நல்லாருக்காது… நீங்க குடிச்சு முடிச்சுட்டு வெரசா கீழ வாங்க…” என்றபடியே அவசரமாக அங்கிருந்து கிளம்பிவிட்டாள். படியிறங்கும்போதும் தன் முதுகைத் தொடர்ந்த ஆண்களின் பார்வையை அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது. மானை வேட்டையாடத் துடிக்கும், பசிகொண்ட சிறுத்தையின் இரக்கமற்ற கண்கள் அவை.

ரெண்டாம் ஆட்டம்! - 69

வெயிலேறிய உக்கிரமான பிற்பகலில் எல்லோரும் சாப்பிட உட்கார, மணக்க மணக்க விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. ஜெகதி இப்போதும் முன்னாலிருந்து எல்லோருக்கும் பரிமாறிக்கொண்டிருந்ததைப் பார்க்க, அவளுடைய தம்பிக்கு ஆச்சர்யமாகவும், எரிச்சலாகவுமிருந்தது. எதற்காக இதையெல்லாம் செய்கிறாள் என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்கிற பரபரப்பை உடலில் கலந்திருந்த மது அதிகப்படுத்திக்கொண்டிருந்தது. முதல் வரிசை ஆட்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்க, அவன் ஜெகதியைத் தனியாக அழைத்துச் சென்றான். ஆளற்ற வீட்டின் பின்கட்டுக்கு இழுத்துச் சென்றவனைப் புரியாமல் பார்த்த ஜெகதி “எலேய் இம்புட்டு அவசரமா இப்ப எங்க இழுத்துட்டுப் போற?” என எரிச்சலோடு கேட்டாள். “ஜெகதி உன் போக்கு ஒண்ணும் சரியாப்படல… இவய்ங்ககூட நம்மளுக்கு ஒட்டும் இல்ல, ஒறவும் இல்ல. நீ எதுக்கு மாஞ்சு மாஞ்சு எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு இருக்க?” யாரும் கேட்டுவிடக் கூடாதென்கிற எச்சரிக்கையோடு சத்தமில்லாமல் கேட்டான். ஜெகதி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். “உன்னயத்தான் கேக்கறேன்… மலமாடு மாதிரி நிக்காம பதில் சொல்லு…”

“ஒரு காரணமும் இல்லடா… யாரோட ஆதரவும் இல்லாம, இந்த ஊருக்குப் பொழைக்க வந்தோம். இன்னிக்கி ஏதோ நம்மளுக்குன்னு ஒரு தொழில், கொஞ்சம் வருமானம்னு இருக்கு. அது எப்பயும் இருக்கணும்னா நாலு பேர அனுசரிச்சுத்தானடா போகணும்...”

“பொய் சொல்லாத…. நாம இந்த நெலமைல இருக்கக் காரணம் செல்வம். நீ அவனையே எப்பிடி கழட்டிவிடுறதுன்னு பாத்துட்டு இருக்க. ஆனா இவய்ங்ககிட்ட ஏன் ஒட்டப் பாக்கற?”

“எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒளறாத. எந்த நெலையிலையும் நான் செல்வத்த கைவிடுற ஆள் இல்ல…”

“வெவரம் தெரிஞ்ச வயசுலருந்து உன்னயப் பாத்துட்டு இருக்கேன் ஜெகதி... வேற யாரையும்விட எனக்குத்தான் உன்னய நல்லாத் தெரியும்… உன் மனசுல என்ன நெனப்பு ஓடுதுன்னு எனக்குத் தெரியல… ஆனா ஒண்ணை யாவகம் வெச்சுக்க… கோட்டச்சாமி ஒனக்குக் கெடுதல் செஞ்சான், அதனால அவன அழிச்ச. அதுவரைக்கும் நீ செஞ்சதெல்லாம் நியாயம். ஆனா, அதுக்கப்பறம் நீ செஞ்ச எதுவுமே நியாயமில்ல. உன் வளர்ச்சிக்காக என்ன வேணாலும் செய்யணும்னு போனேயின்னா உனக்குன்னு ஒருத்தரும் இருக்க மாட்டாய்ங்க…”

ஜெகதிக்குப் பொறுக்க முடியவில்லை. “எலேய் மயிரு… நம்ம அப்பன் சாகறப்போ கஞ்சிக்கு மட்டுந்தாண்டா நம்மகிட்ட இருந்துச்சு. நம்ம தம்பி பாவமேன்னு உனக்காகத்தான் பாடுபட ஆரம்பிச்சேன். இப்பவரைக்கும் என் சந்தோசத்தப் பத்தி நெனச்சுப் பாத்திருப்பனாடா?”

சுரேஷ் அவசரமாக இடைமறித்தான். “நானும் அதத்தான் சொல்றேன். நம்மகிட்ட இருக்கறது போதும். நீ செல்வத்த கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் வாழ்க்கைய கவனிக்கப் பாரு… அதான் எல்லாருக்கும் நல்லது.”

முடிவெடுக்க முடியாத குழப்பத்தோடு நின்றிருந்தவளின் கண்கள் கசிந்திருக்க, சுரேஷ் நெருங்கி அவளது கைகளைப் பற்றிக்கொண்டான். “இந்தாருக்கா… கோட்டச்சாமி செத்தப்போ அம்சவல்லி பேர்ல நீ அந்த போஸ்டர ஒட்டினது ஒரு விபத்து… அதுக்காக இந்தக் குடும்பத்துக்கிட்ட நீ இம்புட்டு இறங்கிப்போகணும்னு அவசியமில்ல. எல்லாத்தையும் மறந்துட்டு அடுத்த வேலைய கவனிக்கப் பாரு…” என்றவன், அவளது தோள்களை ஆறுதலாக அணைத்துக்கொள்ள, ஜெகதிக்கு மனதை அரித்துக்கொண்டிருந்த குற்றவுணர்ச்சியெல்லாம் கண்ணீராகப் பெருக்கெடுத்தது.

நீண்ட நேரமாக ஜெகதியைக் காணாமல் தேடிவந்த ஆண்டிச்சாமியின் மனைவி, பின்வாசலில் அக்காவும் தம்பியுமாகப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு தயங்கி நிற்க, அம்சவல்லியின் சாவுக்குப் பின்னாலிருந்த மர்மம் விலகி உண்மை தெரிந்தபோது பொங்கிவந்த ஆத்திரத்தையும் அழுகையையும் வெளிக்காட்ட முடியாமல் கைகளால் வாயை இறுக மூடிக்கொண்டு வேகமாகத் திரும்பிவிட்டாள்.

(ஆட்டம் தொடரும்)