மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரெண்டாம் ஆட்டம்! - 70

ரெண்டாம் ஆட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரெண்டாம் ஆட்டம்

கத்தியில் பிடி இறுகிய அடுத்த நொடி, காளி சூறாவளியாக மாறினான். அவனும் அவனது ஊர்க்காரர்களும் மார்நாட்டையும் அவன் ஆட்களையும் விரட்டி விரட்டி வேட்டையாட, அந்தச் சாலை போர்க்களமானது.

தனது அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள மனிதன் எத்தனை கொடூரமான யுத்தத்துக்கும் தயாராகயிருப்பான். சாராயக்கடை, அரசியல், வட்டித் தொழிலென எத்தனை உப தொழில்கள் வந்தாலும் சென்ட்ரல் மார்க்கெட்டை மட்டும் தங்களது அடையாளமாக சோமு குடும்பமும், காளியும் நினைப்பதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. மார்க்கெட்தான் அவர்களுக்கான மரியாதையைச் சம்பாதித்துக் கொடுத்தது. மதுரை நகரத்தின் இதயம்போல் அமைந்திருக்கும் இந்த மார்க்கெட், வெவ்வேறு ஊர்க்காரர்களும், வெவ்வேறு சாதிக்காரர்களும் நிரம்பிய இடம்.

அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள் என வெவ்வேறு அமைப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மார்க்கெட்டைத் தங்களது கட்டுக்குள் கொண்டுவர முயன்று தோற்றுப் போனார்கள். தொழில் நேர்மையும், வியாபாரிகளிடம் அனுக்கமும் கொண்டவனால் மட்டுமே மார்க்கெட்டில் நிலைத்திருக்க முடியும் என்பதைக் கடந்தகால அனுபவங்கள் உணர்த்தியிருந்தன. காய்கறிகளை விதைக்கும் விவசாயி ஒரு சாதிக்காரனாகவும், அதை எடுத்துவருகிறவன் இன்னொரு சாதிக்காரனாகவும், வியாபாரம் செய்கிறவன் இன்னொரு சாதிக்காரனாகவும் இருப்பதால், இந்த மார்க்கெட்டுக்குள் சாதியை வைத்து யாரும் காரியம் சாதித்துக்கொள்ள முடியாது. சோமுவை எதிர்த்து காளி வளர்ந்தபோது, தமது சாதிக்காரர்களின் ஆதரவை வைத்து காளியை வீழ்த்தி விடலாம் என நினைத்த சோமுவை அவன் சாதிக்காரர்களே ஒன்றாகச் சேர்ந்து தோற்கடித்தார்கள்.

“சோமு, இது வயித்துப் பிரச்னை. இங்க வந்து என் சாதி, உன் சாதின்னு உன் சல்லித்தனத்தக் காட்டாத. காக்காசுண்டாலும் அடுத்தவன் காசத் தின்னக் கூடாதுன்னு நெனைக்கிறவன் காளி. நீ அப்பிடியா... பேண்ட பீயில அரிசியப் பொறக்கிட்டுப் போற… எங்க வயித்துல அடிச்சு புடுங்கறப்பல்லாம் நாங்க உன் சாதின்னு தெரியல. இன்னக்கி மார்க்கெட் உனக்கு இல்லாமப் போயிருமோன்னு பயம் வந்ததும் சாதி தெரியுதோ…” என வியாபாரிகளுக்குப் பொதுவாகச் சொன்னபோது சோமுவுக்கு பதில் சொல்ல முடியாமல் அவமானமாகப்போனது.

ரெண்டாம் ஆட்டம்! - 70

சோமு செய்த பிழைகளை மார்நாடு சரிசெய்யக்கூடியவனாக இருந்தான். மார்க்கெட்டில் பெரு வியாபாரிகளைவிடவும் சிறு வியாபாரிகளே அதிகம். அவர்களின் சினேகத்தைச் சம்பாதித்ததைவிடவும் அவர்களுக்குள் யாரும் கவனிக்காதபடி சாதிப் பிரிவினையை உருவாக்கியிருந்தான்.

“ஏப்பு, ஊர்ல நாம இருந்த இருப்பு என்ன? இங்க வந்து கண்டபய பக்கத்துலயும் உக்காந்து யாவாரத்த பண்ணிக்கிட்டு இருக்க. கடைய பெருசா போடு… என்ன செலவாகுதோ நாங்க செய்றோம்…”

ஆசையை விதைப்பதன் வழியாக, பகை என்னும் திரையை எளிதாக உருவாக்க முடிந்தது அவனால். அத்தனை காலம் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகிக்கொண்டிருந்தவர்களுக்கு நடுவில் புகைச்சல்களும் போட்டிகளும் உருவாகின. இந்தப் புகைச்சல் ஒருநாள், மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு இடையிலான முதல் சண்டையை உருவாக்கியது. அத்தனை காலம் தடித்த வார்த்தைகளைக்கூட பயன்படுத்தியிருக்காத வியாபாரிகள், படிக்கல்லையும் தராசையும் எடுத்து அடித்துக்கொள்ளும் அளவுக்கு வெறியேறிப் போயிருந்தார்கள். வரிசையாக அமர்ந்திருக்கும் சிறு வியாபாரிகளில் காமாட்சி அக்கா பூண்டு வியாபாரி. அடுத்ததாக இருக்கும் முனீஸ்வரி வெங்காய வியாபாரி. ஆத்திர அவசரத்துக்கு நூறு இருநூறைச் செலவுக்குக் கொடுத்து உதவிக்கொள்வது சகஜம். வீட்டிலிருந்து எடுத்துவரும் சோற்றையும் குழம்பையும் பகிர்ந்து உண்டு வந்ததோடு அக்கா தங்கச்சியைப்போல் நெருக்கம்கொண்டவர்கள். எதிர்பாராதவிதமாக ஒரு கொடுக்கல் வாங்கலில்தான் இருவருக்குமான மோதல் தொடங்கியது. பெண்களுக்கிடையிலான சண்டையை மற்றவர்கள் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம். ஆனால், அவர்களைச் சுற்றியிருந்த எல்லோருமே அதுபோலொரு பிரிவினைக்காகக் காத்திருந்ததால், உடனே அணைந்திருக்க வேண்டிய பகையின் நெருப்புக்கு, பேசி வளமூட்டி இரண்டு சாதிகளுக்கு இடையிலான சண்டையாக மாற்றியிருந்தார்கள். காமாட்சி வீட்டு ஆட்களும் முனீஸ்வரி வீட்டு ஆட்களும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டதில் நெரிசலான அந்த மார்க்கெட் வீதி முழுக்க காய்கறிகள் சிதறிக்கிடந்தன.

“ஊர்ல என் முன்னால கைகட்டி நின்ன பயல்லாம் எனக்கு எதிரா நின்னு சண்டையாடா போடுறீங்க?’’ என காமாட்சியின் புருஷன் ஆக்ரோஷமாகக் கத்தியபோது, அந்தப் பகையை விதைத்த மார்நாட்டுக்கு நிறைவாக இருந்தது. ஒன்றாயிருந்த கூட்டத்தைப் பிரித்துவிட்டாயிற்று, இனி வேட்டையாடுதல் சுலபமெனச் சிரித்தான்.

சிம்மக்கல் மாரியம்மன் கோயில் முன்னிலையில், பஞ்சாயத்தைப் பேசித் தீர்க்க மார்க்கெட் வியாபாரிகளும் காளியும் கூடியிருந்தனர். அத்தனை நாள்களும் நிழலைப்போல் மார்க்கெட் வீதிகளுக்குள் சுற்றிக்கொண்டிருந்த மார்நாடும் அவன் ஆட்களும் காமாட்சியின் குடும்பத்துக்கு ஆதரவாக முதுகில் மறைத்திருந்த ஆயுதங்களோடு திரண்டிருந்தனர். வியாபாரச் சங்கங்களுக்குப் பொறுப்பானவர்கள் பக்குவமாகத்தான் பேசத் தொடங்கினார்கள்.

“ஏப்பா, இன்னிக்கி நேத்தா நாமல்லாம் இந்த மார்க்கெட்ல யாவாரம் பண்ணிட்டு இருக்கோம். எல்லாரும் ஆளுக்கொரு ஊர்ல இருந்து பொழைக்க வந்தப்போ ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்துதான இம்புட்டுத் தூரம் வாழ்க்க ஓடியிருக்கு. இப்ப என்ன புதுசா சண்ட சச்சரவுன்னு...”

அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த காமாட்சியின் புருஷன், “அப்பிடி இருந்ததுதாம்ப்பு தப்பா போச்சு. யாரு என்ன ஆளுகன்னு ஒரு மட்டு மரியாத இல்லாம எல்லாரும் ஏறி மேயப் பாக்கறாய்ங்க…” என வார்த்தையை விட்டான். கூடியிருந்த பொதுவான ஆட்களுக்குத் தூக்கிவாரிப்போட்டது. கட்டப்பெருமாளும் இன்னும் சிலரும் ஆத்திரமாக எழுந்து கத்தத் தொடங்கினார்கள். “எலேய் என்ன புதுசா உன் சாதி, என் சாதின்னு ஆரம்பிச்சிருக்கீங்க… கட்சிக்காரய்ங்ககூட உள்ள வந்துரக் கூடாதுன்னுதான் இத்தன வருசமா ஒத்துமையா இருந்து இந்த மார்க்கெட்ட காப்பாத்தி வந்திருக்கோம். உன் சாதி மயிரெல்லாம் உன் ஊருக்குள்ள வெச்சுக்க… இங்க எதையாச்சும் திருகல் பண்ணி குட்டி கலாட்டா பண்ணணும்னு நெனச்சா நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்…” கட்டப்பெருமாள் ஆத்திரமாகக் கத்தினார். “இந்தாருங்க… சும்மா வாயி இருக்குன்னு கத்தக் கூடாது… நான் ஒண்ணும் தனியா இல்ல. எனக்கும் ஆளு இருக்கு...’’ பதிலுக்கு காமாட்சியின் புருஷன் கத்த, காளி பொறுமையின்றி இடைமறித்தான்.

“அடேயப்பா என் செம்புழுத்தி… ஆளு இருந்தா நீங்க அம்புட்டு பேரும் பெரிய சூரப்புலிங்களாடா… பத்து வருசம் முன்னாடி சோத்துக்கு வழியில்லாம இதே மார்க்கெட்டுல வேலை கேட்டு எல்லார் முன்னாடியும் கைகட்டி நின்னியே… அன்னிக்கி உன் சாதிக்காரனாடா வேலையும் சோறும் குடுத்தான் வெண்ண...”

தனக்கான தருணத்துக்குக் காத்திருந்த மார்நாடு, காளிக்கு வெறி ஏறிவிட்டதை உணர்ந்து அந்த வெறியை இன்னும் தூண்டிவிடும் முடிவோடு “உழச்சதுக்குத்தான காசு குடுத்தாய்ங்க. சும்மாவா குடுத்தாய்ங்க... இல்லாத காலத்துல அப்பிடி இருந்தா காலம் முழுக்க கால நக்கிட்டு இருக்க முடியுமா? தராதரம் பாக்காம...” எனக் கேலியாகச் சொன்னான்.

ரெண்டாம் ஆட்டம்! - 70

“ஒக்காலி பொச்ச மூடிட்டு நில்றா… உனக்கும் இந்த மார்க்கெட்டுக்கும் சம்பந்தமே இல்ல… இதுக்குமேல ஏதாச்சும் பேசினன்னு வெய்யி இங்கயே வகுந்துருவேன்…” காளி வெறியேறிய மிருகமாக ஒரு யுத்தத்துக்குத் தயாராகியிருந்தான்.

“ஆத்தி பயந்து வருது…” என மார்நாடும் அவனது ஆட்களும் சத்தமாகச் சிரிக்க, அடுத்த நொடி காளி எகிறிக் குதித்து முன்னாலிருந்த மார்நாடின் நெஞ்சில் உதைத்தான். சுதாரிக்காத மார்நாடு தடுமாறி விழ, அவனுடன் இருந்தவர்கள் மறைத்துவைத்திருந்த கத்திகளை அவசரமாக உருவினர். வியாபாரிகளும் பஞ்சாயத்துப் பேசவந்த ஆட்களும் பதறிப்போய் “அடத் தாயோலிகளா... பஞ்சாயத்துப் பேசவந்த எடத்துல கத்தி கபடாவையெல்லாம் எடுத்துட்டாடா வந்திருக்கீங்க… அம்புட்டுத் தாட்டியக்காரய்ங்களாடா நீங்க?” என ஒன்றாகச் சேர்ந்துகொள்ள மார்நாடும் அவன் ஆட்களும் கத்தியால் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் குத்திக்கிழிக்கும் மூர்க்கத்தோடு கத்தியை வீசினார்கள். ஒருவன் காளியின் முதுகில் ஆழமாகக் கத்தியை இறக்க, அடுத்த நொடி காளி சத்தமாக விசிலடித்தான். அவன் சமிக்ஞைக்காகக் காத்திருந்த சிந்துபட்டிக்காரர்கள் அத்தனை பேரும் அடுத்த நொடியே பஞ்சாயத்து நடக்கும் இடத்தைச் சூழ்ந்துகொள்ள, மார்நாட்டின் ஆட்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. அவர்கள் காளியிடமிருந்து இப்படியொரு தாக்குதல் திட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

காளியின் முதுகில் குத்தியிருந்த கத்தியை அவனது பங்காளியொருவன் உருவி எறிந்துவிட்டு, குத்துப்பட்ட இடத்தில் துண்டை வைத்துக் கட்டினான். “நீ போண்ணே... இனி நாங்க பாத்துக்கறோம்...” என உறுமினான். “இல்லடா தம்பி... இந்த மார்க்கெட் எனக்குக் கோயில் மாதிரி. நல்லா இருந்த எடத்த சாதி அது இதுன்னு இந்தத் தாயோலிக நாசம் பண்ணிட்டாய்ங்க… இவய்ங்கள நானே நின்னு செய்யணும்...” என்றபடியே கத்தியை வாங்கிக்கொண்டான். அவன் கண்களில் பெருகத் தொடங்கிய நெருப்பை கவனித்த மார்நாட்டுக்குக் குலைநடுக்கம் எடுத்தது. கத்தியில் பிடி இறுகிய அடுத்த நொடி, காளி சூறாவளியாக மாறினான். அவனும் அவனது ஊர்க்காரர்களும் மார்நாட்டையும் அவன் ஆட்களையும் விரட்டி விரட்டி வேட்டையாட, அந்தச் சாலை போர்க்களமானது. கடும் கத்திக் குத்துக் காயங்களோடு மார்நாடு மட்டும் எல்லோருக்கும் முன்பாக தப்பியோடிவிட்டான். அவனால் விஷம் ஊட்டி, தூண்டப்பட்ட காமாட்சியின் புருஷன் குத்துப்பட்டு மார்க்கெட்டின் பிரதான வீதியில் சரிந்துகிடந்தான். இரண்டாகக் கிழிக்கப்பட்ட வயிற்றிலிருந்து குடல்களும் சதைகளும் வெளியே வந்துகிடக்க, அவனைச் சுற்றி ரத்தம் சிறு ஆறாக ஓடிக் காய்ந்துபோயிருந்தது.

(ஆட்டம் தொடரும்)