Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 7

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்

சரியான உறக்கமும் உணவும் இல்லாமல் படுக்கையறையில் சுருண்டுகிடந்த சங்கரியை ஆள் மாற்றி ஆள் வந்து கூப்பிட்டும் அவள் யாருக்கும் பதில் தரவில்லை

ரெண்டாம் ஆட்டம்! - 7

சரியான உறக்கமும் உணவும் இல்லாமல் படுக்கையறையில் சுருண்டுகிடந்த சங்கரியை ஆள் மாற்றி ஆள் வந்து கூப்பிட்டும் அவள் யாருக்கும் பதில் தரவில்லை

Published:Updated:
ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரெண்டாம் ஆட்டம்
ஒருவனோடு நண்பனாகும்போது அவனுக்கு மட்டுமே நண்பனாகிறோம்; எதிரியாகும்போது அவன் சம்பந்தப்பட்ட எல்லோருக்குமான எதிரியாகிவிடுகிறோம். கோட்டைச்சாமி சோமுவின் தம்பி மகன் என்பதால், சொத்துக்கும் சுகத்துக்கும் குறைவில்லாமல்தான் இருந்தது. அவனோடு பிறந்தவர்கள் தலையெடுத்து வந்துவிட்ட பிறகும், கோட்டைச்சாமி மட்டும் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சுற்றிக் கொண்டிருந்தான். “சின்னப்பயககூடயே சுத்திட்டிருந்தா நீ ஒண்ணுத்துக்கும் ஆகாமப் போவ. ஒழுங்கா எதாச்சும் தொழிலப் பாரு” என வீட்டிலிருந்தவர்கள் சொல்வதையெல்லாம் அவன் பெரிதாகக் காதில் போட்டுக்கொண்ட தில்லை. “சொத்து என்ன கொஞ்சமாவா வெச்சிருக்கிய... எல்லாரும் சம்பாரிச்சா யாரு செலவு பண்றது... நீங்க சம்பாதிச்சு சேத்துக்கிட்டே இருங்க, நான் கொஞ்சத்த அழிக்கிறேன்” எனச் சிரிக்காமல் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவான். எதுக்குமே ஆகாமல் போய்விடுவானென சபிக்கப்பட்ட கோட்டைச்சாமி, இந்தப் பத்து வருடங்களில் கண்ட வளர்ச்சி அசாதாரணமானது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூன்றாம் நாள் காரியத்துக்காக, கோட்டைச் சாமியின் வீட்டு முன்னால் சொந்தபந்தங்கள் திரண்டிருந்தனர். சரியான உறக்கமும் உணவும் இல்லாமல் படுக்கையறையில் சுருண்டுகிடந்த சங்கரியை ஆள் மாற்றி ஆள் வந்து கூப்பிட்டும் அவள் யாருக்கும் பதில் தரவில்லை. பொறுத்துப் பார்த்து முடியாமல் உள்ளே வந்த கருப்பு, ‘‘அத்தாச்சி... அண்ணனுக்குச் செய்ய வேண்டிய காரியத்த செஞ்சுதான ஆகணும். எந்திரிச்சு வா அத்தாச்சி...” எனத் தழுதழுப்போடு சொன்னான். அவனைத் திரும்பிப் பார்த்தவள், “என்னடா சொன்ன தாயோலி, அண்ணனுக்குக் காரியம் பண்ணப் போறியா... அன்னிக்கே உங்கிட்ட என்னடா சொன்னேன்... எப்போ என் புருஷன் சாவுக்கு பழியெடுக்கிறியோ அன்னிக்கித்தாண்டா காரியம்னு சொன்னனா இல்லியா?” சடாரென வெடித்து எரிமலையாக நின்ற அவளை எதிர்கொள்ள முடியாமல் கருப்பு தலையைக் குனிந்துகொண்டான். உடையை அள்ளிச் சுருட்டிக்கொண்டு வேகவேகமாக வெளியே வந்தாள். வாசலில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடத்தை ஓங்கி எத்த, அது தண்ணீரோடு உருண்டு ஓடியது. “எதுக்குடா வந்திருக்கீக எல்லாம்? மானங்கெட்ட தாயோலிகளா... இத்தன பங்காளிக, மாமன் மச்சினனுக எல்லாம் இருந்தும் அவரச் சாகக் குடுத்ததும் இல்லாம, செத்ததுக்குப் பழியெடுக்கவும் துப்பில்லாம இருக்கீங்க... நீங்கள்லாம் ஆம்பிளைங்க. உங்களுக்கெல்லாம் மீச ஒரு கேடு... வெக்கப் பொச்சில்லாம செய்முறை செய்ய வந்திருக்கீங்க. எனக்கு வெலம் வந்துச்சுன்னா சொந்தக்காரன் மயிருக்காரனெல்லாம் பார்க்க மாட்டேன். ஒவ்வொருத்தனா அறுத்துருவேன். ஒழுங்கா இங்க இருந்து போயிருங்க. போங்கடா...” என்று ஆங்காரமாகச் சொல்லிவிட்டு அப்படியே எல்லோருக்கும் மையமாக உட்கார்ந்தாள்.

ரெண்டாம் ஆட்டம்! - 7

ஒருவருக்கும் அவளைச் சமாதானப்படுத்தும் துணிச்சலில்லை. கோட்டைச்சாமியின் தாய் மாமா, “ஏய், என்னத்தா... உனக்கு மட்டுந்தான் ஆத்திரம் இருக்கா, எங்களுக்கு இல்லயா? உனக்குக் குடுத்த வாக்கு குடுத்ததுதான். கொன்னவன் ரத்தத்த நீ பாப்ப, ஆனா இப்ப செய்ய வேண்டியதச் செய்யவிடு” என எல்லோரும் கேட்கும்படி சத்தம் போட்டார். தலையை உயர்த்திப் பார்த்த சங்கரி, “சித்தப்பா... உனக்கு அவ்ளோதான் மரியாத. என்னிக்கி பதில் தல விழுகுதோ அன்னிக்கித்தான் சடங்கு. என்னய மீறி எதையாச்சும் செய்யணும்னு நெனச்சீகன்னா அது என் சாவத் தாண்டிதான் நடக்கும்” எனக் கத்தினாள். வந்திருந்தவர்களுக் கெல்லாம் சங்கடமாய்ப்போனாலும் அவளை மட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்பது புரிந்து திரும்பிச் சென்றனர்.

எந்தப் பிசிறும் இல்லாமல் ஒரு சம்பவம் நடந்துவிட வாய்ப்பில்லை. கோட்டைச்சாமி மாதிரி ஒருவனைக் காத்திருந்து கழுத்தறுப்பது தனி மனிதனால் முடியாத காரியம். அதற்கு வீரம் மட்டுமல்ல, நயவஞ்சகமும் தேவை. அவன் சாவு எல்லோருக்குள்ளும் கலக்கத்தை ஏற்படுத்தக் காரணம், அதற்குப் பின்னாலிருந்த நயவஞ்சகமே. வீரத்தைவிடவும் வஞ்சம் ஆபத்தானது. ஆனால், வஞ்சம் தீர்க்க நினைக்கிறவனால் ரகசியத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது. நாவும் செவிகளும்தான் குற்றங்களுக்கான முக்கியப் பங்காளிகள். தன்னை மீறி வரும் சொற்களை உதிர்க்கும் நாவுகளும், கேட்கக் கூடாதவற்றைக் கேட்கும் காதுகளும் கடவுள் மனிதனுக்குக் கொடுத்த ஆபத்தான ஆயுதங்கள். கோட்டைச் சாமியின் ஆட்கள் அவன் கொலைக்குப் பின்னாலிருக்கும் ரகசியமறிந்த செவிகளைச் சற்றேறக்குறைய நெருங்கிவிட்ட சூழலில்தான் யாரும் எதிர்பாராதபடி அந்த போஸ்டர் மதுரை நகரின் சுவர்களெங்கும் காட்சியளித்தன.

கோட்டைச்சாமி கொலைசெய்யப்பட்ட ஐந்து நாள்களுக்குப் பிறகு ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ எனும் போஸ்டர் எந்தப் பெயரோ அடையாளமோ இல்லாமல் ஒட்டப்பட்டிருந்தது. கொலை வெறியோடு ஆளைத் தேடிக்கொண்டிருந்த கருப்புவுக்கும், அவன் பங்காளிகளுக்கும் கொலையாளி யார் என்பதை அந்த போஸ்டர் சொல்லாமல் சொல்லிவிட்டது. “இத்தன ஆளுக இருக்கப்போ ஒரு பொட்டச்சி வம்மவெச்சு நெனச்சத சாதிச்சுட்டாளே கருப்பு... அவ குடும்பத்தையே கருவறுத்தாதான் என் மனசாறும்...” என்று சங்கரி கதறினாள்.

ஆண்டிச்சாமியின் மரணத்துக்குப் பிறகு, அவர் வீட்டு ஆட்கள் யாரும் பெரிதாகத் தலையெடுத்திருக்கவில்லை. அவர் காலத்தில் சேர்த்துவைத்ததைப் பாதுகாத்தால் போதும் என்கிற எண்ணத்தோடு அவரின் மனைவியும் மகன்களும் திருநகர் பக்கமாக ஒதுங்கிவிட்டார்கள். கரடிக்கல்லில் செயல்பட்டுவந்த குவாரியும், மீனாட்சி பஜாரில் வைத்திருந்த கடைகளிலிருந்து வந்த வாடகையும் வாழ்வதற்குப் போதுமானதாக இருந்தன. ஆண்டிச்சாமியின் பிள்ளைகளில் அவரின் மூத்த மகளான அம்சவல்லிதான் கொஞ்சம் வெடிப்பான ஆள். கல்யாணம் முடித்து குடும்பத்தோடு திண்டுக்கல்லில் வசிப்பவள், அங்கு முக்கியக் கட்சியொன்றின் மகளிரணிச் செயலாளராக இருந்தாள். பொதுப் பிரச்னைகளுக்கு முன்னால் நின்று குரல் கொடுப்பவள் என்பதால், ஊருக்குள் அவளுக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அம்சவல்லிக்கு அவள் விரும்பியதெல்லாம் கிடைத்தபோதும், தந்தையின் சாவுக்கு நியாயம் கிடைக்கவே இல்லை என்பது மட்டும் ஒரு வடுவாக மனதிலிருந்தது. ஒவ்வொரு வருடமும் ஆண்டிச்சாமியின் நினைவுநாள் வரும்போதெல்லாம் மதுரை நகரில் அவள் பெயரில் ஒட்டப்படும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும் பேனர்களும் இத்தனை காலத்துக்குப் பிறகு அவள் வடுவின் பின்னாலிருக்கும் பகையின் வீரியத்தைக் கோட்டைச்சாமி ஆட்களுக்கு உணர்த்தியது.

ரெண்டாம் ஆட்டம்! - 7

கருப்பு, நிதானமாக யோசித்துச் செய்கிற மனநிலையில் இல்லை. காட்டு யானை ஊருக்குள் இறங்கினால் எத்தனை மூர்க்கமாகக் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் முட்டி எறியுமோ, அத்தனை மூர்க்கத்தோடு தயாரானான். போஸ்டர் ஒட்டப்பட்ட தினத்தின் மாலையிலிருந்தே திண்டுக்கல்லில் மூன்று பேர் அம்சவல்லிக்கு லைன் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கருப்போடு அவன் பங்காளிகள் ஏழு பேர் முழுவீச்சில் இந்த வேலைக்காகத் தயாராகிவிட்டார்கள். அவள் கட்சி ஆபீஸ், வீடு, அத்தோடு சின்னாளப்பட்டியில் இருக்கும் மச்சினன் வீடு இவ்வளவுதான் அவள் அதிகம் செல்லும் இடங்கள். இரண்டு நாள்களிலேயே அவள் குறித்த முழுமையான விவரங்களெல்லாம் தயாராகிவிட, அவள் வீட்டு வாசலில்வைத்தே சம்பவத்தைச் செய்துவிட முடிவெடுத்தனர்.

குருதி குடிக்கும் ஆவலோடு பொழுது விடிந்தபோது, அந்த வீதியிலிருந்த ஒரு கோயிலில், காலை மார்கழி மாத பஜனை முடிந்து வந்திருந்தவர்களுக்குப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோர் வீட்டு வாசலிலும் வீதியை மறைத்த பிரமாண்டமான கோலங்களும், மையமாக பூசணிப் பூக்களும் வைக்கப்பட்டு அழகுறக் காட்சியளித்தன. ஏழு மணி கடந்தபோது, அம்சவல்லியின் கணவன் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றான். அடுத்த சில நிமிடங்களில், அவள் வெளியே வருவாளென்பது இவர்களுக்குத் தெரியு மென்பதால், உஷாரானார்கள். பள்ளிக்கூட வண்டியில் மகனை ஏற்றிவிட வரும் அந்தச் சில நிமிடங்களை இலக்காகவைத்து அவர்கள் காத்திருக்க, வழக்கமாகப் பேருந்து வரும் நேரம் கடந்தும் வரவில்லை. ஆட்கள் போக்குவரத்தும் அதிகரிக்கத் தொடங்கியதோடு சிலர் இவர்களை கவனித்துவிட்டும் சென்றனர். “கருப்பு... இன்னிக்கி விட்றலாம்” என அவனோடு இருந்தவன் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அவள் தன் மகனோடு ஸ்கூட்டியில் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். யோசிக்கும் அவகாசமில்லாமல் கருப்பு, எதிரில் வந்த ஒரு சைக்கிள்காரனை அவள் வண்டியை நோக்கித் தள்ளிவிட, அவளும் அவன் மகனும் சரிந்து விழுந்தனர். சத்தம் கேட்டு ஆட்கள் கூடுவதற்குள் சுற்றியிருந்த கருப்புவின் ஆட்கள் மறைத்துவைத்திருந்த கத்திகளை வெளியே எடுத்து அவளை வெட்டத் தொடங்கினார்கள். சுற்றியிருந்த ஆட்கள் அலறினார்களே தவிர, எவருக்கும் முன்னால் வந்து தடுக்கத் துணிவில்லை. ஆத்திரம்கொண்ட ஆயுதங்கள் எவ்வளவு ரத்தம் குடித்தாலும் வெறியடங்காதவை. பெண்கள் குழந்தைகளென எந்த வித்தியாசமும் பார்ப்பதுமில்லை. தொழில் போட்டிக்காக நடக்கும் கொலைகளுக்கும், வஞ்சம் தீர்க்க நடக்கும் கொலைகளுக்கும் நிறைய வித்தியாசங்களுண்டு. வஞ்சம் தீர்க்கும்போது எதிராளியின் உடலைச் சிதைப்பதுதான் பகையாளிக்குப் பிரதானமாக இருக்கிறது. அறுபது வெட்டுகளுக்குப் பிறகு, உடலின் அடையாளமெல்லாம் காணாமல்போய் செத்துப்போன அம்சவல்லியோடு அவளின் மகனும் கொல்லப்பட்டிருந்தான். ஆட்கள் சுற்றிவளைத்து கருப்போடு வந்தவர்களைப் பிடிக்க முயன்றபோதே மின்னல் வேகத்தில் வந்த ஸ்கார்பியோவில் ஏறி அவர்கள் தப்பிவிட்டனர்.

(ஆட்டம் தொடரும்...)